இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0626அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:0626)

பொழிப்பு (மு வரதராசன்): செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ?

மணக்குடவர் உரை: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர்.
இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?
(பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றாதவர்.

பதவுரை:
அற்றேம்-வறியம் ஆயினோம்; என்று-என்பதாக; அல்லல்-துன்பம்; படுபவோ-உழப்பரோ; பெற்றேம்-அடைந்தோம்; என்று-என்பதாக; ஓம்புதல்-இவறுதல்; தேற்றாதவர்-அறியாதவர்.


அற்றேம்என்று அல்லற் படுபவோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்;
பரிப்பெருமாள்: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்;
பரிதி: பொருளும் கிளையும் அற்றோம் என்று விதனப்படார்;
காலிங்கர்: யாம் கைப்பொருள் அற்றேம் என்று கொண்டு அல்லற்படுவார்களோ? படார் அன்றே;
பரிமேலழகர்: வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ;
பரிமேலழகர் குறிப்புரை: பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.

'பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போனபோது துயரப் படுவாரோ?', 'வறுமை வந்தபோது 'இழந்தோம்' என்று துன்பப்படுவாரோ? (பட மாட்டார்)', 'ஒரு பொருளை இழந்துவிட்டதற்காக மட்டும் துன்பப்படுவார்களா? (மாட்டார்கள்)', 'வறுமை வந்த காலத்தும் ஒன்றும் இலராயினோமே என்று வருத்தப்படுவார்களோ?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இழந்துவிட்டோமே என்று துன்பமுறுவார்களா? என்பது இப்பகுதியின் பொருள்.

பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
பரிப்பெருமாள்: அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தெளிவு-துணிவு. இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
பரிதி: பொருளும் கிளையும் நிலையில்லை என்று அறிந்திருப்பார் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் பெரும்பொருள் பெற்றோம் என்று கொண்டு அதனைப் பேணிப் பிடித்தலை அறியாது பலர்க்கு உபகாரம் செய்யும் அரசர் என்றவாறு.
பரிமேலழகர்: செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?
பரிமேலழகர் குறிப்புரை: பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.

'பொருள் பெற்றோம் என்று கொண்டு அதனைப் பேணிப் பிடித்தலை அறியாது பலர்க்கு உபகாரம் செய்பவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர்', 'செல்வம் வந்தபோது பெற்றோம் என்று மகிழ்ந்து பேணுதலை அறியாதவர்', 'ஒரு பொருளைப் பெற்றுவிட்டதற்காகப் பெருமை கொண்டு கர்வம் பாராட்டாதவர்கள்', 'செல்வம் அடைந்த காலத்து, அதனை எய்தினோம் என்று பாராட்டி அதனை (செலவாழியாது) பாதுகாத்தலைப் பொருட்படுத்தாதவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெற்றபோது பற்றற்று இருப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெற்றபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்துவிட்டோமே என்று துன்பமுறுவார்களா? என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

ஒன்றைப் பெற்றோம் என்று அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்போர் அது சென்றுவிட்டபின் அதை 'நாம் இழந்து விட்டோமே' என்று துன்பப்படுவரா?

ஒன்று கிடைத்துவிட்டது என்று தலைகால் புரியாமல் ஆடாதவர்களாலேயே அதை இழக்க நேரிடும்பொழுது துன்பப்படாமல் இருக்க முடியும். இங்கு சொல்லப்பட்ட 'ஒன்று' என்பது பொருட்செல்வம் அல்லது செல்வாக்கான பதவி போன்ற எதுவேண்டுமானாலும் இருக்கலாம். முயற்சியில் ஈடுபடுவோர் சில நேரங்களில் பொருள் குவிப்பர்; அவர்கள் பொருள் இழக்கக்கூடிய காலமும் உண்டு. செல்வம் வந்த காலத்தில் மிகையாக மகிழாதவர்களுக்கே இழப்பு வரும்போது அதன் பெரும் தாக்கத்தை ஏற்கும் ஆற்றலும் இருக்கும்.
துன்பத்தை வெல்லுவதற்கு வேண்டுவது சமத்துவம். மகிழ்ச்சி-துயரம், உயர்ச்சி-தாழ்ச்சி என்ற இருமைநிலைகளிலும் ஒட்டாது மனத்தை சமப்படுத்த வேண்டும். எந்தப் பொருளையும் பெருமதிப்பாக எண்ணாதவர்கள் அப்பொருளின்மை காரணமாக வரும் இடுக்கண்ணிற்கு மனம் அழியமாட்டார்கள்.

‘அற்றேம், பெற்றேம்’ என்னும் இரண்டிடத்துக்கும் பொருட்செல்வத்தைக் குறித்து உரை கூறினர் பலரும். 'ஓம்புதல் தேற்றாதவர்' என்றதற்குக் கிடைத்ததைப் போற்றி வைத்தலை நன்று என்று தெளியாதவர் என்றும் பெற்ற செல்வத்தை இறுகப் பிடியாது பிறர்க்கு ஈயும் நல்லியல்பை அறிவித்தல் இக்குறட் கருத்தென உரை செய்தனர்.

காதல் உற்றிலன்; இகழ்ந்திலன் (கம்ப இராமாயணம், அயோத்தியா காண்டம், மந்திரப் படலம் 1382 பொருள்: அரசாட்சி கிடைத்தது என்று விரும்பினான் அல்லன்; அது துன்பமானது என்று வெறுத்தான் அல்லன்) என்று, தயரதன் இராமனை அரசாட்சியை ஏற்க வேண்டிய செய்தி தெரிவிக்கப்பட்டபோது அவன் அதற்காகப் பெருமகிழ்வடையமில்லை எனக் கம்பர் காட்டுவார். அதுபோல் இராமனைக் காடேகச் சொன்னபோதும் 'கானம் இன்றே போகின்றேன்' என முடி பறி போன நேரத்திலும் அது இல்லாமற் போயிற்றே என்று அவன் வருந்தாமல் காட்டிற்குச் செல்ல ஆயத்தமானான்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

வெற்றியும் தோல்வியும் உலகத்து நிகழ்ச்சிகள். இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவனவே. உயர்வும் தாழ்வும் எப்பொழுதும் உள்ளவைதாம். கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகும்பொழுது தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் கீழ்நிலைக்கு இறங்கி விடுகிற பொழுது எவராலும் தாங்கிக் கொள்ள முடியாமற் போய் விடுகின்றது. ஏற்றமும் இறக்கமும் மிகவும் இயல்பானவை என்ற தெளிவு இருந்தால், உயர்வு வரும்பொழுது அளவுக்கு மீறி களிப்புறுவதும் நிலைமை கீழாக மாறும்போது, நெஞ்சம் அல்லற்பட வேண்டியதும் செய்யமாட்டார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் மனம் சமநிலை பெற வேண்டும் என வலியுறுத்த வந்தது இப்பாடல்.

இக்குறள் ஒன்று இன்மையால் வந்த துன்பத்திற்கு மனம் கலங்காமைக்கு வழி சொல்கிறது.

பெற்றபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்துவிட்டோமே என்று துன்பமுறுவார்களா? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இடுக்கணழியாமை சமன்நிலை அறிந்தோர்க்கு இயல்பாய் இருக்கும்.

பொழிப்பு

வந்தபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்தபோது துயரப் படுவாரோ?