இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0590



சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:590)

பொழிப்பு (மு வரதராசன்): ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால் மறைப்பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

மணக்குடவர் உரை: ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம்.
இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.
(மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: உளவுகளைத் திறம்பட அறிந்து கூறிய உளவாளிகளுக்குச் சிறப்புச்செய்ய விரும்பினால், அதைப்பிறர் அறியுமாறு செய்யற்க. அங்ஙனம் பலரறியச் செய்தானாயின் தன் மறைவுச்செய்திகளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒற்றின்கண் சிறப்பறிய செய்யற்க செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் .

பதவுரை:
சிறப்பு-பெருமை; அறிய-தெரிய; ஒற்றின்கண்-உளவாளியிடத்தில்; செய்யற்க-செய்யாதொழிக; செய்யின்-செய்தால்; புறப்படுத்தான்-வெளிப்படுத்தினவன்; ஆகும்-ஆம்; மறை-மறைவு.


சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க;
பரிப்பெருமாள்: ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க;
பரிதி: ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யும்போது ஒருவர் அறியாமல் செய்க;
காலிங்கர்: இங்ஙனம் அகத்தும் புறத்தும் அருமையும் பெருமையும் நுட்பமும் ஒட்பமும் ஓர்ந்து உணர்ந்த இடத்தும் ஒற்றர்க்கு அரசர் செய்யும் சிறப்புப் பலவும் உள அன்றே; அவற்றுள் யாதானும் ஒரு சிறப்பினையும் பிறர் அறியுமாறு தாம் செய்யாது ஒழிக;
பரிமேலழகர்: மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக;

'ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதே', 'ஒற்றனிடத்துச் செய்யும் சிறப்பினைப் பிறர் அறியச் செய்யக் கூடாது', '(அரசன் தன்னுடைய) ஒற்றர்களைப் பாராட்டிச் சிறப்புகள் செய்தால் அதைப் பிறர் அறியும்படி பகிரங்கமாகச் செய்யக்கூடாது', 'ஒற்றர்க்குச் செய்யும் சிறப்பினைப் பிறர் அறியுமாறு செய்தல் கூடாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதீர் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: பிறரறியச் செய்தானாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.
பரிதி: அவர் அறிய ஒற்றற்குப் பாலித்தால் இராச்சியத்தில் பிரகாசம் பண்ணியதாம் என்றவாறு [பாலித்தால்- கொடுத்தால்].
காலிங்கர்: செய்வாராயின் அங்ஙனம் அவரால் தாம் அரிதின் பெற்ற மறையுரையினை அவ்வுரைப் பொருளாகிய வினை முடிவதன் முன்னரே தாமே புறத்து வெளிப்படுத்தினர் ஆவர் என்றவாறு.
பரிமேலழகர்: செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.

'பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்து வெளிப்படுத்தினர் ஆவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யின் மறைவு வெளிப்படுத்தியதாகும்', 'செய்தால் மறைத்து வைக்கக்கூடிய செய்தியை வெளியே புலப்படுத்தியவன் ஆவான்', 'அப்படிச் செய்தால் இரகசியங்களைப் பகிரங்கப்படுத்துவதாக முடியும்', 'செய்தால் மறையை (இரகசியத்தை)ப் பிறர்க்கு வெளிப்படுத்தியவன் ஆவான் (அரசன்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செய்தால் மறைவை தாமே வெளிப்படுத்தியதாகிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதீர்; செய்தால் மறைவை தாமே புறப்படுத்தான் ஆகிவிடும் என்பது பாடலின் பொருள்.
'புறப்படுத்தான்' குறிப்பது என்ன?

மற்றவர்களுக்குத் தெரியும்வகையில் உளவாளிக்குச் சிறப்புச் செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால் ஒற்றுச்செய்தி மறையாக இருக்காது.
'அகத்தும் புறத்தும் அருமையும் பெருமையும் நுட்பமும் ஒட்பமும் ஓர்ந்து உணர்ந்த' அரசு ஒற்றர்க்குச் சிறப்புச் செய்ய எண்ணுவது இயல்பே. சிறந்த ஒற்றுச் செய்தியைப் பெற்று வந்து கொடுத்த ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யவேண்டுமானால் அதைப் பலரும் அறியச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் ஒற்றர் அறிந்து வந்த உளவுப்பொருளை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தியதாகிவிடும். ஒற்றர் யார் என்பதும், அறியக்கூடாதவர்க்கும், தெரிந்துவிடும். ஒற்றர் கூறும் செய்தி மற்றவர் அறியாது பாதுகாக்கப்பட வேண்டியதாகும். ஒற்றரும் காக்கப்படவேண்டியவர். பலர் அறிய ஒற்றர்க்குச் சிறப்புச் செய்தால் ஒற்றருக்கும் கேடு நேரலாம். நன்றாற்றலுள்ளும் தவறுண்டு என்றாகிவிடும். எனவே உளவாளியைப் பெருமைப்படுத்துவதை ஒளித்தே ஒருவரும் அறியாதவாறு செய்யவேண்டும்.
தன் உயிரைப் பொருட்படுத்தாது செயலாற்றும் ஒற்றர்க்குச் சிறப்புச் செய்ய வேண்டுமென்பது வள்ளுவரின் விருப்பம் என்று தெரிகிறது.

ஒரு நாட்டில் கலை, இலக்கியம், கல்வி, தொழில், வேளாண்மை, மருத்துவம், வணிகம், பொருளாதாரம் போன்ற எந்தத் துறையானாலும் தனிமனிதத்திறன் காட்டியவர்களை அரசு தேர்ந்து சிறப்பு செய்வது மரபு. இது திறமையாளர்களை மேன்மேலும் ஊக்குவிப்பதற்காகவும் மற்றவர்களும் தம்தம் துறையில் சிறப்புற விரும்பி திறன்காட்ட விழைவர் என்ற நோக்கத்திலும், பலர் அறியச் செய்யப்படுவது. சிறப்பித்தல் என்பது விருது, பொற்கிழி, பதவி உயர்வு வழங்குதல் போன்றவையாக இருக்கலாம். சிறப்புச் செய்தல் பற்றி மற்றோரிடத்திலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். அங்கு பெருமைக்குரியவர்களுக்கு மட்டும்தான் சிறப்புச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவார். இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின் (பெருமை 977 பொருள்: பெருமைக்குணம் உடையார்க்குரிய சிறப்பும் பெருமைக் குணம் இல்லாத சிறியாரிடம் படுமாயின் நெறிகடந்து செயலுக்கு உரியதாகும்).

'புறப்படுத்தான்' குறிப்பது என்ன?

'புறப்படுத்தான்' என்றதற்குப் புறத்துவிட்டானாம், இராச்சியத்தில் பிரகாசம் பண்ணியதாம், புறத்து வெளிப்படுத்தினர் ஆவர், புறத்திட்டான் ஆம், வெளிப்படுத்தியவன் ஆவான், புறத்தே வெளியிட்டதாகி விடும், வெளிப்படுத்தியதாகும், வெளியே புலப்படுத்தியவன் ஆவான், வெளிப்படுத்தினவன் ஆவான், வெளிப் படுத்தியதாகி விடும், வெளிப்பட்டு விடும், வெளிப்படுத்துதல் போல் ஆகும் என்றவாறு உறையாளர்கள் பொருள் கூறினர்.

ஒற்றனது அடையாளங்களும் அவன் ஒற்றியறிந்து கூறிய செய்தியும் மறைக்கப்படவேண்டியவை. ஆனால் ஒற்றனுக்கு வெளிப்படையாகச் சிறப்புச் செய்தால் அரசே தன்னகத்து அடக்கப்படும் மறையைப் புறத்திட்டது அதாவது வெளிப்படுத்தியது ஆகிவிடும். அம்மறை வெளிப்படின், ஒற்றிவந்த பொருள் பயனின்றிப் போகும். காலிங்கர் 'செய்வாராயின் அங்ஙனம் அவரால் தாம் அரிதின் பெற்ற மறையுரையினை அவ்வுரைப் பொருளாகிய வினை முடிவதன் முன்னரே தாமே புறத்து வெளிப்படுத்தினர் ஆவர்' என விளக்குவார். 'சிறப்புப் பெற்ற இவன் யார்? இது பெறுதற்குக் காரணமென்ன? என்று கேட்பாரும் விடை கூறுவாரும் அயலாராகையால் புறப்படுத்தல் ஆகும்' என்பது பரிமேலழகரது உரை.

மறைவில் செய்வதுதான் ஒற்று. ஒற்றர்கள் வீரதீரச்செயல்கள் பல செய்தாலும் அவை எவையும் பொதுமக்களுக்குத் தெரியாமலேயே மறைந்துவிடும். ஒற்றர்களின் வாழ்நாள் எப்பொழுதும் மறைவிலேயே இருந்து விடும். அவர்களுக்குப் புகழ்வாழ்க்கை இல்லை. சிறப்புச் செய்தலின் வழி அவன் யார் எதற்காகச் சிறப்புச் செய்யப்படுகிறான் என்பது வெளிப்பட்டு விட்டால், அவன் இனிமேலும் ஒற்றனாக இருக்க முடியாது. எனவே உளவு திரட்டும் ஒற்றனின் புகழ், ஒளிவு மறைவாகவே இருக்கும். தனிப்பட்ட வகையில் அரசிடம் இருந்து போற்றுதலையும் பாராட்டுகளையும் பெறலாமே ஒழிய பொதுவெளியில் ஒற்றர்கள் கடைசிவரை அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள்.

'புறப்படுத்தான்' என்பதற்கு மறையை வெளிப்படுத்தினவன் என்பது பொருள்.

பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதீர்; செய்தால் மறைவை தாமே வெளிப்படுத்தியதாகிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உளவாளியின் தீரச்செயல் ஒளிவு மறைவாகவே இருக்க வேண்டும் என்னும் ஒற்றாடல் பாடல்.

பொழிப்பு

பலரறிய உளவாளிக்குச் சிறப்புச் செய்யாதீர்; செய்தால் மறைச்செய்தியை வெளிப்படுத்தியதாகிவிடும்.