ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்
(அதிகாரம்:ஊக்கமுடைமை
குறள் எண்:0593)
பொழிப்பு (மு வரதராசன்): ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.
|
மணக்குடவர் உரை:
செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார்.
இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
பரிமேலழகர் உரை:
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)
தமிழண்ணல் உரை:
ஊக்கம் என்னும் மன எழுச்சியை உறுதியாகத் தம்மிடம் கைப்பொருளெனப் பெற்றிருப்பவர்கள் தம் செல்வம் முதலாய ஆக்கங்களை இழந்தாராயினும் அதற்காக அலமந்து வருந்தமாட்டார்கள். ஏனெனில் ஊக்கமுடையவனால் இழந்ததை எளிதில் மீட்டுக்கொள்ள முடியும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார்.
பதவுரை:
ஆக்கம்-செல்வம்; இழந்தேம்-இழந்துவிட்டோமே; என்று-என்பதாக; அல்லாவார்-அலமந்து வருந்தமாட்டார்; ஊக்கம்-மனவெழுச்சி; ஒருவந்தம்-உறுதியாக; கைத்து-கையகத்து; உடையார்-உடையவர்.
|
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; [அலமரார்-மனம் கழரார் அதாவது கலங்கார்]
பரிப்பெருமாள்: செல்வத்தை இழந்தோமென்று அலம் வருவார் அல்லர்;
பரிதி: செல்வம் ஒரு காலத்திலும் போகாது; தனம் சேதமானாலும் விசனப்படார்;
காலிங்கர்: தம்மாட்டு முன்னமே உளதாகிய பெருஞ்செல்வத்தைப் பின்பு ஒருக்கால் இழந்தோம் என்று கொண்டு அலம் வருதல் இலர்; .
பரிமேலழகர்: இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆக்கம்' ஆகுபெயர்.
'செல்வத்தை இழந்தோமென்று அலமரார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் போயிற்றென்று வருந்தார்', 'புறச்செல்வத்தை இழந்தாலும் அதனை இழந்தோமென்று கவலைப்படமாட்டார்கள்', 'தமக்குள்ள பொருள் செல்வத்தையெல்லாம் இழந்துவிட்டாலும் அதற்காக வருத்தப்படமாட்டார்கள்', 'செல்வம் இழந்தகாலை அதனை இழந்து விட்டோம் என்று வருந்த மாட்டார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார் என்பது இப்பகுதியின் பொருள்.
ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
பரிப்பெருமாள்: உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
பரிதி: விசாரத்தின் பெருமை கைவந்த விசாரவான் என்றவாறு. [விசாரவான்- உள்ளக்கிளர்ச்சியுடையான். ஆராய்ச்சியாளன்]
காலிங்கர்: யார் எனில், பின்னும் ஊக்கம் உடைமையாகிய பெருஞ்செல்வத்தைத் தம்மிடத்து உடையவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: ஒருவந்தம் என்பது பெருஞ் செல்வம் என்றது. கைத்துடையார் என்பது தம்மிடத்து உடையவர் என்றது.
பரிமேலழகர்: நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.
'உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். காலிங்கர் 'ஊக்கம் உடைமையாகிய பெருஞ்செல்வத்தைத் தம்மிடத்து உடையவர்' என்றார். 'நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்' என்றபடி பரிமேலழகர் இப்பகுதிக்கு உரை கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்கத்தைத் திண்ணமாகக் கையில் கொண்டவர்', 'நிலைபெற்ற ஊக்கமாகிய அகச் செல்வத்தைத் தம்மிடம் கொண்டவர்கள்', 'உண்மையாக ஊக்கம் உடையவர்கள்', 'உறுதியாக ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஊக்கத்தைத் திண்ணமாகக் கைப்பொருளாக உடையவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஊக்கத்தைத் திண்ணமாகக் கைப்பொருளாக உடையவர், செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார் என்பது பாடலின் பொருள்.
'அல்லாவார்' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டவர் பொருட் செல்வத்தை இழந்தாலும் அதற்காக மனம் தளர்ந்து கலங்கார்.
பொருளுடைமை நிலையானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் ஒருவரிடமிருந்து நீங்கிப் போகலாம். பொருள் அழிவு எத்தகையோர்க்கும் கலக்கத்தை உண்டாக்கும். அப்படிப்பட்ட நேரங்களில், ஊக்கமில்லாதோர் மிக வருந்தி மன உளைச்சலுக்கு ஆளாகி நோயுற்று ஒடிந்து போவர். ஆனால் மனதில் ஊக்கம் உள்ளோர் தன்னிடமுள்ள பொருட்கள் அனைத்தையும் இழந்தாலும் அதற்காகப் புலம்பி வருந்தமாட்டார்கள். தன் கையகத்தே ஊக்கம் என்ற தளராத மனஎழுச்சி இருப்பதால் அது அவரை உள்ளம் கழலுறாமல் முன்நோக்கிச் செல்ல வைக்கும். நலன்கள் நழுவிய நிலையிலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயல்வர். இழந்த பொருளை மீண்டும் ஆக்கிக் கொள்வோம் என்ற ஊக்கத்தைத் தம் கையில் உறுதியாகக் கொண்டவர்கள் இவர்கள்.
ஆக்கத்தினும் ஊக்கமே ஒருவனுக்குச் சிறந்தது என்று முற்குறளில் கூறிய வள்ளுவர் இங்கு அவ்வூக்கத்தை உறுதியாக உடையவர் பெற்ற ஆக்கம் நீங்கிவிட்டதே என்று எப்போது வருந்த மாட்டார்கள் என்ற அவரது இயல்பினை உணர்த்துகின்றார். ஊக்கத்தைத் தம்மிடம் நிலைபேறாகக் கொண்டவர்கள், நீங்கிப்போன பொருளை திண்ணமாக மீட்டெடுப்பர் என்பது கருத்து.
கைப்பொருள் என்பது தனிமனித அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் பொருளைக் குறித்தது. கைத்துடையார் என்பதிலுள்ள கை என்பது இடப்பொருளையுணர்த்தும் கைத்துடையார் என்பதற்குத் தம்மிடத்துடையார் எனவும் கையகத்துடையார் எனவும் கைப்பொருளுடையார் எனவும் பொருள் சொல்லப்பட்டது.
ஒருவந்தம் என்ற சொல்லுக்கு ஒருதலையாக, பெருமை, பெருஞ் செல்வம், நிலைபேறு, நிச்சயமான அறிவு, உண்மையாக அல்லது நிச்சயமாக என உரையாளர்கள் பொருள் கூறினர். இச்சொல் இன்னொரு குறளிலும் (563) ஆளப்பெற்றுள்ளது. 'இச்சொற்படைப்புக்கும் ஆட்சிக்கும் வள்ளுவரே தந்தையாகிறார்' என்பார் தண்டபாணி தேசிகர்.
'ஊக்கம் ஒருவந்தம் கைத்துடையார் எனக்கூட்டி ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர்' என மணக்குடவர் முதலானோர் கூற 'நிலைபெற்ற (ஒருவந்தம்) ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்' எனப் பரிமேலழகர் போன்றோர் பொருள் கண்டனர். முன்னது தெளிவாகவும் பொருத்தமாகவும் உள்ளது.
|
'அல்லாவார்' என்ற சொல்லின் பொருள் என்ன?
'அல்லாவார்' என்றதற்கு அலமரார், அலம் வருவார் அல்லர், விசனப்படார், அலம் வருதல் இலர், அங்கலாயார், கலங்கமாட்டார், அலமந்து வருந்தமாட்டார்கள், அழ மாட்டார்கள், வருந்தார், கவலைப்படமாட்டார்கள், துன்புற்றுத் தவிக்க மாட்டார்கள், வருந்த மாட்டார், மனம் வருந்திக் கலங்கமாட்டார், துன்புறார் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அலம்வரார்’ என்ற பாடமும் அல்லாவார் என்ற பாடமும் பொருளில் பெரிதும் வேறுபடவில்லை. ‘அலமரல், நெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’ தொல்காப்பியம், (794) என்பவாகலின், அலமரார் என்றிருப்பின் நன்று என்பார் இரா சாரங்கபாணி.
அல்லாத்தல்' என்பது துன்பமுறுதல் / வருந்துதல் என்று பொருள் படுகிறது.
'அல்லாவார்' என்ற சொல்லுக்கு அலமந்து வருந்தமாட்டார்கள் என்பது பொருள்.
|
ஊக்கத்தைத் திண்ணமாகக் கைப்பொருளாக உடையவர், செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார் என்பது இக்குறட்கருத்து.
ஊக்கமுடைமை கொண்டவன் பொருள் இழப்பால் தளரான்.
ஊக்கத்தைத் திண்ணமாகக் கையில் கொண்டவர், செல்வத்தை இழந்தோமென்று கலங்கார்.
|