மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
(அதிகாரம்:மடியின்மை
குறள் எண்:610)
பொழிப்பு (மு வரதராசன்): அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.
|
மணக்குடவர் உரை:
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே.
இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அடியளந்தான் தாஅயது எல்லாம் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்.
பதவுரை:
மடி-சோம்பல்; இலா-இல்லாத; மன்னவன்-வேந்தன்; எய்தும்-அடைவான்; அடி-தாள்; அளந்தான்-அளந்தவன் (விண், மண், பாதாளம் என்ற மூவுலகையும் அளந்தவன்); தாஅயது-கடந்த பரப்பு; எல்லாம்-அனைத்தும்; ஒருங்கு-ஒருசேர.
|
மடியிலா மன்னவன் எய்தும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியில்லாத மன்னவன் எய்துவன்;
பரிப்பெருமாள்: மடியில்லாத மன்னவன் எய்துவன்;
பரிதி: மடித்த புத்தியில்லாத அரசன் பெறுவன்;
காலிங்கர்: தனது நெஞ்சு ஊக்கத்துக்குத் தக்க முயற்சி உடையனாய்த் தனதிடத்து ஒருநாளும் மடிப்பது ஓர் மடி இல்லாத மன்னவன் யாவன்; அவன் எய்தும்; யாதினை எனின்;
பரிமேலழகர்: மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
'மடியில்லாத மன்னவன் எய்துவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பல் இல்லா மன்னவன் அடைவான்', 'சோம்பலில்லாத அரசன் ஒருசேர அடைவான்', 'சோம்பல் இல்லாமல் அரசாட்சி செய்கிற மன்னவன் அடைவான்', 'சோம்பல் இல்லாத அரசன் அடைவான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.
அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே.
மணக்குடவர் குறிப்புரை: இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் கூட.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிதி: மகாவிட்டுணுவின் பாதத்திலே அடங்கின உலகம் என்றவாறு.
காலிங்கர்: முன் ஒரு நாள் அசுரேசனிடத்துச் சென்று மூவடி வேண்டி அளந்தவனாகிய திருமால் அடியில் தாவிக்கொண்ட அனைத்து உலகினையும் ஒருவழிப்படப்பெறும் என்றவாறு. [அசுரேசன் - மாவலி]
பரிமேலழகர்: தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.
'அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே' என்றபடி பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதியும் காலிங்கரும் அடியளந்தான் என்றது 'திருமால்' என்று குறிப்பிட்டுக் கூறப் பரிமேலழகர் 'இறைவன்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'திருமால் தாண்டிய உலகம் முழுதும்', 'தன் திருவடியாலே உலகை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு முழுவதையும்', 'திருமால் அளந்த பூலோகத்தையும் தேவலோகத்தையும் ஏககாலத்தில்', 'அடியளந்த திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அடியளந்தான் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது பாடலின் பொருள்.
'அடியளந்தான்' யார்?
|
சோம்பலில்லாத ஆட்சித்தலைவன் நன் முயற்சிகளால் உலக முழுவதையும் ஒருங்கே அடைந்து ஓங்கி நிற்பான்.
இடையீடில்லாத முயற்சியின் கண்ணே இருக்கும் ஆட்சியாளன், திருவிக்ரமனாகத் தன் ஈரடியால் அளந்த முன்று உலகங்களையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் வல்லமை பெறுவான்.
உலக முழுவதையும் ஒருங்கே அடைவான் என்று சொல்லப்பட்டதால் இது நாடாள்வோருக்கான அறிவுரை என்பது எளிதில் பெறப்பட்டது.
மடியினையுடையான் இடித்துரையும் எள்ளல் சொல்லும் கேட்டு, குடியினை யிழந்து குற்றங்களையடைந்து, அடிமையாகிப் பின் அழிந்தே போவான் என்று சோம்பலால் உண்டாகும் கேடுகளை விளக்கியபின், மடியின்மையால் எய்தும் பெரும் பயன் இக்குறளில் உணர்த்தப்படுகிறது. சோம்பல் இல்லாமல், ஊக்கமுடைமை கொண்டு, உலகையே வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது. மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள் (ஆள்வினை உடைமை 617 பொருள்;.....சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) என்று பின்னரும் மற்றொரு பாடலில் சொல்லப்படும்.
'தாஅயது' என்பது தாவியது என்பதன் இடைக்குறை என்பர். தாவியது 'வி' கெட்டுத் தாயது என்று வந்ததைத் தொகுத்தல் விகாரம் எனக் குறிப்பிடுவர் இலக்கண ஆசிரியர்கள்.
ஞால மூன்றடித் தாய முதல்வற்கு... (கலித். 124 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு.. ) என்ற கலித்தொகைப் பாடல் வரியிலும் தாய என்ற சொல் தாவிஅளந்த என்ற பொருளில் வருகிறது.
தாஅயது என்ற சொல்லுக்கு கடக்கப்பட்ட, கடந்த, அடங்கின, தாவிக்கொண்ட, தாவியளந்த, காட்டிய, தாண்டிய, தாவிய, தாவிப் பற்றிய எனப் பொருள் கூறப்பட்டது. இவற்றுள் தாவியளந்த என்பது பொருத்தம்.
|
'அடியளந்தான்' யார்?
தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள திருமால்-மாவலி வரலாற்றை இக்குறள் சுட்டுகிறது என்பது பலரது கருத்து.
தேவர்கள், மாவலி என்னும் மன்னனை வீழ்த்த திருமாலிடம் (மகாவிஷ்ணு) சென்று வேண்டினர். மாவலி ஈகையறம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கு வாமன அவதாரம் எடுத்து வந்த திருமால் தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என இரந்தார். மாவலி மன்னன், மூன்றடி நிலத்தைக் கொடுக்க ஒப்புக்கொள்கிறான். குள்ளமாக வாமன வடிவத்தில் வந்த திருமால் முப்பேருருவனாகி, (திரிவிக்கிரமன்) எடுத்து, ஒரு அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் தாவி அளந்து நின்றபின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மூன்றாவது அடியைத் தனது தலை மேல் வைக்குமாறு மாவலி கூறினான். இதற்காகவே காத்திருந்த திருமால் மாவலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவனைப் பாதாளத்திற்குள் தள்ளினார். இதுதான் திருமால் நெடுமாலாய் உலகளந்த கதை.
இதில் சொல்லப்பட்ட மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் என்ற மூன்று உலகங்களையும் சோம்பலை ஒழித்து முயற்சி செய்யும் மன்னன் ஒரு சேர எய்துவான் என்று மடியின்மையின் சிறப்பு உயர்வு கூறப்பட்டது.
இப்பாடலில் 'திருமால்' எனக் குறித்துச் சொல்லப்படவில்லை. இதனால் அடியளந்தான் வாளாபெயராய் (காரணம் குறியாது) இறைவனை உணர்த்திற்று என்பார் பரிமேலழகர்.
அடியளந்தான் என்பது உலகளந்த வரலாறு குறியாது வறிதே திருமால் என்னும் பெயரளவில் நின்றது என்றார்.
நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல... (பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு, 1:3 பொருள்: அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்தோடே வலம்புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால், திருமார்பிடத்தே திருமகளைவைத்த மாலை, மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமாலைப்போல...) எனவும் ...கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை... (பரிபாடல் 3:20 பொருள்: கீழேழுலகமும் ஒருங்கே அளந்த திருவடியினை உடையை, ) எனவும் ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு... (கலித்தொகை 124:1 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு....) எனவும் திருமால் உலகளந்த செய்தியைச் சங்க இலக்கியக்கள் குறிக்கின்றன. இரண்டடியான் மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி.... (மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை, படர்க்கைப் பரவல், காதை 17:35 பொருள்: முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம் தாவி அளந்த அச்சிவந்த அடிகள்) என சிலப்பதிகாரமும் கூறிற்று.
'அடியளந்தான்' என்றது தொன்மங்களில் கூறப்பட்டுள்ள திருமால் ஆகும்.
|
அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது இக்குறட்கருத்து.
மடியின்மையால் உலகெல்லாம் கொள்ளலாம்.
தன் அடியாலே உலகை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு முழுவதையும் சோம்பலில்லாத நாட்டுத் தலைவன் ஒருசேர அடைவான்
|