இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0622



வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:622)

பொழிப்பு (மு வரதராசன்): வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

மணக்குடவர் உரை: வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும்.
இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: வெள்ளம்போல் பெருகிவரும் இடும்பைகளெல்லாம் அறிவுடைய ஒருவன், அவற்றைக் கடத்தல் எளிதே என்று தன் உள்ளத்தில் உரத்தோடு நினைத்த அளவில் கெடும். மனத்தளவில் திண்மையுடன் எண்ணும் எண்ணமே துன்பத்தை வெல்லும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பதவுரை:
வெள்ளத்து-வெள்ளத்தை; அனைய-அளவின; இடும்பை-துன்பம்; அறிவுடையான்-அறிவுடையவன்; உள்ளத்தின்-உள்ளத்தினால்; உள்ள-நினைக்க; கெடும்-அழியும்.


வெள்ளத்து அனைய இடும்பை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெள்ளம்போன்ற துன்பம்;
பரிப்பெருமாள்: வெள்ளம்போன்ற துன்பம்;
பரிதி: வெள்ளம் போல வந்த துன்பம்;
காலிங்கர்: அளவுபட்டது அன்றிக் கடல் போன்ற இடுக்கண் ஆயினும்;
பரிமேலழகர்: வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்;

'வெள்ளம்போன்ற துன்பம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் வெள்ளம் என்பதற்குக் 'கடல்' எனப் பொருள் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெள்ளம் போன்ற நெருக்கடியும்', 'வெள்ளம் போல ஏராளமாக வந்த துன்பமெல்லாம்', 'சமுத்திரத்தைப் போன்ற மிகப் பெரிய துன்பமும்', 'வெள்ளம்போலக் கரையற்ற துன்பங்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வெள்ளம்போலத் துன்பங்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.
பரிப்பெருமாள்: அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.
பரிதி: அறிவுடையவன் உத்தியோக அக்கினியினாலே கெடும் என்றவாறு. [உத்தியோக அக்கினியினாலே-முயற்சித் தீயால்]
காலிங்கர் (அறிவுடையார்-பாடம்): அறிவுடையாளராகிய அரசர் தம் அறிவினால் உள்ளத்து உணர்ந்து, 'யாம் முன்செய்த வினைப்பயனே எய்திய இன்பமும் இடரும்; ஆகலான், இவை இனிப் பகுத்துக் கோடல் பிறர்க்கு அரிது' என்று இங்ஙனம் உண்மை உணரவே எய்திய இடுக்கண் தானே கெட்டு விடும் என்றவாறு.
பரிமேலழகர்: அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது. [கோட்பாடு - மனத்தின் கொள்கை; எண்மை-எளிமை]

'அறிவுடையவன் வினைப்பயனென்று நினைக்க/முயற்சித் தீயால்/உள்ளத்தான் ஒன்றனை நினைக்கக் கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிஞன் ஊக்கத்தினால் நினைக்கவே ஓடிப்போம்', 'அறிவுடையான் மனத்தினால், 'இடும்பை உடம்புக்கு இயல்பு' என்று நினைத்த அளவிலே கெட்டொழியும். (உள்ளத்தின் உள்ள என்பதற்கு ஊக்கத்தினால் நினைக்க என்பாரும் உளர்.)', 'அறிவுடையவர்கள் மன உறுதியினால் மறைந்துவிடும்', 'அறிவுடையான் தன் உள்ளத்தில் தன் குறிக்கோளை நினைக்க இல்லையாய் விடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறிவுடையான் உள்ளத்தில் உரத்தோடு நினைக்க மறைந்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வெள்ளம்போலத் துன்பங்கள், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் என்பது பாடலின் பொருள்.
'உள்ளத்தின் உள்ள' இடும்பை கெடுவது எப்படி?

வெள்ளம்போல அளவின்றித் தொடர்ந்துவரும் துன்பங்களையும் அறிவாற்றல் கொண்டு துடைத்து எறிந்துவிடலாம்.

துன்பம் அளவுகடந்து வெள்ளம் போன்று வேகத்துடன் எதிர்பாராத திக்கிலிருந்தும் வந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவிற்றாய துன்பங்களுக்கும் சிந்தித்துத் தீர்வுகண்டு நீக்கிவிடும் நம்பிக்கை அறிவுடையவனுக்கு உண்டு. பொருள் கொண்டோ வேறு வலிகொண்டோ அத்தகைய துன்பத்தை நீக்க முடியாது. அறிவைப் பயன்படுத்தி உள்ளத்தில் உறுதியுடன் அதை எதிர்க்க நினைத்தால் எல்லா இடரும் கெடும். இதனால் துன்பத்தின் அளவு அவனைப் பாதிப்பதில்லை. அவன் உள்ளத்தில் 'இவ்வளவு தானே இடையூறு!' என்று நினைப்பான். அறிவுள்ளவன் துன்பம் நீக்க உடனே நடவடிக்கை எடுக்க முனைவான். வெள்ளத்தின் விரைவுக்கும் மிஞ்சி அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை ஆராயும் வல்லமை பெற்றவன் அவன். அந்தத்துன்பத்தை அவன் இடும்பையாகவே கருதுவதில்லை - தன் திறனைக்காட்ட வாய்ப்பாகவே அதை அவன் பார்க்கிறான். அப்படியாக, அவன் மனதில் அது துன்பமே அல்ல.
துன்பம் என்பது ஒருவரது மனத்தின் நினைவேயன்றிப் பிறிதில்லை. அறிவுடைய ஒருவன் துன்பத்தினை அனுபவிக்கும்போது அதனைத் துன்பமெனக் கருதாது, 'இது இயல்பானதுதான்' என்னும் உணர்வுடன் அதை எதிர்கொள்வானாயின் துன்பங்கள் யாவும் அவன் பால் நில்லாது நீங்கிவிடும். அஃதாவது இடுக்கண் வெள்ளம் போல்வரினும், அறிவுடையான் தனது உள்ளத்தில் உள்ள (மாறுபடக்கொள்ள) ஒழிந்துபோம்.

-

'உள்ளத்தின் உள்ள' இடும்பை கெடுவது எப்படி?

'உள்ளத்தின் உள்ள' என்றதற்கு நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்க, உத்தியோக அக்கினியினாலே, 'யாம் முன்செய்த வினைப்பயனே எய்திய இன்பமும் இடரும்; ஆகலான், இவை இனிப் பகுத்துக் கோடல் பிறர்க்கு அரிது' என்று இங்ஙனம் உண்மை உணரவே, தன் உள்ளத்தான் துன்பத்திற்கு மாறுபட்ட ஒன்றை நினைக்க, தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில், அவற்றைக் கடத்தல் எளிதே என்று தன் உள்ளத்தில் உரத்தோடு நினைத்த அளவில், ஊக்கத்தினால் நினைக்கவே, மனத்தினால், 'இடும்பை உடம்புக்கு இயல்பு' என்று நினைத்த அளவிலே, மன உறுதியினால், தன் உறுதிமிக்க உள்ளத்தில் நினைத்த அளவில், தனது உள்ளத்திலே அதனை நீக்கும் எளிய வழியை நினைத்த அளவிலே, தன் உள்ளத்தில் தன் குறிக்கோளை நினைக்க, தன் உள்ளத்தில் அவை வந்த தன்மையினைச் சிறுது நினைத்துப் பார்க்க, அவற்றால் ஒன்று மில்லை யென்று தன் மனத்தில் நினைத்த மட்டில், தன் ஊக்கத்தினால் கடக்க முயன்றால் என்றபடி உரை செய்தனர்.

இவ்விதம் வாளா 'நினைத்த அளவில்' என்றும் 'வினைப்பயன் என்று நினைக்க' என்றும் 'கடத்தல் எளிது என்று நம்பிக்கையுடன் நினைத்தல்' என்றும் 'தன் உள்ளத்தான் துன்பத்திற்கு மாறுபட்ட ஒன்றை நினைக்க' என்றும் இத்தொடர்க்குப் பொருள் கூறப்பட்டது.
உள்ளம் என்பதற்கு ஊக்கம், முயற்சி என்பனவும் பொருளாகுமாதலால், பரிதி முயற்சியாகிய தீயினாலே துன்பவெள்ளம் கெடும் என்றார். இவ்வுரை சிறப்பாக உள்ளது. பரிமேலழகர் 'துன்பம் இன்பம் என்பன மனத்தின் கோட்பாடே யன்றிப் பிறிதில்லை என எண்ணுதலால் மாற்றலாம்' என்பார்; இதற்கு 'உள்ளத்தால் துன்பத்தை இன்பமாக எண்ணினால் துன்பங் கெடும்' என விளக்கம் அளிப்பர்.

உள்ளம் நினைத்தால் எதையும் இல்லாமல் ஆக்கலாம்; எதையும் உள்ளதாக்கலாம். உள்ளம் துளியை வெள்ளமாக்கிக் காட்டும்; வெள்ளத்தை துளியாக்கியும் காட்டும். அறிவுடையவன் இக்கற்பனை யாற்றலைப் பயன்படுத்தி வெற்றி காண்பான். அவன் எல்லையற்ற துன்பத்தை அவை இடும்பையேயல்ல என்று எண்ணி தன்மனத்தால் அத்துன்பங்களையெல்லாம் வெல்லும் வழிகளைச் சிந்திக்கக் கெடும்.

வெள்ளம்போலக் கரையில்லாத் துன்பங்கள், அறிவுடையான் உள்ளத்தில் உரத்தோடு நினைக்க மறைந்துவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இடுக்கணழியாமை என்ற உறுதி பெருந்துன்பங்களையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

பொழிப்பு

வெள்ளம் போன்ற துன்பங்கள் எல்லாம் அறிவுடையான் மன உறுதியினால் மறைந்துவிடும்.