இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0599



பரியது கூர்ங்கோட்டது ஆயினும்
யானை வெரூஉம் புலிதாக் குறின்

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:599)

பொழிப்பு (மு வரதராசன்): யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

மணக்குடவர் உரை: யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும்.
இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.

பரிமேலழகர் உரை: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
(பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)

சி இலக்குவனார் உரை: யானை எல்லாம் விலங்குகளிலும் வடிவால் பெரியது. கூரிய கோட்டையும் (தந்தத்தையும்) உடையது. ஆயினும் இவை இரண்டும் பெறாத புலியானது தன்னைத் தாக்கினால் அதற்கு அஞ்சும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை புலிதாக்குறின் வெரூஉம்.

பதவுரை:
பரியது-பெரிய உடம்பினையுடையதாய்; கூர்-கூர்மையாகிய; கோட்டது-கொம்பினையுடையது (தந்தங்களையுடையது); ஆயினும்-ஆனாலும்; யானை-வேழம்; வெரூஉம்-அஞ்சும்; புலி-வேங்கை; தாக்கு-எதிர்த்தல்; உறின்-உற்றால்.


பரியது கூர்ங்கோட்டது ஆயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும்;
பரிப்பெருமாள்: பரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும்;
பரிதி: அங்க பாரமும் கூரிய கொம்பும்; [அங்கபாரம் - பருத்த உடல்]
காலிங்கர்: சாலப் பரியதுமாய்க் கூரிய கோட்டினை உடையதுமாய் இருந்ததே ஆயினும்;
பரிமேலழகர்: எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது.

'பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பருமனும் கூரிய கொம்பும் இருந்தும்', ' பருமையுடையது. கூர்மையான கொம்புகளை உடையது ஆனாலும்', 'மிகப் பெரிய தேகமும் கூர்மையான தந்தங்களும் உள்ளதாக இருந்தும்', 'பருத்த உடம்பினதாய்க் கூர்மையான கொம்புடையதாய் இருந்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பருத்த உடம்பினதாய்க் கூர்மையான தந்தத்தை உடையதாய் இருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

யானை வெரூஉம் புலி தாக்குறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யானை புலி பொருமாயின் அஞ்சும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.
பரிப்பெருமாள்: யானை புலி பொருமாயின் அதற்கு அஞ்சும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஊக்கமில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.
பரிதி: யானைக்கு உண்டாகிலும் மனோபலம் இல்லாதபடியினாலே புலிக்குப் பயந்தது போல, [மனோபலம் - மனவலிமை]
பரிதி குறிப்புரை: மனோபலமில்லாதார் ஒரு கண் ஒற்றினால் விசாரம் தாழ்வு வந்தாலும் அதனாற் குறை இல்லை.; அது என்போல் என்னில் அம்பிலே நொந்த யானை பின்பும் அதன் பெலம் பெற்ற தன்மை போலும் என்றவாறு.
காலிங்கர்: யானையானது மிகவும் அஞ்சும்; எவ்விடத்து எனின், ஒரு புலி வந்து தன்னோடு பொரத்தாக்குறுவதான இடத்து;
காலிங்கர் குறிப்புரை: மற்று அத்தன்மைத்து மன்னர்க்கும்; பொருபடை ஆண்மையும் வருபடைத் துணையும் மற்றும் பிறவும் பெரியராகிய மாற்றரசர் வந்துற்றனர் ஆயினும், மற்று இவரை நோக்கிச் சிறியரே ஆயினும், நெஞ்சு ஊக்கம் என்னும் நிலைமையே அரசர்க்கு இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
பரிமேலழகர் குறிப்புரை: புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.

'புலி பொருமாயின் யானை அஞ்சும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புலி தாக்கினால் யானையும் அஞ்சுமே', 'அஃது யானை ஊக்கமிக்க புலி தாக்கவரின் அதற்கு அஞ்சும். (ஊக்கம் இல்லாதார் பிற சிறப்பிருப்பினும் ஊக்கமுடையார்க்கு அஞ்சுவர் என்பது கருத்து', 'ஒரு யானை புலியின் தாக்குதலுக்குப் பயப்படும்', 'யானையானது புலி தன்னை எதிர்த்தால் மனந்தளர்ந்து அதற்கு அஞ்சும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புலியால் தாக்குற்றால் யானை அதற்கு அஞ்சும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பருத்த உடம்பினதாய்க் கூர்மையான தந்தத்தை உடையதாய் யானை இருந்தாலும் புலியால் தாக்குற்றால் அஞ்சும் என்பது பாடலின் பொருள்.
முன்னர் (குறள் 597) யானை ஊக்கமுள்ளது என்று சொல்லப்பட்டதே, பின் ஏன் அது இங்கு அஞ்சுகிறது?

பெருத்த உடலும் கூரிய தந்தங்களும் கொண்ட யானையானது, அதைவிட ஊக்கம் மிகக் கொண்ட புலியை எதிர்கொள்ள முடியாமல் திணறும் நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது இக்குறள்.
காட்டில் வாழும் விலங்குகளில் எல்லாம் பெரியது யானை. அது கூரிய கொம்புகளையும் உடையது. எனவே யானை மற்ற விலங்குகளைக் காட்டிலும் வலிமையானது என்பது வெளிப்படை. அதுமட்டுமல்லாமல் போரில் மெய் புதைந்த அம்புகளினால் புண்பட்டாலும் தளராது முன்னேறிச் சென்று பெருமையை நிலைநிறுத்தும் ஊக்கமுடையதும் ஆகும். ஆனால் அந்த யானையானது சிறுத்த உடலை உடையதாயும் குத்திக் கிழித்தெறியக்கூடிய கருவி உறுப்புக்கள் எதுவும் இல்லாததுமான புலி எதிர்கொண்டு தாக்கினால் தடுமாற்றம் அடையும். புலிக்குண்டான ஊக்கமிகுதியே இதற்குக் காரணம். உரம்மிக்க நெஞ்சத்தோடு புலி இடதுபுறத்திலிருந்து வலது புறத்துக்கும் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்குமாக யானை மீது பாய்ந்து பாய்ந்து தாக்கும். யானை ஒரு பக்கம் திரும்புவதற்குள்ளாகப் புலி பல பக்கங்களிலிருந்து எதிர்த்து மிரளச் செய்யும்.

பெரிய உருவமும் கொம்பாகிய கருவி வன்மையும் படைத்த ஊக்கமுள்ள யானையும் ஊக்கமுள்ள புலியும் எதிர்கொண்டால் ஊக்கம் மிகக் கொண்ட புலி யானையை அஞ்சச் செய்யும் என்று இக்குறள் கூறுகிறது.
போட்டி நிறைந்த உலக வாழ்வில் வெற்றி கொள்ள ஒருவர் தனது ஊக்கமுடைமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.

முன்னர் (குறள் 597) யானை ஊக்கமுள்ளது என்று சொல்லப்பட்டதே, பின் ஏன் அது இங்கு அஞ்சுகிறது?

இதே அதிகாரத்தில் சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு (597) என்ற பாடலில் போர்க்களத்து யானையின் உடல் அம்புகள் புதையுண்டும் தளராமல் முன்னேறிச் செல்கின்றது எனச் சொல்லப்பட்டது. அப்படிப் பெருமை பொருந்திய வகையின ஊக்கமுள்ள யானை புலி தாக்கினால் அஞ்சும் என்கிறது இக்குறள். யானை புலி இரண்டுமே ஊக்கமுள்ள விலங்குகள்தாம். ஊக்கமுடைமையின் சிறப்புதான் இங்கேயும் பேசப்படுகிறது. ஆனாலும் இங்கே யானையை புலி தாக்கி அஞ்சச் செய்கிறது. யானை வெரூஉம் என்றுதான் சொல்லப்பட்டதே தவிர அது தோற்றுப்போய் ஓடும் என்றோ பின்வாங்கிச் செல்லும் என்றோ இல்லை. உண்மையில் புலி தாக்கும்போதும் யானை அதைத் தும்பிக்கையால் தூக்கி தொலைவிலே வீசத்தான் செய்யும்; தனது கூர்ங்கோட்டால் புலியைத் துளைத்தெடுக்கவே முயலும்; புலியும் யானையின் தாக்குதலுக்குப் பயந்து ஓடும் சமயங்களும் உண்டு. பரிதி 'வலியும் கருவியும் இருந்தும் யானை புலிக்குப் பயந்தது போல, மனவலிமையில்லாத ஒருவன் வந்து எதிர்த்தால் தாழ்வு வரினும் குற்றமில்லை. புதையம்பிற்பட்ட யானை மீளவும் வன்மை பெற்றது போல' என இக்குறளுக்கு உரை வரைந்தார். இவ்வுரையில் கண்டதுபோல புலிக்கு அஞ்சிய யானை மீண்டும் அவ்விடத்திலேயே வலிமை பெறவும் செய்யும். எனவே இக்குறட் காட்சியில் புலியின் ஊக்கம் யானையினது ஊக்கத்தைவிட பெரிதாகத் தோன்றுகிறது எனக் கொள்ளலாம். மன உரத்துடன் உடல் உரமும் வேண்டுமென்பது என இக்குறளுக்கு விளக்கம் தருவார் மு கோவிந்தசாமி-

ஊக்கமுடைமையை வலியுறுத்த தவறான ஒப்புமை சொல்லப்பட்டது என்று இக்குறளில் குறை காண்பர்.
இக்குறளும் யானையின் ஊக்கத்தை ஒப்புக் கொண்டே பேசுகிறது. ஊக்கமுள்ள யானையும் ஊக்கமில்லாத யானையும் பொருதினால் ஊக்கமுள்ள யானை வெல்லும் என்று சொல்வதைவிட ஊக்கம்மிக உள்ள புலி ஊக்கமுள்ள பெரியதான யானையை அஞ்சச் செய்கிறது என்பது எளிதில் புரிந்துகொள்ளப்படும் என்பதாலேயே உருவத்திலும் கருவிச் சிறப்பிலும் வேறு வேறான விலங்குகளான யானையும் புலியும் ஒப்பு நோக்கப்பட்டன.

பெரிய உருவமும் துணைசெய்யக் கருவி ஏதும் இலனாயினும் ஊக்கமுடையவன் தாக்கினால் எவரும் அஞ்சுவர் என்பதை இக்குறள் உணர்த்துகின்றது. படை மிகுதியாக இருப்பினும் ஊக்கம் உள்ளாரை எதிர்த்து நிற்க இயலாது என்பது பெறப்படுகிறது. யானை மற்ற விலங்குகளுக்கு அஞ்சாத உரநெஞ்சம் கொண்டதே ஆனாலும் தன்னைவிட ஊக்கம்மிக்கதற்கு யானை அஞ்சுமென்று இங்கு கூறப்படுகிறது. யானையைவிட உருவில் சிறியதான புலி யானையை விட ஊக்கம் மிகுதியாக இருப்பதால் அது யானையை அஞ்சச் செய்கிறது. யானை மேலும் ஊக்கம் கொண்டால் அது புலியை புறங்காட்டி ஓடச் செய்யும். ஊக்கத்தின் மேல் ஊக்கம் பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதுவே செய்தி.

பருத்த உடம்பினதாய்க் கூர்மையான தந்தத்தை உடையதாய் யானை இருந்தாலும் புலியால் தாக்குற்றால் அஞ்சும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஊக்கமுடைமை மிகுந்ததே வெல்லும்.

பொழிப்பு

உடல் பருமையும் கூரிய தந்தங்களை உடையதுமாய் இருந்தாலும் யானை புலி தாக்கவரின் அஞ்சும்.