இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:581)

பொழிப்பு (மு வரதராசன்): ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.

மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: வேவுகாரர்கள் மூலமாக அவ்வப்போது விஷயங்களை அறிவதும் சிறந்த அரசியல் நூல்களை ஆராய்ந்து கொள்வதும் ஆகிய இவை இரண்டும் அரசனுக்கு இரண்டு கண்கள் என்பதைத் தெளிவாக அறிய வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் மன்னவன் கண் தெற்றென்க.

பதவுரை:
ஒற்றும்-உளவாளியும்; உரை-புகழ்; சான்ற-நிரம்பிய; நூலும்-இலக்கியமும்; இவைஇரண்டும்-இப்பொருள்கள் இரண்டும்; தெற்றென்க-தெளிவுற என்க. மன்னவன்-வேந்தன்; கண்-விழி.


ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ('முறைசான்ற' பாடம்) ஒற்றினையும் முறையமைந்த நூலினையும்;
பரிப்பெருமாள்: ஒற்றினையும் உரையமைந்த நூலினையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: மறைந்தவை காணுங்கால் ஒற்றரானதால், நூலினானதல் காண வேண்டுமாதலின், அதற்காக இரண்டினையும் தெளிய அறிக. ஐயம் ஆகிய பொருள் உண்மை தோற்றாது என்று ஆயிற்று. ஈண்டு நூல் கூறியது எற்றுக்கு எனின் அரசனுக்குக் கல்வி இன்றிமையாதது என்றது. இஃது ஒற்று வேண்டும் என்றது.
பரிதி: மனுநீதி நூலும் ஒற்றும் காவலாகிய இரண்டும்...............;.
காலிங்கர்: ஒற்றரைக் கொண்டு ஒற்று ஆடலும் அரசியற்கு உரித்தாகிய உரைசான்ற கலைநூல்களும் என்னும் இவை இரண்டும்;
பரிமேலழகர்: ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல.

மணக்குடவர் 'முறைசான்ற' எனப் பாடம் கொண்டதால் 'ஒற்றினையும் முறையமைந்த நூலினையும்' என உரை கண்டார். பரிப்பெருமாள் 'ஒற்றினையும் உரையமைந்த நூலினையும்' என்றார். பரிதி (இவர் உரை முழுதும் கிடைக்கவில்லை) 'மனுநீதி நூலும் ஒற்றும் காவலாகிய இரண்டும்' என்றார். காலிங்கர் 'ஒற்று ஆடலும் அரசியற்கு உரித்தாகிய உரைசான்ற கலைநூல்களும் இரண்டும்' என உரை வரைந்தார். பரிமேலழகர்: 'ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்' என்று உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உளவும் புகழ்பெற்ற நீதிநூலும் இரண்டும்', 'ஒற்றும் புகழமைந்த அற நூலுமாகிய இவை இரண்டும்', 'ஒற்றனும், புகழ்மிக்க அரசியல்நூலும் ஆகிய இரண்டும்', 'ஒற்றர்களும் புகழ் அமைந்த அறநூலும் ஆய இவை இரண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உளவு, சிறந்த அரசியல்நூல் இவை இரண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

தெற்றென்க மன்னவன் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
மணக்குடவர் குறிப்புரை: அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தெளிய அறிக மன்னவன். இவை இரண்டும் கண்கள் ஆதலான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒற்று வேண்டும் என்றது.
காலிங்கர்: சாலத் தெளிவுற்று நிற்க மன்னவனிடத்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தெற்று என்பது தெளிவுற என்றது.
பரிமேலழகர்: அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.

'இவை இரண்டும் கண்கள் ஆதலான் தெளிய அறிக மன்னவன்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை செய்தனர். காலிங்கர் 'கண் என்பதற்கு ஏழாவது உருபாகக் கொண்டு மன்னவனிடத்து தெளிவுற்று நிற்க' என உரை கண்டார். பரிமேலழகர் 'அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன்னவனுக்குக் கண்கள் என்று தெளிக', 'அரசனிடத்துத் தெளிவுற்று நிற்க. (இவை இரண்டும் மன்னவனுக்குக் கண்கள் என்று தெளிக என்றும் பொருள் கூறுவர்', 'அரசன், தனக்கு இரண்டு கண்களென்று தெளியக்கடவன்', ' அரசன் தன் இரண்டு கண்கள் என்று தெளிதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆள்வோரிடத்துத் தெளிவுற நிற்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உளவு, சிறந்த அரசியல்நூல் இவை இரண்டும் ஆள்வோரிடத்துத் தெளிவுற நிற்க என்பது பாடலின் பொருள்.
'தெற்றென்க மன்னவன் கண்' என்ற பகுதியின் பொருள் என்ன?

உளவு தொகுப்பதும் அரசியல் நூல் கொண்டு அதைத் திறம்பட அலசி ஆராய்வதும் ஆட்சியாளரிடம் தெளிவுற அமையவேண்டும்.
இப்பாடலிலுள்ள கண் என்ற சொல்லுக்கு விழி என்னும் உறுப்புப்பொருளாகக் கொண்டும் 'இடத்து' என்ற பொருள் கொண்டும் இரு வகையாகப் பொருள் கூறப்பட்டது.
பிறர்பால் மறைவாக ஒருவரைச் செலுத்தி அங்கே நடந்தனவற்றை அறிந்து அரசிடம் சொல்பவர் ஒற்றர் ஆவார்; ஆட்சியாளர் நேரிலே காண முடியாததை ஒற்றர் போய்க்கண்டு அவரிடம் தெரிவிப்பதால் ஒற்றரை அரசின் புறக்கண் என்றும் அவர் கொண்டுவந்த செய்திகளை ஒற்று நூலறிவு கொண்டு ஆராய்வது அகக் கண் என்றும் இப்பாடல் கூறுகிறது; இந்த இரண்டனையும் நாட்டுத்தலைவன் தன் கண்ணாகப் போற்ற வேண்டும்; இவற்றை முறையே ஊனக்கண் என்றும் ஞானக்கண் என்றும் பரிமேலழகர் குறித்துள்ளார்; ஒற்றரால் அறிந்தவைகளைக் கொண்டு அவர்களால் அறியமுடியாதவைகளையும் ஊகித்தறியத் துணைசெய்வது நூலாதலின் நூலும் கண்ணாயிற்று; ஒற்றும் அது தொடர்பான நூலும் மன்னனது கண்கள் எனக் கருதப்படும். இது முதல் வகை விளக்கம்.
இரண்டாவது வகையான விளக்கத்தில், மன்னவன் கண் என்றவிடத்துக் கண் என்பதை ஏழாம் வேற்றுமை உருபாகக் கொண்டு மன்னவனிடத்து எனக் கொள்வர். 'இடத்து' எனக் கொண்டு அமைந்த காலிங்கர் உரை 'ஒற்றரைக் கொண்டு ஒற்று ஆடலும் அரசியற்கு உரித்தாகிய உரைசான்ற கலைநூல்களும் என்னும் இவை இரண்டும் சாலத் தெளிவுற்று நிற்க மன்னவனிடத்து' என்கிறது. இவ்வகையான உரை 'உளவுத் தரவுகளை இடைவிடாமல் தொடர்ந்து திரட்டி அவற்றைத் தனது நூலறிவு கொண்டு செய்தியாக மாற்றி அறியும் தெளிவு ஆள்வோரிடத்து இருக்க வேண்டும்' எனப் பொருள் தரும்.
இவற்றுள் 'இடத்து' என்ற பொருளில் அமைந்த உரை தெற்றென நிற்கிறது.

'உரைசான்ற நூல்' என்பதற்குப் புகழ் பெற்ற நூல் அல்லது பலரால் பேசப்படுகின்ற நூல் என்று பொருள். ஒவ்வொரு துறைக்கும் - அரசியல் நூல், இறைவழிபாட்டிற்கான நூல், போர் நூல், கணிதநூல், அளவைநூல், காமஇன்பநூல், மருத்துவ நூல்கள், 'ஓவியச் செந்நூல், 'நாட்டிய நன்னூல்' போன்ற கலை நூல்கள் போன்ற பலவகைத் துறைகளுக்கும் நூல்கள் இருந்தன. களவு செய்வார்க்குக்கூடக் கரவடநூல் என ஒன்று இருந்ததாம். இங்கு சொல்லப்பட்டது அரசியல் ஆட்சியின் சூழ்ச்சியைத் தெரிவிக்கும் ஒற்றுநூல்களையே எனத் தெளியலாம். உளவும், உளவுஇயல் நூல்தெளிவும் ஆட்சியரிடம் அமைதல் வேண்டும் எனச் சொல்கிறது பாடல்.
உரைசான்ற நூல் என்பதற்கு ஞானக்கூத்தன் '(உரைசான்ற) நூல் என்று வள்ளுவர் குறிப்பிட்டது சான்றோர் இலக்கியமெனக் கொள்ளாத சில படைப்புகளை. அவை புலவர் என சமூகம் அறியாதவரால் இயற்றப்பட்டு மன்னன் சபைக்கு வெளியே பாமர மக்களால் பெரிதும் விரும்பிக் கேட்கப்பட்டவை. இவற்றின் சாயை உடையவை தூது, உலா முதலியன. 17, 18 நூற்றாண்டுகளில் வர்ணிப்புகள் என்று அழைக்கப்பட்டன. கொலைச் சிந்து உட்பட்ட பல வகையான சிந்துகளும் இவற்றில் அடக்கம். செவ்வியல் போக்கை மறுத்துச் சுதந்திரமாகப் பாடப்படுபவை. இவற்றில் உள்ளூர்ச் செய்திகளே நிரம்பி இருக்கும். கொலை, கொள்ளை, பெரிய மனிதர்களின் ஒழுக்கக் கேடு முதலிய செய்திகள் காரசாரமாகக் கூறப்படும். தடாரி, டேப் முதலிய தோல் கருவிகளைத் தட்டிக்கொண்டு பாடப்படுபவை. நான் இவற்றைக் கேட்டிருக்கிறேன். சில சைவ மடங்களைப் பற்றிய வதந்திகளையும் கோயில் நிர்வாக அதிகாரிகளைப் பற்றிய ஊழல்களையும் இவை பாடின' எனப் புதிய விளக்கம் தருகிறார். இப்பாடல்கள் வழி அரசுக்குப் போதிய செய்திகள் கிடைக்கும் என்பது ஞானக்கூத்தனது கருத்து.

ஒற்றர் மூலம் பிறர்பால நடப்பதை அறிந்து, அரசியல் நூல்கள் வழி அதன் பொருள் உணர்ந்து அதற்குத்தக ஆகவேண்டியவற்றைச் செய்வதில் தெளிவாய் இருக்கவேண்டும் ஆட்சியாளன்.

'தெற்றென்க மன்னவன் கண்' என்ற பகுதியின் பொருள் என்ன?

'தெற்றென்க மன்னவன் கண்' என்றதற்குக் கண்கள் ஆதலான் தெளிய அறிக மன்னவன், சாலத் தெளிவுற்று நிற்க மன்னவனிடத்து, மன்னவனுக்கு கண்களாகத் தெளிக, அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக, அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும், அரசன் தன் இருகண்களெனத் தெளிவானாக, ஆட்சியாளனுக்குக் கண்கள் என்று தெளிதல் வேண்டும், மன்னவனுக்குக் கண்கள் என்று தெளிக, அரசனிடத்துத் தெளிவுற்று நிற்க, அரசனுக்கு (இரண்டு) கண்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னிரண்டு கண்களாகத் தெளிந்து கொள்ள வேண்டும், தனக்கு இரண்டு கண்களென்று தெளியக்கடவன், தன் இரண்டு கண்கள் என்று தெளிதல் வேண்டும், தன் இரு கண்களாகக் கருதித் தெளிவு காணவேண்டும், அரசன் தன் இரு கண்களாகத் தெளிக, இந்த இரண்டும் அரசனுக்குத் தெளிவாகக் காட்டும் கண்களாகும் என்றறிக என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

மன்னவன்கண் தெற்றென்க என்றால் மன்னவனிடத்தில் சாலத் தெளிவுற்றுநிற்க என்று பொருள்படும். மன்னவன் கண் தெற்றென்க எனப் பிரித்துக் கொண்டால் மன்னவன் தன் கண்களெனத் தெளிவாக அறிக என்று பொருள்படும். இவ்வாறு ஆட்சி செய்ய வழிகாட்டும் வள்ளுவரின் சொல்லாட்சி, நவில் தொறும் நூல் நயமாய் மாட்சியுடையதாய்த் திகழ்கிறது (தமிழண்ணல்).

ஆ பழனி 'திறமான ஒற்றர்களையும் பெருமை பொருந்திய ஒற்று நூலறிவையும் உடைய மன்னனுக்கு அவையே (ஒற்றரும் ஒற்றுநூலறிவும்) அழிவு வராமற் காக்கும் வேலி என்று சொல்லுக. தெற்று-வேலி. தெற்றுப்பிடித்தல்-வேலி அமைத்தல். (தெத்துப் பிடித்தல்) என வழக்கில் கூறுவதுண்டு. மன்னவன் கண்-மன்னவனுக்கு (உருபு மயக்கம்)' என தெற்று என்பதற்கு வேலி எனப் பொருள்கண்டு உரை கூறினார்.

'தெற்றென்க மன்னவன் கண்' என்பதற்கு ஆட்சியாளரிடத்து நன்கு தெளிவுற்றுநிற்க என்பது பொருள்.

உளவு, சிறந்த அரசியல்நூல் இவை இரண்டும் ஆள்வோரிடத்துத் தெளிவுற நிற்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒற்றாடலில் ஒற்றுத் தரவுகளுக்கும் அவற்றை விளக்கும் நூல்களுக்கும் சிறப்பிடம் உள.

பொழிப்பு

உளவு, புகழமைந்த அரசியல் நூல் இவை இரண்டும் ஆள்வோரிடத்துத் தெளிவுற்று நிற்க.