இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்
(அதிகாரம்:இடுக்கணழியாமை
குறள் எண்:621)
பொழிப்பு (மு வரதராசன்): துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
|
மணக்குடவர் உரை:
தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை.
இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
இடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது
அஃது ஒப்பது இல் - அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான்.
(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான்,
'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)
சி இலக்குவனார் உரை:
துன்பம் வரும்போது அதனைக் கண்டு வருந்தாது உள் மகிழ்க. அத் துன்பத்தை நெருங்கி வெல்லக்கூடியது அதனைப் போன்று வேறொன்றுமில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.
பதவுரை:
இடுக்கண்-துன்பம்; வருங்கால்-வரும்போது; நகுக-சிரித்து ஒதுக்கிவிடுக; அதனை-அதை (அத்துன்பத்தை); அடுத்துஊர்வது-நெருக்கிப் போராடவல்லது; அஃதொப்பது-அதைப்போல்வது; இல்-இல்லை.
|
இடுக்கண் வருங்கால் நகுக:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக;
பரிப்பெருமாள் :தனக்குத் துன்பம் வந்த காலத்து அதனை இகழ்ந்து நகுக;
பரிதி: இடுக்கண் வந்த காலத்து நகுக;
காலிங்கர்: உலகத்து அரசரானோர் தமக்கு யாதானும் ஒரு வழியால் இடுக்கண் வந்த இடத்துக் கலங்காது மகிழ்ந்திருக்க;
காலிங்கர் குறிப்புரை: நகுக என்பது மகிழ்ந்திருக்க என்றது;
பரிமேலழகர்: ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க;
'தனக்குத் துன்பம் வந்த காலத்து நகுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் உரை துன்பம் வருவது பிறன் செய்யும் வஞ்சகத்தால் என்று கருதச்செய்கிறது.
இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் வரும்போது கேலிசெய்க', 'ஒருவன் தனக்குத் துன்பம் வரும்போது அதற்கு வருந்தாது எள்ளி நகையாடுக', 'இடையூறு ஏற்படும்போது அதற்கு மனக்கலங்காது மகிழ்க', 'துன்பம் வரும்போது அதனைக் கண்டு வருந்தாது உள் மகிழ்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
துன்பம் வந்த காலத்து அதைச் சிரித்து ஒதுக்கிவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.
அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
பரிதி: அது துன்பத்தை அறுக்கிற அரம் என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின், மற்று இவ்விடுக்கணினை அடர்ந்து மேற்பட்டு; நின்று நக வல்லனாயின், இதனை ஒப்பது ஓர் இன்பம் பிறிது யாதும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அதனை அடுத்தூர்வது என்பது அவ்விடுக்கணினை நெருக்கி மீதுபோய் நிற்கவல்லது என்றது.
பரிமேலழகர்: அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான்,
'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.
'அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே துன்பத்தைக் கடக்க வழி', 'அத்துன்பத்தை அடக்கி வெல்லக் கூடியது அந்நகைப்புப் போல வேறில்லை', 'அதனைக் கடப்பதற்கு அம்மகிழ்ச்சியைப்போல வேறொரு கருவியும் இல்லை', 'அத் துன்பத்தை நெருங்கி வெல்லக்கூடியது அதனைப் போன்று வேறொன்றுமில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அத்துன்பத்தை மேன்மேலும் நெருக்கிப் போராட வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
துன்பம் வந்த காலத்து அதைச் சிரித்து ஒதுக்கிவிடுக; அத்துன்பத்தை அடுத்தூர்வது அந்நகுதல் போல்வது பிறிதில்லை என்பது பாடலின் பொருள்.
'அடுத்தூர்வது' என்ற தொடரின் பொருள் என்ன?
துன்பத்தை நீக்க 'சிரித்து விடு!' என்ற வழிஒன்றைக் காட்டும் குறள்; மகிழ்வதனால், மனத்தளர்ச்சி குறைந்து, தடையுற்ற தொழிலைச் செய்து முடிக்க தீர்வு கிடைக்கின்றது.
பணியிடத்து எவர்க்கும் எதிர்ப்பு, தோல்வி என்ற இடையூறுகள் அவ்வப்போது நேரிடும். சில இடையூறுகள் மிகுந்த துன்பம் தருவனதாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் சிரிப்பு உண்டாக்கும் சூழ்நிலையை--நகைச்சுவை உரையாடல் போன்றவற்றை- உருவாக்கிக் கொள்ளச் சொல்கிறார் வள்ளுவர். இது மன உளைச்சலைக் குறைத்து அத்துன்பங்களை மேன்மேலும் நெருக்கிப் போராடத் துணை செய்யும். துன்பம் வந்தவேளை மனத் தளர்ச்சியால் சிந்தனை சிதறும்பொழுது அதற்காகக் கலக்கமடையாதே என்று சொல்லும் வகையில், நேர் எதிர் திசைக்குச் செல்ல, அதாவது சிரித்துவிடச் சொல்கிறார். இவ்வாறு நகைப்பதனால் மனத் தளர்ச்சி குறைந்துபோகும்; உண்டான இடையூறுகளைத் தாண்டிச் செல்வது எளிதாகிவிடும். மனஊக்கம் தடைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து விடுபடவே 'சிரித்து விடுக' எனச் சொல்லப்பட்டது.
துன்பம் வந்தபோது துவண்டு போகாமல் இருக்கும் வண்ணம் 'நகுக' என்றார். துன்பம் வரும் நேரத்திலும் நமது நகைச்சுவை உணர்ச்சி நம்மைவிட்டு நீங்காதிருக்கப் பழகி அதைக்கொண்டே இடையூறுகளை வெல்லவேண்டும்.
துன்பம் வருகின்றபோது நகை தோன்றாதுதான். பின் ஏன் 'மகிழ்ந்திருக்க' என்றார் வள்ளுவர்? சிரித்துத் துன்பத்தினைப் புறம் தள்ளிவைப்பதால் அது அவனைத் தாக்குமோ என்ற அச்சம் குறைக்கப்படும்; இவ்வாறு நகைத்து மன எழுச்சிபெற்றவுடன் துன்பத்தை நெருக்கிப் போராடி வெல்ல முடியும் ஆற்றல் உண்டாகிவிடுகின்றது. பின் தொடர்ந்து செயலில் ஈடுபடமுடியும். எனவே சிரிப்பதே இடரைத்தாண்ட உதவும் நல்ல கருவியாம். மகிழ்ச்சியால் இடுக்கண்ணையும் இல்லாததாகச் செய்ய முடியும்; இடுக்கண் உற்ற செய்தியைப் பகைவர் அறிந்துகொள்ளாதவாறு மறைக்கச் செய்வதற்கும் அது துணைசெய்யும். துன்பமில்லாத வாழ்க்கை இல்லை; ஆனால் துன்பமறியாச் சூழலை நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ள முடியும்.
சிந்தாமணி காவியத்தில் நடுக்கடலில் புயலில் சிக்கிகொண்ட சூழலில் சீதத்தன் என்னும் வணிகன் பேசியதாக வருவது இக்குறளின் தழுவலாக உள்ளது:
இடுக்கண்வந் துற்ற காலை
எரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானும் இன்றி
நகுக. தாம் நக்க போழ்தவ்
விடுக்கணை அரியும் எஃகாம்
இருந்துஅழுது யாவர் உய்ந்தார் (காந்தருவ தத்தையார் இலம்பகம்:509)
(பொருள்: “துன்பம் வந்தபோது எரியும் விளக்கு காற்றால் நடுங்குவது போல் நடுங்காமல் மகிழ்க. அது அத்துன்பத்தைப் போக்கும் கருவியாகும். அத்துன்பத்தை எண்ணித் துக்கமுற்றால் அத்துக்கத்தினின்றும் நீங்கினார் யாருமில்லை.”)
|
'அடுத்தூர்வது' என்ற தொடரின் பொருள் என்ன?
'அடுத்தூர்வது' என்ற தொடர்க்கு மேன்மேலும் அடர்க்க வல்லது, அறுக்கிற அரம், நெருக்கி மீதுபோய் நிற்க, மேன்மேல் அடர வல்லது, நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது, வென்று ஓட்ட வல்லது, கடக்க வழி, அடக்கி வெல்லக் கூடியது, வென்று அடக்கக் கூடியது, நெருங்கி அதன் மேலேறி ஊர்ந்து சென்று வெல்லவல்லது, கடப்பதற்கு கருவி, நெருங்கி வெல்லக்கூடியது, நெருங்கி எதிர்ப்பதற்கு, மேவி மேலும் எதிர்க்கவல்லது, மேன்மேல் நெருங்கி மேற்கொள்வதற்கு என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இத்தொடர்க்கு பெரும்பான்மை உரையாசிரியர்கள் 'அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது', 'அவ்விடுக்கணினை நெருக்கி மீதுபோய் நிற்பது', 'எதிர்த்துக் கெடுக்க வல்லமையுடையது' என்று உரை பகர்ந்தனர். இவ்வுரையமைதிகளை நோக்கும்போது பரிமேலழகர் மணக்குடவர் முதலிய அனைவரும் கொண்டபாடம் 'அடர்த்து' என்றுதானிருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது (தண்டபாணி தேசிகர்). இரா சாரங்கபாணி '‘அடுத்து’ என்பதற்கு வென்று என்று பொருள் காண்பர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. வெல்லுதல் என்ற பொருளில் வரும் ‘அடு’ என்பதனடியாக வரும் வினையெச்சம் ‘அட்டு’ என வருதலே வழக்கு. நடு-நட்டு என்பது போல. ஆதலின் அடுத்து என்பதற்கு அப்பொருள் கொள்ளல் சாலாது' எனக் கருத்துத் தெரிவித்தார்.
சிலர் 'அடுத்துக் கெடுப்பது' என்றும் 'துன்பத்தை யடுத்துள்ள இன்பத்தில் ஊர்தல்' என்றும் உரை கண்டனர்.
'அதனை அடுத்து ஊர்வது' என்பது இடுக்கண்னைத் தடுத்து மேல் செல்வது என்ற பொருள் தரும். இடையூற்றிற்குப் பயந்தால் மேற்சென்று செயல் நடத்தமுடியாது என்பது கருத்து.
|
துன்பம் வந்த காலத்து அதைச் சிரித்து ஒதுக்கிவிடுக; அத்துன்பத்தை மேன்மேலும் நெருக்கிப் போராட வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை என்பது இக்குறட்கருத்து.
இடுக்கண் அழியாமைக்கு ஓர் இனிய கருவி சிரித்துப்போதல்.
துன்பம் வந்துற்றவேளை அதை இயல்பாக எடுத்துக்கொண்டு சிரித்துவிடு; இடுக்கண்ணை நெருக்கிப் போராட அந்நகைப்புப் போல வேறில்லை.
|