இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு
(அதிகாரம்:இடுக்கணழியாமை
குறள் எண்:630)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
|
மணக்குடவர் உரை:
இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம்.
மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.
பரிமேலழகர் உரை:
இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம்.
(துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
இரா சாரங்கபாணி உரை:
ஒருவன் தனக்கு வந்த துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் எனின், பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்னாமை இன்பம் எனக்கொளின் தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும்.
பதவுரை:
இன்னாமை-துன்பம்; இன்பம்-மகிழ்ச்சி; என-என்று; கொளின்-கொண்டால்; ஆகும்-ஆம்; தன்-தனது; ஒன்னார்-பகைவர்; விழையும்-நன்கு மதிக்கும்; சிறப்பு-பெருமை.
|
இன்னாமை இன்பம் எனக்கொளின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின்;
பரிப்பெருமாள்: இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின்;
பரிதி: தனக்கு வந்த பொல்லாங்கினால் கலங்காமல் அதுவே பெலமாகக் கொள்வானாகில்;
காலிங்கர்: தனக்கு ஓர் இன்பம் வந்த இடத்து அதனையும், செய்தியின் வந்த சிற்றின்பம் ஆகலான் இன்னாத் தன்மையது என இங்ஙனம் இறைவன் கருதிக் கொள்வானாயின்;
காலிங்கர் மாற்றுரை: அன்றியும் உலகத்து இனிமை செய்தோர் இனியர் ஆதலும் மற்றும் இன்னாமை செய்தோர் இன்னாதார் ஆதலும் இயல்பு அன்றே; அதனான் ஒருவர் தம் கருத்தால் இன்னாமை செய்யினும் அதனை இவர் எமக்கு இதின் (அடுக்கும்) எனக்கருதிக் கொள்வாராயின்;
பரிமேலழகர்: ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்;
'இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தை இன்பமாகக் கருதுபவனுக்கு', 'துன்பத்தையே இன்பமாக அனுபவிக்கக் கூடியவனுக்கு', 'துன்பத்தையே ஒருவன் இன்பமாகக் கொண்டால்', 'துன்பத்தையே இன்பம் என்று கொண்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் எனின் என்பது இப்பகுதியின் பொருள்.
ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம்.
மணக்குடவர் குறிப்புரை: மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.
பரிப்பெருமாள்: அது பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பம் போலக் கொள்வனாயின் பகைவரும் மதிப்பர் என்றது.
பரிதி: தனக்குச் சத்ருக்களும் திறையிடுவர் என்றவாறு.
காலிங்கர்: மற்று அது தெவ்வரும் தன்னை விரும்பும் சிறப்புடைத்தாகும் என்றவாறு. [தெவ்வர் - பகைவர்]
காலிங்கர் மாற்றுரை: தாம் அவர்க்கு இனியர் ஆம் அத்துணை அல்லது இன்னாராதல் இன்று என்பதுவும் கூறியவாறு.
பரிமேலழகர்: அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன. [கணிகம் - கணப் பொழுது நிற்பது].
'தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எதிரியின் மதிப்பு கிடைக்கும்', 'அது அவனுடைய பகைவர்களும் பாராட்டத் தகுந்த பெருமையாகும்', 'தன் பகைவரும் விரும்புஞ் சிறப்பு அவனுக்கு ஏற்படும்', 'தன் பகைவரும் நன்கு விரும்பும் மதிப்பு உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன் போட்டியாளரும் விரும்பத்தக்க சிறப்பு ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் எனின், தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் என்பது பாடலின் பொருள்.
'ஒன்னார் விழையும் சிறப்பு' என்ற பகுதி குறிப்பதென்ன?
|
துன்பத்தையே ஒருவன் இன்பமாகக் கருதிச் செயல்பட்டால், போட்டியாளரும் அவனை விரும்பிப் போற்றுவர்.
துன்பங்களையெல்லாம் இன்பமாகக் கொண்டால், பகைவர்கூட விரும்பத்தகுந்த சிறப்பு கிடைக்கும் என்கிறது பாடல்.
துன்பத்தை இன்பமாக எண்ணுவது என்பது இழந்ததை, இல்லாததை இருப்பதாக நினைத்துக் கொள்வது போன்ற ஓர் அறிவுக் கற்பனைதான். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதும் நிலையிலிருந்து அதற்கு அடுத்த மேல்நிலைக்கு அதாவது மனத்திண்மை கொண்டு துன்பத்தையே இன்பமாக மாற்றிக் கொள்ளும் ஆற்றலை பெறும் நிலைக்குச் செல்லச் சொல்கிறது இக்குறள். இவ்விதமான உரமான உளக்கோட்பாட்டை வளர்த்துக்கொள்வது எல்லோர்க்கும் இயலுவதே.
இன்ப விழைவுதான் உலக உயிர்களின் இயல்பு. அதன் வழிதான் அவை இயங்குகின்றன. ஆனால் துன்பங்களே/இடையூறுகளே தொடர்ந்து வந்தால் என்ன செய்வது? வள்ளுவர் இன்னாமையையே இன்பமாகக் கொள்ளச் சொல்கிறார். முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவு இடையூறுகள் எய்தினும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு தம் உள வுறுதி குன்றாமல் செயல்படவேண்டும். துன்பம் இன்பம் என்பன மனக்கோட்பாடுகள்தாம். அவற்றை மாறுபடக் கொள்ளலாம். துன்பமும் இன்பமே என்ற மனப்பக்குவம் பெற்றுவிட்டால், துன்பத்தை அல்லது இடையூறான நிலையை இன்பமாகக் கருதுவதும் எளிதே. ஒருவன் செயலில் ஈடுபடும்போது முயற்சியான் வரும் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின், அது கடமையில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவும்; தொடங்கிய செயலை முடித்து விடும் ஆற்றல் பெறுவான். தடைக்கற்களையும் படிக்கற்களாய் மாற்றி உயர்ச்சி பெறுவனைப் பார்த்துப் போட்டியாளரும் மதிக்கத்தான் செய்வர். பகைவரும் விரும்பிப் புகழ்வதற்கேதுவாய மேன்மை அவனுக்கு உண்டாகிறது.
|
''ஒன்னார் விழையும் சிறப்பு' என்ற பகுதி குறிப்பதென்ன?
''ஒன்னார் விழையும் சிறப்பு' என்றதற்குத் தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பு, தனக்குச் சத்ருக்களும் திறையிடுவர், தெவ்வரும் தன்னை விரும்பும் சிறப்புடைத்தாகும், பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும், தன் பகைவரும் விரும்பும்படியான சிறப்பை அடைவான், எதிரியின் மதிப்பு கிடைக்கும், பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு அவனுக்கு உண்டாகும், அவனுடைய பகைவர்களும் பாராட்டத்தக்க பெருமையாகும், பகைவரும் விரும்பக் கூடிய மதிப்பு அவனுக்கு உண்டாகும், தன் பகைவரும் விரும்புஞ் சிறப்பு அவனுக்கு ஏற்படும், தன் பகைவரும் நன்கு விரும்பும் மதிப்பு உண்டாகும், பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும், பகைவரும் போற்றும்படியான சிறப்பு அவனை வந்து சாரும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
துன்பத்தை இன்பமாக ஒருவன் எண்ணிச் செயல்பட்டால் அவன் பகைவரும் விரும்பிப் பாராட்டுவர்.
பகைவர் பாராட்டுகிறார் என்றால் அது மிகவும் உயர்வான அரிய செயலாகத்தான் இருக்கும். தனக்குற்ற துன்பத்தை இன்பமாகக் கருதுவது அப்படிப்பட்ட ஒரு அரிய செயலாம்.
இடுக்கணுக்கு இளையாமல், தமக்குற்ற துன்பத்தை இன்பமாகக் கருதுபவரைப்பற்றி அவரது பகைவர் பெருமதிப்புக் கொள்வர்.
பகைவர் எப்பொழுதும் மாற்றாரது பலவீனத்தையே தமது பலமாகக் கருதுவர். ஆனால் ஒருவன் தனது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்வானானால் அது பகைவரை நிலைகுலையச் செய்யும். அதே நேரத்தில் அவனது மனத் திட்பம் அப்பகைவரையும் வியக்க வைக்கும்.
பகைவர் குறை கூறித் தூற்றும் இயல்புடையவர்கள். அப்பகைவரும் போற்றும்படியாகச் செயல்படுவது பெருமைக்குரிய சிறப்பு ஆகிறது.
|
துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் எனின், தன் போட்டியாளரும் விரும்பத்தக்க சிறப்பு ஆகும் என்பது இக்குறட்கருத்து.
இன்னாமையை இனியதாக எண்ணினால் இடுக்கணழியாமை கைவரப்பெறும்.
துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் என்றால், போட்டியாளரும் விரும்பத்தக்க சிறப்பு கிடைக்கும்.
|