இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0628



இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:628)

பொழிப்பு (மு வரதராசன்): இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.

மணக்குடவர் உரை: இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை.
இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தௌ¤ந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான்.
(இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: இன்பத்தை விரும்பாது இடையூற்றை இயல்பு என்று கருதுபவன் வருத்தம் அடையான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.

பதவுரை:
இன்பம்-மகிழ்ச்சி; விழையான்-விரும்பாதாவன்; இடும்பை-துன்பம்; இயல்பு; இயற்கை; என்பான்-என்று தெளிந்திருப்பான்; துன்பம்-துயரம்; உறுதல்-அடைதல்; இலன்-இல்லாதான்.


இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன்;
பரிப்பெருமாள்: இன்பது உறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன்;
பரிதி: இன்பம் வந்தாலும் பிரியப்படான்; 'துன்பத்துடனே கூடப்பிறந்தது' என்று;
காலிங்கர்: மற்று இவ்வாறும் அன்றி ஓர் இன்பம் வந்த இடத்து அதனை விரும்பானுமாய், இடும்பை வருதல் இயல்பு என்று கருதும் இறைவன்;
பரிமேலழகர்: தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்;

'இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'வினையால் இடும்பை எய்தல்' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பத்தை விரும்பாதவனாய்த் துன்பத்தை வாழ்க்கையின் இயல்பு என்று தெளிந்தவன்', 'இன்பங்களில் மோகங் கொள்ளாமல், துன்பம் வருவது சகஜம்தான் என்று எண்ணுகிறவன்', 'இன்பத்தை விரும்பாது, துன்பமெய்துதல் பிறவிக்கு இயல்பென்று தெளிந்திருப்பவன்', 'தன் உடம்பிற்கு இன்பமானதை விரும்பாது துன்பம் அடைதல் வாழ்வின் இயல்பு என்று கருதுபவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்பத்தை நாடிச் செல்லாதவனாய்த் துன்பத்தை வாழ்க்கையின் இயல்பு என்று தெளிந்தவன் என்பது இப்பகுதியின் பொருள்.

துன்பம் உறுதல் இலன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்ப முறுதல் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை :இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: துன்ப முறுதல் இலன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
பரிதி: துன்பம் வந்தாலும் துயரம் உறான் என்றவாறு.
காலிங்கர்: எஞ்ஞான்றும் ஒருவாற்றானும் துயரம் உறுதல் இலன் என்றவாறு.
பரிமேலழகர்: தன் முயற்சியால் துன்பமுறான்.
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.

'துன்ப முறுதல் இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'தன் முயற்சியால் துன்பமுறான்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் வந்தபோது துன்பம் அடைவது இல்லை', 'துன்பத்தால் பாதிக்கப்படமாட்டான்', 'தன் முயற்சிக்கு வரும் இடையூற்றால் துன்பப்பட மாட்டான்', 'துன்பம் அடைதல் இலன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் முயற்சிக்கு வரும் இடையூற்றால் துயரடைய மாட்டான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்பத்தை நாடிச் செல்லாதவனாய் இடும்பை இயல்பென்பான், தன் முயற்சிக்கு வரும் இடையூற்றால் துயரடைய மாட்டான் என்பது பாடலின் பொருள்.
'இடும்பை இயல்பென்பான்' என்ற தொடர் குறிப்பது என்ன?

இன்பமே குறிக்கோளாய் இல்லாமல், இடையூறு இயல்பு என்று உணர்ந்தவனுக்குத் துன்பம் தெரிவதில்லை.

இன்பத்தை நாடித் திரியாமல் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருக்கின்றவன் துன்பத்தால் துன்பப்படுவதில்லை. துன்பத்திற்கு அழிதலாகாது எனக் கூறும் பொழுது துன்பத்தை இயல்புதானே என்று கருதி அதைப் பொருட்படுத்த வேண்டாம் எனச் சொல்கிறார் வள்ளுவர்.

உலக வாழ்க்கையில் துன்பமுறுதல் பிறந்தார்க்கெல்லாம் இயல்பு. துன்பமில்லையென்றால் இவ்வுலகம் வானுலகமாக அல்லவா இருக்கும்! இன்பத்தை நாடுவதும் துன்பத்திற்கு அஞ்சுவதும் மனித உள்ளத்தின் இயல்பு. அதை மாற்றுவதற்கு முயல வேண்டும். துன்பமே எந்நாளும், இன்பமில்லை என்று கூறிக்கொண்டு துயர வாழ்க்கை நடத்தவும் வேண்டாம். துன்பத்தினின்றும் முற்றும் நீங்கி இன்பமாய் மட்டும் வாழவும் நினைக்க வேண்டாம் பொருளால் எல்லாத் துன்பங்களையும் போக்கிவிட முடியாது. அதுபோல் உலக இன்பங்கள் அனைத்தையும் பொருட்செல்வத்தால் பெறவும் முடியாது. இந்நிலையில் துன்பம் தெரியாமல் இருக்க வள்ளுவர் கூறும் வழி: இன்பத்தையே எண்ணித் தேடிச் செல்லாமல் துன்பம் வருமாயின் அது இயல்பு என்று அறிந்து செயல்படு என்பது. அப்படியிருக்கும் ஒருவன் இன்பம் வந்த காலத்தில் அதனைத் துய்த்துக் கொள்வான். இடுக்கண் வரும்போது அதைத் துன்பம் என்று நினைக்கமாட்டான்.
ஒருவன் இன்பத்தை விரும்புவதும் துன்பத்தை வெறுப்பதுமே துன்பத்திற்குக் காரணம். இன்பத்தை விரும்பாதும் துன்பத்தை வெறுக்காதும் இருப்பவன் துன்பத்தை உணர்வதில்லை.

'இடும்பை இயல்பென்பான்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'இடும்பை இயல்பென்பான்' என்ற தொடர்க்கு 'துன்பம் உடன் பிறந்தது' என்றும் துன்பமுறுதல் இயல்பு; அதைத் தடுக்க நினைக்க வேண்டாம் என்ற வகையிலும் பழம் ஆசிரியர்கள் இத்தொடரை விளக்கினர்.
பிறப்பும் இறப்பும், கூடுதலும் பிரிவும் கலந்த வாழ்வில் அவை இரவும் பகலும் போல மாறி மாறி வருபவை. அதுபோல இன்பம் துன்பம் என்னும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்வியல்புகள் ஒன்றாக நிகழும் வண்ணம் அமைத்திருப்பதே உலக வாழ்வு. துன்பம் இயற்கையானது.
'துன்பம் வருவது இயல்பே' என்று எண்ணுபவர்கள் துன்பத்தினால் துவண்டு போவதில்லை அதாவது துன்பம் மனித இயல்புதானே என பழகிக்கொள்பவர்களை துன்பம் ஒன்றும் செய்வதில்லை. எந்த முயற்சியிலும் இடையூறுகள் வருவதுண்டு என்று நினைத்துச் செயல் ஆற்றுபவன் துன்பங்களை எதிர்பார்ப்பவனாதலால் அவன் துன்பத்தால் பாதிக்கப்படமாட்டான்.

இன்பத்தை நாடிச் செல்லாதவனாய்த் துன்பத்தை வாழ்க்கையின் இயல்பு என்று தெளிந்தவன், தன் முயற்சிக்கு வரும் இடையூற்றால் துயரடைய மாட்டான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இடையூறை எதிர்கொள்ள ஆயத்தாமாயிருப்பவன் இடுக்கணழியாமையுற்றவன்.

பொழிப்பு

இன்பத்தை விரும்பாது இடையூற்றை இயல்பு என்று தெளிந்தவன் இடையூறுகளால் துன்பம் அடைவது இல்லை