இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0589



ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:589)

பொழிப்பு (மு வரதராசன்): ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

மணக்குடவர் உரை: ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால்.
இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.

பரிமேலழகர் உரை: ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.)

வ சுப மாணிக்கம் உரை: உளவாளிகளைத் தம்முள் தெரியாவாறு ஆள்க; மூவர்க்கும் ஒத்த செய்தி நம்பத்தகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப்படும்.

பதவுரை:
ஒற்றுஒற்று-உளவாளிக்கு உளவாளி; உணராமை-அறியாமல்; ஆள்க-செலுத்துக; உடன்-ஒருங்கே; மூவர்-மூன்று பேர்; சொல்-மொழி; தொக்க-தொகுத்துப்பார்க்க; தேறப்படும்-திண்ணமாகத் தெளியப்படும்.


ஒற்றுஒற்று உணராமை ஆள்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக;
பரிப்பெருமாள்: ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக;
பரிதி: ஒற்றரும் ஒற்றரும் அறியாமல் வேறே போகவிட்டு;
காலிங்கர்: இவ்வாறும் இன்றி இன்னமும் ஒற்றரைக் கொண்டு யாவர்மாட்டும் உள்ள நன்மை தீமைகள் ஒற்றுவிக்குமிடத்து, ஒருவரை ஒருவர் அறியாமல் ஆண்டு;
பரிமேலழகர்: ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க;

'ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓர் ஒற்றனை அவனறியாமல் வேறோர் ஒற்றனை விடுத்து உளவுச் செய்திகளை அறிக', '(உளவுகளை அறிந்துவர அனுப்பப்படுகிற) ஒரு ஒற்றன் இன்னொரு ஒற்றனை அறியாதபடி அரசன் பார்த்துக் கொள்ள வேண்டும்', 'ஒற்றரைக் கையாளும் இடத்து ஒருவனை மற்றொருவன் அறியாதவண்ணம் விடுத்துச் செய்தியை அறீய வேண்டும்', 'ஓர் ஒற்றனை இன்னோர் ஒற்றன் அறிய முடியாதவாறு பயன்படுத்துதல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஓர் ஒற்றனை இன்னோர் ஒற்றன் அறிய முடியாதவாறு விடுத்து உளவுச் செய்திகளை அறிக என்பது இப்பகுதியின் பொருள்.

உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.
பரிப்பெருமாள்: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இருவர் சொன்னாலும் தெளியப்படாது; மூவர் சொன்னது தெளிவு என்றது. இவையிரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.
பரிதி: அவர்கள் சொன்ன சேதியை மூன்றுபேர் ஒரு மொழியாகச் சொன்னால் ஒப்புக்கொள்க என்றவாறு.
காலிங்கர்: அவ்வாறு பலரையும் கொண்டு ஒற்றுவித்த இடத்துத் தனித்தனி தனக்கு உரைத்த மூவர் சொல்லும் ஒக்குமாயின், மற்று அவர் அரசன் தெளிய அடுக்கும். காலிங்கர் குறிப்புரை: எனவே, மூவர் சொல்லிற் குறைபடின் தெளிய அடாது என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.

'அவர்கள் சொன்ன சேதியை மூன்றுபேர் ஒரு மொழியாகச் சொன்னால் ஒப்புக்கொள்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒற்றர்கள் மூவரைத் தனித்தனியே விடுத்து அம்மூவர் கூறும் செய்திகள் ஒத்திருந்தால் மெய்யென்று தெளிக', 'அப்படி ஒரே காரியத்தை அறிந்து வர மூன்று ஒற்றர்களைத் தனித்தனியே அனுப்பி, அம்மூவரும் அறிந்து வந்து தனித்தனியே சொல்லுவதைச் சேர்த்து ஒன்றொடொன்றை ஒத்துப் பார்த்துப் பிறகு அரசன் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்', 'வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒத்திருந்தால், அது மெய்யென்று தெளியலாம்', 'அங்ஙனம் பயன்படுத்தப்பட்ட மூவரும் சொல்லக்கேட்டு, மூவர் கூற்றும் ஒத்தனவாய் இருப்பின் உண்மை என்று தெளியப்படுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அங்ஙனம் வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தால், அது நம்புதற்குரியது எனத் தெளியலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒற்றுஒற்று உணராமை விடுத்து உளவுச் செய்திகளை அறிக; அங்ஙனம் வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தால், அது நம்புதற்குரியது எனத் தெளியலாம் என்பது பாடலின் பொருள்.
'ஒற்றுஒற்று உணராமை' குறிப்பது என்ன?

ஒருவர்க்கொருவர் தெரியாமல் மூன்றுபேரை ஒரு பொருள் பற்றி உளவறிய அனுப்புக. தனித்தனியாகச் சென்றவர்கள் தரும் உளவு உரைகள் ஒன்றாயிருந்தால் அச்செய்தி தெளிவாம்.
ஒரே பொருளைப் பற்றி ஒருவரை ஒருவர் அறியாதபடி, .உளவறிந்து வர மூன்று ஒற்றர்களைத் தனித்தனியே ஏவி ஆட்சியாளர் உண்மையான நிலையை அறிய வேண்டும். எத்தகைய செய்தி ஆனாலும் மூன்று ஒற்றர்கள் கூறுவன ஒத்திருந்தால் உண்மையெனக் கொள்ளலாம். மூவர் சொல்லிற் குறைகாணப்படின் அச்செய்தியைத் தெளியலாகாது. மூவர் உரைகள் முற்றிலும் ஒன்றுபோல் இருக்க முடியாது. பிழை வீதம் ஒத்துக் கொள்வதாயும் இருந்து பிழை பொறுத்தல் வீதத்தைத் தாண்டாமலும் இருந்தால் அவ்வுரை ஏற்கப்படும். தொக்க என்பதற்குத் 'தொக்கன' என்றும், 'தொகுத்து' ஆராய்ந்த 'முடிவு' என்றும் 'தொக்க இடத்து என்பதற்கு 'ஒற்றி வந்த மூவர் சொல் ஒத்திருக்குமாயின்' என்றும் பொருள் கூறினர். உடன்மூவர் சொல்தொக்க என்றதற்கு நாமக்கல் இராமலிங்கம் 'ஒற்றிய மூவர் சொல்லையும் சேர்த்து ஒக்கயாராய்ந்த பிறகு' என உரை கூறினார். இத்தொடர்க்கு மூவர் உரையையும் தொகுத்து ஒன்றுடன் ஒன்று ஒத்ததாயின் எனப் பொருள் கொள்ளலாம்.
மூவர்க்கும் ஒத்த செய்தி நம்பத்தகும் என்பது கருத்து.

ஒரு பொருளை அறிய மூன்று ஒற்றர்களை அனுப்பி அவர் சொல்லுமொழிகள் ஒத்திருப்பதைக் கொண்டு இதுதான் உண்மை என்று உணர்க எனச் சொல்லப்படுகிறது. 'பலரை ஒருகாலத்திலேயே ஏவியோ, ஒருவர் பின் ஒருவராக ஏவியோ, அறிந்து வரச்செய்து மூவர்சொல் தொக்கதாயின் கொள்க என்ற ஆளுமுறையே வள்ளுவரால் உணர்த்தப் பெறுதலைத் தெளியலாம்' எனக் கருத்துரைப்பார் தண்டபாணி தேசிகர்.

'ஒற்றுஒற்று உணராமை' குறிப்பது என்ன?

'ஒற்றுஒற்று உணராமை' என்ற தொடர்க்கு ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக, ஒற்றரும் ஒற்றரும் அறியாமல் வேறே போகவிட்டு, ஒருவரை ஒருவர் அறியாமல், ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல், ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, அவ் வொற்றர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் அறியாதவாறு, ஓர் ஒற்றரைப் பிறிதோர் ஒற்றர் அறியாமல், ஒருவனை யொருவன் உய்த்துணர்வாலும் அறியாதவாறு, உளவாளிகளைத் தம்முள் தெரியாவாறு, ஓர் ஒற்றனை அவனறியாமல் வேறோர் ஒற்றனை விடுத்து, ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றன் அறியாதபடி, ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியமுடியாதவாறு, ஒருவனை மற்றொருவன் அறியாதவண்ணம் விடுத்து, ஓர் ஒற்றனை இன்னோர் ஒற்றன் அறிய முடியாதவாறு, ஓர் ஒற்றன் இருப்பது மற்றொரு ஒற்றனுக்குத் தெரியக் கூடாது என உரையாளர்கள் பொருள் கூறினர்.

'ஒற்றுஒற்று உணராமை' என்றதற்குத் தேவநேயப்பாவாணர் தரும் 'ஒற்றரையாளுமிடத்து ஒருவனை யொருவன் உய்த்துணர்வாலும் அறியாதவாறு தனித்தனி ஆள்க' என்ற உரையில் 'உய்த்துணர்வாலும் அறியாதவாறு ஆள்க' என்ற குறிப்பு நோக்கத்தக்கது.
'ஒற்றுஒற்று உணராமை' என்றதற்கு ஒர் ஒற்றர் மற்றோர் ஒற்றரை அறியாத வண்ணம் விடுக்க என்பது பொருள். அப்பொழுதுதான் உளவுத்துறை கட்டுப்பாடுடன் செயல்படும். இல்லாவிட்டால் ஒற்றர்கள் கூட்டு சேர்ந்து அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட உந்துதல் உண்டாகும். உளவாளிகளின் செயல்பாடுகளில் குறைபாடுகளும் இல்லாமலிருக்கும். அந்த நிலையில், கூட்டுச் சதிகளும் நிகழா, ஒற்றர் தம் தொழிலிலும் முனைப்புடன் இருப்பர். மேலும் ஒற்றரே ஆயினும் ஒருவருக்கு ஒருவர் அறிய நேரின் ஒருவர் அறிந்தவற்றையே ஒற்றறிந்த செய்தியாகத் தந்து விடுவதற்கான வாய்ப்பும் உண்டு. உண்மையில்லாததை மூன்றுபேர் ஒன்று போல் சொல்லுதல் இயலாது என்பதாலும் அவர்களைத் தனித்தனியே ஒருவர்க்கொருவர் அறியாதவாறு ஆள வேண்டியதாகிறது.

ஓர் ஒற்றனை இன்னோர் ஒற்றன் அறிய முடியாதவாறு விடுத்து உளவுச் செய்திகளை அறிக; அங்ஙனம் வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தால், அது நம்புதற்குரியது எனத் தெளியலாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒரு பொருளை அறிய ஒன்றுக்கு மூன்றாக உளவு விடுக்க எனக்கூறும் ஒற்றாடல் பாடல்.

பொழிப்பு

ஒற்றர் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரியாவாறு ஆள்க; வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒத்திருந்தால், அது நம்புதற்குரியது எனத் தெளியலாம்.