இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0623இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:623)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

மணக்குடவர் உரை: துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர்.
இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.

பரிமேலழகர் உரை: இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.
(வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: துன்பப்படுத்த வரும் இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுள்ள அறிவாளிகள், அவர்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும்படியாகச் செய்துவிடுவார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடும்பைக்கு இடும்பை படாஅதவர் இடும்பைக்கு இடும்பை படுப்பர்.

பதவுரை:
இடும்பைக்கு-துன்பத்திற்கு; இடும்பை-இடையூறு; படுப்பர்-உண்டாக்குவர்; இடும்பைக்கு-இடையூற்றிற்கு; இடும்பை-துன்பம்; படாஅதவர்-உறாதவர்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார்;
பரிப்பெருமாள்: துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார்;
பரிதி: துன்பம் வந்தால் துன்பம் அதற்கு இடுவர்;
காலிங்கர்: யாதானும் ஒருவாற்றான் வந்து எய்திய இடும்பைக்குத் தாம் பெரிதும் இடும்பையைச் செய்வார்;
பரிமேலழகர்: அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.

'துன்பத்திற்குத் துன்பத்தை விளைப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்துன்பத்திற்குத் தாம் துன்பம் செய்வர்', 'அவர்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும்படியாகச் செய்துவிடுவார்கள்', 'அவ்விடையூற்றிற்கே இடையூறு விளைப்பர்', 'துன்பத்திற்குத் துன்பம் உண்டு பண்ணுவர் ('துன்பத்தை அழிப்பர்' என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பத்திற்குத் இடையூறு உண்டு பண்ணுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.
பரிப்பெருமாள்: அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன.
பரிதி: துன்பம் வந்தாலும் துன்பப்படாதவர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் அங்ஙனம் எய்திய இடும்பைக்கு இங்ஙனம் தெளிந்து தாம் சிறுதும் இடுக்கண் உறாத இகல் வேந்தர் என்றவாறு.
பரிமேலழகர்: வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.

'துன்பத்திற்குத் துன்ப முறாதவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு வந்த துன்பத்திற்குத் துன்பப்படாதவர்', 'துன்பப்படுத்த வரும் இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுள்ள அறிவாளிகள்', 'இடையூறுகளுக்கு வருந்தாதவர்கள்', 'துன்பத்திற்கு வருந்தாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இடையூற்றிற்குத் துன்பப் படாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பத்திற்குத் இடையூறு உண்டு பண்ணுவர் இடையூற்றிற்குத் துன்பப் படாதவர் என்பது பாடலின் பொருள்.
'இடும்பை' என்ற சொல்லின் பொருள் என்ன?

இடையூறு நேர்ந்தபோது அதற்காக வருந்தி உள்ளம் கலங்காதவர், அந்தத் துன்பத்துக்கே இடையூறு உண்டாக்குவர்.

முயற்சியில் ஈடுபடும் ஒருவர் தடைக் கற்களை எதிர்கொள்கிறார். அவர் அதை தடைக்கற்கள் என்று நினைக்காமல் படிக்கற்களாகப் பயன்படுத்தி மேலே உயர்கிறார். தடைகற்களைப் படிக்கற்களாக மாற்றும் திறன் கொண்டவர்கள் இடும்பைக்கு இடும்பை படுப்பர் ஆவர்.
மனம் தளராதவர்களிடம் வரும் இடையூறுதான் தன் முயற்சி பலிக்காததால் இடைஞ்சல் உண்டாக்க வந்ததற்காக கலங்கிப்போகும் என்கிறது இக்குறள். பணியிடத்து, இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடன் செயலாற்றுபவர்கள், தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும் படி செய்து வினையை முடிப்பார்கள்.

விசுவாமித்திரர் தசரதனிடம் இராமனைத் தன் வேள்விக்குத் துணையாக தன்னுடன் அனுப்ப வேண்ட, அதற்கு ஒப்பாமல், இராமன் பாலகன் என்றும் தாமே வந்து உதவுவதாகவும் என்று தசரதன் கூறும் போது இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென், பெரு வேள்விக்கு எழுக (கம்பராமாயணம், பாலகாண்டம், கையடைப்படலம், 329) என்று கம்பர் இக்குறளிலுள்ள 'இடும்பைக்கு இடும்பை' என்ற தொடர் தழுவி 'இடையூற்றுக்கு இடையூறு' எனப் பாடல் அமைத்தார்.

முன் வந்த சொல்லும் பொருளும் பின்னும் பலவிடத்து வந்தால் அது சொற்பொருள் பின் வருநிலை எனப்படும். முன் வந்த இடும்பை என்னும் சொல்லும் அதன் பொருளும் பின்னும் வந்தமையின் இக்குறள் சொற்பொருள் பின் வரு நிலையணியாம்.

'இடும்பை' என்ற சொல்லின் பொருள் என்ன?

'இடும்பை' என்ற சொல்லுக்குத் தொல்லாசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்களில் கிட்டத்தட்ட எல்லோரும், துன்பம் எனவே பொருள் கண்டனர், இன்றைய ஆசிரியர்களுள், கா சுப்பிரமணியம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் ஆகியோர் இடையூறு எனப் பொருள் கொள்கின்றனர். கு ச ஆனந்தன்-'இடும்பை' என்ற சொல் உடம்பின் துன்பத்தை காட்டுகிறது என்பார்.
தண்டபாணி தேசிகர் 'இடையூறு-வினை செய்யுங்கால் அவ்வினையின் இடையிலே எதிர்ப்படும் தடை. ஊறு-முதனிலை திரிந்த தொழிற்பெயர். உறுவன என்னும் பொருளது. இடையூறால் வினை செய்வாற்கு விளைவது துன்பம் அதாவது இடுக்கண். இடையூறுக்கும் இடுக்கண்ணிற்கும் உள்ள இயைபு காரண காரியத்தொடர்பு. ஆகவே இடையூறு என்பார். காரணமாகிய ஒற்றுமைபற்றிக் காரியத்தைக் காரணமாக உபசரித்தனராதல் வேண்டும் என அமையலாம்' என விளக்குவார்.

'இடும்பை' என்ற சொல்லுக்கு இடையூறு, துன்பம் என்ற இரண்டு பொருளும் இங்கு கொள்ளத்தகும்.

துன்பத்திற்குத் இடையூறு உண்டு பண்ணுவர் இடையூற்றிற்குத் துன்பப் படாதவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இடுக்கணழியாமை துன்பத்திற்கு இடையூறு விளைக்கும்.

பொழிப்பு

இடையூறு கண்டு துன்பப் படாதவர், துன்பத்திற்குத் தாம் இடையூறு செய்வர்.