இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0566கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:566)

பொழிப்பு: கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

மணக்குடவர் உரை: அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்.
இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்: நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். '(வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ்சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)

வ சுப மாணிக்கம் உரை: கண்ணிலும் சொல்லிலும் கடுமையன் ஆயின் அவன் நெடுஞ்செல்வம் நாளாகாமல் கெடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.


கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின்:
பதவுரை: கடும்-கடுமையான; சொல்லன்-சொல்லையுடையவன்; கண்-கண்ணோட்டம்; இலன்-இல்லாதான்; ஆயின்-ஆனால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின்;
பரிப்பெருமாள்: அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின்;
பரிதி: கொடிய சொல்லனுமாய்க் கிருபை அற்றவனுமாகில்;
காலிங்கர்: யாவர் மாட்டும் கடிய சொல்லினையுடையனுமாய்க் கண்ணோட்டம் இலனும் ஆயின்;
காலிங்கர் குறிப்புரை: கண்ணிலனாயினும் என்பது கண்ணோட்டம் இலன் என்றது.
பரிமேலழகர்: அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்:
பரிமேலழகர் குறிப்புரை: வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ்சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.

'அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடுஞ்சொல் கூறுபவனாகவும் கண்ணோட்டம் இல்லாதவனாகவும் அரசன் இருப்பின்', 'கடூரமான வார்த்தைகளும் தயவு தாட்சண்யமில்லாத குணமும் உள்ளவனாயின்', 'கடுமையாகிய சொல்லை உடையவனாயும் இரக்கமில்லாதவனாயுமுள்ள', 'மக்களிடம் வெறுக்கும் சொல்லைக் கூறுபவனாய் இரக்கம் இல்லாதவனாக இருப்பின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடிகளிடம் கடுஞ்சொல் கூறுபவனாகவும் இரக்கம் இல்லாதவனாகவும் ஆட்சியாளர் இருப்பின் என்பது இப்பகுதியின் பொருள்.

நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்:
பதவுரை: நெடும்-பெரிய; செல்வம்-பொருள் மிகுதி; நீடு-நீட்டித்தல்; இன்றி-இல்லாமல்; ஆங்கே-உடனே, அப்போதே; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.
பரிப்பெருமாள்: அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.
பரிதி: தொன்றுதொட்டு வரும் செல்வம் நிறையறக் கெடும் என்றவாறு.
காலிங்கர்: அவ்வரசற்கு நெடுஞ்செல்வமானது நீட்டித்தலின்றி அவை அவை செய்யும் காலத்தே கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். பரிமேலழகர் குறிப்புரை: இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.

'தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனது பெருஞ்செல்வம் நீடித்திராமல் அப்பொழுதே அழியும்', 'அவனுடைய செல்வமும் (செல்வாக்கும்) எவ்வளவு பெரியதாக் இருந்தாலும் நெடுநாளைக்கு இருக்காது விரைவில் அழிந்து போகும்', 'அரசனது பெருஞ்செல்வம், நீடித்தலின்றி அப்பொழுதே (விரைவில்) அழிவுறும்', 'அவனுடைய பெரிய ஆட்சிச் செல்வம் நிலைத்திருத்தலில்லாமல் உடனே அழியும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தொன்றுதொட்டு வரும் செல்வம் நீடித்திராமல் அப்பொழுதே அழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடிகளிடம் கடுஞ்சொல் கூறுபவனாகவும் இரக்கம் இல்லாதவனாகவும் ஆட்சியாளர் இருப்பின் தொன்றுதொட்டு வரும் செல்வம் நீடித்திராமல் அப்பொழுதே அழியும் என்பது பாடலின் பொருள்.
'நெடுஞ்செல்வம்' என்றால் என்ன?

கடுஞ்சொல்லன் என்ற சொல்லுக்கு கடுஞ்சொற்களைக் கூறுபவன் என்பது பொருள்.
கண்இலன் என்ற சொல் கண்ணோட்டம் அதாவது இரக்கம் இல்லாதவன் என்ற பொருள் தரும்.
ஆயின் என்ற சொல்லுக்கு ஆயினால் என்று பொருள்.
நீடின்றி என்ற சொல் நீண்ட காலம் இல்லாமல் எனப்பொருள்படும்.
ஆங்கே கெடும் என்ற தொடர் அப்போதே அழியும் என்ற பொருள் தருவது.

குடிகளிடம் கடுமையாகப் பேசுபவனாகவும் அருள் காட்டமாட்டாதவனாகவும் ஆட்சியாளர் இருந்தால், நெடுங்காலமாகச் சேர்க்கப்பட்டுவந்த மேம்பாடு உடன் அழியத் தொடங்கும்.
வெங்கோல் ஆட்சி செய்பவனது இரண்டு தீய பண்புக் கூறுகள் இங்கு சொல்லப்பட்டன. அவை கடுஞ்சொல் பேசுவது, கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவனாக இருப்பது ஆகியன. மக்களிடம் வெறுக்கும் சொல்லைக் கூறுபவனாய் இரக்கம் இல்லாதவனாக அவன் ஆயினால் அது அவனது நாட்டில் தொன்றுதொட்டு வருகின்ற மேம்பாடு தொடர இயலாமல் உடனே அழியச் செய்யும். இங்கு செல்வம் என்பது நீண்டகாலமாகக் காக்கப்பட்டு வரும் மரபுகள், புகழ் போன்ற மேம்பாடுகளைக் குறிக்கும். அவை இன்னும் நீடிக்க இயலாது, நாளாகாமல், அப்பொழுதே மறைந்து அழியும் என்கிறது பாடல்.

'நெடுஞ்செல்வம்' என்றால் என்ன?

'நெடுஞ்செல்வம்' என்றதற்கு தொன்றுதொட்டு வருகின்ற செல்வம், தொன்றுதொட்டு வரும் செல்வம், நெடுஞ்செல்வம், வழிவழியாக வருகின்ற அவனது பெருஞ்செல்வம், பெரிய செல்வம், பெருஞ்செல்வம், மிகப் பெரிய செல்வச் சிறப்புகள், அளவிலாச் செல்வம், பெரிய ஆட்சிச் செல்வம், நீண்ட காலமாகத் தொகுக்கப் பெற்ற முன்னோர் செல்வம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் மணக்குடவரது 'தொன்றுதொட்டு வருகின்ற செல்வம்' என்ற கருத்து சிறப்பானது. பரிதியின் கருத்தும் அதுவே. தேவநேயப்பாவாணர் 'விரைந்தழியத்தகாத செல்வம்' என்பார். நீண்ட காலமாகத் தொகுக்கப் பெற்ற முன்னோர் செல்வம் என்றும் நீண்டகாலம் தொடர்ந்துவந்த ஆட்சிச் செல்வம் எனவும் இத்தொடரை விளக்குவர்.
நெடுஞ்செல்வம் என்பது இங்கே மரபுகள், புகழ் போன்றவற்றைக் குறிக்கும்.

'நெடுஞ்செல்வம்' என்றதற்குப் பெரிய செல்வம் என்பதைவிட தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் என்பது பொருத்தமானது.

குடிகளிடம் கடுஞ்சொல் கூறுபவனாகவும் இரக்கம் இல்லாதவனாகவும் ஆட்சியாளர் இருப்பின் தொன்றுதொட்டு வரும் செல்வம் நீடித்திராமல் அப்பொழுதே அழியும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குடிகளிடம் கடுஞ்சொல் கூறி அச்சப்படுத்தும் ஆட்சியாளன் முன்னோர் வழிவந்த நற்பெயர்கள் எல்லாவற்றையும் உடன் இழப்பான் என்னும் வெருவந்த செய்யாமை பாடல்.

பொழிப்பு

கடுஞ்சொல் கூறுபவனாகவும் கண்ணோட்டம் இல்லாதவனாகவும் ஆட்சியாளர் இருந்தால், நெடுநாள் காக்கப்பட்ட மேம்பாடு நீடித்திராமல் அப்பொழுதே அழியும்.