இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0592உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:0592)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

மணக்குடவர் உரை: உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்.
பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம்.
('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: ஊக்கமுடைமை தன் உள்ளத்துடன் ஒட்டியதாகலின், பிரிக்க முடியாத அதுவே ஒருவனுக்கு நிலையான உடைமையாகும். ஏனைய பொருளுடைமை தன்னின் வேறுபட்டு இருப்பதாகலின் நிலையில்லாது நீங்கிப்போகும் தன்மையுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும்.

பதவுரை:
உள்ளம்-(ஊக்கமுள்ள) உள்ளம்; உடைமை-பெற்றிருப்பது; உடைமை-சொத்து; பொருளுடைமை-செல்வப் பொருள்; நில்லாது-நிலைக்காமல்; நீங்கிவிடும்-நீங்குவது திண்ணம்.


உள்ளம் உடைமை உடைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடைமையாவது ஊக்கமுடைமை;
பரிப்பெருமாள்: உடைமையாவது அறிவுடைமை;
பரிதி: அரசர்க்கு உடைமையாவது விசாரமுடைமை;
காலிங்கர்: மற்று ஆகலான் ஊக்கமுடைமையே ஒருவர்க்குச் செல்வமானது;
பரிமேலழகர்: ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது;
பரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளம்' ஆகுபெயர்.

'ஊக்கமுடைமையே ஒருவர்க்குச் செல்வமானது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்கச் சொத்தே சொத்து', 'ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வமாகும்', 'மனவலிமைதான் ஒருவருக்குச் சொந்த உடைமையாகும்', 'ஊக்கம் உடைமையே ஒருவர்க்கு நிலைத்து நின்ற உடைமையாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊக்கம் பெற்றிருத்தலே ஒருவனுக்குச் செல்வமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: மற்றப் பொருள் முதலாகிய செல்வம் நில்லாது தன்னை விட்டு நீங்கும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: அது இல்லாதபோது எட்டுவகைச் செல்வமும் கெடும் என்றவாறு.[எட்டுவகைச் செல்வம் - அடிமை, அரசாங்கம், சுற்றம், நெல், பொன், மக்கள், மணி, வாகனம் என்பர்.]
காலிங்கர்: மற்று இவ்வுலகத்துப் பொருளானது நிலையாது.
காலிங்கர் குறிப்புரை: முன்னை வினை வழியினால் தமக்கு வரும் பொருள் வருதலும், கெடும்பொருள் கெடுதலும் யாவராலும் ஒழித்தற்கு அரிது ஆதலான், மற்று உணர்வு ஊக்கம் ஆகின்றது. அவ்விருபாலும் சிறந்ததாகலான் இதனை ஒப்பதோர் ஆக்கம் வேறில்லை என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.

'பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருட்சொத்து நில்லாது போய்விடும்', 'ஏனைப் பொருட்செல்வம் நிலைபெறாமல் சென்றுவிடும்', 'பொருள் உடைமை அவருடன் நிற்கக்கூடியதல்ல. அவரை விட்டுப் பிரிந்துவிடக் கூடியது', 'ஏனைய பொருள் உடைமை நிலைத்து நில்லாது நீங்கி விடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருட்செல்வம் நில்லாது நீங்கி விடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளம் உடைமை உடைமை; பொருட்செல்வம் நில்லாது நீங்கி விடும் என்பது பாடலின் பொருள்.
'உள்ளம் உடைமை உடைமை' என்ற பகுதியின் விளக்கம் என்ன?

ஊக்கம் உடையவராய் இருப்பது உள்ளத்தோடு உள்ளபண்பு ஆதலால் ஒருவர்க்குத் தன்னுடைமையாய்த் தங்கி நிற்கும் சிறந்த சொத்தாகும்; மற்ற பொருட்செல்வம் எல்லாம் பிரிந்து நிற்கும் உடைமை ஆதலால் நில்லாது நீங்கி விடும்.
செய்க பொருளை.... (பொருள்செயல்வகை 759) என்றும் பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை... (அருளுடைமை 247) என்றும் சொல்பவர்தாம் வள்ளுவர். எனவே பொருளும் சிறப்பான உடைமைதான்; பொருள் உடையார்க்கு எல்லாம் உண்டாகும் என்பதும் உண்மைதான். ஆனால் ஊக்கம் இல்லாவிட்டால் பொருட் செல்வமும் ஒருவரிடமிருந்து நீங்கி விடும். தனது கடமைகளைச் செய்வதில் ஆர்வமாக இருந்தால் தனது பொருட்செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். ஊக்கம் உயிர்க்குணமாய் உள்ளுறைந்திருக்கும். பொருட்செல்வம் புறப்பொருளாய் வெளியமைந்து நிற்கும். 'பொருளுடைமை நில்லாது' என்ற குறிப்பால் உள்ளமுடைமை நிலைத்த உடைமையாம் என்பது பெறப்படுகிறது. ஆகவே ஊக்கமே சிறந்த செல்வம்.

'உள்ளம் உடைமை உடைமை' என்ற பகுதியின் விளக்கம் என்ன?

'உள்ளம் உடைமை உடைமை' என்ற பகுதிக்கு உடைமையாவது ஊக்கமுடைமை, உடைமையாவது அறிவுடைமை, உடைமையாவது விசாரமுடைமை, ஊக்கமுடைமையே ஒருவர்க்குச் செல்வமானது, ஊக்கம் உடைமையே நிலைநின்ற உடைமை, ஊக்கமுடைமையே நிலையான உடைமை, ஊக்கமுடைமை நிலையான உடைமை, ஊக்கச் சொத்தே சொத்து, ஊக்கம் உடைமையே நிலைபெற்ற செல்வம், மனவலிமைதான் சொந்த உடைமை, ஊக்கம் உடைமையே நிலைத்து நின்ற உடைமை, உறுதி வாய்ந்த உள்ளம்தான் உண்மையான சொத்து, முயற்சியுள்ள முடைமையே நிலையான உடைமை, ஊக்க எண்ணம் இருத்தல்தான் பொருளுடைமை, ஊக்கம்தான் நிரந்தரமான உடைமை எனப் பொருள் கூறினர் உரைகாரர்கள்.

‘உள்ளம் உடைமை’ என்பதற்கு ஊக்கத்தைப் பெற்றிருத்தல் என்பது பொருள். உள்ளத்தின் பண்பாகிய ஊக்கத்தை உள்ளம் என்று கூறப்பட்டதால் உள்ளம் என்பது பொருளாகுபெயர். 'உள்ளம் உடைமை உடைமை' என்றது ஊக்கமுடைமையே உடைமை எனப்பொருள்படும்.
மாந்தர்க்குச் செல்வம் எனப்படுவது உள்ளத்தின்கண் காணப்படும் ஊக்கமே. பொருளைவிட, ஊக்கமே ஒருவருக்கு நீங்கா உடைமையாகிறது. ஊக்கம் கொண்ட உள்ளமே நிலையான செல்வம். ஊக்கம் உணர்வாகையால், அது ஆகுங்காலத்தும் போகுங்காலத்தும் சிறந்தது என்பார் காலிங்கர். ஊழான்வரும் பொருட்டும் ஊக்கம் இன்றியமையாதது. ஆகூழிருப்பின் சிறுமுயற்சியான் பெரும்பயனையும், போகூழிருப்பின் மெய்வருந்தக் கூலி பெறுதலையும் அடைய உதவும் என்பதை உணர்த்தியது என இதை விளக்குவார் தண்டபாணி தேசிகர். 'ஊக்கத்தினாற் புதுச்செல்வம் உண்டாக்கப்படுவதுடன் பழஞ்செல்வமும் பாதுகாக்கப்படும். 'குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்'' என்பது தேவநேயப் பாவாணர் தரும் விளக்கம்.
ஊக்கமுடைமை இருந்தால், மற்றெல்லா உடைமைகளும் உண்டாகும் ஆதலால் 'உள்ளம் உடைமை உடைமை' எனச் சொல்லப்பட்டது.

ஊக்கம் பெற்றிருத்தலே ஒருவனுக்குச் செல்வமாகும்; பொருட்செல்வம் நில்லாது நீங்கி விடும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊக்கமுடைமை பொருள் பெற்றிருப்பதினும் மேலான செல்வம்.

பொழிப்பு

ஊக்கம் உடைமையே ஒருவனது சொத்து; பொருட்செல்வம் நிலைபெறாமல் சென்றுவிடும்.