இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0591உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:0591)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

மணக்குடவர் உரை: ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.

பரிமேலழகர் உரை: உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: ஊக்கமே சொத்தாகும். அது இல்லாதவர் பிற இருப்பினும் சொத்துடையார் ஆகார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ.

பதவுரை:
உடையர்-பெற்றுள்ளவர்; எனப்படுவது-என்று (சிறப்பித்துச்) சொல்லப்படுவது; ஊக்கம்-மனவெழுச்சி; அஃது-அது; இல்லார்-இல்லாதவர்; உடையது-உடைமையாகக் கொண்டது; உடையரோ-உடையராவரோ; மற்று-வேறு.


உடையர் எனப்படுவது ஊக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ('உடைமை' பாடம்) ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை;
பரிப்பெருமாள்: ஒன்றை உடையர் என்று சொல்லப்படுவது ஊக்கம்;
பரிதி: அரசன் செல்வன் என்று சொல்லப்படும், விசாரமுள்ளவனாகில்; [விசாரமுள்ளவன் -கவலையுள்ளவன்].
காலிங்கர்: உலகத்து அரசரனோர் எனைத்து வகைப்பட்ட பொருள்களையும் உடையரேனும் அவற்றுள்ளெல்லாம் பலரானும் எடுத்துரைக்கப்படுவது சிறந்த ஊக்கம் உடைமையே ஆகலான்;
பரிமேலழகர்: ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்;

மணக்குடவர் 'உடைமை' எனப் பாடம் கொண்டார். இவர் 'ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை' எனப் பொருள் கூறினார். (ஒற்றரையுடைமை என வந்தது படி எடுத்தோர் பிழையாயிருக்கலாம்.) பரிப்பெருமாள் 'ஒன்றை உடையர் என்று சொல்லப்படுவது ஊக்கம்' என மணக்குடவர் உரையைத் திருத்தினார், காலிங்கரும் பரிமேலழகரும் பரிப்பெருமாளின் உரையை ஒட்டி 'ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்' என்றபடி இப்பகுதிக்கு உரை நல்கினர். 'உடையர்' என்பதே வள்ளுவர் கொண்ட பாடமாக இருக்கலாம்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடைமை எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ஊக்கத்தையே.', 'ஊக்கம் உடையவர்களைத்தான் (ஒன்றை) உடையவர்களாகச் சொல்லத்தகும்', 'சிறப்பாக ஒருவர் உடையர் என்று சொல்ல வேண்டுமாயின் ஊக்கம் ஊடைமையே அஃதாம்', 'ஒருவரை உடையார் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரை இன்ன உடையவர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம் என்பது இப்பகுதியின் பொருள்.

அஃது இல்லார் உடையது உடையரோ மற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.
பரிப்பெருமாள்: அஃது இல்லாதார் மற்று உடைமையாகிய பொருளெல்லாம் உடையராகார் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஊக்கமுடைமை வேண்டும் என்றது.
பரிதி: விசார ஈனனாகில் அரசற்கு எத்துணைச் செல்வம் உண்டாகிலும் இல்லையாம் என்றவாறு. [விசாரஈனனாகில் - கவலையற்றவனாகில்]
காலிங்கர்: அஃது இல்லாதார் வேறு தமக்கு உடையதாக வகுத்து எண்ணப்பட்ட உடைமை உடையரேனும் யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.

'அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்த ஊக்கம் இல்லாதவர் வேறு எதனைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆவாரோ? ஆகார். 'உடையர் என்பபடுவது' என்றும் பாடமுண்டு', 'ஊக்கம் இல்லாதவர்கள் மற்ற எது உடையவர்களாக இருந்தாலும் உடையவர்கள் ஆகமாட்டார்கள்', 'ஊக்கம் இல்லாதவர் எதனை உடையவராய் இருந்தாலும் உடையவர் அல்லர்', 'அவ்வூக்கம் இல்லாதார் வேறு செல்வங்களைப் பெற்றிருப்பினும் உடையராவரோ? ஆகார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வூக்கம் இல்லாதவர் வேறு என்ன பெற்றிருந்தாலும் உடையவர் ஆவாரோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவரை இன்ன உடையவர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அவ்வூக்கம் இல்லாதவர் வேறு என்ன உடையது உடையரோ? என்பது பாடலின் பொருள்.
'மற்று உடையது உடையரோ' என்ற தொடர் குறிப்பது என்ன?

ஊக்கம் ஒன்றே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய சொத்து. அது இல்லாமல் வேறு எது உடையவராக இருந்தாலும் ஒருவர் ஏதும் பெற்றவர் இல்லை.
'அவனிடம் சொல்லிக் கொள்வதுபோல என்ன இருக்கிறது?' என்று எல்லா நிலையினர் பற்றியும் கேட்கப்படுவதுதான். இதற்கு 'நிலம் இருக்கிறது வீடுவாசல் இருக்கிறது, வங்கியில் பெருந்தொகை வைத்திருக்கிறான்' என்பது பொதுவான பதில். இவையெல்லாம் சொல்லச் சிறந்தது அல்ல என்கிறார் வள்ளுவர் இக்குறளில். பின் வேறு எது சிறந்த காரணமாக இருப்பது? 'அவனிடம் ஊக்கம் என்னும் மனஎழுச்சி உண்டு' என்பதுதான் சொல்லத்தக்க உடைமை என்கிறது இக்குறள்.
ஒரு செயலை ஆற்றுவதற்கு தளர்ச்சியில்லாமல் உள்ளத்தை முற்செலுத்துதல் அதாவது மேலும் மேலும் கிளர்ச்சியுறச் செய்தல் ஊக்கம் எனப்படுகிறது. உலகியற்போல நிலவுடைமை-பொருளுடைமை போன்றவற்றை முதன்மைப்படுத்தாமல் அவற்றை ஆக்கக்கூடிய ஆற்றலையே சிறந்த உடைமை என்று ஊக்கமுடைமையைச் சிறப்பிக்கிறார் வள்ளுவர்.

'மற்று உடையது உடையரோ' என்ற தொடர் குறிப்பது என்ன?

'மற்று உடையது உடையரோ' என்ற தொடர்க்கு மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார், மற்று உடைமையாகிய பொருளெல்லாம் உடையராகார், எத்துணைச் செல்வம் உண்டாகிலும் இல்லையாம், வேறு தமக்கு உடையதாக வகுத்து எண்ணப்பட்ட உடைமை உடையரேனும் யாதும் இல்லை, வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?, மற்று எவ்வெவற்றை உடையவராயிருந்தாலும், அவ்வுடைமைகளை உடையவராவரோ? ஆக மாட்டார், வேறு எதனை உடைமையாகப் பெற்றிருந்தாலும் உடைமை பெற்றவராகக் கருதப் பெற மாட்டார், பிற இருப்பினும் சொத்துடையார் ஆகார், வேறு எதனைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆவாரோ? ஆகார், வேறு என்ன உடையவர்களாக இருந்தாலும் உடையவர்கள் ஆவார்களா? (ஆகமாட்டார்கள், மற்றை எவற்றை உடையவராயினும் உடையவர் ஆவாரோ? (ஆகார்), எதனை உடையவராய் இருந்தாலும் உடையவர் அல்லர், வேறு செல்வங்களைப் பெற்றிருப்பினும் உடையராவரோ? ஆகார், வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ? ஆகார் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடரிலுள்ள உடையது என்ற சொல்லுக்கு உடைய பொருள் என்பது பொருள். இதிலுள்ள உம்மை தொக்கி நிற்பததாலால் இதை 'உடையதும்' என வாசிக்க வேண்டும் என்பர். மற்று உடையது உடையரோ என்பது வேறு எந்த பொருள் கொண்டிருந்தாலும் அது பொருள் உடையர் ஆவரோ எனக் கேட்பது என்பது இத்தொடரின் பொருள். உடையரோ என்ற வினாவில் வந்த ஓகாரம் 'ஆகார்' என்பதனைத் தந்து நின்றது.
ஊக்கமில்லாமல் சோம்பியிருப்பதால் உடையதையும்-உள்ள பொருளையும்- இழப்பர் எனக் கூறி அவர் செல்வத்தை யுடையவராவரோ எனவும் பொருள் கூறுவர்.

வேறு எந்தச் செல்வம் கொண்டிருந்தாலும் சொத்து உடையவர் ஆகமாட்டார் என்பது இத்தொடரின் பொருள்.

ஒருவரை இன்ன உடையவர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அது இல்லாதவர் வேறு என்ன பெற்றிருந்தாலும் உடையவர் ஆவாரோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊக்கமுடைமையே ஒருவரது சொத்து.

பொழிப்பு

உடையர் எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ஊக்கமே. அவ்வூக்கம் இல்லாதவர் வேறு எதனைப் பெற்றிருந்தாலும் உடையவர் ஆவாரோ?