இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0602



மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:602)

பொழிப்பு (மு வரதராசன்): தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.

மணக்குடவர் உரை: மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர்.
இது சோம்பாமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)

சி இலக்குவனார் உரை: தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியாக்க விரும்புபவர், சோம்பலைச் சோம்பலுறச் செய்து வாழ்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டுபவர்.

பதவுரை:
மடியை-சோம்பலை; மடியா-மடித்து அதாவது அகற்றி (ஒழித்து) அல்லது சோம்பலாக; ஒழுகல்-நடந்துகொள்க; குடியை-குடும்பத்தை; குடியாக-(நற்)குடும்பமாக; வேண்டுபவர்-விரும்புபவர்.


மடியை மடியா ஒழுகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடிசெய்தலை மடித்து ஒழுகுக;
பரிப்பெருமாள்: மடிசெய்தலை மடித்து ஒழுகுக;
பரிதி: மடி என்னும் பொல்லாத குணத்தினையும் மடியப் பார்க்க வேணும்;
காலிங்கர்: தான் யாதானும் ஒரு கருமம் செய்யக் கருதிய காலத்துத் தம் மனத்து ஒரு மடி வந்துற்ற இடத்து அதற்கும் இடங்கொடாது அம்மடியை மடியா ஒழுகல் வல்லார் மற்று அவரே;
பரிமேலழகர்: மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக;

மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி காளிங்கர் ஆகிய பழம் ஆசிரியர்கள் 'மடியை மடித்து ஒழுகுக' என்ற கருத்தில் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக' என்று வேறுபாடாகக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலை அழித்து முயற்சியாக நடக்க', 'சோம்பலை அழித்து முயற்சியோடு நடக்க வேண்டும்', 'சோம்பலை ஒழித்துக் கடமைகளைச் செய்தொழுக வேண்டும்', 'சோம்பலை இடையுறாகக் கடிந்து முயற்சி செய்ய வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சோம்பலை ஒழித்து (முயற்சியாக) வாழவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

குடியைக் குடியாக வேண்டு பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது சோம்பாமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மடியாமை வேண்டுமென்றது.
பரிதி: தன் குடியைக் குடியாக வேண்டில் என்றவாறு.
காலிங்கர்: தமது நாட்டு வாழும் குடிகளைக் குலம் தழீயாது குடி நெருங்கி வாழவேண்டும் அரசர் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.

'தம்குடியை உயர் குடியாக/நற்குடியாக வேண்டுபவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பம் சிறந்த குடும்பமாக விரும்புபவர்', 'தாம் தோன்றிய குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர்', 'தாம் பிறந்த குடித்தனம் (ஒளியிழந்து மறைந்து) கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள்', 'தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம் குடியை நற்குடியாக இருக்க விரும்புபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம் குடியை நற்குடியாக இருக்க விரும்புபவர் மடியை மடியா ஒழுகல் என்பது பாடலின் பொருள்.
'மடியை மடியா ஒழுகல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

சோம்பலின்றி உழைத்துச் செல்வம், கல்வி முதலிய நலங்களையீட்டித் தன் குடும்பத்தை நற்குடும்பமாக இருக்கப் பாடுபடவேண்டும்.
மடி என்ற சொல் பல பொருள் ஒரு சொல். இக்குறளில் முதலில் உள்ள மடி சோம்புதல் என்ற பொருளிலும் அடுத்துள்ள மடியா என்பதற்கு மடித்து எனக்கொண்டு ஒழித்து என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளன. சிலர் இரண்டாவதான மடியா என்பதற்கும் மறுபடி சோம்பல் என்ற பொருள் கொண்டு சோம்பலில்லா என உரை கண்டனர். இதனால் 'மடியை மடியா ஒழுகல்' என்ற முதற்பகுதிக்கு 'மடியை மடித்து ஒழுகுக' அதாவது 'மடியைக் கெடுத்து நடக்கக் கடவர்' என ஒன்றும் 'சோம்பலை சோம்பலாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக' என்ற மற்றொன்றுமாக இருதிறமாக உரைகள் கிடைக்கின்றன.
தனது குடி பெருமையுடன் இருக்க விரும்புபவர் சோம்பேறித்தனத்தை விட்டொழித்து வாழ வேண்டும் என்று இருசாராரும் இக்குறளுக்குப் பொருளுரைக்கின்றனர்.

சோம்பலுடையான் தனக்கு உள்ள வளங்களைக் காக்காமல் வீணடிப்பது மட்டுமல்ல புதிய செல்வங்கள் உண்டாக்கவும் விழைய மாட்டான். ஆனால் சோம்பலை ஒழித்து நல்ல முயற்சியுடன் செயல்படுபவன் தன் குடும்பத்தை உயர்த்துவதற்காகக் கடுமையாக உழைத்து குடி பெருமை பெறச் செய்வான்.

'மடியை மடியா ஒழுகல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

'மடியை மடியா ஒழுகல்' என்ற தொடர்க்கு மடிசெய்தலை மடித்து ஒழுகுக, மடி என்னும் பொல்லாத குணத்தினையும் மடியப் பார்க்க வேணும், மடி வந்துற்ற இடத்து அதற்கும் இடங்கொடாது அம்மடியை மடியா ஒழுகல், மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக, சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும், சோம்பலை அது சோர்ந்து ஒழியுமாறு செய்து சுறுசுறுப்பாக முயல்வார்களாக, சோம்பலை அழித்து முயற்சியாக நடக்கக் கடமைகளைச் செய்தொழுக வேண்டும், சோம்பலைச் சோம்புமாறு செய்யும் முயற்சியாளராக நடத்தல் வேண்டும், சோம்பலை இடையுறாகக் கடிந்து முயற்சி செய்ய வேண்டும், சோம்பலைச் சோம்பலுறச் செய்து வாழ்க, சோம்பலைச் சோம்பாமல் ஒழிக்க முயலுதல் வேண்டும், முயற்சியின்மையில் முயற்சியின்மை கொண்டு ஒழுகுக, சோம்பலைக் கொன்று முயற்சியோடு இருத்தல் வேண்டும், சோம்பலை தான் அடக்கக் கூடியதாக நினைத்து முயற்சி செய்தல் வேண்டும், சோம்பலைச் சோம்பும்படி நடக்கக்கடவன், மடியைக் கொள்ளுதலில் சோம்பலாய் ஒழுகுக என உரையாசிரியர்கள் பொருள் கண்டனர்.

இத்தொடர்க்கு 'மடியைக் கெடுத்து நடக்கக் கடவர்' என்று மணக்குடவர் முதலியோர் உரை தந்தனர். இவ்வுரை தெளிவாக உள்ளது. 'நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதில்லை ஆதலால் மடியை மடியாகவே கருதி ஒழுக வேண்டும்' என்று விளக்கம் தருவார் பரிமேலழகர். 'இதன் கருத்து அறியாமை தன்னையுடையானுக்கு தன்னைக்காட்டாது அறிவுடைமையாகவே காட்டி மயக்குவதுபோல இம்மடியும் தன்னை கெடுபொருளாகக் காட்டாது மயக்கி நிற்கும் ஆதலால் இதனைச் சோம்பல் என்று கருதுக என ஆணை தந்தார்' எனப் பரிமேலழகர் உரையை விளக்கினார் தண்டபாணி தேசிகர். மடியை மடியாகக் கருதி ஒழுகுக எனக் கூறும் பரிமேலழகர் உரை அழுத்தமும் நடைப் பொருத்தமும் உடையது என்பார் இரா சாரங்கபாணி.

'மடியை மடியா ஒழுகல்' என்ற தொடர்க்கு சோம்பலை ஒழித்து முயற்சியாக நடக்க என்பது பொருள்.

தம் குடியை நற்குடியாக இருக்க விரும்புபவர் சோம்பலை ஒழித்து (முயற்சியாக) வாழவேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடியின்மை நற்குடும்பமாகத் தொடர்ந்து திகழச் செய்யும்.

பொழிப்பு

தம் குடும்பம் நற்குடும்பமாக விளங்க விரும்புபவர் சோம்பலை ஒழித்து முயற்சியுடன் வாழவேண்டும்.