இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:598)

பொழிப்பு (மு வரதராசன்): ஊக்கம் இல்லாதவர், 'இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் ' என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.

மணக்குடவர் உரை: உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார்.
இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.

பரிமேலழகர் உரை: உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: பரந்த உலகில், 'யாம் கொடைத் தன்மை உடையேம்' என்னும் பெருமையை ஊக்கமில்லாதவர் என்றும் அடையமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளம் இலாதவர் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்.

பதவுரை: உள்ளம்-(உள்ள)ஊக்கம்; இலாதவர்-இல்லாதவர்; எய்தார்-அடையமாட்டார்; உலகத்து-உலகத்தில்; வள்ளியம்-வண்மை(ஈகைக் குணம்)யுடையோம்; என்னும்-என்கின்ற; செருக்கு-பெருமிதம்.


உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் பெறார்;
பரிப்பெருமாள்: உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் பெறார்;
பரிதி: விசாரமில்லாதவர் உலகத்து;
காலிங்கர்: யாதானும் ஒரு கருமத்தின் கண்ணும் தமது நெஞ்சு ஊக்கம் இல்லாத அரசரானோர் என்றும் எய்துவதிலர்;
பரிமேலழகர்: இவ்வுலகத்தாருள் ஊக்கம் இல்லாத அரசர் பெறார்.

'ஊக்கம் இல்லாதார் பெறார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தின் ஊக்கம் இல்லாதவர் அடையார்', 'இவ்வுலகில் ஊக்கமில்லாதவர் பெறமாட்டார்', 'ஊக்கம் இல்லாதவர்கள் அடைய மாட்டார்கள்', 'ஊக்கமில்லாதவர்கள் உலகத்திலே அடையமாட்டார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இவ்வுலகில் ஊக்கமில்லாதவர் பெறமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

வள்ளியம் என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வண்மையுடைமை யென்னுங் களிப்பினை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.
பரிப்பெருமாள்: வண்மையுடையேம் என்னுங் களிப்பினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.
பரிதி: செல்வவான் என்று..................
காலிங்கர்: யாதினை எனின் இவ்வுலகத்து வாழ்வார் பலரினும் யாம் சாலச் செய் கருமத்தின்கண் வளவியேம் என்று உள்ள மனச்செருக்கினை என்றவாறு.
பரிமேலழகர்: வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலை.
பரிமேலழகர் குறிப்புரை: ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.

வண்மையுடையேம் என்னுங் களிப்பினை/ செல்வவான்/ வளவியேம் என்ற மனச் செருக்கினை வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தல் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருஞ்செல்வன் என்னுஞ் சிறப்பை', 'யாம் வண்மையுடையேம் என்னும் பெருமித உணர்வினை', 'நல்லவர்கள் என்ற (புகழினால் வரக்கூடிய) இன்பத்தை', 'தாங்கள் வண்மையுடையோம் என்னும் பெருமையினை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வள்ளன்மை யுடையோம் என்ற பெருமிதத்தை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வள்ளியம் என்னும் செருக்கு இவ்வுலகில் ஊக்கமில்லாதவர் பெறமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'வள்ளியம் என்னும் செருக்கு' என்ற பகுதி குறிப்பது என்ன?

உள்ளஉரன் கொண்டவராலேயே பொருள் செய்ய இயலும்.

ஊக்கம் இல்லாதவர், இவ்வுலகத்தாருள் யாம் ஈகைக்குணம் உடையோம் என்று எண்ணி மகிழும், பெருமிதத்தினை அடையமாட்டார்.
செல்வம் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும் என்று முன்னர் சொல்லப்பட்டது. ஊக்கத்தினால் முயற்சியும் முயற்சியினால் பொருளும், பொருளினால் கொடையும், கொடையினால் வள்ளியம் என்னும் செருக்கும் ஒன்றன் பின் ஒன்றாய் உண்டாகின்றன. இவற்றுள் முதலாவதான ஊக்கம் இல்லாமல் போனால் மற்றவையும் இல்லாமல் போகின்றன. பிறர்க்குக் கொடுப்பது மகிழ்ச்சியைத் தரும். ஈத்துவக்கும் இன்பமே இக்குறளில் செருக்கு என்று சொல்லப்படுகிறது. ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்திலே வள்ளன்மையால் வரும் களிப்பை அடையமாட்டார்கள் என்று ஊக்கமுடைமைக்கான காரணத்தை எதிர் விளைவைச் சொல்லியும் நிறுவுகிறார் வள்ளுவர்.
ஊக்கம் தளராத உள்ளத்தால் வளம், வண்மை, பெருமிதம் எல்லாம் வரும் எனச் சொல்லப்பட்டது.

'வள்ளியம் என்னும் செருக்கு' என்ற பகுதி குறிப்பது என்ன?

'வள்ளியம் என்னும் செருக்கு' என்றதற்கு வண்மையுடைமை யென்னுங் களிப்பு, வளவியேம் என்று உள்ள மனச்செருக்கு, வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தல், 'யாம் வண்மை உடையேம்' என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சி, 'யான் வண்மையுடையேம்' எனப் பெருமைப்படும் நிலை, பெருஞ்செல்வன் என்னுஞ் சிறப்பு, யாம் வண்மையுடையேம் என்னும் பெருமித உணர்வு, நல்லவர்கள் என்ற (புகழினால் வரக்கூடிய) இன்பம், 'யாம் கொடைத் தன்மை உடையேம்' என்னும் பெருமை, தாங்கள் வண்மையுடையோம் என்னும் பெருமை, 'யாம் வண்மை யுடையோம்' என்று தாம் மதிக்கப்படுதல், யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம், தாம் பிறர்க்குக் கொடுத்துப் பெருமையுடையோம் என்ற பெருமித எண்ணம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வள்ளியம் என்பது ஈகைக்குணம் உடையேம் என்னும் பெருமித உணர்வைச் சொல்வது. ஊக்கம் உள்ளவரால்தான் பொருள் பெருக்க முடியும். அவரே "வள்ளியம்" என்னும் வள்ளல் தன்மை பெறுவர். வண்மை பெறுவதால் அவர்மாட்டு ஈத்துவக்கும் இன்பம் மிகுகிறது. அதன் பயனாய் வள்ளன்மை உடையோம் என்னும் மகிழ்ச்சி கிடைக்கிறது, வள்ளியம் என்பது 'வண்மையுடையேம்' என்பதான கொடைச் செருக்கைக் குறிக்கிறது.
'வள்ளியம்' என்பதற்குச் 'செய்கருமத்தின்கண் வளவியேம்' என்பார் காலிங்கர்.

‘செருக்கு’ என்னும் சொல் பொதுவாகச் சிறுமைக் குணம் என்ற தீய பொருளிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. குறளிலும் அச்சொல்...தீவினையென்னும் செருக்கு (201) யான் எனது என்னும் செருக்கு.... (346) .....ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு (844) என்று அல்பொருளில் ஆளப்பட்டது. ....விறலினும் வேண்டாமை என்னும் செருக்கு (180) .....வேளாண்மை என்னும் செருக்கு (613) ....நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு (860) ஆகிய பாடல்களில் அது நல்ல பொருளிலும் ஆளப்பட்டது. இப்பாடலில் ‘வள்ளியம் என்னும் செருக்கு’ என்று அச்சொல் பெருமிதம் என்ற நற்பொருளில் வந்துள்ளது. ஊக்கம் உடையவர்களுக்கு கிடைக்கும் ஒரு நற்பயனாகச் செருக்குடையனாதல் சொல்லப்படுகிறது.

'வள்ளியம் என்னும் செருக்கு' என்றதற்கு 'வண்மையுடையேம் என்று மகிழ்வோடு கருதும் பெருமிதம்' என்பது பொருள்.

வள்ளன்மை யுடையோம் என்ற பெருமிதத்தை இவ்வுலகில் ஊக்கமில்லாதவர் பெறமாட்டார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊக்கமுடைமை செல்வம் பெருக்கி வள்ளன்மைக்கு வழிவகுக்கும்.

பொழிப்பு

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் வண்மையுடையேம் என்னும் பெருமித உணர்வினைப் பெறமாட்டார்.