இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0629



இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:629)

பொழிப்பு (மு வரதராசன்): இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.

மணக்குடவர் உரை: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன்.
இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.
(துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: நன்மை வருகின்றபோது மகிழ்ச்சியில் மயங்கி விடாமல் இருக்கக்கூடியவன் தீமை வரும்போது தீமையினால் மனம் நொந்து போகமாட்டான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.

பதவுரை:
இன்பத்துள்-மகிழ்ச்சியுள்; இன்பம்-மகிழ்ச்சி; விழையாதான்-விரும்பாதவன்; துன்பத்துள்-இடுக்கணில்; துன்பம்-துயரம்; உறுதல்-அடைதல்; இலன்-இல்லாதான்(ஆவன்).


இன்பத்துள் இன்பம் விழையாதான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன்;
பரிப்பெருமாள்: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன்;
பரிதி: இன்பம் வந்தால் இன்பப்படாதவன்;
காலிங்கர்: இன்பம் வந்து எய்திய இடத்து அவ்வின்பத்தை ஒரு பொருளாகக் கொண்டு விரும்பாத வேந்தனானவன்;
பரிமேலழகர்: வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்;

'இன்பம் வந்தால் இன்பப்படாதவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன்', 'இன்பம் வந்த காலத்தில் இன்பத்தை விரும்பாதவன்', 'இன்பத்தை நுகருங் காலத்திலே அதனை மனத்தால் விரும்பாதவன்', 'இன்பம் வருங்கால் இன்பம் என்று கருதி அதனை விரும்பாதான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன்.
மணக்குடவர் குறிப்புரை: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.
பரிப்பெருமாள்: அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.
பரிதி: துன்பம் வந்தாலும் துன்பம் கெடுப்பன் என்றவாறு.
காலிங்கர்: ஏனைத் துன்பம் வந்து எய்திய இடத்தும் தான் சிறுதும் துயர் உறுதல் இலன்; இவ்விரண்டும் இயல்பு என்னும் திட்பம் உடையவன் என்றவாறு.
பரிமேலழகர்: துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.
பரிமேலழகர் குறிப்புரை: துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.

'துன்பம் வந்து எய்திய இடத்தும் தான் சிறுதும் துயர் உறுதல் இலன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கவலையில் கவலை அடையான்', 'துன்பம் வந்த காலத்தில் அத்துன்பத்தைப் பெறுவது இல்லை', 'துன்பம் வருங்காலத்தும், அதனை உடம்பால் துய்த்தாலும் மனத்தால் வருந்த மாட்டான்', 'துன்பம் வந்தவிடத்தும் துன்பம் என்று துன்பம் அடையான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன், துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் என்பது பாடலின் பொருள்.
'இன்பத்துள் இன்பம் விழையாதான்' குறிப்பது என்ன?

இன்பத்தையே எப்பொழுதும் தேடி களியாட்டம் விரும்பாதவன் துன்பத்துள் உள்ள துயரினை நினைத்து வருந்தமாட்டான்.

இன்பத்திலேயே திளைத்து மேலும் மேலும் பெருமகிழ்வுக்காக ஏங்கிக் கிடப்பவன் கடமையில் நாட்டம் இல்லாதிருப்பான். அதற்கு மாறாக கடமையை செய்து நிம்மதியடைந்து வாழ்வு நடத்துபவன் இன்பம் வந்தபோது அதைத் துய்ப்பான் ஆனால் அதையே எண்ணிக் கொண்டிருக்கமாட்டான். இவனே இன்பத்துள் இன்பம் விழையாதான் ஆவான். அப்படிப்பட்டவன் துன்புற்றவிடத்து, இழந்துவிட்டோமே என்று துயருறவும் மாட்டான். அவனால் துன்பம் வந்தபோதும் கடமையைச் செய்துகொண்டு துன்புறாமல் இருக்க முடியும். இன்பம் துன்பம் இவை இரண்டும் இயற்கை என்று கருதும் திட்பம் உடையவன் துன்பம், இடுக்கண் அனைத்தையும் எளிதாகக் கையாள்வான்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமே வாழ்க்கையின் குறிக்கோள்களாக இருக்கவேண்டும் என்று கருதுபவர் வள்ளுவர். இன்பம் விலக்கப்படவேண்டுவதன்று. மாந்தர் அனைவரும் வாழ்க்கையில் நற்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அறத்தொடு பொருந்திய இன்பத்தை நுகர்வதற்கும் உரியவர்களே.
இக்குறளிலுள்ள இன்பம் வீட்டின்பத்தையும், துன்பம் நரகத் துன்பத்தையும் குறிப்பன என்றனர் சிலர். இவை பொருந்தாப் பொருள்கள்.

மணக்குடவர் 627-க்கான தனது உரையில், நன்மையால் தவஞ் செய்யுங்கால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று எனவும், 628ம் குறளுரையில் பொருட்கேட்டினால் வருந்துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று எனவும் கூறினார். எனவே இங்கு சொல்லப்பட்டது துன்பம் காமத்தால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று எனல் பொருந்துவதாகும் என்பர்.

துன்பத்துள் துன்பம் (குறள் 369) என்பதற்குப் பரிமேலழகர் ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம் என உரை கண்டார். அதே பொருள் இங்கும் ஏற்றால் இன்பத்துள் இன்பம் என்பதற்கும் மேலான இன்பம் எனப் பொருள் கிடைக்கும்.
இன்மையுள் இன்மை (குறள் 153) கற்றாருட் கற்றார் (குறள் 722) இன்பத்துள் இன்பம் (குறள் 854) என்பனவும் இதே நடையில் அமைந்த தொடர்கள் ஆகும். இங்ஙனம் ஒன்றனுள் ஒன்றைப் பொதிந்து சுட்டும் நடை வள்ளுவரின் விருப்பமான, தனித்த கூறாக நூலுள் காணப்படுகிறது.
துன்பம் உறுதல் இலன் என்ற சொற்றொடர் இதற்கு முந்தைய பாடலிலும் (குறள் 628) ஆளப்பட்டுள்ளதை அறியலாம்.

'இன்பத்துள் இன்பம் விழையாதான்' குறிப்பது என்ன?

'இன்பத்துள் இன்பம் விழையாதான்' என்றதற்கு இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், இன்பம் வந்தால் இன்பப்படாதவன், இன்பம் வந்து எய்திய இடத்து அவ்வின்பத்தை ஒரு பொருளாகக் கொண்டு விரும்பாத வேந்தன், வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான், இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், இன்பத்துள்ளிருந்து கொண்டு, அதை அனுபவிக்கும்போதே மனத்தால் அதை விரும்பாதவன் (அதனோடு ஒட்டாதவன்), மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன், இன்பம் வந்த காலத்தில் இன்பத்தை விரும்பாதவன், நன்மை வருகின்றபோது மகிழ்ச்சியில் மயங்கி விடாமல் இருக்கக்கூடியவன், இன்பம் வரும் போதில் இன்பம் என்று அதனை விரும்பாதவன், இன்பத்தை நுகருங் காலத்திலே அதனை மனத்தால் விரும்பாதவன், இன்பம் வருங்கால் இன்பம் என்று கருதி அதனை விரும்பாதான், இன்பத்தில் உள்ள இனிமையினை நினைத்து இன்புற விரும்பாதவன், இயற்கை யாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நாம் "இன்பமானவை” என நம்பும் சில காலந்தோறும் உருவாக்கப்பட்டு நம் எண்ணங்களில் நிலைத்து வருகின்றன. அப்படிப்பட்டவை நமக்கு நேரும்போது, அவற்றில் மகிழ்ச்சி காண்கிறோம். இன்பம் என்பதற்குப் பொருள் வரையறை செய்து கூறுவது முடியாத ஒன்று. இன்பம் பல நிலைகளில் அறியப்படுவது. இன்பம் துய்த்தல் கூடாது என வள்ளுவர் கூறமாட்டார். ஆனால், இன்பம், அதனினும் இன்பம், இன்னும் மேலான இன்பம் என்று தேடித்தேடி அலைபவன் செயலாற்றமாட்டான் என்பதால் இன்பத்தை 'வென்றுவிடும்' ஒரு நுட்பமான நிலையை இங்கு குறிக்கிறார். அந்நிலையைக் கடந்த மனநிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் இன்பத்துள் இன்பம் விழையாதான் ஆவான்,

இன்பமே குறியாக உள்ளவன் தன் உணர்வு கெட்டு மயங்கிச் சோர்வடைந்து அழிந்துபடுபவன். அப்படிச் சோர்வடையாதவன் 'இன்பத்துள் இன்பம் விழையாதான்' ஆவான்.

மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன், துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இன்பத்தையும் துன்பத்தையும் ஒருதன்மையாகச் சமனாகக் கொண்டால் இடுக்கணழியாமை நிலைக்கும்.

பொழிப்பு

இன்பம் ஒன்றையே நாடிச் சென்று சோர்வுறாதவன் துன்பத்தில் துன்பம் அடையான்.