இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0600உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:600)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை: அஃதில்லார் மரமென்று சொல்லப்படுவர்: மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகிறது.
இஃது அறிவும் இதுதானே யென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம் -அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.
(உரம் என்பது அறிவாதல், 'உரனென்னுந் தோட்டியான்' (குறள், 24) என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும், தேவர் கோட்டம், இல்லம், தேர்,நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: ஒருவர்க்கு ஊக்கம் மிகுதியே வலிமையாவது அவ்வூக்கம் இல்லாதார் மக்களாகார்; மரங்கள் ஆவார். (வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு உரம் உள்ளவெறுக்கை; அஃது இல்லார் மரம்; மக்கள் ஆதலே வேறு.

பதவுரை:
உரம்-அறிவாற்றல்; ஒருவற்கு-ஒருவற்கு; உள்ள-ஊக்க; வெறுக்கை-மிகுதி; அஃது-அது; இல்லார்-இல்லாதவர்; மரம்-மரம்; மக்கள்-மாந்தர்; ஆதலே-ஆகுதலே; வேறு-பிறுது.


உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை;
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை;
பரிதி: அரசற்குச் சத்துவமாவது விசாரம்; [சத்துவம் - வலிமை]
காலிங்கர்: ஒருவர்க்கு உணர்வுடைமையாவது யாதோ எனின் ஓர்ந்து உற்ற கருமத்தின்கண் பெரிதும் நெஞ்சு ஊக்கம் உடையர் ஆதலே செல்வம்;
காலிங்கர் குறிப்புரை: உரம் என்பது அறிவுடைமை. வெறுக்கை என்பது செல்வம் என்றும் வெறுப்பு என்றும் சொல்லுவாரும் உளர்.
பரிமேலழகர்: ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி;
பரிமேலழகர் குறிப்புரை: உரம் என்பது அறிவாதல், 'உரனென்னுந் தோட்டியான்' (குறள், 24) என்பதனானும் அறிக.

'ஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை' என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'அரசற்குச் சத்துவமாவது விசாரம்' என்றார். காலிங்கர் 'ஒருவற்கு உணர்வுடைமையாவது நெஞ்சு ஊக்கம் உடையர் ஆதலே செல்வம்' என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்க மிகுதியே வலிமை', 'ஒருவற்கு அறிவாவது ஊக்கமாகிய செல்வமே', 'ஒருவனுக்கு பலம் என்பது மனோபலம்தான்', 'ஒருவர்க்குத் திடமாவது ஊக்கமாகிய செல்வமே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதியே என்பது இப்பகுதியின் பொருள்.

அஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதில்லார் மரமென்று சொல்லப்படுவர்: மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகிறது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவும் இதுதானே யென்றது.
பரிப்பெருமாள்: அஃதில்லார் மரமென்று சொல்லப்படுவர்: மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகிறது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவும் இதுதானே யென்றது.
பரிதி: அது இல்லாத அரசனும் மரமும் நிகர் என்றவாறு.
காலிங்கர்: அஃது இல்லாதார், மரமானது மக்களுக்குள் காண்டது எத்தன்மைத்து அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும், தேவர் கோட்டம், இல்லம், தேர்,நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.

'அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது இல்லாதவர் நிலையால் மரம்; வடிவால் மானிடர்', 'அச்செல்வம் இல்லாதவர் மரங்களாவார். மக்கள் வடிவம் பெற்றிருத்தலே அம்மரங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடாகும்; வேறில்லை', 'அந்த மனோபலம் இல்லாதவர்கள் மரத்துக்குச் சமானம். மனிதர்கள் என்ற பெயர்தான் வித்யாசம்', 'அவ்ஊக்கம் இல்லாதவர்கள் மரமாவர். வடிவத்தாலே மக்களாய் இருத்தல்தான் அவர்க்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும் என்பது பாடலின் பொருள்.
'உள்ளவெறுக்கை என்ற தொடரின் பொருள் என்ன'?

ஊக்கமிகுதியே ஒருவர்க்கு வலிமை தரும். அது இல்லாதவர் மரத்துக்குச் சமம் ஆவார்.
உரம் என்ற சொல்லுக்கு அறிவு, வலிமை, ஊக்கமுடைமை என்று வேறுபட்ட பொருள்கள் கூறப்பட்டன. அடுத்து வரும் 'உள்ள' என்ற சொல் ஊக்கத்தைக் குறிப்பதால் உரம் என்பதற்கு ஊக்கமுடைமை என்ற பொருள் பொருந்தாது. வலிமை என்ற பொருள் பொருத்தமானாலும் பின் வரும் மரம் என்ற ஒப்புமையால் இப்பொருள் ஏற்காது. சிந்தித்துச் செயலாற்றத் தெரியாதவனை 'ஆடாமல் அசையாமல் மரம் மாதிரி நிற்கிறான் பார்!' என மரத்தைச் சுட்டி இகழ்வது உலக வழக்கு. எனவே உரம் என்ற சொல்லுக்கு அறிவு என்ற பொருள் சிறந்ததாகிறது. உரனென்னும் தோட்டியான் .... (நீத்தார் பெருமை 24) என்ற குறளில் உரன் என்பது அறிவுத் திண்மை என்ற பொருளிலேயே ஆளப்பட்டது.
'உள்ள வெறுக்கை' என்ற தொடர் உள்ளம் மிகுதி அதாவது ஊக்க மிகுதி எனப் பொருள்படும்.
ஒருவர் மனிதன் என்று சொல்லப்படவேண்டுமானால் அவர் ஊக்கத்துடன் செயல்படவேண்டும். ஊக்கமில்லாதவர்கள் அசையமுடியாமல் இருக்கும் மரம் போன்றவர் என்கிறது பாடல். அவர்களது இயங்காமையாகக் கொண்டு அவர்களை 'மரம்' எனச் சொல்லி அவர்கள் வடிவால் மக்கள்போல் இருக்கிறார்கள் அவ்வளவுதான் என்கிறது பாடல். உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (பண்புடைமை 993 பொருள்: உடம்பின் தோற்றத்தால் ஒத்திருப்பது மக்களோடு ஒப்புமை ஆகாது. பொருந்துவதாகிய ஒப்புமை எது என்றால் மக்கட் பிறப்பிற்கு உரிய பண்பால் ஒத்திருப்பதே ஆகும். ) என்றும் குறள் பிறிதோரிடத்தில் சொல்லும். இவ்வாறு ஊக்கம் இல்லாதவர்களை மரம் என்று உருவகப்படுத்தி அவர்கள் ஊக்கத்துடன் செயல்படவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.

முயற்சியில்லா மனிதர்களோடு மரத்தை ஒப்பிடுவது சரியாகுமா? மரம் தன்னை முழுவதுமாகத் தருவது. வெட்டினாலும் துளிர்க்கும். காய், கனி தரும். வீடு கட்ட உதவும். இத்தகைய மரத்தை ஊக்கமில்லா மனிதனோடு ஒப்பிட்டுத் தாழ்த்தலாமா? என சிலர் வினவுவர். இவ்வினாக்களுக்கு 'மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும், கோயில், இல்லம், தேர், கப்பல் இவற்றிற்கு உறுப்பாதலும் முதலிய' என்ற பரிமேலழகரின் விளக்கவுரை தெளிவு பயக்கும். மரம் தரும் பயனை, மனிதன் தரமாட்டான் எனக் கூறி மரத்தை உயர்த்திச் சொன்னதும் நோக்கத்தக்கது.

'உள்ளவெறுக்கை' என்ற தொடரின் பொருள் என்ன'?

'உள்ளவெறுக்கை' என்ற தொடர்க்கு உள்ளமிகுதியுடைமை, விசாரம், பெரிதும் நெஞ்சு ஊக்கம் உடையர் ஆதல், ஊக்கமிகுதி, ஊக்கமாகிய செல்வம், மனோபலம், உண்மைச் செல்வம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தொடரில் காணப்படும் 'உள்ள' என்றதற்கு 'இருக்கும்' என்ற பொருளில் (குறிப்புப் பெயரெச்சம்) 'உள்ள' 'உண்மை' என்று கூறப்பட்ட உரைகள் பொருந்தாததாக இருக்கிறது. இவ்வதிகாரத்திலுள்ள மற்றப் பாடல்களில் ஆளப்பட்டதுபோல் 'உள்ள' என்ற சொல்லுக்கு 'உள்ளத்தின் கண் காணப்படும் ஊக்கம்' என்று பொருள் கொள்வதே ஏற்றதாகும். வெறுக்கை என்ற சொல்லுக்கு மிகுதி எனப் பொருள் கொள்வது சிறக்கும். உள்ள வெறுக்கை என்பதற்கு ஊக்க மிகுதி எனப் பொருள் கொள்வது பொருத்தம்.

ஒருவற்கு வலிமையாவது ஊக்கமிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊக்கமுடைமை என்ற அறிவுத் திண்மை ஒருவரைச் செயலாற்ற வைக்கும்.

பொழிப்பு

ஒருவற்கு அறிவாவது ஊக்க மிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும்