இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0586துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:586)

பொழிப்பு (மு வரதராசன்): துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.

மணக்குடவர் உரை: தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: துறவிகளது கோலந் தாங்கிப் புகுதற்கு அரிய இடங்களைக் கடந்து உட்புகுந்து எல்லாம் ஆராய்பவனாய், யார் எவ்வளவு நயப்படுத்தினாலுந் துன்பப்படுத்தினும் அதனாற் சோர்வடைந்து தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று.

பதவுரை:
துறந்தார்-பற்றினை விட்டவர்; படிவத்தர்-வேடர், விரத ஒழுக்கமுடையவர்; ஆகி-ஆய்; இறந்து-கடந்து; ஆராய்ந்து-பொருந்த நாடியறிந்து; என்-யாது; செயினும்-செய்தாலும்; சோர்வு-தளர்வு; இலது-இல்லாதது; ஒற்று-உளவு.


துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய் அங்குள்ள செய்தியை ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய் அங்குள்ள செய்தியை ஆராய்ந்த இடத்து; .
பரிதி: தவஞ்செய்வார் வேடத்தராகி மிக ஆராய்ந்து;
காலிங்கர்: துறந்தோர் வேடம் முதலாகப் பல வேடங்களினாலும் ஒற்று ஆராயும் இடத்து;
பரிமேலழகர்: முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து;
பரிமேலழகர் குறிப்புரை: விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.

'தவஞ்செய்வார் வேடத்தராகி மிக ஆராய்ந்து' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் துறந்தாராகவும் விரதஒழுக்கினராகவும் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து என்று உரை கண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவு வேடங்கொண்டு எவ்விடமும் புகுந்து', 'துறவியின் கோலம் பூண்டு நாட்டெல்லையைக் கடந்து சென்று, ஆராய்ந்து உளவறிந்து', '(தாம் ஆராய்ந்தறிய வந்த இரகசியங்களில்) பற்றற்றவர்களைப் போலத் தோற்றமளித்து (விஷயங்களைத்) தீர விசாரித்து அறிந்து கொண்டு', 'முற்றும் துறந்த முனிவர் வேடத்தினராகிப் பல இடங்களிலும் சென்று ஆராய்ந்து அறிந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து என்பது இப்பகுதியின் பொருள்.

என்செயினும் சோர்விலது ஒற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு. [சோரவிடாதவன் -மறந்து பிறர் அறிய சொல்லாதவன்]
பரிப்பெருமாள்: அகப்படாமல் துன்பமாயினும் இன்பமாயினும் செய்யினும், தன் உள்ளத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாம் என்றவாறு.
பரிதி: பொறுக்க அல்லாத துன்பங்களைப் பிறர் செய்யினும் வாய் சோராதது ஒற்று என்றவாறு.
காலிங்கர்: பிறர் தன்னையும் பற்றி ஆராய்ந்து கட்டுதல், கடுத்தல் எற்றுதல் முதலிய இடரால் இடர்ப்படுத்திக் கடாவினும் தன் தன்மையில் சிறுதும் சோர்வு படாதது யாது? மற்று அதுவே அரசர்க்கு ஒற்றாவது என்றவாறு. [கட்டுதல், கடுத்தல், எற்றுதல் -செயல்படாது தடுத்தல், ஒறுத்தல், களியேற்றல்]
பரிமேலழகர்: ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி.

'அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பொறுக்க அல்லாத துன்பங்களைப் பிறர் செய்யினும் வாய் சோராதது ஒற்று' என்று பொருள் உரைத்தார். காலிங்கர் 'பிறர் தன்னைக் கட்டுதல், கடுத்தல் எற்றுதல் எறிதல் முதலிய இடரால் இடர்ப்படுத்திக் கடாவினும் தன் தன்மையில் சிறுதும் சோர்வு படாமல் இருப்பது ஒற்றாவது' என உரை வரைந்தார். பரிமேலழகர் 'எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்ன நேரினும் வாய்விடாதவனே ஒற்றன்', 'அங்குள்ளார் துன்பமோ இன்பமோ எது செய்து கேட்டாலும் செய்தியை வெளிப்படுத்தாதவனே ஒற்றன் ஆவான்', 'யாராவது (சந்தேகித்து) என்ன பயமுறுத்திக் கேட்டாலும் ஏமாந்து போய்த் தம் இரகசிய வேலையை வெளியிட்டுவிடாமல் இருக்கக் கூடியவர்களே ஒற்றர்கள்', 'பிறர் என்ன துன்பம் செய்தாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

(ஐயுற்றோர்) என்ன செய்தாலும் தளராததுவே ஒற்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து (ஐயுற்றோர்) என்செயினும் தளராததுவே ஒற்று என்பது பாடலின் பொருள்.
'என்செயினும்' என்ற தொடர் கூறுவது என்ன?

துறவோர் எங்கும் வரவேற்கப்படும் உயர்ந்த நிலையினராக இருப்பவர்கள். அவர்களைப் பொதுவாக யாரும் ஐயுறுவதில்லை ஆதலால், அவர்களால் புகுதற்கரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து காண முடியும். துறவு வேடம் பூண்டு எல்லை கடந்து பிடிபட்டு கொடும்வதைக்கு உட்பட்டாலும் மனம் தளராது தன்னை வெளிப்படுத்தாமல் இருப்பது ஒற்று.
ஒற்றர் துறவிகள் வேடம் கொண்டு ஐயத்திற்கு இடந்தராது மற்றவர்கள் செல்லமுடியாத இடங்களுக்கும் சென்று உளவுச் செய்தி சேகரிக்க முடிந்தது. சாணக்கியன் தன் சீடர்களைச் சமணத் துறவியாக அனுப்பி உளவறிந்தானாம்.

'துறந்தார் படிவத்தர் ஆகி' என்றதற்கு மணக்குடவர் முதலியவர்கள் தவஞ்செய்வார் வேடத்தராகி எனப் பொருள் கொள்ள பரிமேலழகர் முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் என இரண்டாகப் பிரித்துப் பொருள் கூறினார். 'படிவத்தர்' என்ற புதிய சொல்வடிவத்திற்கு 'கோலத்தை உடையவர்கள்' என்பது பொருள். மணக்குடவர் கூறியவாறு துறந்தாரது படிவத்தர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாகும். 'இறந்தாராய்ந்து' என்ற தொடர்க்கு புகை நுழையாத இடத்தும் புகுந்தாய்ந்து என்றவாறு பொருள் கூறினர். இறந்து என்ற சொல்லுக்குக் கடந்து என்பது பொருள். இச்சொல்லுக்கு உள் புகுதற்குரிய இடங்களெல்லாம் உள்புக்கு என உரைப்பார் பரிமேலழகர். உள்புகுதற்கு அரிய இடங்கள் என்றது அந்தப்புரம், படைக் கருவிகள் வைக்குமிடம், ஆய்விடம் முதலாயினவற்றைக் குறிக்கும். மற்றவர்கள் நுழையமுடியாத இவ்விடங்களுக்குத் துறவிகள் எளிதில் புகுந்தனர் என்பது கருத்து. மணக்குடவர் உரை 'நாட்டெல்லையைக் கடந்துபோய்' என்று வேறுநாட்டில் உளவு பார்ப்பதைச் சொல்வதாக உள்ளது. இங்கும் மணக்குடவர் உரையே பொருத்தம்.
சிலவேளைகளில் ஒற்றர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொடும் வதைகளுக்கு ஆளாவதும் உண்டு. அவர்களைப் பிடித்தவர்களுக்கு ஒற்றரை யார் அனுப்பியது வந்தது எந்த நோக்கத்திற்காக என்பன தெரியவேண்டும். அதற்காக அவர்களைத் துன்புறுத்தி உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். ஒற்றுவிப்பவர் என்ன செய்தாலும்சரி தளர்வடையாமல் தான் யார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்கிறது இப்பாடல்.

இக்குறட்கு முந்தைய பாடலின் (குறள் 585) கருத்துப் போலவே மற்ற உரையாசிரியர்கள் உரை கூறியுள்ளார்கள் என்று கருதியதால், நாமக்கல் இராமலிங்கம் 'துறந்தார் படிவத்தராகி' என்பதற்குப் 'பற்றற்றார் போல அதாவது அரசகாரியங்களிற் றொடர்பில்லாதாரைப் போல' என உரை வரைந்தார். அதுபோலவே 'இறந்தாராய்ந்து' என்பதற்கு ''நுழைய முடியாத இடங்களில் எல்லாம் புகுந்து ஆய்ந்து' என்பதோ அல்லது 'எல்லை கடந்து சென்று' என்பதோ பொருளல்ல, 'இறந்து ஆராய்ந்து' எனக்கூட்டி முடிய அல்லது தீர ஆராய்ந்து என்பதே பொருள் என்ற உரை தந்தார். மேலும் 'ஆராய்ந்து உளவறிய வந்த விஷயத்தைச் சம்பந்தப்படாதவனைப் போலப் பாவனை செய்து கொண்டு, தான் அறியவந்த விஷயத்தின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து கொள்ள வேண்டும்' எனவும் விளக்கத்தில் கூறினர்.
இவரது உரையில் 'தாம் ஆராய வந்த பொருள்களிற் பற்றற்றவர் போலிருந்து, தீர ஆய்ந்து' என்ற பகுதி குறிக்கத்தக்கதாக உள்ளது.

துறவுவேடத்தோடு எல்லை கடந்து இடர் நிறைந்த சூழலில் வேவு பார்ப்பது உளவு என்பது கருத்து.

'என்செயினும்' என்ற தொடர் கூறுவது என்ன?

'என்செயினும்' என்றதற்குத் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், பொறுக்க அல்லாத துன்பங்களைப் பிறர் செய்யினும், கட்டுதல், கடுத்தல் எற்றுதல் எறிதல் முதலிய இடரால் இடர்ப்படுத்திக் கடாவினும், எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும், என்ன செய்தாலும், எவ்வெவ்வாறு துன்புறுத்திக் கேட்டாலும், நெறியிழந்து துன்பம் விளைவிப்பினும், என்ன நேரினும், துன்பமோ இன்பமோ எது செய்து கேட்டாலும், என்ன பயமுறுத்திக் கேட்டாலும், எத்தகு இன்பு துன்பு உண்டாயினும், எவ்வளவு நயப்படுத்தினாலுந் துன்பப்படுத்தினும், என்ன துன்பம் செய்தாலும், எவ்வளவு துன்பஞ் செய்தாலும், நுண்சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும், எத்தகைய துன்பம் செய்தாலும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அகப்பட்டவனை ஒற்றுவிப்பவர் எவ்வளவு துன்புறுத்தினாலும் மறையை வெளியிடாமல் தாக்குப் பிடிப்பவன் ஒற்றன் என்கிறது இக்குறள். கொடும்வதைகளாகக் கைக்குக் கிட்டியிடுதல், அண்ணாந்தாளிடுதல், தலைகீழாகக் கட்டி மூக்கில் மிளகு நீரை விடுதல், கொப்பூழில் பிள்ளைப் பூச்சி வைத்துக் கட்டுதல், நகக் கண்ணில் ஊசி ஏற்றுதல் முதலியனவற்றை உரையாளர்கள் காட்டியுள்ளனர், மணக்குடவர் 'என்செயினும்' என்பதற்கு 'இன்பஞ் செயினும், துன்பஞ்செயினும்' என்று உரை தந்தார். இன்பஞ் செயினும் என்பதில் பெரும் பொருள் தருதலும் அடங்கும். காலிங்கர் 'கடுத்தல் கட்டுதல் ஏற்றுதல் முதலிய இடரால் கடாவினும்' என்றார். மாற்றார் கொன்றன்ன இன்னா செய்யினும், ஒற்றுக்காகச் சென்றவன் உறுதி குலையாமல் இருப்பான்; அவன் உயிரே போனாலும் உண்மையைக் வெளியிட மாட்டான் என்பது பலரது கருத்து. ‘என் செயினும்’ என்பதற்குத் துன்பம் ஒன்றே கொள்ளாது துன்பம் இன்பம் என்ற இரண்டினையும் கொண்டு பொருள் கொள்வது சிறக்கும்.

'என்செயினும்' என்ற தொடர்க்கு என்ன வகையான இன்ப துன்பம் செய்து கேட்டாலும் என்பது பொருள்.

துறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து (ஐயுற்றோர்) என்ன செய்தாலும் தளராததுவே ஒற்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உயிரைப் பணயமாக வைத்து உளவுச் செய்தி சேகரிப்பர் ஒற்றர் என்பதை உணர்த்தும் ஒற்றாடல் பாடல்.

பொழிப்பு

துறவு வேடம் பூண்டு எல்லை கடந்து ஆராயுமிடத்து என்ன நேரிட்டாலும் வாய்விடாதவனே ஒற்றன்.