இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0601



குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:601)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

மணக்குடவர் உரை: குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும்.
முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.

பரிமேலழகர் உரை: குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம்.
(உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின், 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ் விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லையாதல்.

இரா சாரங்கபாணி உரை: தான் பிறந்த குடும்பம் என்னும் அணையா விளக்கு சோம்பல் என்னும் மாசு படிய அணைந்து போகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்.

பதவுரை:
குடி-குடும்பம்; என்னும்-என்கின்ற; குன்றா-குறையாத; விளக்கம்-விளக்கு; மடி-சோம்பல்; என்னும்-என்கின்ற; மாசு-கறை; ஊர-அடர; மாய்ந்து-குன்றி; கெடும்-அழியும்.


குடியென்னும் குன்றா விளக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி;
பரிப்பெருமாள்: குடி என்னா நின்ற குறைவு இல்லாத ஒளி;
பரிதி: செல்வக்குடி என்னும் ஒரு விளக்கு;
காலிங்கர்: அரசர் குலம் என்று எடுத்து உரைக்கப்பட்ட கெடாத விளக்கானது;
பரிமேலழகர்: தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு;

'குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். குடி என்பதற்குக் கிடந்தாங்கே 'குடி' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும், செல்வக்குடி என்று பரிதியும், அரசர் குலம் எனக் காலிங்கரும் தான் பிறந்த குடி என்று பரிமேலழகரும் பொருள் உரைத்தனர். குன்றா விளக்கம் என்பதற்கு முறையே குறைவில்லாத ஒளி, ஒரு விளக்கு, கெடாத விளக்கு, நந்தா விளக்கு என இவர்கள் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பம் என்னும் அணையாத விளக்கு', 'குறைவற்ற பெருங்கீர்த்தியுள்ள (செல்வம் மிகுந்த) குடித்தனமும்', 'ஒருவன் பிறந்த குடியாகிய குறைவில்லா விளக்கு', ''குடி' என்று சொல்லப்படும் அணையாத விளக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடும்பம் என்னும் குறைவில்லாத விளக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.
பரிப்பெருமாள்: மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்பே தோற்றம் உடைத்தாய குடியுங் கெடுமென்றவாறு.
பரிதி: மடி என்னும் இருட்டுக்குக் கெடும் என்றவாறு.
காலிங்கர்: (கெடும்- 'விடும்' என்பது பாடம்) (மடியென்னும் மாசு) வந்து பரக்கவே தனது ஒளி மறைந்து பின்னும் கெட்டுவிடும் என்றவாறு. [பரக்கவே-பரவ]
பரிமேலழகர்: ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம். [நந்திப் போம் - மழுங்கிக் கெடும்]
பரிமேலழகர் குறிப்புரை: உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின், 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ் விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லையாதல்.

'மடியென்று சொல்லப்படுகின்ற மாசு/இருள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பல் என்னும் இருளால் அணைந்துவிடும்', 'சோம்பல் என்ற குற்றம் அங்கே புகுந்துவிட்டால் பிரகாசம் கெட்டு மறைந்து போகும்', 'அவனது சோம்பலாகிய மாசு அதிகப்பட மங்கி அணையும்', 'சோம்பலாகிய இருள் படர அணைந்துவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சோம்பல் என்னும் மாசு படர மங்கி மறையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடும்பம் என்னும் குறைவில்லாத விளக்கு சோம்பல் என்னும் மாசுஊர மங்கி மறையும் என்பது பாடலின் பொருள்.
'மாசுஊர' என்பதன் பொருள் என்ன?

சோம்பல் படர்ந்து மிக, குடும்பம் விளங்காமல் போய்விடும்.
கல்வி, செல்வம், செல்வாக்கு, புகழ் போன்றவற்றால் குடிப் பெருமை உண்டாகிறது. இவற்றைக் கட்டிக் காக்க ஒருவன் மடியில்லாமல் உழைக்க வேண்டும். பல தலைமுறை பெயருடன் விளங்கிய குடும்பம் ஒரு தலைமுறை சோம்பிக் கிடந்தால் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கம் குன்றி முற்றிலுமாக அழிந்துவிடும். அதைத் திரும்பக் கொண்டுவர பல தலைமுறை முயற்சிகொண்டு போராட வேண்டியிருக்கும்.

குடி என்பது குடும்பத்தைக் குறிக்கும் சொல். குடும்பம் என்பது குன்றா விளக்கம் எனக் குறள் கூறுகிறது. குன்றா விளக்கம் என்பதற்கு உரையாளர்கள் குறைவில்லாத ஒளி, ஒருவிளக்கு, கெடாத விளக்கு, நந்தா விளக்கு, அவியாத விளக்கு, மங்காத விளக்கு, அணையாத விளக்கு, குறையாத ஒளி, அணையாத ஒளிவிளக்கு, குறைவில்லா விளக்கு, எனப் பொருள் கூறினர். விளக்கு என்பது பொருள்களை உணரச்செய்யும் ஒளியையே குறிப்பது. அது ஆகுபெயராக அதன் தண்டிற்கும் அமைவதுண்டு. இரவும் பகலும் ஒளியிருத்தற் பொருட்டு, அவியாது எப்போதும் எரிந்து கொண்டேயிருப்பது நந்தா விளக்கு ஆகும். நந்தா விளக்குப் போல் குன்றாது ஒளிவிடுவது குடும்பவிளக்கு.
மங்காத விளக்காக இருக்கும் குடியில் அதாவது தொடர்ந்து குடும்பப் பெருமைவிளங்க இருந்து வரும் குடும்பத்தில் சோம்பேறித்தனம் என்னும் கறை படிந்து பரவினால் அதன் பெருமை கெட்டு அழியும் என்பது இக்குறள் தரும் செய்தி.

மடி பல பொருள் ஒரு சொல். சோம்புதல், ஊக்கம் குறைதல், சுருங்குதல், தவிர்தல் என்ற பொருள் தருமாறு ஒரு சொல்லாகவும், கெடுதல், அழிதல் போன்ற பொருளில் இன்னொரு சொல்லாகவும் பழம்பாடல்களில் பயின்று வந்தது. இக்குறளில் அது சோம்பல் என்ற பொருளில் வந்துள்ளது. “மாசு ஊர” என்ற தொடர், சோம்பல் என்னும் கறை பெருகப் பெருக, சிறுகச் சிறுக குடும்பப் பெருமை என்னும் ஒளி அழிந்துவிடும் என்பதைக் குறிக்கும்.
மாய்தல் என்ற சொல் விளக்கிற்கும், குடிவிளக்கிற்கும் பொதுவாயினும் குடிவிளக்கு மறைந்தால் திரும்பத் தோன்றுவது அரிது என்ற பொருள்பட மாய்ந்துகெடும் எனப்பட்டது.

'மாசுஊர' என்பதன் பொருள் என்ன?

'மாசுஊர' என்ற தொடர்க்கு மாசு மறைக்க, இருட்டுக்கு, மாசு வந்து பரக்க, இருள் அடர, இருட்டு வந்துமூட, மாசு படியப் படிய, மாசு படரப் படர, இருள் வந்து மூட, இருளால், மாசு படிய, குற்றம் சேர்ந்தால், திரிக் கருக்கு உண்டாகிப் பரவுவதால், மாசு அதிகப்பட, இருள் படர, மாசு மேல்மேல் படிய, தூசி அடைவதால், அழுக்கானது படியுமானால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

விளக்கு 'மாசு ஊர்வதால்' மாய்ந்து கெடும் என்று பாடல் சொல்கிறது. மாசு என்றதற்கு கரி இருட்டு, திரிக்கருக்கு, மாசு, தூசி, அழுக்கு எனப் பலவாறு பொருள் கூறப்பட்டது. 'விளக்கு பிராண வாயு குறைந்து கரிக்காற்று மிகுமாயின் அவிந்தே போம். அது போலக் குடி விளக்கம் ஊக்கம் என்னும் உயிர்க்காற்று உள்ள வரையில் ஓங்கி விளக்கும். மடி என்னும் கரிக்காற்று ஊர்ந்தாற் போதும் உடனே அவிந்துபோம்' என்பது இக்குறளுக்கான தண்டபாணி தேசிகர் உரை. இவ்வுரை மாசு ஊர என்பதற்குக் கரிக்காற்று மிகுமாயின் என்ற பொருள் தருகிறது.
ஊர என்ற சொல் சிறுதுசிறிதாகச் அடர்வதைச் சொல்வது. மாசு பெருகப் பெருக, சிறுகச் சிறுக விளக்கு மறையும். மணக்குடவர் உரையில் கண்டபடி மாசு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து ஒளியை மறைக்க அது தோன்றாது கெடும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய மின்விளக்கு, சூரிய விளக்கு, இவற்றிற்கும் பொருந்தும்படி சொல்வதானால், புகை என்பதினும் மாசு அல்லது கறை விளக்கின்மேல் படியப்படிய எனக் கொள்வதே நன்று.

'மாசு ஊர' என்ற தொடர்க்குக் 'கறை படியப்படிய' என்பது பொருள்.

ஒருவனது குடும்பம் என்னும் குறைவில்லாத விளக்கு அவனது சோம்பல் என்னும் மாசு படர மங்கி மறையும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடியின்மை குடும்பத்தின் பெருமையை மங்காமல் காக்கும்.

பொழிப்பு

குடும்பம் என்னும் குறைவில்லாத விளக்கு சோம்பல் என்னும் கறை படியப்படிய ஒளி மங்கிவிடும்.