இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0605



நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

(அதிகாரம்:மடிஇன்மை குறள் எண்:605)

பொழிப்பு (மு வரதராசன்): காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.



மணக்குடவர் உரை: விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம்.
காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

பரிமேலழகர் உரை: மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக்கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
(முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது. நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: காலந்தாழ்வு, மறதி, சோம்பல், உறக்கம் இவை கெடுவார் ஆசைப்படும் நகைகள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடும் நீரார் காமக்கலன்.

பதவுரை:
நெடுநீர்-தாழ்த்துச் செய்கின்ற தன்மை; மறவி-நினவில்லாமை; மடி-சோம்பல்; துயில்-தூக்கம்; நான்கும்-நாலும்; கெடுநீரார்-கெடும் தன்மையுடையவர்; காம-விரும்பிய; கலன்-அணி.


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும்;
பரிப்பெருமாள்: விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: துயிலும் மறவியும் நெடுநீர்மையும் மடியினோடு ஒத்த இயல்பின ஆகலான் இவையும் ஒருவாற்றால் கூறவேண்டுதலின் ஈண்டுக் கூறப்பட்டது. இத்துணையும் மடியினால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி: முடியாத காரியத்தை முயலுதலும், செய்யும் காரியத்தை மறந்திருப்பதும், மடித்த புத்தியும், நித்திரையும் என்கின்ற நாலு குணமும்;
காலிங்கர்: விரைந்து எழவேண்டும் கருமத்தை நீள்விடுவதோர் நெடுநீர்மையும், குற்றத்தின்கண் பற்றிய மறவியும், அதற்கு உரிய மடிமையும், கருமம் இயற்றக் காமுறாது கண்துயில்தலும் இந்நான்குமே;
பரிமேலழகர்: மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்;
(முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது. நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன.

மற்ற தொல்லாசிரியர்கள் நெடுநீர் என்பதற்கு 'வினையை நீட்டித்தல்' என்று கொள்ள பரிதியார் 'முடியாத காரியத்தை முயலுதல்' என்று பொருள் கூறினார். மறவி என்பதற்கு 'மறப்பு' என்றும் மடி என்பதற்குச் 'சோம்பல்' என்றும் துயில் என்பதற்கு 'உறங்குதல்' என்றும் அனைவரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விரைந்து செய்வதை நீட்டித்துச் செய்தல், மறதி, சோம்பல், நெடிய உறக்கம் ஆகிய நான்கும்', 'காரியத்தில் தாமதம், கடமைகளை மறந்திருத்தல், சோம்பல், மிகுந்த தூக்கம் ஆகிய நான்கும்', 'ஒன்றைச் செய்யாதிருத்தலாகிய சோம்பலும், விரைந்து செய்வதைத் தாமதித்துச் செய்யும் இயல்பும், மறதியும், தூக்கமும் ஆகிய நான்கும்', 'வினை செய்யுங்கால் காலத்தாழ்வும், மறதியும், சோம்பலும், உறக்கமும் ஆகிய இந்நான்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காலந்தாழ்வு, மறதி, சோம்பல், உறக்கம் இவை நாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

கெடுநீரார் காமக் கலன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம்.
மணக்குடவர் குறிப்புரை: காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.
பரிப்பெருமாள்: கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தம்மைக் காதலித்து ஏறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போறலின் கலம் எனப்பட்டது.
பரிதி: மடித்த புத்தியுள்ளாற்கு ஆபரணம் என்றவாறு.
காலிங்கர்: கெடுதல் தன்மையாகிய அரசர் ஆசைப்பட்டு அணிந்து கொள்ளும் அணிகலமாவது; மற்று இது அன்றி அரசர்க்கு உரிய நன்கலம் ஆகிய கடகமும் கண்டமாலையும் ஆரமும் கடுக்கும் அணிதல் இலர் என்றவாறு.[கடகம்-முழங்கைக்கு மேல் அணியும் அணி; கண்டமாலை-கழுத்தணி; ஆரம்- முத்துமாலை; கடுக்கு-காதிலணியும் கடுக்கண்]
பரிமேலழகர்: இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
பரிமேலழகர் குறிப்புரை: இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.

'கெடுந்தன்மையுடையார்/ இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்' என்றபடி மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் காலிங்கரும் மரக்கலம் என்பதற்குப் பதிலாக 'அணியும் ஆபரணம்' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டினால் அழியும் இயல்பினர் விரும்பிப் பூணும் அணிகலன்களாம்', 'கெட்டுப் போகிறவர்கள் மிகவும் ஆவலோடு விரும்புகின்ற ஆபரணங்கள்', 'கெட்டழிவார் விரும்பி ஏறும் மரக்கலங்களாம். (அல்லது விரும்பிப் பூணும் அணிகளாம்.)', 'அழியும் தன்மைக்குரியார் விரும்பி ஏறும் மரக்கலமாகும் (கப்பலாகும்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கெட்டழிவார் விரும்பிப் பூணும் அணிகலன்கள் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
காலந்தாழ்வு, மறதி, மடி, உறக்கம் இவை நாலும் கெட்டழிவார் விரும்பிப் பூணும் அணிகலன்கள் என்பது பாடலின் பொருள்.
'காமக் கலன்' என்பது என்ன?

சோம்பேறித்தனத்தால், செய்தாக வேண்டிய செயல்களைத் தள்ளி வைத்து, மறந்து, உறக்கநிலை கொண்டவர் கேடு உறுவது திண்ணம்,
உலக வாழ்க்கை என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது. இந்த இயக்கத்தை சோம்பல் உள்ளம், நாளை செய்வோம் என்ற காலத்தாழ்ச்சி எண்ணம், மறதிக் குணம், ஒன்றும் செய்யாமல் எப்பொழுது ஓய்வு நிலையில் இருப்பது என்றிவை தடைப்படுத்துவன. கெட்டுப் போகப்போகிறவர்கள்தாம் அந்தப் பண்புகளைத் தம்மேற்கொண்டிருப்பர்.
நெடுநீர் என்றது செய்ய வேண்டிய செயல்களை நீட்டித்துச் செய்வதையும், மறவி என்ற சொல் மறதியையும் துயில் என்ற சொல் செயலின்மையையும் அதாவது செய்ய வேண்டியன செய்யாதிருத்தலையும் குறிக்கும். இவையெல்லாம் சோம்பல் தொடர்பானவை. இந்த நான்கு விரும்பத்தகாத குணக்கேடுகளை, கெட்டழிய உறுதி கொண்டோரே, அழகு கூட்டும் அணிகள் என்று எண்ணி, அவற்றை விரும்புவர் எனச் சொல்கிறது பாடல்,

மடி பற்றிக் கூறும் அதிகாரத்தில் மற்ற மூன்றும் ஏன் சொல்லப்பட்டன? நான்கும் வரிசைப்படப்பட்டதில் அதிகாரத்தலைப்பிற்குரிய மடி ஏன் பின்னுக்குத் தள்ளப்பட்டது?
மடியால் ஏனைய மூன்றும் உண்டாதலின் அவை உடன்சேர்த்துச் சொல்லப்பட்டது; இந்நான்கும் ஊக்கமின்மையின் வகைகள். மடி 'செய்யுள் நோக்கி' இடையில் வருகின்றது. இவை பரிமேலழகர் கூறும் காரணங்கள்.

'காமக் கலன்' என்பது என்ன?

'காமக் கலன்' என்றதற்குக் காதலித்தேறும் மரக்கலம், ஆபரணம், அரசர் ஆசைப்பட்டு அணிந்து கொள்ளும் அணிகலம், விரும்பி ஏறும் மரக்கலம், ஆசைப்பட்டு அணியும் அணிகலன்கள், விரும்பி ஏற்கும் அணிகள், ஆசைப்படும் நகைகள், விரும்பிப் பூணும் அணிகலன்கள், மிகவும் ஆவலோடு விரும்புகின்ற ஆபரணங்கள், விரும்பி அணியும் அணிகலன்கள், விரும்பி ஏறும் மரக்கலங்களாம் (அல்லது விரும்பிப் பூணும் அணிகளாம்.), விரும்பி ஏறும் மரக்கலமாகும் (கப்பலாகும்), விரும்பி ஏற்கும் மரக்கலம், விரும்பி ஏற்கும் ஓட்டைப் படகுகள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடரிலுள்ள 'காம' என்ற சொல்லுக்கு விரும்பிய என்பது பொருள்.
கலன் என்று சொல்லுக்கு மரக்கலம் என்றும் அணிகலன் என்றும் இருவகையாகப் பொருள் கூறப்பட்டது.
மரக்கலம், படகு, கப்பல் எனப் பொருள் கண்டவர்கள் 'விரும்பியேறியோரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம்' என உரை செய்தனர். பரிமேலழகர் 'இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என உரை தந்தார். இதை விளக்குவது போல 'விழாக்கால படகுகளைப் போன்று தூண்டி அழிவுக்குக் கொண்டுபோகும்' என்றார் தெ பொ மீனாட்சி சுந்தரம். விழாக்கால படகு என்பது மக்கள் பொழுதுபோக்காக ஆன, இன்பச் செலவுக்குரிய படகு, அதில் ஏறிச் செல்வது பாதுகாப்பற்றது என்பது போல் தெரிகிறது. விரும்பி ஏறும் ஓட்டைப் படகுகள் என்றும் உரை உள்ளது. பாதுகாப்பற்ற கலன் அல்லது ஓட்டைப் படகு இவற்றில் ஏன் மக்கள் 'விரும்பி' ஏறப்போகிறார்கள்? விழாக்கால சிலிர்ப்பு (thrill) துய்ப்பதற்காக இருக்கலாம். ஆனால் இங்கு சொல்லப்பட்ட சோம்பல் முதலிய நான்கு குணங்களைக் கொண்ட சுறுசுறுப்பற்ற மந்தமான மாந்தர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடார். எனவே கலம் என்றது பொருத்தமாக இல்லை.
அணிகலன் என்று சொன்னவர்கள் 'ஆசைப்பட்டு அணிந்து கொள்ளும் அணிகலம்' என்று விளக்கினர். ஆனால் தேவநேயப்பாவாணர் இத்தொடர்க்கு விரும்பிப்பூணும் அணிகலன்கள் என்று உரைப்பது பொருந்தாது. பொருந்த வேண்டுமாயின், எரிமருந்து கலந்த அணிகள் என்று கொள்ள வேண்டும்' என மறுப்பார்.
'கலங்கழியும் காரிகை நீத்து (குறள் 1262)நன்கலம் நன்மக்கட் பேறு (குறள் 60) கண்ணிற்கணிகலம் கண்ணோட்டம் (குறள் 575) என்று கலம் என்பதற்கு அணிகலம் என்ற பொருளிலே வள்ளுவரும் ஆண்டிருப்பதை நோக்கின், விரும்பும் அணிகலன் எனக் கொள்ளலே சிறப்புடைத்து. மேலும் ‘காமம்’ என்னுமடை, கலனோடு இயைந்திருப்பதை நோக்கின், விரும்பும் அணிகலன் எனப் பொருள் கொள்ளுதல் இயல்பேயன்றி விரும்பி யேறும் மரக்கலன் எனப் பொருள் கொள்ளல் இயல்பன்று; எளிதுமன்று' என்பார் இரா சாரங்கபாணி.
சில அணிகள் எவருக்குமே அழகு சேர்க்கக்கூடியதாக அமையா. அழகைக் கெடுக்ககூடிய அவ்வணிகளை இப்பாடல் கூறுகிறது எனக் கொள்ளலாம்.

'காமக் கலன்' என்பதற்கு 'விரும்பிய அணி' என்பது பொருள்.

காலந்தாழ்வு, மறதி, சோம்பல், உறக்கம் இவை நாலும் கெட்டழிவார் விரும்பிப் பூணும் அணிகலன்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சோம்பலும் அதன் உடன் எண்ணத்தக்க குணங்களாலும் ஏற்படும் குற்றங்கள் கூறி மடியின்மை வலியுறுத்தும் பாடல்.

பொழிப்பு

கெடப்போகிறவர்களே விரைந்து செய்வதை நீட்டித்துச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கநிலை ஆகிய அணிகளை விரும்பி ஏற்பர்.