இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0627இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:627)

பொழிப்பு (மு வரதராசன்): மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.

மணக்குடவர் உரை: உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர்.
இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் - தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
(ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.)

சி இலக்குவனார் உரை: உடம்பு துன்பத்திற்கு ஆளாகக்கூடியது என்று அறிந்து அறிவுடையார் துன்பத்தால் வரும் கலக்கத்தை தம் வாழ்வு நெறியாகக் கொள்ளார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.

பதவுரை:
இலக்கம்-குறி; உடம்பு-உடம்பு; இடும்பைக்கு-துன்பத்திற்கு; என்று-என்பதாக; கலக்கத்தை-துன்பத்தை; கையாறா-செயலற்ற தன்மையாக; கொள்ளாதாம்-கொள்ளாதாம்; மேல்-மேல்.


இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி; [இலக்கம்-குறி]
பரிப்பெருமாள்: உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி;
பரிதி: உடம்பு துன்பத்துக்கு இலக்கு என்று துன்பத்தால் துன்பப்படார்;
காலிங்கர்: மற்று இவ்வுடம்பானது என்றும் இடும்பைக்கு இலக்கம் என்று இங்ஙனம் தெளிந்து;
பரிமேலழகர்: நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து;
பரிமேலழகர் குறிப்புரை: 'உடம்பு' சாதிப்பெயர்.

'உடம்பானது என்றும் இடும்பைக்கு இலக்கம் என்று இங்ஙனம் தெளிந்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுடம்பு நோய்களுக்கு இலக்கு என்று', 'உயர்ந்தோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கானது என்று உணர்ந்து', 'மனிதனுடைய உடம்பு துன்பங்களுக்கு இலக்கான இடம் (என்பது இயற்கை). அதை உணர்ந்து', 'மேலோர், உடம்பானது துன்பத்திற்கு ஏற்பட்ட இடமாகும் என்னும் உண்மையை அறிந்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடம்பு துன்பத்திற்கு இலக்கானது என்று உணர்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
பரிப்பெருமாள்: தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் கற்று மேலாயினர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் என்றமையால் தவம் செய்யுங்கால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று; அதுவும் ஒரு வினை ஆதலான்.
பரிதி: உடம்புக்கு அடுத்த கன்மம் அநுபவிக்கும் என்று எண்ணுவார் என்றவாறு. [கன்மம் - வினை]
காலிங்கர்: இது வந்த இடத்து மனம் கலங்குவதோர் கலக்கத்தைத் தமது ஒழுக்க நெறிக்கு உரியதாகக் கொள்ளார், உணர்வினும் தறுகண்மையினும் பெரிய அரசரானோர் என்றவாறு. [தறுகண்மை - அஞ்சாமை]
பரிமேலழகர்: தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: ஏகதேச உருவகம். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.

'துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மேல் என்பதற்கு மேலாயினர் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற, காலிங்கர் உணர்வினும் தறுகண்மையினும் பெரிய அரசரானோர் என்றும் பரிமேலழகர் அறிவுடையார் எனவும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயல்பறிந்த மேலோர் கலக்கம் கொள்ளார்', 'துன்பம் வந்தபோது கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ள மாட்டார்', 'துன்பம் வருகிறபோது தளர்ந்துவிடாமல் இருக்கிற அறிவுதான் மேலான அறிவு', 'துன்பத்தைத் துன்பமாகக் கொள்ள மாட்டார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பம் வருகிறபோது செயலற்ற தன்மையாகக் கொள்ளாதிருப்பது மேலானது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடம்பு துன்பத்திற்கு இலக்கானது என்று உணர்ந்து, துன்பம் வருகிறபோது கையாறாக் கொள்ளாதிருப்பது மேலானது என்பது பாடலின் பொருள்.
'கையாறா' என்ற சொல் குறிப்பது என்ன?

உயிர்களின் உடம்பு துன்பத்திற்கு இலக்காயிருப்பது என்று தெளிந்தவர்கள் இடுக்கண் வந்தபோது கலங்குவதில்லை.

இலக்கம் என்ற சொல் இலக்கு என்பதைக் குறிப்பது. இலக்காகும் குறிப்பொருள் (target) இலக்கம் ஆகும். முன்னர் போர்வீரர்கள் படையெறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்பட்டது. உடல் என்றாலே துன்பத்துக்கு இலக்கு என்ற பொருளில் 'இலக்கம் உடம்பு இடும்பைக்கு' என்கிறது இக்குறள். இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ (குறள்எண் 1029 பொருள்: உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?) என்று பின்னரும் குறள் கூறும்.
உடம்பு என்று சொல்லப்பட்டாலும் அது உடல் அளவிலும் மன அளவிலும் அடையத்தக்க துன்பங்களைக் குறிக்கும். இத்துன்பங்கள் தாங்குதற்கரியன. துன்பம் ஒழிதல் வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவர். ஆனால் துன்பங்கள் இயல்பானவை என்று உணர்ந்தவர்கள் அத்துன்பங்கள் நேர்ந்தபோது துன்பமாக நினைத்துக் கலக்கமுற்று வருந்துவதில்லை. அதாவது 'இயற்கையாக' வரும் துன்பத்தை ஒருவன் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட வேண்டும் என்று இக்குறள் கூறுகிறது. வந்த சூழலை அவ்விதம் இயல்பாக ஏற்பவர்கள் செயலற்றுப் போகும் நிலை எய்தார்கள். மனத்தெளிவுடையார் இடும்பையை இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது.

இப்பாடலிலுள்ள 'மேல்' என்னும் சொல் பண்புப் பெயராகி அதனையுடைய மேலோரை உணர்த்தியது எனக் கூறுவார் மணக்குடவர். இச்சொல்லுக்கு அரசர் எனக் காலிங்கரும் அறிவுடையார் என்று பரிமேலழகரும் உரை கூறினார்.

'கையாறா' என்ற சொல் குறிப்பது என்ன?

'கையாறா' என்ற சொல்லுக்குத் துன்பமாக, ஒழுக்க நெறிக்கு உரியதாக, இடும்பையாக, ஒழுக்க நெறியாக, நீக்கும் வழியாக, கலக்கமாக, தளர்ந்து செயலறுதலாக, கடைப்பிடிக்கும் வழியாக, வாழ்வு நெறியாக, மேற்கொள்ளுதல் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கையாறு என்பதற்கு துன்பம், ஒழுக்கநெறி, செயலற்ற தன்மை எனப் பொருள் கூறினர். இவற்றுள் கலக்கத்தை இடும்பையாக-ஒழுகுநெறியாகக் கொள்ளார் என்பதினும் செயலற்ற நிலையாகக் கொள்ளார் என்ற பொருளே பொருத்தம்.
கையாறு என்பது கவலையின் முதிர்ந்த நிலையை அதாவது 'என் செய்வோம்' என எதனையும் செய்யமுடியாது நிலைகுலையச் செய்யும் சூழ்நிலையைக் குறிக்கும், அந்நிலையிலும் தளர்ந்துபோகாதிருப்பது மேல் என்பது குறட்செய்தி.

உடம்பு துன்பத்திற்கு இலக்கானது என்று உணர்ந்து, துன்பம் வருகிறபோது செயலற்ற தன்மையாகக் கொள்ளாதிருப்பது மேலானது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துன்பத்தில் செயலற்றுப் போகாமை இடுக்கணழியாமை.

பொழிப்பு

உடம்பு துன்பத்திற்கு இலக்கானது என உணர்ந்து, துன்பத்தில் செயலற்ற தன்மையைக் கொள்ளாதிருப்பது மேலானது.