மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்
(அதிகாரம்:மடியின்மை
குறள் எண்:608)
பொழிப்பு (மு வரதராசன்): சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
|
மணக்குடவர் உரை:
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.
இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
பரிமேலழகர் உரை:
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்,
(மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)
இரா சாரங்கபாணி உரை:
ஒருவன் குடும்பத்திடத்துச் சோம்பல் வந்து தங்குமாயின், அஃது அவனது பகைவனிடத்து அடிமையாக்கிவிடும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.
பதவுரை:
மடிமை-சோம்பல்; குடிமைக்கண்-குடிப் பிறப்புடையான்கண்; தங்கின்-தங்குமானால்; தன்-தனது; ஒன்னார்க்கு-பகைவர்க்கு; அடிமை-தாழ்ந்து நின்று ஏவல் கேட்கும் தன்மை; புகுத்திவிடும்-அடைவித்துவிடும்.
|
மடிமை குடிமைக்கண் தங்கின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின்;
பரிப்பெருமாள்: குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின்;
பரிதி: மடித்த புத்தி உள்ளவன்;
காலிங்கர்: தனக்கு உரிய அரசர் வாழ்க்கைக்கு உரியனவற்றை முயலாது, மடிந்து ஒழுகும் மடித்தன்மையும், தன் கோல்கீழ் வாழும் குடிகளது குணமும் குற்றமும் ஆராயாமல் மடித்தலும், மற்று (அக்குடிமக்கள்) பருவம் வழுவாமல் ஆங்கு உழவு முதலிய முயற்சியின் மடித்தலும்;
பரிமேலழகர்: மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக.
'குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் மடிமையின் வகைகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பத்தில் சோம்பல் குடிபுகுந்துவிட்டால்', 'ஒருவன் தன் குடும்ப காரியங்களில் எப்போது சோம்பலுள்ளவனாக இருப்பானாகில்', 'சோம்பல் தன்மை குடிநலம் பேணுவானிடம் தங்கினால்', 'சோம்பல்தன்மை குடியை உயரச் செய்வானிடம் பொருந்துமானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குடும்பத்தில் சோம்பல் புகுந்து தங்கிவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.
தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
பரிப்பெருமாள்: அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.
பரிதி: மாற்றார்க்கு அடிமையாவான் என்றவாறு.
காலிங்கர்: தனது பகைவேந்தர்க்குத் தான் ஏவல் கேட்டு பணிந்து ஒழுகும் அடிமைப்படுத்தி விடும் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்,
பரிமேலழகர் குறிப்புரை: அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.
'அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்க்கு அடிமையாகி விடுவோம்', '(அக்குற்றம்) அவனை அவனுடைய பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்', 'அஃது அவனைப் பகைவர்க்கு அடிமை ஆக்கிவிடும்', 'அது அவனை அவன் பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அது அவனை அவன் பகைவர்க்கு அடிமையாகப் புகுமாறு செய்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
குடும்பத்தில் சோம்பல் புகுந்து தங்கிவிட்டால், அது அவனை அவன் பகைவர்க்கு அடிமையாகப் புகுமாறு செய்துவிடும் என்பது பாடலின் பொருள்.
'அடிமை புகுத்தி விடும்' என்ற பகுதி தெரிவிப்பது என்ன?
|
இன்று சோம்பி இன்பம் காண்பவன் நாளை அடிமை வாழ்வில் தள்ளப்பட்டு சொல்லொண்ணா துன்பம் உறுவான்.
வறுமையில் வாடினாலும் பிறர்க்கு அடிமையாக இருப்பதை யாரும் ஏற்கமாட்டார். சோம்பலுடையான் பகைவரிடம் அடிமையாகும் இழிநிலைக்குத் தள்ளப்படுவான். ஆதலால்
முயற்சிகொண்டு குடி வாழ்க்கையை உயர்த்தப் பாடுபடவேண்டும். சீரான ஒரு குடும்பத்தில் சோம்பல் புகுந்தால் அது அந்தக் குடியைச் சீக்கிரம் பகைவருக்கு அடிமையாக்கிவிடும். அடிமைத்தனத்திற்கு அடிப்படை முயற்சியில்லாது சோம்பித்திரிதல் ஆகும். குடிமை அதாவது குடும்ப வாழ்க்கையில் மடிமை, சில சமயங்களில் இருக்குமானால் குற்றமில்லை. அது எப்போதும் அங்கு இருந்துவிட்டால் வருந்தீமையைக் குறிக்கக் 'குடிமைக்கண் தங்கின்' எனச் சொல்லப்பட்டது.
சோம்பல் குடிபுகுந்த குடும்பம் அல்லது நாடு பகைவர்க்கு அடிமையாகும் நிலையைப் புகுத்தி விடும் என அறிவிக்கும் செய்யுள். ஒன்னார் என்ற சொல் பகைமன்னரைக் குறிப்பது. இதற்கு பகைவர் என்றும் பொருள் கூறமுடியும். எனவே மன்னர் மடிமையையும் பொதுமக்கள் சோம்பலையும் இப்பாடல் உணர்த்தியதாகக் கொள்ளலாம். அரசியலில் மடியின்மை கூறுவதாக அமைந்திருப்பினும், பொதுமக்களுக்குக் கூறும் அறமாகவும் இது அமைகிறது.
|
'அடிமை புகுத்தி விடும்' என்ற பகுதி தெரிவிப்பது என்ன?
சோம்பலினால் உண்டாகும் கேடு எதுவரை நீளும் என்பது சொல்லப்படுகிறது. மடியுடையான் பகைவருக்கு அடிமை ஆகிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு தனது குடும்பத்தையும் பிறருக்கு ஏவல் செய்து பிழைக்க வேண்டிய துன்ப நிலைக்கு இட்டுச் செல்வான். அடிமைத்தனம் என்பது கீழ்ப்படுத்தலினும் இழிதகைமையான நிலை. பகை என்பது, தனி மனிதனுக்கும் உண்டெனினும், அது ஒரு நாட்டை பாதிக்காது. ஆனால் நாடோள்வரிடம் சோம்பல் குடிபுகுமானால், அது அவருடைய நாட்டையே, நாட்டு மக்கள் அனைவரையுமே, பகைவரிடம் அடிமைப் படுத்துவதாகி விடும். 'பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறைசெலுத்துஞ் சிற்றரசனாதல்' என்பார் தேவநேயப்பாவாணர். அடிமை வாழ்வில் சுதந்திரம் பறிபோகும். உரிமைகள் நீங்கும்.
காலிங்கர் 'தன் கோல்கீழ் வாழும் குடிகளது குணமும் குற்றமும் ஆராயாமல் இருக்கும் நாடோள்வாரின் மடித்தல்' பற்றிக் குறிக்கிறார். ஒற்றர்கள் மூலம் உள்நாட்டில் மக்கள் மனநிலையை ஆராய்ந்து உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டு அதைப் பகைவர் பயன்படுத்திக் கொள்ளாமல் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் ஆட்சியாளர் செயல்பட வேண்டும்.
வலிமை இல்லாத நாடுகள் வெல்லப்பட்டு அடிமை ஆவது பொதுவான நிகழ்வு. சோம்பலினால் நாட்டின் பாதுகாப்பு பற்றிச் சிந்தித்துத் தக்க முன்னேற்பாடுகள் செய்யாமல் தூங்கும் தலைவன் மடியனாக இருந்தால் நாட்டையும் குடிகளையும் எதிரிகளுக்கு அடிமையாக்கி விடுவான்.
அடிமை வாழ்வை எவரும் விரும்பி மேற்கொள்வதில்லையாதலால் 'புகுத்தி' என்றும் அடிமைப்பட்ட ஒருவர் பகைவரிடமிருந்து மீள்வது கடினம் என்பதால் 'புகுத்திவிடும்' என்றும் கூறப்பட்டது.
அக்காலத்து கிரேக்க ரோம முதலிய மேற்கு நாடுகளில் நிகழ்ந்தது போல் பண்டைத் தமிழகத்தில் அடிமைகள் அங்காடிகளில் விற்கப்படவில்லை; அடிமை கொள்ளுதலும் பெருவழக்காக இருந்தது இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுவர். அடிமைகளைக் குறித்து வள்ளுவரும் குறளில் எங்கும் நீதி எதுவும் கூறவில்லை.
|
குடும்பத்தில் சோம்பல் புகுந்து தங்கிவிட்டால், அது அவனை அவன் பகைவர்க்கு அடிமையாகப் புகுமாறு செய்துவிடும் என்பது இக்குறட்கருத்து.
மடியின்மை கொடிய துன்ப வாழ்விலிருந்து காக்கும்.
ஒருவன் குடும்பத்தில் சோம்பல் குடிபுகுந்துவிட்டால் அது அவனைப் பகைவனிடத்து அடிமையாக்கிவிடும்.
|