உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
(அதிகாரம்:ஊக்கமுடைமை
குறள் எண்:596)
பொழிப்பு (மு வரதராசன்): எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
|
மணக்குடவர் உரை:
நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்.
இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
பரிமேலழகர் உரை:
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.
(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)
இரா சாரங்கபாணி உரை:
நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க. அந்நினைவு நிறைவேறாமல் தவறினாலும் முயன்று பெற்றதனோடு ஒத்த இயல்புடையது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
பதவுரை:
உள்ளுவது-நினைப்பது; எல்லாம்-அனைத்தும்; உயர்வு-உயர்ச்சி; உள்ளல்-கருதுக; மற்று-(அசைநிலை) அது-அது; தள்ளினும்-கூடாவிடுனும்; தள்ளாமை-தவறாமை; நீர்த்து-தன்மையுடையது.
|
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க;
பரிப்பெருமாள்: நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க;
பரிதி: விசாரிப்பதெல்லாம் பாரமானதே விசாரிப்பான்;
காலிங்கர்: அரசர் தாம் செய்வதாகச் சிந்திப்பது எல்லாம் மேம்படு கருமம் சிந்திக்க;
காலிங்கர் குறிப்புரை: உயர்வுள்ளல் என்பது உயர்வினை உள்ளுக என்றது.
பரிமேலழகர்: அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக;
'நினைப்பனவெல்லாம்/விசாரிப்பதெல்லாம்/தாம் செய்வதாகச் சிந்திப்பது எல்லாம்/கருதுவதெல்லாம் உயர்வையே நினைக்க/விசாரிக்க/சிந்திக்க/கருதுக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நினைப்பதெல்லாம் உயர்வையே நினைக்க', 'ஊக்கத்தோடு எண்ணுவதையெல்லாம் உயர்ந்த செயல்களாகவே எண்ண வேண்டும்', 'கருதுவது எல்லாம் உயர்வானதையே கருதுக', 'எண்ணுவன எல்லாம் உயர்ச்சியாகவே எண்ணுக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
பரிப்பெருமாள்: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
பரிதி: விசாரித்தாலும் முடியாதபோதும் பாரகாரியம் என்றவாறு.[பாரகாரியம் - பெருஞ்செயல்]
காலிங்கர்: மற்று அது பிழைப்பினும் பிழையாத நீர்மை உடைத்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தள்ளினும் என்பது பிழைப்பினும் என்றது; தள்ளாமை நீர்த்து என்பது பிழையாத நீர்மை உடைத்து என்றது.
பரிமேலழகர்: அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. [பால்வகையால்-ஊழ் வயத்தான்]
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.
'அது முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உயர்வு வராவிடினும் அந்நினைவை விடாதே', '(உயர்ந்ததல்லாத) மற்றது விலக்கினாலும் விலக்க முடியாத தன்மையுள்ளது. (அதற்கு ஊக்க முயற்சி வேண்டியதில்லை)', 'அஃது ஊழ்வலியால் எய்த முடியாமல் போனாலும், உயர் நோக்கமானது இகழப்படாத தன்மை உடையது', 'அவ்வுயர்ச்சி அடைய முடியவில்லை என்றாலும், அடைந்த தன்மையோடு ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவ்வுயர்வை அடைய முடியாமல் போனாலும், எய்திய தன்மையோடு ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க; அவ்வுயர்வு தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்பது பாடலின் பொருள்.
'தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்ற பகுதியின் விளக்கம் என்ன?
|
மிக உயரிய நிலையில் உள்ள ஆக்கங்களை அடைய எண்ணுக. ஊக்கம் செலுத்தியும் அவை கிடைக்காமல் போனாலும் கிடைத்தது போன்றவைதாம்.
தாம் அடைய நினைக்கும் நிலையின் அளவை அதாவது குறிக்கோளை மிகப் பெரிதாக வைத்திருக்கச் சொல்லும் குறள் இது. எந்த ஒரு மனிதனும் குறிக்கோள்களை நோக்கியே வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்தல் வேண்டும். அக்குறிக்கோள்கள் தனது நிலையினும் மேலானதாக இருத்தல் வேண்டும். எத்தனை இடையூறுகள் நேரினும் அதனை நோக்கியே அவன் செல்வான். இதனை 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று குறள் ஊக்குகின்றது. குறிக்கொண்ட உயர்ச்சியை எட்டாவிடினும், உயர்வாக எண்ணுவதை விடாதே எனச் சொல்லப்படுகிறது. உயர் நோக்கமானது இகழப்படாத தன்மை உடையது என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஊக்கத்துடன் முயன்றதே உயர்வை அடைந்துவிட்டதற்குச் சமமே. ஒருவன் தொடர்ந்து முயன்று கொண்டிருப்பதால் ஊக்கமுடைமை அவனிடமிருந்து நீங்காமல் தங்கி இருக்கும். இவ்வாறு உயர்குறிக்கோளும் ஊக்கமும் முயற்சியும் உடையராய் மக்கள் வாழ்தல் வேண்டும் என்கிறது பாடல்.
இக்குறளிலுள்ள 'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்' என்பது புகழ்பெற்ற தொடர் ஆகிவிட்டது.
உயர்வானவைகளைக் குறித்து எண்ணி அவற்றை அடைய ஊக்கத்துடன் செயல்படுக என்று சொல்வது இக்குறள்.
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறநானூறு 241 பொருள்: யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் பெறுவன்; குறும்பூழ் ஒருவகைப்பறவை) வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்கு....) என்ற புறப்பாடல் உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக எனச் சொல்கிறது. மேலும் இக்குறட்கருத்து ஆங்கில வழக்கான 'Shoot at the moon and you will hit the top of the highest tree' (பொருள்: நிலவைக் குறிசெய்தால் உயரம் கூடிய மரத்தின் உச்சியையாவது சுடலாம்) என்பதையும் நினைவுபடுத்தலாம்.
|
'தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்ற பகுதியின் விளக்கம் என்ன?
'தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்ற பகுதிக்கு தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும், முடியாதபோதும் பாரகாரியம், பிழைப்பினும் பிழையாத நீர்மை உடைத்து, பால்வகையாற்2 கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை3 நீர்மையுடைத்து. கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது, முடியாமல் தப்பினாலும் முயன்று பெற்றதனோடு ஒக்குமேயல்லாமல், தப்பிப்போனதாகாது, வாராதொழியினும் வந்தது போலக் கருதப் பெறும், வராவிடினும் அந்நினைவை விடாதே, நிறைவேறாமல் தவறினாலும் முயன்று பெற்றதனோடு ஒத்த இயல்புடையது, விலக்கினாலும் விலக்க முடியாத தன்மையுள்ளது, நிறைவேறாவிடினும் விடாமல் மேற்கொள்ள வேண்டிய பெருமையுடையவை, ஊழ்வலியால் எய்த முடியாமல் போனாலும், இகழப்படாத தன்மை உடையது, அடைய முடியவில்லை என்றாலும், அடைந்த தன்மையோடு ஒக்கும், ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே, கைகூடத் தவறினாலும், அந்த சிந்தனை உடைமையால் ஒருகால் வந்து அடையும் தன்மையது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
தள்ளினும் என்ற சொல் பிழைப்பினும் என்ற பொருள் தருவது; தள்ளாமை நீர்த்து என்ற தொடர் பிழையாத நீர்மை உடைத்து எனப்பொருள்படும்.
'தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்ற பகுதிக்குத் தப்பினும் முயன்று முடிந்ததனோடு ஒக்கும் என்பது பொருள். கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது (படைச்செருக்கு 772 பொருள்: காட்டு முயலைக் குறிதப்பாமல் எய்த அம்பைப் பார்க்கிலும் யானைமேல் விடுத்துத் தவறிய வேலினைக் கையகத்துக் கொள்ளுதல் சிறந்தது) என்ற குறட்கருத்தை ஒப்பு நோக்கலாம்.
தோல்வி வெற்றியாகுமா? மேலான செயல்களை நினைத்து அந்த முயற்சியில் ஒருகால் அவன் தோற்றுவிட்டால்கூட, அது தோல்வியாகாது. நிறைவேறிய தன்மையுடையதாகும் என்ற குறிப்பில் 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்று ஊக்கப்படுத்துகிறார் வள்ளுவர். ஒருவன் நினைத்ததில் சில கைகூடாமல் போகலாம். உயர்ந்த எண்ணம் நிறைவேறாமல் கிடைக்கும் தோல்வியும் வெற்றியாகக் கருதப்படும். எனவே ஒருவன் கலங்காமல் ஊக்கத்துடன் கடமை ஆற்ற வேண்டும். என்பது கருத்து.
|
நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க; அவ்வுயர்வை அடைய முடியாமல் போனாலும், எய்திய தன்மையோடு ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.
ஊக்கமுடைமை எஞ்ஞான்றும் தளராமல் காத்துக்கொள்க.
நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க; அவ்வுயர்வு அடைய முடியாமல் போனாலும், எய்திய தன்மையோடு ஒக்கும்.
|