இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0568



இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:568)

பொழிப்பு: அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

மணக்குடவர் உரை: பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடியசொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்.
ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின் அவன்செல்வம் குறையுமென்றாவறு. இனம்- மந்திரி, புரோகிதர்.

பரிமேலழகர் உரை: இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் - காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன், சினத்து ஆற்றிச் சீறின் - அப்பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின், திருச்சிறுகும் - அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
(அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர், நீங்கவே,அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.)

இரா இளங்குமரனார் உரை: தன் அரசியல் சுற்றத்தோடு பொறுமையாக ஒன்றை ஆராய்ந்து பாராத ஆட்சியாளன், தன் சினத்தின் வழியே வந்த சீற்றத்தொடு செயலாற்றினால் அவன் ஆக்கம் குன்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் திரு சிறுகும்.


இனத்துஆற்றி எண்ணாத வேந்தன்:
பதவுரை: இனத்து-இனத்தின் மேல்; ஆற்றி-வைத்து; எண்ணாத-நினைத்து ஆராயாத; வேந்தன்-மன்னவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன்; [அமைந்து-மனம் பொருந்தி]
மணக்குடவர் குறிப்புரை: இனம்- மந்திரி, புரோகிதர்.
பரிப்பெருமாள்: பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனம் ஆயினாரோடு அமைந்து ஆராயாத அரசன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இனம் என்றது மந்திரி, புரோகிதரை.
பரிதி: தன்னைச் சேர்ந்த துன்மந்திரிகளையும் மற்றுமுள்ள பேரையும் வாழவைத்துக் குடிகளை மிடைபண்ணும் அரசன்; [மிடைபண்ணும் - துன்புறுத்தும்]
காலிங்கர்: வேற்றரசரோடு வினை செய்யும் இடத்தும் அத்தனையும் முன்கோலித் தன்னோடு எண்ணுதற்கு உரிய இனத்தோடு எண்ணிச் செலுத்தாத மன்னனானவன்; [முன்கோலி-முன்னாடி]
பரிமேலழகர்: காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்;

'பிறர் குற்றத்தைத் தனக்கு இனம் ஆயினாரோடு ஆராயாத அரசன்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தன்னுடைய அமைச்சர்களையும் மற்றவர்களையும் பேணி, குடிகளைத் துன்புறுத்தும் அரசன்' என்று விளக்கினார். காலிங்கர் 'போர் செய்வதற்கு முன் உரிய இனதோடு எண்ணாத மன்னன்' என்றார். பரிமேலழகர் பொதுமையில் 'காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்' என உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் அமைச்சரைக் கலந்து செய்யாது', 'அமைச்சர் முதலிய தன் இனமாயினாரோடு சேர்ந்து ஆராயாத அரசன்', '(குற்றத்தின் இனம், குற்றம் செய்தவருடைய இனம் ஆகிய)இனத்தின் அளவாகஆராயாமல், ஒரு வேந்தன்', 'அரசன் தன்னைச் சார்ந்தவர்களாகிய அமைச்சர் முதலியோர்களிட்ம் தன் காரியங்களைச் செப்பிஅவரோடு கலந்து அவற்றை ஆராயாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரசியல் சுற்றத்தோடு கலந்து செய்யாத ஆட்சித்தலைவன் என்பது இப்பகுதியின் பொருள்.

சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு:
பதவுரை: சினத்து-வெகுளியாகிய குற்றத்தின் கண்; ஆற்றி-செலுத்தி; சீறின்-சினந்தால்; சிறுகும்-சுருங்கும்; திரு-செல்வம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடியசொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின் அவன்செல்வம் குறையுமென்றாவறு. இனம்- மந்திரி, புரோகிதர்.
பரிப்பெருமாள்: சினத்தின் நெறியானே சீறுவானாயின் செல்வம் குறைவுபடும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வம் குறைபடும் என்றது.
பரிதி: சினமேற் கொண்டால் அச்செல்வமும் சிறுகும் என்றவாறு.
காலிங்கர்: சினத்து வழிபற்றிக் கன்றி எழுவனேல் சிறுகும் செல்வம். [கனறி - சினந்து]
காலிங்கர் குறிப்புரை: எனவே, அரசன் உரிமை அழிவன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின், அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும். [அப்பிழைப்பால் - அத்தவற்றான்; தப்பிய வழி- தவறியபோது]
பரிமேலழகர் குறிப்புரை: அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர், நீங்கவே,அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன. [பகுதி- அரச காரியம் பார்ப்பவர்களின் கூட்டம்]

'சினத்தின் நெறியானே சீறுவானாயின் செல்வம் குறைவுபடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'ஆட்சித்தலைவன் தனது தவற்றிற்கு அமைச்சர் மற்றும் அரச காரியம் பார்ப்போரிடம் சீறவானாயின்' என ஒரு விளக்கமும் தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சினங்கொண்டு செய்யின் செல்வம் சுருங்கும்', 'வெகுளி வயப்பட்டுச் சீறி எழுவானாயின் அவனது செல்வம் குறையும்', 'தன்னுடைய கோபத்தின அளவாக மிதமிஞ்சி தண்டனை செய்தால் அவனுடைய பலம் சுருங்கிவிடும்', 'தன்னைச் சினத்திற் செலுத்தி அவர்களை வெகுண்டால் அவனுடைய செல்வஞ் சுருங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறிதே சினம் கொண்டுசீறிச் செயல்படுவானாயின் ஆட்சிச்செல்வம் சுருங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரசியல் சுற்றத்தோடு கலந்து செய்யாத ஆட்சித்தலைவன் சினத்துஆற்றிச் சீறின் செல்வம் சுருங்கும் என்பது பாடலின் பொருள்.
'சினத்துஆற்றிச் சீறின்' குறிப்பது என்ன?

இனத்துஆற்றி எண்ணாத என்ற தொடர்க்கு சுற்ற்த்தோடு கலந்து ஆராயாத என்பது பொருள். சுற்றம் என்றது அரசியல் சுற்றத்தைக் குறித்தது.
வேந்தன் என்ற சொல் மன்னன் என்ற பொருள் தரும். ஆட்சித்தலைவன எனக் கொள்ளலாம்.
சிறுகும் என்ற சொல்லுக்குச் சிறுத்துப்போகும் அதாவது சுருங்கும் என்று பொருள்.
திரு என்ற சொல் செல்வம் எனப்பொருள்படும்.

தனது அரசியல் சுற்றத்தோடு கலந்தெண்ணாமல் வெறும் சினமும் சீற்றமும் கொண்டு ஆட்சித்தலைவன் செயல்புரிவானாயின் நாட்டின் வளம் தேயும்.
இங்கு இனம் என்றது தன்னைச் சுற்றி இருந்து அரசுவினையாற்றும் அமைச்சர் போறோரை. ஆட்சி பற்றிய செயல்பாடுகளில் தனக்குத் துணையாக நிற்கும் இச்சுற்றத்தாரோடு கலந்து ஆலோசிக்காமல் அவர்கள் அஞ்சத்தக்க வகையில் வறிதே, சினம் கொண்டு, சீறி ஆட்சி நடத்துவானானால், அரசின் வளங்கள் எல்லாம் சிறுகச் சிறுகக் குறைந்து மறையும்.
இனத்தாற்றி எண்ணுகிறபோது செருக்கற்ற சிந்தையையும், சினத்தாற்றிச் சீறும்போது செருக்கையும் ஆட்சியர் எய்துவர். சினந்து சினந்து ஆட்சி மேலாண்மை மேற்கொள்ளப்பட்டால் வெங்கோன்மை தாங்கமாட்டாமல், சுற்றியிருப்பவர், ஆர்வம் குன்றி ஆட்சியாளரிடமிருந்து நீங்குவர். தன்னுடைய அஞ்சத்தகுந்த தோற்றத்தால் தனிமைப்படுத்திக்கொள்பவர் தம் ஆட்சியின் வளங்களைக் காத்துக்கொள்ளும் திறனற்றவர் ஆகிவிடுவார். பொதுவாழ்விற்குரிய கடமையில் தான் மட்டும் எண்ணிப்பார்த்து முடிவுக்கு வருவதைவிட தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து எண்ணிப்பார்ப்பது நல்லது. ஆட்சிக் செலுத்துவதற்கான செயல் எதுவாயினும் சூழ்வார் கண்ணாகச் சூழ்ந்து செய்யவேண்டிய அரசு அங்ஙனம் செய்யாமல் சினத்தால் செய்ய முற்படுவானாயின் நாட்டின் வளம் குன்றும்.

‘இவனுடைய கொடுங்கோன்மைக்குத் துணையான துன்மந்திரிகளையும் மற்றுள்ளோரையும் வாழ வைத்துக் குடிகளை வருத்துமரசன் என்னும் பரிதி உரை உள்ள புதுமையானது என்றாலும் மூலத்தோடு பொருந்தி வரவில்லை.

'சினத்துஆற்றிச் சீறின்' குறிப்பது என்ன?

'சினத்துஆற்றிச் சீறின்' என்றதற்குச் சின்னெறியிற் றீரானாயின், சினத்தின் நெறியானே சீறுவானாயின், சினமேற் கொண்டால், சினத்து வழிபற்றிக் கன்றி, சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி வெகுளுமாயின், சினத்திற்கு ஆட்பட்டு கோபித்துச் சீறுவானாகில், காரணமின்றியே அமைச்சர்களைக் கோபித்துச் சீறும், சினங்கொண்டு செய்யின், வெகுளி வயப்பட்டுச் சீறி எழுவானாயின், கோபத்தின அளவாக மிதமிஞ்சி தண்டனை செய்தால், சினத்தின் வழியே வந்த சீற்றத்தொடு செயலாற்றினால், சினத்திற் செலுத்தி வெகுண்டால், சினத்தின் கண்ணே தன்னைச் செலுத்தி வெகுண்டு உரைப்பானாயின், சினமும் சீற்றமும் கொண்டு செய்யும் செயல்களால், சினத்தின் வயப்பட்டுச் சீறின் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

சினங்கொண்டு ஒரு காரியத்தைச் செய்து அதில் தோல்வியுற்றால் அமைச்சரையும் சேவகரையும் சீறிவிழும் மன்னன் என்றதைவிட, 'கலந்து ஆலோசிப்பதில் நாட்டமின்றி சினத்தினால செயல் முடிக்கமுடியும் என்று எண்ணி சீறி விழுந்தால்' என்று கொள்வது பொருத்தமாக இருக்கிறது. இதுவே 'சினத்துஆற்றிச் சீறின்' என்பதன் பொருள்.

அரசியல் சுற்றத்தோடு கலந்து செய்யாத ஆட்சித்தலைவன் வறிதே சினம் கொண்டு சீறிச் செயல்படுவானாயின் அவனது செல்வம் சுருங்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அரசுப் பணிகளில் இருப்போரைக் காரணமின்றி நாட்டுத்தலைவன் சினந்து அச்சப்படுத்த வேண்டாம் எனச் சொல்லும் வெருவந்த செய்யாமை பாடல்.

பொழிப்பு

அரசியல் சுற்றத்தோடு கலந்தெண்ணாமல் சினம் கொண்டு சீறிச் செயல்படுவானாயின் ஆட்சிச்செல்வம் சுருங்கும்.