இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0607இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:607)

பொழிப்பு (மு வரதராசன்): சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

மணக்குடவர் உரை: கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.

பரிமேலழகர் உரை: மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
('இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான்', 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின் 'கேட்பர்' என்றார்.)

மயிலை சிவமுத்து உரை: சோம்பியிருத்தலை விரும்பி சிறந்த முயற்சியைப் புரியாதவர் பிறர் இடித்துக்கூறி இகழ்ந்துரைக்கும் சொல்லையும் கேட்பதற்கு உரியராய் இருப்பர். இடிபுரிதல்-இடித்துக் கூறுதல், கண்டித்துக் கூறுதல்; எள்ளுஞ்சொல்-இழிசொல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மடி புரிந்து மாண்ட உஞற்றி லவர் இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்.

பதவுரை:
இடி-கடுமையாகச் சொல்லுதல்; புரிந்து-செய்து; எள்ளும்-இகழ்ந்து சொல்லும்; சொல்-மொழி; கேட்பர்-செவியேற்பர்; மடி-சோம்பல்; புரிந்து-விரும்பி; மாண்ட-பெருமையுடைத்த; உஞற்று-முயற்சி; இலவர்-இல்லாதவர்.


இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர்; [கழறுதல்-இடித்துரைத்தல்]
பரிப்பெருமாள்: நட்டோரால் கழறுதலையும் பெற்று ஏதிலார் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லையும் கேட்பர்; [ஏதிலார்-அயலார்]
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரால் இகழப்படுவர் என்றது.
பரிதி: மாற்றார் தன்னை இகழ்ச்சி சொல்வது கேட்பர்;
காலிங்கர்: பிறர் இடித்தலைச் செய்து இகழ்ந்துரைக்கும் சொல்லினைக் கேட்பார்;
பரிமேலழகர்: தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான்', 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின் 'கேட்பர்' என்றார்.

'பிறர் இடித்தலைச் செய்து இகழ்ந்துரைக்கும் சொல்லினைக் கேட்பார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாளும் பரிமேலழகரும் நட்டாரால் கழறுதல் என்றனர். பரிப்பெருமாள் ஏதிலார் இகழ்வதைச் சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரால் இடிபட்டு இகழப்படுவர்', 'பிறர் இடித்துக் கூறி இகழும் வசைச் சொற்களைக் கேட்பர்', '(படியுடையார் பற்றை இழந்து) இடித்துப் பேசும் வசை மொழிகளைக் கேட்கவேண்டிய அவமதிப்புக்கு ஆளாவார்கள்', 'மிகக் கடுமையாகப் பிறர் இகழ்ந்துரைக்குஞ் சொல்லைக் கேட்டற்கு உரியராவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இடித்துரை செய்யப்பட்டு இகழப்படும் சொல்லையும் கேட்க நேரும் என்பது இப்பகுதியின் பொருள்.

மடிபுரிந்து மாண்ட உஞற்றிலவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.
பரிப்பெருமாள்: மடியை விரும்பிச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.
பரிதி: மடிந்த புத்தி மிகுந்தார்கள்.
காலிங்கர்: யார் எனின் மடியின்கண் தங்கி மற்று அதனானே மாட்சிமைப்பட்ட முயற்சி இல்லாத மன்னவர் என்றவாறு.
பரிமேலழகர்: மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்;

'மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சியில்லாதார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலில் ஆழ்ந்து நல்லுழைப்பை விட்டவர்', 'சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி இன்றி வாழ்பவர்', 'சோம்பலை மேற்கொண்டதால் (பொதுமக்கள் எதிர்பார்த்த) சிறந்த காரியத்தைச் செய்யத் தவறியவர்கள்', 'சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை விட்டவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை விட்டவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை விட்டவர்கள் இடித்துரை செய்யப்பட்டு இகழப்படும் சொல்லையும் கேட்க நேரும் என்பது பாடலின் பொருள்.
இடித்து இகழ்பவர் யார்?

சோம்பலால் முயற்சியில்லாதவர்களை மற்றவர்கள் கடிந்து கூறுவார்கள். அப்படியும் முன்னேற்றம் ஏற்படாவிடின் எள்ளி இகழ்வார்கள்.
யார் ஒருவரும் சுறுசுறுப்பின்றி தொழில் ஒன்றும் செய்யாமல் இருந்தால் காண்பவர் அவர்மீது வெறுப்பு கொள்வர். அந்த ஒருவர் நன்கு அறிமுகமானவராக இருந்தால் அவரை இடித்துரைப்பர். பின்னும் திருந்தாமல், சோம்பலை விரும்பி ஏற்றுக்கொண்டு, முயற்சி செய்யாமல் இருப்பாரானால் அவரை இகழவும் செய்வர். மடியுடையார் இவை அனைத்தையும் எதிர்கொண்டு மானம் இழப்பர் என்பது கருத்து.

மடிபுரிந்து என்ற தொடர்க்கு சோம்பலை விரும்பி மேற்கொண்ட எனப் பொருள் கூறுவர். மாண்ட உஞற்றிலவர் என்ற தொடர் சிறந்த முயற்சியில்லாதவர் எனப் பொருள்படும். முயற்சியுடையவர் செல்வம், கல்வி முதலிய எல்லா நலங்களையும் அடைந்து செல்வாக்கோடு விளங்குவர். முயலாதவர் குடும்பக் கேட்டிற்கு வழிவகுப்பர். 'ஏன் இப்படி முடங்கிக் கிடக்கிறாய்? ஏதாவது செய்யலாமே!' எனக் காண்போர் அவரை இடித்துரைப்பர். 'தன் குடும்பத்துக்கு ஒரு பயனுமின்றித் திரிகின்றானே' என்ற பழிச்சொல் அடைந்து பலராலும் எள்ளல் பேச்சைக் கேட்கவும் நேரிடும். 'அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் அவரிடம் இருக்காது என்பதால் யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பர்' (பரிமேலழகர்). அதனால் 'கேட்பர்' எனக் குறள் சொல்கிறது. இடிப்புரையும் எள்ளல் பேச்சையும் கேட்க வேண்டிவருபவர் அதன் பிறகாவது திருந்துவாராயின் குடிப்பெருமை காப்பாற்றப்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.
'இடிபுரிந்து எள்ளும்' என்றதற்கு 'இடியெனச் சிரித்தெள்ளுதல்' என்ற பொருளுரை ஒன்று உள்ளது.

இடித்து இகழ்பவர் யார்?

முயற்சியும் தூண்டுதலும் இல்லாமல் சோம்பலில் வீழ்ந்து கிடப்பவர்களைப் பலரும் இடித்துரைத்து இகழ்வர். நட்டோரால் கழறுதலையும் பெற்று ஏதிலார் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லையும் கேட்பர் என உரைத்தார் பரிப்பெருமாள், முதலில் நண்பர், உறவினர் போன்ற உரிமையுள்ளவர்கள் நேரிலேயே இடித்துரைப்பர். நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு (நட்பு 784) என்ற குறளை நினைக்கலாம். முயற்சி செய்ய விரும்பாதவர் மற்றவர்கள் என்ன இடித்துரை செய்தாலும் செவிமடுக்க மாட்டார். தொடர்ந்து சோம்பியே இருப்பர். இடிப்பு பயன் தராத போது பிறர் எல்லாம் அவரை இகழத்தொடங்குவர். நெருங்கியவர் முகத்துக்கு நேரேயே இகழ்வர்; அயலார் காணாதபோது எள்ளி உரையாடுவர்.

சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை விட்டவர்கள் இடித்துரை செய்யப்பட்டு இகழப்படும் சொல்லையும் கேட்க நேரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மடியின்மை விரும்பாதவர் பலராலும் எள்ளப்படுவர்.

பொழிப்பு

சோம்பலை விரும்பிச் செய்யும் முயற்சி இல்லாதவர்கள் பலரால் இடித்துக் கூறப்பட்டு இகழ்ச்சியையும் கேட்க நேரிடும்.