இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0625



அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:625)

பொழிப்பு (மு வரதராசன்): விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.

மணக்குடவர் உரை: மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும்.
இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.
(ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அடுக்கடுக்காக வரினும் அசையாதவனுக்கு வந்த துயரமன்றோ துயரப்படும்!


பொருள்கோள் வரிஅமைப்பு:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.

பதவுரை:
அடுக்கி-மேன் மேலாகி; வரினும்-வந்தாலும்; அழிவிலான்-அசைவு இல்லாதவன்; உற்ற-நேர்ந்த; இடுக்கண்-துன்பம்; இடுக்கண்-துன்பத்தில்; படும்-பட்டுப்போம்.


அடுக்கி வரினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேன்மேலே துன்பம் வந்தனவாயினும்;
பரிப்பெருமாள்: மேன்மேலே துன்பம் வந்தனவாயினும்;
பரிதி: மேன்மேல் துயரம் வந்தாலும்;
காலிங்கர்: நாளும் நாளும் ஒன்று இரண்டு அன்றிப் பல அடுக்கி வரினும்;
பரிமேலழகர்: இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார்.

'இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் தொடர்ந்து மேன்மேல் வந்தாலும்', 'மனம் அழியாத உறுதியுடையவனுக்கு வருகின்ற துன்பங்கள் அடுத்தடுத்து எத்துணை வந்தாலும்', 'இடைவிடாது மேன்மேல் இடுக்கண்கள் வந்தாலும்', 'இடைவிடாது மேன்மேல் பெருகிவரினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அடுத்து அடுத்து பெருகிவரினும் என்பது இப்பகுதியின் பொருள்.

அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
பரிப்பெருமாள்: மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
பரிதி: கலங்காதவனை உற்ற இடுக்கண் துயரப்படும் என்றவாறு.
காலிங்கர்: தனது அறிவுடைய நெஞ்சத்தான் அழிவு உறுதல் சிறுதும் இலனாகிய அரசனானவன் தன்னை வந்துற்ற இடுக்கணானது தான் பெரிதும் இடர்ப்படும்; அது அன்றி அவனை இடர்ப்படுத்தல் எஞ்ஞான்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.

'மனனழிவில்லாதவன்/கலங்காதவன்/நெஞ்சத்தான் அழிவு உறுதல் சிறுதும் இலன்/உள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனம் கலங்காதவன் எய்திய துன்பம் துன்பப்படும்', 'அவனைத் துன்புறுத்திவிட முடியாது. துன்பங்களே துன்பப்பட வேண்டியதுதான்', 'தன் ஊக்கத்தை விடாதவனுக்கு நேர்ந்த இடையூறு தானே முட்டுப்பட்டு ஒழியும்', 'தன் குறிக்கோள் அழியாதவன் அடைந்த துன்பம், துன்பம் அடையும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனம் அழியாதவன் எய்திய துன்பம் துன்பப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடுத்து அடுத்து பெருகிவரினும் அழிவிலான் எய்திய துன்பம் துயரப்படும் என்பது பாடலின் பொருள்.
'அழிவிலான்' யார்?

உள்ளம் கலங்காமல் இருந்தால் ஒன்றன்மேல் ஒன்றாகத் துன்பங்கள் பலவாக அடுக்கி வந்தபோதும் வந்த துன்பங்களே துயரப்பட்டுப் போகும்.

சில சமயங்களில் துன்பம் அடுத்து அடுத்து ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும். அப்படித் துன்பப்பட்டாளமாக 'அடுக்கி வரினும்' மனம் அழியாதவனை- ஊக்கம் குலையாதவனை அடைந்த துன்பம் தான் துயரடையும் என்று கூறுகிறார் வள்ளுவர். எத்துணை துன்பங்கள் எதிர்ப்பட்டாலும் அவை கலங்கா நெஞ்சுடையார் முன் காயப்பட்டு அகலும். பணியிடத்து அலை அலையாக இடர்கள் வந்தாலும் தனது முயற்சியில் அழுந்தக் காலூன்றி நிற்பவன், வந்த துன்பம் 'இவரைத் துன்புறுத்தித் துவளச் செய்யமுடியவில்லையே' என்று துன்பப்பட்டோடும்படி செய்து, தனது செயல் நிறைவேற்றுவான்.

துன்பத்திலே நொந்து விடுகிறவன், உள்ளம் தளர்ச்சியுற்றுப் போவதால், அடுத்து வரும் சிக்கல்களை எதிர் கொள்ளும் திறன் இழந்து விடுகிறான். ஆனால் எந்தவித அசைவுமில்லாமல் துன்பத்தை எதிர்கொள்பவனைக் கண்டு துன்பமே துயரப்பட்டு ஓடிவிடும் என்பது கருத்து.

'அழிவிலான்' யார்?

'அழிவிலான்' என்ற சொல்லுக்கும் மனனழிவு இல்லாதவன், கலங்காதவன், நெஞ்சத்தான் அழிவு உறுதல் இலன், உள்ளக்கோட்பாடு விடாதவன், கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன், நெஞ்சம் அழியாதான், அசையாதவன், மனம் கலங்காதவன், மனம் அழியாத உறுதியுடையவன், ஊக்கத்தை விடாதவன், தன்குறிக்கோளழியாதவன், உள்ளத் தளர்ச்சி இல்லாதவன், மனங் கலங்காதவன், மனம் சலியாது செயல் செய்யும் பெரியார் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'அழிவிலான்' என்பது மனங் கலங்காதவன் குறித்தது. எந்த சூழ்நிலையிலும் மனம் உடைந்து போகாமல் செயல்படுபவனைச் சொல்கிறது.

அடுத்து அடுத்து பெருகிவரினும் மனம் அழியாதவன் எய்திய துன்பம் துயரப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இடுக்கணழியாமை கொண்டவனை எந்த இடுக்கணும் அசைக்கமுடியாது.

பொழிப்பு

அடுத்தடுத்து வரினும் மனம் கலங்காதவன் எய்திய துன்பம் துயரப்படும்.