இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0595வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:595)

பொழிப்பு (மு வரதராசன்): நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.மணக்குடவர் உரை: புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்.
இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: வெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)

வ சுப மாணிக்கம் உரை: மலரின் நீளம் நீரின் அளவு; மாந்தர்தம் வாழ்வின் உயர்ச்சி ஊக்கத்தின் அளவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வெள்ளத்து அனைய மலர் நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.

பதவுரை:
வெள்ளத்து-நீர்ப்பெருக்கத்து; அனைய-அளவின; மலர்-பூ; நீட்டம் -நீளங்கள்; மாந்தர்-மக்கள்; தம்-தமது; உள்ளத்து-ஊக்கத்தினது; அனையது-அளவினது; உயர்வு-உயர்ச்சி.


வெள்ளத்து அனைய மலர்நீட்டம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி;
பரிப்பெருமாள்: புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி;
பரிதி: சலம் எத்தனை ஆழம் உண்டு அத்தனை வளரும் நீர்ப்பூ;
காலிங்கர்: குளத்தின்கண் நின்ற வெள்ளம் எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து நீர்ப்பூந்தண்டின் நீளமானது;
பரிமேலழகர்: நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்;
பரிமேலழகர் குறிப்புரை: 'மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார்.

'புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி' என்று மணக்குவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'சலம் எத்தனை ஆழம் உண்டு அத்தனை வளரும் நீர்ப்பூ' என்றார் பரிதி. காலிங்கரும் பரிமேலழகரும் 'நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூந்தண்டின் நீளம்' என்றனர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் நிலப்பூவைச் சொல்கின்றனர். மற்றவர்கள் நீர்ப்பூ என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீர்நிலையின் அளவைப் பொறுத்தன அங்கு மலரும் பூக்களுடைய தண்டின் நீளங்கள்', 'தண்ணீருடைய அளவுக்குத் தகுந்தபடி தாமரை மலர்களின் தாள்கள் நீளும்', 'நீர்ப்பூவினுடைய நீளம் நீர் நிலையின் ஆழத்தின் அளவாகும்', 'நீரில் காணும் பூக்களின் தாளினது நீளங்கள் அவை நிற்கின்ற நீரின் அளவினதாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நீர்நிலையில் நிறைந்துள்ள நீரின் அளவினதாக இருக்கும் அங்குள்ள பூத்தண்டின் நீளம் என்பது இப்பகுதியின் பொருள்.

மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது
பரிப்பெருமாள்: அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஆக்கம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆக்கம் - அனையமலர் நீட்டம்; ஆக்கம் இதனாலே வரும் என்றது.
பரிதி: அதுபோல அரசற்கு எத்தனை கல்வி உண்டு அத்தனையும் விசாரம் உண்டாம் என்றவாறு. காலிங்கர்: மற்று அதுபோல மன்னர் தமது நெஞ்சு ஒருப்பாடு எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து ஒருவர்க்கு உரியவாகப் பெரியோரான் உரைக்கப்பட்ட உயர்வுப் பொருள் அனைத்தும் என்றவாறு. [ஒருப்பாடு - ஒன்றிருக்கும் தன்மை]
பரிமேலழகர்: அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
பரிமேலழகர் குறிப்புரை: இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.

'மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'எத்தனை கல்வி உண்டு அத்தனையும் விசாரம் உண்டாம்' என்றார். காலிங்கர் 'நெஞ்சு ஒருப்பாடு எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து உரியவாகப் பெரியோரான் உரைக்கப்பட்ட உயர்வுப் பொருள்' என்கிறார். பரிமேலழகர் 'மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி' என்று பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோல, மக்களினது உயர்ச்சி அவரது ஊக்கத்தின் அளவைப் பொறுத்தது', 'அதைப்போல மனிதர்களுடைய ஊக்கத்தின் அளவுக்குத் தக்கபடி அவர்களுடைய சிறப்புகள் உயரும்', 'அதுபோல, மக்களுடைய உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவாகும்', 'அதுபோன்று மக்கள் தம் ஊக்கத்தின் அளவு அவர் உயர்ச்சி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாந்தரது உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவாகும் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
நீர்நிலையில் நிறைந்துள்ள நீரின் அளவினதாக இருக்கும் அங்குள்ள பூத்தண்டின் நீளம்; மாந்தரது உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவாகும் என்பது பாடலின் பொருள்.
'உள்ளத்து அனையது உயர்வு' குறிப்பது என்ன?

நீர் மட்டத்திற்கு ஏற்றவாறு நீர்ப்பூக்கள் மேலெழுந்து நிற்கும்; அதுபோல், மக்களுடைய உள்ளத்தின் ஊக்கத்திற்குத் தக்கவாறு அவர்களுடைய வாழ்க்கை உயரும்.
இப்பாடலிலுள்ள ‘உள்ளம்' என்ற சொல் ஊக்கத்தைக் குறிக்கின்றது. மலர் என்ற சொல் மலரைத் தாங்கி நிற்கும் தாளுக்கு ஆகி மலர் நீட்டம் தண்டின் நீளத்தைக் குறிக்கும். தாள் என்பதை அடிக்காம்பு என்றும் தண்டு என்றும் அழைப்பர்.
குளம் போன்ற நீர் நிலைகளில் வளரும் தாமரை, அல்லி போன்ற மலர்களின் குழல் போன்ற தண்டுகள், தேங்கி நிற்கும் நீர் மட்டத்தின் அளவிற்கு உயர்ந்து மிதந்து நிற்கும். சில மலர்க் காம்புகள் நீர் மட்டத்திற்கு மேலும் நிற்கும். நீர் மட்டம் குறையக் குறைய தண்டும் கீழே தாழ்ந்து செல்லும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப குளத்தில் உள்ள நீர்ப் பூக்களின் உயரமும் உயர்ந்து தாழ்ந்து மாறுதல் அடைகிறது. அதுபோல ஒருவரது ஊக்கத்தின் அளவிற்குத் தக அவர்களது உயர்ச்சியோ தாழ்வோ உண்டாகும் என்கிறது பாடல்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் (மூதுரை 7) என்றார் ஒளவையும். (பொருள்: நீரிலுள்ள அல்லியானது, நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும். )

மணக்குடவர்/பரிப்பெருமாள் உரையானது பாய்ச்சும் நீரின் அளவுக்குத் தக்கபடி செடிகளில் மலர் குலுங்குகின்றன என நிலப்பூவிற்கும் பொருந்துமாறு உள்ளது. ஆனால் ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்ற தொடரை நோக்கும் போது, இப்பாடல் நீர்ப்பூவைக் குறிப்பது எனக் கொள்வதே பொருத்தமாகும்.

மலர் நீட்டம் எனும் தொடர் உள்ளத்தின் எழுச்சியை உயரிய காட்சியாக உருவகிக்கிறது. இரண்டு செம்மையான வாக்கியங்களால் அமைந்து படிப்போர் உள்ளத்தில் வேரூன்றி நின்று மன எழுச்சி உண்டாக்கிச் சாதனைகள் செய்யத் தூண்டுகோலாக அமையும் பாடல் இது.
'சிறந்த கரு செம்மையான வாக்கியங்கள், ஒரு முகப் போக்கு, உயர்ந்த தொடை நயங்கள், உன்னதமான உவமை, ஒரே மாதிரியான இடம் மாற்றம், செறிவு, சிறந்த கட்டமைப்பு போன்ற பல்வேறு உத்திகளைக் கொண்டு உருவாக்கம் பெற்றது இப்பாடல்' என்பார் ச அகத்தியலிங்கம்.
வெள்ளம் என்ற சொல் மழைவெள்ளம், மிகுதி என்ற இரண்டு பொருளில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. குறளிலும் வெள்ளம் 'மிகுதி; என்ற பொருளில் வெள்ளத்தனைய இடும்பை (162) அதாவது வெள்ளம் போன்ற அளவற்ற துன்பம் என்று வந்துள்ளது (செ வை சண்முகம்). ஆனால் இக்குறளில் வெள்ளம் என்ற சொல் நீர் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் மலையாளத்திலும் வெள்ளம் என்ற சொல் நீர் என்ற பொருளிலேயே வழக்கில் உள்ளது என்பது அறியத்தக்கது.

'உள்ளத்து அனையது உயர்வு' குறிப்பது என்ன?

'உள்ளத்து அனையது உயர்வு' என்ற பகுதிக்கு உள்ளத்தின் அளவினது ஊக்கம், கல்வி அத்தனையும் விசாரம், நெஞ்சு ஒருப்பாடு எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து ஒருவர்க்கு உரியவாகப் பெரியோரான் உரைக்கப்பட்ட உயர்வுப் பொருள் அனைத்தும், ஊக்கத்தளவினதாம் உயர்ச்சி, ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு, ஊக்கத்தின் அளவாக உயர்ச்சி, வாழ்வின் உயர்ச்சி ஊக்கத்தின் அளவு, உயர்ச்சி ஊக்கத்தின் அளவைப் பொறுத்தது, ஊக்கத்தின் அளவுக்குத் தக்கபடி சிறப்புகள் உயரும், ஊக்கத்தின் அளவுக்குத் தக்கவாறு உயர்வு, உயர்வு ஊக்கத்தின் அளவு, ஊக்கத்தின் அளவு உயர்ச்சி, வாழ்வுயர்ச்சி ஊக்கத்தின் அளவு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘உள்ளம்’ என்பதற்கு மனம் எனவும், ‘உயர்வு’ என்பதற்கு ஊக்கம் எனவும் கொண்டு மணக்குடவர் 'மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்' என்று இப்பகுதிக்குப் பொருள் கூறுவார். பரிமேலழகர் ‘உள்ளம்’ என்பதற்கு ’ஊக்கம்’ எனவும் ‘உயர்வு’ என்பதற்குச் சிறப்பு எனவும் பொருள் கொண்டு 'மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி' எனப் பொருள் காண்பார். மேலும் இவர் 'உயர்தல்-பொருள் படைகளான் மிகுதல்' என விளக்கமும் தருவார். உள்ளம் என்பதற்கு 'ஊக்கம்' என்பதே நேர்பொருளாதலால் பரிமேலழகர் உரையே சிறந்தது.
உள்ளத்தில் ஊக்கம் இருந்தால் அது கடினமாக உழைக்கவும் புதிய முயற்சிகளைத் தேடவும், தொடங்கவும் சாதனைகள் நிகழ்த்தவும் உந்தும். ஊக்கம் தொடர்ந்தால் எடுத்த செயலை விட்டுவிடாமல் வெற்றி பெற முற்செலுத்தும். உள்ளத்தின் ஊக்கம் உயர உயர ஒருவரது ஆக்கமும் அதாவது செல்வம், செல்வாக்கு, புகழ் முதலியனவும் உயர்வு பெறும்.

பாடலிலுள்ள உள்ளம் என்ற சொல்லின் பொருள் தவறாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதிகாரம் ஊக்கமுடைமை ஆதலால் அச்சொல் இங்கு உள்ளத்தின்கண் உள்ள ஊக்கம் என்ற பொருளையே குறிக்கும். அச்சொல்லுக்கு மனம், எண்ணம் எனப் பொருள் கொள்ளப்பட்டு, உள்ளத்தை உயர்த்துவது என்பது பெருமனம் படைப்பது என்றும், நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது, பிறரும் வாழ்ந்தாக வேண்டும் என்று எண்ணுவது என்றும், எண்ணத்தில் உயர்ந்தார் உயர்வும், தாழ்ந்தார் தாழ்வும் பெற்று நிற்பர் என்றும், மனம் போல் வாழ்வு என்றும் பிழைபட இக்குறட்கு விளக்கங்கள் கூறினர்.

'உள்ளத்து அனையது உயர்வு' என்பதற்கு உள்ளத்தின்கண் காணப்படும் ஊக்கத்தின் அளவினது ஒருவரது உயர்ச்சி என்பது பொருள்.

நீர்நிலையில் நிறைந்துள்ள நீரின் அளவினதாக இருக்கும் அங்குள்ள பூத்தண்டின் நீளம்; மாந்தரது உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எவ்வளவு ஊக்கமுடைமையோ அவ்வளவு ஆக்கம் கிடைக்கும்.

பொழிப்பு

தண்ணீர் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிலுள்ள தாவரத்தின் பூவும் உயர்ந்து நிற்கும்; அதுபோல் மாந்தர்தம் ஊக்கத்தின் அளவு ஆக்கம் உண்டாகும்.