கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
(அதிகாரம்:வெருவந்த செய்யாமை
குறள் எண்:567)
பொழிப்பு (மு வரதராசன்): கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்
|
மணக்குடவர் உரை:
கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்.
இது வலியைக் கெடுக்கும் என்றது.
பரிமேலழகர் உரை:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் - கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும், வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை,கண்ணோட்டம் இன்மை , கடுஞ்சொற்சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம்கூறப்பட்டன.
சி இலக்குவனார் உரை:
கொடுஞ்சொல்லும் குற்றத்திற்கு மேற்பட்ட தண்டனையும் அரசனின் பகை வெல்லும் வலிமையைக் குறைக்கும் அரமாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.
பதவுரை: கடுமொழியும்-கடுஞ்சொல்லும்; கையிகந்த-அளவுக்கு மேற்படுதல், தண்டமும்-ஒறுத்தலும்; வேந்தன்-ஆட்சியாளன், மன்னவன்; அடுமுரண்(-பகை)வெல்லும் வலிமை; தேய்க்கும்-சிறுது சிறிதாகத் தேய்த்து குறைக்கும்; அரம்-அராவும் கருவி.
|
கடுமொழியும் கையிகந்த தண்டமும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும்;
பரிப்பெருமாள்: கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும்;
பரிதி: வெவ்விய வசனமும் கொடிய ஆக்கினையுமுள்ளது; [ஆக்கினை-ஆணை]
காலிங்கர்: யாவர் மாட்டும் இன்சொல் வழக்கம் இன்றி வெஞ்சொல் விடுத்தலும், செய்யும் நீதியைக் கடந்து தண்டம் செய்தலும் இவை இரண்டும்;
காலிங்கர் குறிப்புரை: கை என்பது ஒழுக்கம்: ஆவது நீதி.
பரிமேலழகர்: கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்;
'கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கையிகந்த தண்டம் என்பதற்கு நீதியைக் கடந்து தண்டம் செய்தல் என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும்', 'கடுஞ்சொல்லும் அளவுக்கு மீறிய தண்டனையும்', 'கடூரமான வார்த்தைகளும் (பேசி கண்ணோட்டமில்லாவிட்டாலும் நியாயமான அளவோடும் தண்டிக்காமல்) அளவுக்கு மீறிய தண்டனையும்', 'கடுமையான சொல்லும் அளவுகடந்த தண்டனையும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் என்பது இப்பகுதியின் பொருள்.
வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது வலியைக் கெடுக்கும் என்றது.
பரிப்பெருமாள்: அரசனதாகிய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வலியைக் கெடுக்கும் என்றது.
பரிதி: அரசன் செல்வத்தைக் கெடுக்கும் அரம் என்றவாறு.
காலிங்கர்: மன்னவன் மாற்றாரைக் கொல்லும் வலியாகிய பொருள்வலி, படைவலி, துணைவலி மற்று அரண்வலி, தன்வலி முதலிய அனைத்து வலியையும் பொடிபடத் தேய்த்து விடும் அரம் என்றவாறு. [மாற்றார்-பகைவர்]
பரிமேலழகர்: அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
பரிமேலழகர் குறிப்புரை: கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை,கண்ணோட்டம் இன்மை , கடுஞ்சொற்சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன. [தானை-சேனை; முரண் - வலிமை ]
'அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். அடுமுரண் என்றதற்கு மற்றவர்கள் வலிமை என்று பொருள் கூற பரிதி செல்வம் எனப் பொருள் உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசனது படைவலியை அறுக்கும் அரம்', 'பகையை அழிக்கவல்ல அரசனது வலிமையைத் தேய்க்கும் அரமாகும்', 'அரசனுடைய வெற்றி வல்லமைகளைத் தேய்த்துக் குறைத்துவிடக்கூடிய அரம் போன்றது', 'பகைவரை வெல்லும் அரசன் வலிமையைக் குறைக்கும் அரமாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பகையை வெல்லும் ஆட்சியாளரது வலிமையை அறுக்கும் அரமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கடுஞ்சொல்லும் கையிகந்த தண்டமும் பகையை வெல்லும் ஆட்சியாளரது வலிமையை அறுக்கும் அரமாகும் என்பது பாடலின் பொருள்.
'கையிகந்த தண்டம்' என்ற தொடரின் பொருள் என்ன?
|
முறையில்லாத கொடுந்தண்டனை குடிமக்களை ஆட்சியாளரிடமிருந்து விலக வைக்கும்.
கடுகடுத்த சொல்லும் முறை கடந்த தண்டனை அளித்தலும் ஆட்சியாளரது பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்துக் குறைக்கும் அரமாகும்.
அரம் என்பது தேய்க்கும் கருவி. இதைக் கடிய இரும்புப் பொருள்களை அராவித் தேய்த்து ஏற்ற வடிவம் பெறச் செய்வதற்குப் பயன்படுத்துவர்.
இதன் கூர்மையும் வலியபொருள்களைத் தேய்க்கும் அதன் ஆற்றலும் இப்பாடலில் உவமிக்கப்படுகின்றன.
ஆள்வோன் குடிகளிடம் கடுமையான மொழிபேசி, குற்றம் செய்தோருக்கு அளவுக்கு மிஞ்சிய தண்டனையும் கொடுத்து அச்சுறுத்தும்படியாக நடந்து கொண்டால், அவனது அத்தகைய பண்பற்ற செயலும் முறையில்லாத ஒறுத்தலும் அரசின் வலிமையைச் சிறுகச் சிறுகக் குறைத்துத் தேய்க்கின்ற அரமாக மாறிவிடும் என்கிறது பாடல்.
சென்ற குறளில்(566) வெருவந்த செய்யும் ஆட்சியாளன் கடூரமான சொல்லுடையவனாகவும் கண்ணோட்டமில்லாதவனகவும் இருப்பான் எனச் சொல்லப்பட்டது. இப்பாடல்
பொறுத்தற்கியலாத கடுஞ்சொல் பேசுபவனும் குற்றம் செய்தவரால் தாங்குதலுக்குரிய அளவைக் கடந்த தண்டனை வழங்கும் வெங்கோலன் பற்றிக் கூறுகிறது. முன்னது குறையிரக்க வந்தோரிடம் கடுமொழி பேசியது, இங்கு அரசுவினைஞர்களிடம் கடுஞ்சொல் கூறுவது என வேற்றுமை காணலாம்.
முரண் என்பதற்கு வலியென்று உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். இச்சொல்லுக்கு விளக்கமாகப் பொருள்வலி, படைவலி, துணைவலி, அரண்வலி, தன்வலி முதலிய அனைத்து வலியையும் சொல்வர். அடுமுரண் என்ற தொடர் பகைவரை வெல்லும் வலிமை என்ற பொருளாயிற்று.
கடுமொழி-கையிகந்த தண்டம் என்னும் இவை 'அரம் என்ற கருவி' போன்று எனச் சொல்லப்பட்டதால் அடுமுரணை இரும்பு எனக் கூறி உவமையை விளக்குவர்.
அவனது பொறுத்தற்கியலாத கடுஞ்சொற்களும், குற்றம் செய்தவர்க்கு அளவு கடந்த தண்டனை அளித்தலும் ஆட்சியாளரது பகைவெல்லும் திறத்தைத் தேய்த்துவிடும். இதன் பொருளாவது ஆட்சித்தலைவனது கடுஞ்சொற்களால் குடிகளைக் காக்கும் படையும், அரசுவினைஞர்களும் அரசுக்குப் பகையாகி விடுவர். கடுந்தண்டனை முறையால் குடிகளும் அரசிடம் அன்பு காட்டமாட்டார்கள். இவை ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைந்து அவரது வலிமையைக் குன்றச் செய்யும்; ஆளும் வலிமையைக் குறைத்து அழிப்பதால் அது இரும்பைத் தேய்த்து அறுக்கும் அரம் எனப்பட்டது.
|
'கையிகந்த தண்டம்' என்ற தொடரின் பொருள் என்ன?
'கையிகந்த தண்டம்' என்ற தொடர்க்கு, குற்றத்தின் மிக்க தண்டம், கொடிய ஆக்கினை, நீதியைக் கடந்த தண்டனை, குற்றத்தின் மிக்க தண்டம், குற்றத்தைவிடக் கூடுதலாகச் செய்யும் எல்லைகடந்த தண்டனை, தாங்குதலுக்குரிய அளவைக் கடந்த தண்டனை, அளவுகடந்த தண்டனை, அளவுக்கு மீறிய தண்டனை, அளவிற்கு மிஞ்சிய தண்டனை, வரம்பு கடந்த தண்டனை, குற்றத்திற்கு மேற்பட்ட தண்டனை, குற்றத்திற்கு மிக்க தண்டனை என உரைகாரர்கள் பொருள் கூறினர்.
ஓர் அரசு அடிக்கடி கடுமையான சட்டங்களை இயற்றியும் அடிக்கடிச் சட்டக் கூறுகளைத் திருத்தியும் கொடுந் தண்டனை விதிப்பதையே நோக்கமாகக் கொண்டால், குடிகள் அச்சமடைந்து அதன் மீது சினம் கொள்வர். ஒருசிலர் தீமை செய்வதுகண்டு, குடியனைத்தும் வெருவந்த செய்யக்கூடாது. கொடுந்தண்டம் மக்களை நடுக்கமுறச் செய்யும். செய்யாத குற்றங்களைத்தைச் சுமத்தி, வேண்டாதவர்களை ஒறுக்கும் வன்மை கொடுங்கோல் அரசியலில் பெரிதாக வளர்ந்துவிடும். அப்படிப்பட்ட ஆட்சியில் அரசின் கீழ்நிலை ஊழியர் கூடத் தனக்கு இருக்கும் சிறு அதிகாரம் கொண்டு குற்றம் செய்யாதவரையும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்குவர்.
குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டிக்க வேண்டும். இதைத் தக்காங்கு, ஒத்தாங்கு என்ற குறட் சொற்கள் (561) விளக்கும். மீண்டும் அக்குற்றம் நிகழாதபடியும் குற்றத்திற்குப் பொருந்துமாறும் உலகம் ஒப்புமாறும் ஒறுத்தல்முறை இருக்க வேண்டும். செய்த குற்றத்திற்குப் பொருந்தாத, வரையறைக்கப்பெற்ற நிலைகளின் மீறிய. தண்டனை தருவதை கையிகந்த தண்டம் என்று இப்பாடல் சொல்கிறது. அவ்வகையான தண்டம் செய்தல் தொடருமானால் அது, குடிமக்களுக்கு ஆட்சியின் மீதுள்ள பற்றையும் நம்பிக்கையையும் குறைக்கும்.
'கையிகந்த தண்டம்' என்ற தொடர்க்கு அளவு கடந்த தண்டனை என்பது பொருள்.
|
கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் பகையை வெல்லும் ஆட்சியாளரது வலிமையை அறுக்கும் அரமாகும் என்பது இக்குறட்கருத்து.
வெறுப்பூட்டும் சொற்களாலும் கொடிய தண்டனைகளாலும் வெருவந்த செய்யாமை வேண்டும்.
கடுஞ்சொல்லும் அளவுகடந்த ஒறுத்தலும் ஆட்சியாளரது பகைவெல்லும் வலியை அறுக்கும் அரமாகும்.
|