இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0570



கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:570)

பொழிப்பு: கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.

மணக்குடவர் உரை: கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை.

பரிமேலழகர் உரை: கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும், அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.
('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறைஅது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்தசெய்தலின் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கடும்ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்; நாட்டுக்குப் பாரம் அவ்வாட்சியே. பிறிதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.


கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்:
பதவுரை: கல்லார்-கற்காதவர்; பிணிக்கும்-கூட்டாநிற்கும்; கடுங்கோல்-கொடிய ஆட்சி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்;
பரிப்பெருமாள்: கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாரை அமைச்சராகக் கூட்டிக் கொள்ளும்;
காலிங்கர்: கல்லாதார் ஆகிய மூர்க்கரை அரசனானவன் தனது அன்பினால் பிணித்துக்கொள்ளும் நீதிக்கேடு யாது;
பரிமேலழகர்: கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்;

'அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும் கடுங்கோலன்'என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் 'மூர்க்கரை தனது அன்பினால் பிணித்துக்கொள்ளும் நீதிக்கேடு உடைய அரசன்' என்று காலிங்கரும் 'நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும் கடுங்கோலன்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடுங்கோல் ஆட்சி கல்லாத பேர்களைக் கவர்ந்திழுக்கும்', 'அரசு முறை அறியாத மூடர்களைக் கொண்டு நடத்தப்படும் துன்பமான அரசாட்சியைவிட', 'கொடுங்கோல் மன்னன் கல்லாத மூர்க்கரைத் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொள்ளுவான்', 'நல்லவற்றைக் கல்லாதவர்களைத் தம்பால் இழுக்கும் கொடிய ஆட்சியைப்போல', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கடுங்கோல் ஆட்சி அறிவில்லாதாரை ஈர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை:
பதவுரை: அதுவல்லது-அது அல்லாமல்; இல்லை-இல்லை; நிலக்கு-நிலவுலகிற்கு; பொறை-சுமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை.
பரிப்பெருமாள்: அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்று இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவில்லாதார் அமாத்தியார் ஆனால் அவரானே உலகம் அச்சம் உறும்; அதற்காகக் கடுங்கோல் அரசன் அவரைக் கூட்ட அவனை நிலம் பொறாது என்றது.
பரிதி: பூமிக்கு எட்டுமலையும் எழுகடலும் பாரமல்ல; கொடுங்கோல் மன்னவன் பாரம் என்றவாறு. [எட்டுமலை: இமயம், மந்தரம், கைலாயம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நிலம், கந்தமாதனம்; ஏழுகடல்: உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், கட்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நன்னீர்க்கடல் என்பன]
காலிங்கர்: மற்று அதுவல்லது இல்லை, இந்த நிலத்து வாழுகின்ற உயிர்கட்குக் கிலேசபாரம் பிறிது ஒன்றும் இல்லை.[கிலேசபாரம்-துன்பம் அல்லது கவலைச்சுமை]
காலிங்கர் குறிப்புரை: எனவே மற்று அது உயிர்கட்கு வெருவந்த செய்தலுள் ஒன்று என்றவாறு.
பரிமேலழகர்: அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறைஅது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்தசெய்தலின் குற்றம் கூறப்பட்டது.

'கொடுங்கோலன்/கொடுங்கோல் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அக்கடிய ஆட்சியல்லது நாட்டுக்குச் சுமையாவது வேறில்லை', 'பூமிக்குப் பெரிய பாரமான சுமை வேறில்லை', 'பூமிக்குப் பாரம் அவர்கள் கூட்டமேயொழிய வேறில்லை', 'பூமிக்குப் பாரமாவது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கடுங்கோல் ஆட்சி கல்லார்ப் பிணிக்கும்; பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை என்பது பாடலின் பொருள்.
'அது' என்பது எது?

கல்லார்ப் பிணிக்கும் என்ற தொடர் அறிவில்லாதவர்களை ஈர்க்கும் என்ற பொருள் தருவது.
கடுங்கோல் என்ற சொல்லுக்கு கடும்ஆட்சி என்பது பொருள்.
அதுவல்லது என்ற தொடர் அதைப்போல் அல்லது என்ற பொருள் தரும். அது என்பது கொடுங்கோல் ஆட்சி குறித்தது.
இல்லை நிலக்குப் பொறை என்றது நிலத்திற்கு சுமையானது வேறொன்றில்லை எனப்பொருள்படும்.

அறிவுஇல்லாதவர்கள் கடுமையான ஆட்சியைச் சுற்றிக் கொள்வர். கொடுங்கோலனும் மூடர்களும் இணைந்த கொடுங்கோல் ஆட்சி என்னும் இப்பெருஞ்சுமையைத் தாங்க இயலுமா அந்த ஆட்சியமைந்துள்ள பூமி?
குடிகளை அன்பு வழியாலும் அறவழியாலும் அறிவுவழியாலுந்தான் ஆளுதல் வேண்டும். இனத்தோடு எண்ணாமல் செருக்கோடு செயலாற்றுகின்ற கடுங்கோலன ஆட்சி முறையில் அவனுக்குத் துனையாக அறிவில்லாத கீழ்மக்களின் கூட்டமே சேரும்; அந்தக் கூட்டம் மூடரும் மூர்க்கருமே நிறைந்ததாக இருக்கும். அந்த அரசியலில் இவர்களே அதிகாரம் செலுத்தி நாட்டைப் பாழ்படுத்துவர். இதனால் எந்தவிதமான வளமும் நாடு எய்த முடியாது. குடிகள் அஞ்சத்தக்க வகையிலே ஆள்வர். கல்லாதாரைத் தனக்குத் தேர்ச்சித் துணையாகக் கூட்டி வெருவந்த செய்யும் வெங்கோலனது ஆட்சியல்லது நிலத்துக்கு மிகையான பாரம் பிறிதில்லை.

அறநெறி உள்ளத்தைக் கவராத அறிவிலிகள் கொடுங்கோலனுடைய கொடிய செயல்களைப் போற்றித் துணை நிற்பார்கள். கற்றோர் கடுங்கோலனொடு கூடமாட்டார். அதனால்தான் வள்ளுவர் 'கல்லார்ப் பிணிக்கும்' என்று பிணித்தல் என்னும் சொல்லால விளக்கியுள்ளார். ‘கல்லார்ப் பிணிக்கும்’ என்ற தொடரிலுள்ள பிணிக்கும் என்ற சொல் ஈர்க்கும் என்ற பொருளிலே ஆளப்பட்டது கேட்டார்ப் பிணிக்கும்...(சொல்வன்மை 643) என்ற சொல்லாட்சியில் உள்ளது போல. 'கல்லா என்பதற்குப் பழந்தமிழில் பண்படாத என்றும் பொருள். மக்களைத் துன்புறுத்தித் தொல்லைப்படுத்தும் அதிகாரிகளாகிய சுற்றத்தை நம்பி, அவர்களைத் தனக்கு வேண்டியவர்களாகக் கொண்டு ஆளும் ஆட்சியைக் 'கடுங்கோல்' ஆட்சி எனப் புது அடைமொழி தந்து கூறுகிறார்' என்பார் தமிழண்ணல்.
அக்கொடுங்கோல் ஆட்சி நிலக்குப் பொறை எனச் சொல்லப்பட்டது. நிலத்திற்கு என்பது நிலக்கு என்று செய்யுள் விகாரமாயிற்று. உலகத்திற்குச் சுமையாய் பயனன்றி இருப்பவன் என்ற பொருளில் நிலத்திற்குச் சுமை என்று சொல்லப்பட்டது. நிலத்திற்குப் பொறை என்று குறளில் சொல்லப்பட்ட மற்ற இடங்களாவன:
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை (கண்ணோட்டம் 572 பொருள்: கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை).
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில் செல்வம் 1003 பொருள்: சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்).
நிலத்திற்குச் சுமையாய்ப் பயனின்றி இருப்பன, கல்லாதாரைப் பிணிக்கும் கடுங்கோன்மையும், கண்ணோட்டம் இல்லாதவரும், புகழ் வேண்டாதவரும் ஆம்.

'அது' என்பது எது?

கடுங்கோலனாகிய அவ்வரசன், கொடுங்கோல் மன்னவன், கல்லாதார் ஆகிய மூர்க்கரைப் பிணித்துக்கொள்ளும் நீதிக்கேடு, கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டிய அது, பண்பற்றவர்களைச் சேர்த்துக்கொள்ளும் கொடுங்கோலாட்சி, கல்லாரைச் சுமத்தல், கடும்ஆட்சி, அக்கடிய ஆட்சி, கடுங்கோல் ஆட்சி, கொடுங்கோல் மன்னன், கல்லாத மூர்க்கர்-அவர்கள் கூட்டம், நல்லவற்றைக் கல்லாதவர்களைத் தம்பால் இழுக்கும் கொடிய ஆட்சி, கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத்துணைவராகச் சேர்த்துக்கொள்வது,

'அது' என்பது அஃறிணையைச் சுட்டும் சொல்லானாலும் சில உரையாசிரியர்கள் அது கொடுங்கோலனைக் குறிப்பது என்றனர். மற்றவர்கள் கொடுங்கோல் ஆட்சி, கல்லார்ப் பிணிப்பது, கடுங்கோலனும் கல்லாதாரும் சேர்ந்த கூட்டம் இவற்றை 'அது' சுட்டும் என்றனர்.
வ சுப மாணிக்கம் உரை 'கடும்ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்; நாட்டுக்குப் பாரம் அவ்வாட்சியே. பிறிதில்லை' என்று கடுங்கோலே நிலக்குப் பொறை என்கிறது. இது சிறந்த விளக்கம்.

கடும்ஆட்சி அதாவது கொடுங்கோன்மையே அது என்பது.

கடுங்கோல் ஆட்சி அறிவில்லாதாரை ஈர்க்கும்; பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கடுங்கோல் ஆட்சியில் கயவர்கள் கை மேலோங்கி இருக்கும் என்னும் வெருவந்த செய்யாமை பாடல்.

பொழிப்பு

கொடுங்கோல் ஆட்சித்தலைவனை அறிவற்றவர்கள் விரும்பிச் சூழ்வர். அக்கடும் ஆட்சியல்லது அப்பூமிக்குச் சுமையாவது வேறில்லை