வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று
(அதிகாரம்:ஒற்றாடல்
குறள் எண்:584)
பொழிப்பு (மு வரதராசன்): தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
|
மணக்குடவர் உரை:
தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.
பரிமேலழகர் உரை:
தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான்.
('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.)
வ சுப மாணிக்கம் உரை:
வினையார் சுற்றத்தார் பகைவர் என்ற எத்திறத்தாரையும் ஆராய்வது உளவு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
பதவுரை:
வினை-செயல்; செய்வார்-செய்பவர்கள்; தம்-தமது; சுற்றம்-சுற்றம்; வேண்டாதார்-விரும்பாதார்; என்று- ஆங்கு-(அசைநிலை); அனைவரையும்-அவ்வெல்லாரையும்; ஆராய்வது-பொருந்த நாடுவது; ஒற்று-உளவு.
|
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய;
பரிப்பெருமாள்: தனக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதாகிய;
பரிதி: இராசகாரியஞ் செய்வாரையும் அரசன் சுற்றத்தாரையும், பகைவரையும், இங்குச் சொன்ன மூவரையும்;
பரிமேலழகர்: தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட;
தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தொழில் புரியும் அலுவலர், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட', '(ஒரு அரசன் தன்னுடைய நாட்டில் அங்கங்கே) தன்னுடைய பிரதிநிதிகளாக அரசாங்க காரியங்களைச் செய்கிறவர்கள் (சரியாக நடந்து கொள்ளுகிறார்களா என்பதையும்) தனக்கு நட்பாக உள்ளவர்கள் (நட்பு கெடாமல் இருக்கிறார்களா என்பதையும்) தன்னை விரும்பாதவர்களாகப் பகைமை கொண்டு யாராவது தீங்கு செய்ய முயல்கின்றார்களா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டிய முறையில்', 'அரசனது காரியஞ் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட', 'தம்மிடம் பணி புரிவார், தம்முடைய சுற்றம், பகைவர் என்று சொல்லப்படுகின்ற', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அரசு வினைஞர், ஆட்சியாளரது சுற்றம், ஆகாதவர் என்றாகிய என்பது இப்பகுதியின் பொருள்.
அனைவரையும் ஆராய்வது ஒற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன்.
மணக்குடவர் குறிப்புரை: இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.
பரிப்பெருமாள்: அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றன்.
பரிப்பெருமாள் குறிப்புரை :மேல் எல்லார்க்கும் நிகழ்பவை ஒற்ற வேண்டும் என்றார். இது தன் காரியத்திற் செய்வார் செய்கின்ற அளவும் தனக்கு நட்பும் பகையுமாய் இருப்பாரையும் ஒற்ற வேண்டும் என்றது. இவையிரண்டும் ஒற்றவேண்டும் இடம் கூறின.
பரிதி: மற்றுள்ளோரையும் கசடற ஆராயவல்லதே ஒற்று என்றவாறு.
பரிமேலழகர்: அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே ஒற்றனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.
அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன்/ ஆராயவல்லதே ஒற்று என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாரையும் சொல்லாலும் செயலாலும் ஆராய்பவனே ஒற்றன் ஆவான்', 'எல்லாரைப் பற்றியும் வேவுகாரர்கள் மூலமாகத் தெரிந்து கொள்வதுதான் ஒற்று கேட்டறிதல்', 'அனைவரையும் ஆராய்பவன் ஒற்றன் ஆவான்', 'அனைவரையும் மறைவாக ஆராய்கின்றதே ஒற்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எல்லாத்திறத்தாரையும் ஆராய்வது உளவு என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அரசு வினைஞர், ஆட்சியாளரது சுற்றம், ஆள்வோருக்கு ஆகாதவர் என்றாகிய எல்லாத்திறத்தாரையும் ஆராய்வது உளவு என்பது பாடலின் பொருள்.
ஏன் வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் விதக்கப்பட்டனர்?
|
அரசுப் பணியாளர்கள், அரசியல் சுற்றம், உறவு சுற்றம், ஆட்சியாளரை விரும்பாதவர் என அனைவரையும் ஆராய்வது ஒற்று ஆகும்.
வினைசெய்வார் என்பது அரசு வினைஞர் போன்றோரைக் குறிக்கும், அரசு விசையை இயக்குபவர்களாதலால் ஆட்சியைச் செலுத்துவதில் நேரடியாகப் பங்கு பெறுபவர்கள் இவர்கள்.
சுற்றம் என்றது ஆட்சியரைச் சுற்றமாகச் சூழ்ந்திருக்கின்றவர்களைச் சொல்வதாம். அரசின் கொள்கைகளை வகுப்பவர்களாகவும் அவற்றைச் செயல்படுத்துபவர்களுமான அரசியல் சுற்றத்தார் (அமைச்சர், படைத்தலைவர், காவலர் முதலாயினார்) மிகுந்த அதிகாரம் கொண்டவர்கள். உரிமைச் சுற்றமும் (உறவினர், நண்பர் போன்றோர்), சுற்றத்தில் அடங்கும். உரிமைச் சுற்றம் ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் செல்வாக்குடன் வலம் வருவர்.
வேண்டாதார் என்போர் ஏதாவது ஒரு காரணத்துக்காக ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டோர் அல்லது ஆட்சியாளர் மீது மனவெறுப்புக் கொண்டு ஒதுங்கி நிற்பவர் ஆவர். இவர்களும் பதவியில் இருந்து அதிகாரப் போதையில் மிதந்திருந்தவர்கள்.
இம்மூன்று வகையினரையும் நன்றாக ஆராய வேண்டும் என்கிறது பாடல். எல்லாருமே ஆராயப்படவேண்டிவர்கள்தாம். ஆனால் அவர்களுள்ளும் இக்குழுவினர் சிறப்பாக ஒற்றுவிக்கப்படவேண்டியவர்கள் என்று வள்ளுவர் கருதுகிறார். இவர்களிடமிருந்து ஓர் அரசுக்குப் போதுமான செய்திகள் கிடைக்கும். இவர்கள் உடன்பட்டோ எதிராகவோ பேசுவதாயிருந்தாலும், செயல்படுகிறவர்களாக இருந்தாலும் உளவுக்கான செய்திகளை நிறையப் பெறமுடியும். ஆட்சிக்கு ஊறு விளைக்கும் சொல், செயல்கள் நடைபெறுகின்றனவா என்பதை இவர்கள் நடவடிக்கைகளை மறைவாக உளவுபார்த்தால் தெரியவரும். மேலும் இவ்வினத்தார் அரசுக்கு உண்மையாக இருக்கிறார்களா என்பதையும் தொடர்ந்து ஆராயவேண்டும்.
தம் சுற்றம் என்பதிலுள்ள தம் என்பதைப் பிரித்து 'தம் வினை செய்வார், தஞ்சுற்றம், தம் வேண்டாதார்' என மூன்றிடத்தும் கூட்டி பொருள் காண்பர் மணக்குடவர், பரிப்பெருமாள், நாமக்கல் இராமலிங்கம் போன்றோர். இது பொருந்துவதே.
பழைய உரை ஒன்று 'மந்திரியர் சேனாவரையர், மணியஞ்செய்வார், கணக்கெழுதுவார், இத்தகைக் காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்டவரையும் மற்று மெல்லாரையும் அவரவர் செய்யும் காரியங்களையும் அவரவர் சொல்லும் சொற்களையும் ஆராய்ந் தறிதல் ஒற்று' என இக்குறளுக்கு விரித்து உரை தரும்.
|
ஏன் வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் விதக்கப்பட்டனர்?
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் ஒற்று அறிய வேண்டும் என்று முன்னர் (குறள் 582) கூறிய வள்ளுவர் இங்கு ஒரு சில இனத்தாரை விதந்து அவர்களை ஆராய வேண்டும் எனக் கூறுகிறார். ஏன்?
இங்கு சொல்லப்பட்ட மூன்று வகையினரும் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்கள். அல்லது தமது அரசியல் செல்வாக்கை மிகுந்து பயன்படுத்த வாய்ப்புள்ளவர்கள்.
அரசு வினைஞர்கள் பொருள் (கையூட்டுப்) பெற்று ஆட்சி நிர்வாகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருங்கேடு விளவிக்கக் கூடியவர்கள்.
அரசியல் சுற்றமும் உரிமைச்சுற்றமும் அதிகார மையத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அந்த உறவைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு விளைப்பர்.
முன்பு ஆட்சியில் பங்குபெற்று ஏதோ சில காரணங்களுக்காக மனவெறுப்புக் கொண்டு ஆள்வோரிடம் இருந்து விலகி நிற்கும் வேண்டாதார் என்போர் அரசுக்குத் தீமைசெய்யச் சமயம் பார்த்துக் காத்து இருப்பார்கள்.
அரசுக்குக் கேடு நேராமல் காக்கப்பட இம்மூன்று வகையினரும் உற்று நோக்கப் படவேண்டும். அவர்கள் எந்தநேரமும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். இக்குழுவினர் சிறப்பாக ஒற்றுவிக்கப்பட வேண்டியவர்கள் ஆதலால் அவர்களைத் தனித்துக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
|
அரசு வினைஞர், ஆட்சியாளரது சுற்றம், ஆள்வோருக்கு ஆகாதவர் என்றாகிய எல்லாத்திறத்தாரையும் ஆராய்வது உளவு என்பது இக்குறட்கருத்து.
ஒற்றாடலில் ஆட்சி அதிகாரத் தொடர்புடையார் அனைவரையும் ஆய்வது மிகத் தேவை.
அரசுவினைஞர், சுற்றம், விரும்பாதவர் என்ற எல்லாத்திறத்தாரையும் ஆராய்வது உளவு
|