இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:565)

பொழிப்பு: எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

மணக்குடவர் உரை: காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து.
இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.

பரிமேலழகர் உரை: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
(எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)

இரா சாரங்கபாணி உரை: பிறர் காண்பதற்கு அரியவனாய்க் கண்டாலும் கடுத்த முகத்தினனாய் உள்ள கொடியவனது பெருஞ்செல்வம் பேய் காத்த செல்வம் போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய் கண்டன்னது உடைத்து.


அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்:
பதவுரை: அரும்-காலம் அரியனாய்; செவ்வி-தகுந்த நேரம்; இன்னா-தீய; முகத்தான்-முகத்தையுடையவன்; பெரும்-பெரியதாகிய மிக்க; செல்வம்-பொருள் மிகுதி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம்;
பரிப்பெருமாள்: காண்டற்கரிய காலத்தினையும் கண்டால் இன்னாத முகத்தையும் உடையவனது பெரிய செல்வம்;
பரிதி: கிருபையில்லாதவன் குளிர்ந்த முகம் இல்லாதவன் செல்வம் நல்லோற்கு ஆகாதபடியினாலே;
காலிங்கர்: அரசர் முறைசெய்யுமிடத்து உவகைச் செவ்வியும் கண்ணோட்டமும் அரியனாகிய இன்னா முகத்தானது பெரிய செல்வமானது எதனை ஒக்கும் எனின்; [உவகைச் செவ்வி - மகிழ்ச்சியான காலம்]
பரிமேலழகர்: தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம்;

தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்க்க அருமையும் முகங்கடுமையும் உடையவன் பெருஞ்செல்வம்', 'காணக் கிடைப்பதே அபூர்வமாகி (காணக் கிடைத்தாலும் எப்போதும்) கடுகடுத்த முகம் காட்டுகிறவனாக உள்ளவன எவ்வளவு ஆடை ஆபரண அலங்காரமுள்ளவனானாலும் அவனைக் காண்பது', 'குறையிரப்போர் தன்னை எளிதிற் காணும் இடமில்லாதவனாய்க் கண்டாலுங் கடிய முகத்தை உடையவனாருப்பானது பெருஞ்செல்வம்', 'எளிதில் காண முடியாத நிலையினையும் காணும் போது கொடிய அஞ்சக்கூடிய முகத்தினையும் உடையவனின் பெரும் ஆட்சிச் செல்வம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எளிதில் காண முடியாதவனாகவும் காணும் போது கடுமைகாட்டும் முகத்தினையும் உடையவனின் பெருஞ் செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

பேஎய்கண் டன்னது உடைத்து:
பதவுரை: பேஎய்-அலகை; கண்டன்னது-காணப்பட்டாற் போல்வது; உடைத்து-உரிமையாகக் கொண்டது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.
பரிப்பெருமாள்: பேயைக் கண்டாலொக்க அச்சம் தருதல் உடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.
பரிதி: பேய் செல்வம் பெற்றதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: பேயினது நோக்கம் தாக்கிய உருவானது எத்தன்மை உடைத்து மற்று அத்தன்மைத்தாம்;
காலிங்கர் குறிப்புரை: எனவே பேய் தங்கிய உருவு பெண்ணுருவாயினும் உருவு ஒன்று இருந்து உள் ஓய்ந்துவிடும்; அதுபோல இங்கும் செல்வம் உள்ளது போன்று இருந்து உள் உடைந்துவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.

'பேயைப் பார்த்தது போல அச்சம் தருவது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி பேய் செல்வம் பெற்றது போல என்கிறார். காலிங்கர் பேய் தாக்கியது பேயின் தனமை பெறுமாற்போல அத்தன்மை உடையது என்றார். பரிமேலழகர் பேய் பார்த்தாற்போல் குற்றம் உடைத்து என விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேய்காத்தது போலும்', 'ஒரு பேயைக் கண்டது போன்றதுதான்', 'பேயாற் காணப்பட்டது போலப் பயனிலதாய்க் கழியுந்தன்மைத்து', 'பேயைப்பார்த்தால் ஒக்கும் நிலையுடையது (இன்னா முகத்தான பேய் போன்றவன் என்பதாம்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேயிடம் அகப்பட்டது போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எளிதில் காண முடியாதவனாகவும் காணும் போது கடுமைகாட்டும் முகம்கொண்டவனாகவும் உள்ள ஆட்சித்தலைவனின் பெருஞ் செல்வம் பேயிடம் அகப்பட்டது போன்றது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூற வரும் கருத்து என்ன?

அருஞ்செவ்வி என்ற தொடர்க்கு காண்பதற்கு அரியவாக என்பது பொருள்.
இன்னா முகத்தான் என்ற தொடர் இனிமையில்லாத முகத்தை உடையவன் என்ற பொருள் தரும்.
பெருஞ்செல்வம் என்ற சொல்லுக்குப் பெரிய செல்வம் என்று பொருள்.
பேஎய் என்ற சொல் உலகியல் வழக்கில் உள்ள பேய் என்னும் உருவிலி குறித்தது.
கண்டன்னது உடைத்து என்ற தொடர் கண்டது போன்றது எனப்பொருள்படும்.

காண்பதற்கு அரியவனாகவும் காணும்போது இன்முகம் இல்லாதவனாகவும் உள்ள ஆட்சித்தலைவனது பெருஞ்செல்வம் பேயிடம் சிக்கிக்கொண்டது போல ஆகும்.
காட்சிக்கு எளியனாக இல்லாது கடுகடுப்பான முகம் கொண்டவனாயிருப்பின் அவன் பேய் போன்று அச்சம் தருபவனாகத் தோன்றுவான். பேயை ஒத்த அவனிடம் செல்வம் சேர்ந்தால் அச்செல்வத்தால எவர்க்கும் பயன் இல்லை. அது பூதம் காத்த புதையல் போன்றதாகிறது.
தேவைப்படுவோர்க்கு உதவ மனமில்லாமல் அரசுக்குரிய பெருஞ்செல்வத்தைக் காக்க நினைக்கிறான் இந்த ஆட்சியாளன். இந்தக் காரணத்திற்காகவே தன்னைக் காணவருவோரைத் தவிர்க்கிறான். சிலவேளைகளில் சிலரைக் காணநேர்ந்தாலும் அப்படி வந்தவர்களுக்கு வெறுப்புத் தோன்றுமளவு தன் முகத்தைக் கடுகடுக்க வைத்து அவர்களை அனுப்பிவிடுகிறான்.

பேய் என்ற சொல் அளபெடுத்து 'பேஎய்' என வந்துள்ளது. இதை இசைநிறை அளபெடை என்பர். கொடுமையான ஆட்சியரது செல்வம் பேய்க்கு உருவகிக்கப்பட்டுள்ளது. பேய் என்பது உருவெளி அச்சத் தோற்ற உருவிலியை உணர்த்தி வெருவந்த செய்யும் (அச்சம்தரும்)ஒன்றாக நம்பப்படுவது. பேயிருள் என்பது அச்சந்தரும் இருளைக் குறிப்பது போல இங்கு அச்சந்தரும் பேய்ச்செல்வம் சொல்லப்படுகிறது. பேயைக் கண்டாற் போன்ற அச்சந்தருவது வெங்கோலனின் செல்வம் என்பது கருத்து. இதை பேய் பெற்ற செல்வம் எனவும் உரைப்பர். பேயினது நோக்கம் தாக்கிய உருவமானது எங்ஙனம் தன்னுருவத்திற்கமைந்த குணநலங்களைவிட்டுப் பேயின் குணமாகவே ஆகிறதோ அது போலும் கொடுங்கோலனது செல்வம் பேய்க்குணம் கொண்ட செல்வம் ஆகிறது எனவும் பொருளுரைப்பர். மற்றும் ஓர் உரை 'பேயாற் காணப்பட்ட செல்வம் போலும்' - தனக்கும் பிறருக்கும் பயன்படாதது போல, அருஞ்செவ்வியும், இன்னா முகமும் உடையான் பெருஞ்செல்வம் தனக்கும் பிறருக்கும் பயன் தராதாம்' என்கிறது. பெருஞ்செல்வம் என்பது ஆட்சிச் செல்வத்தைக் குறித்து எனச் சொல்லி அது பேயைப் பார்த்தாற் போன்றது (பேயாட்சி) எனவும் விளக்கினர்.
இக்குறளின் நடை செல்வத்தையே பேய் என்று குறித்தாலும் வெங்கோலனான நாட்டுத்தலைவனைப் பேய்த்தோற்றமும் குணமும் கொண்டவன் என மறைமுகமாக இழித்துரைப்பது போன்றுள்ளது இது. குடிமக்கள் பாதுகாவலுக்கும் நாட்டின் வளப்பெருக்கத்திற்குமாக உண்டான செல்வம் பூதங்காத்த செல்வமாகிறது என்பது பொருள்.

பேய்கள் உள்ளன என்பது வள்ளுவர் கருத்து எனக் கூறுதற்கு இல்லை; மக்களிடையே வழங்கிவரும் பொதுவான கருத்தை அவர் உவமையில் பயன்படுத்தியுள்ளார். அவ்வளவே.

இக்குறள் கூற வரும் கருத்து என்ன?

மக்களிடம் இருந்து பெற்ற செல்வம் கொண்டுதான் ஆட்சி செய்கிறான் ஒருநாட்டுத் தலைவன். அரசுச் செல்வம் பெருஞ்செல்வம். அதிகாரம் எல்லாம் ஒருன்கே குவிந்திருக்கும் அரசாட்சியிடம் பெருஞ்செல்வம் இயல்பிலேயே இருக்கும். அது குடிகளின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் வளங்களைப் பெருக்குவதற்காகவும் பயன்படுத்துவதற்காக உள்ளதாகும். ஆனால் அவன் இரக்கக் குணம் இல்லாமலும் அருளற்றவனாகவும் இருந்தால் தன்னிடம் வந்து இரப்போர்க்கு ஒன்றும் உதவமாட்டான்; பொருளிருந்தும் ஈய மாட்டான். இதனால் தன்னை நாடிவருவோரை நெருங்க விடமாட்டான். சிலவேளைகளில் சிலரைக் காணநேரிட்டாலும் அவர்களுக்கு கடுமுகம் காட்டி விரட்டிவிட்டுவிடுவான். குறை தீர்க்க வேண்டி வருபவர்களைக் காக்க வைத்தும் அச்சமூட்டியும் அவர்களுக்குப் பொருளுதவி எதுவும் செய்யாத குணம் கொண்டவனாகையால் அவன் வெங்கோலன் ஆவான்.
அவனிடம் பெருஞ்செல்வம் உண்டு; ஆனால் குடிமக்களின் தேவைகளை நிறைவேற்ற மனம் இல்லாமல் பாராமுகமாக இருக்கிறான் அல்லது கொடுமுகம காட்டுகிறான். அது பூதம் காத்த செல்வம்போல் உள்ளது. யாவருக்கும் பயனில்லை.
செங்கோல் மன்னன் காட்சிக்கு எளியனாக இருப்பவன். வெருவந்த செய்தொழுகும் ஆட்சித் தலைவன் அருஞ்செவ்வியும் இன்னாமுகமும் கொண்டவன்; பேய்த்தோற்றமும் பேய்க்குணமும் கொண்டவன்; இவனைக் காணவே மக்கள் அஞ்சி நிற்பர்.
பேய், அலகை, என்பனவெல்லாம் மக்கள் பயன்படுத்தும் வசைச் சொற்களாம். வெங்கோல்ஆட்சியர் மனத்தில் தைக்கவேண்டும் என்பதற்காக பேய் என்ற பேச்சு மொழியை ஆள்கின்றார் வள்ளுவர். நாட்டை ஆள்பவனை முதலில் பார்க்கவே முடிவதில்லை, பார்த்தாலும் கடுகடு என்பான், அவனிடம் உள்ள செல்வம் குடிகளை அச்சுறுத்த மட்டுமே பயன்படும் என்று பொருள்பட அவனைப் பேய் எனக் கூறுகிறார்.
குறையிரப்போர் தன்னை எளிதிற் காணும் இடமில்லாதவனாய்க் கண்டாலுங் கடிய முகத்தை உடையவனாருப்பானது பெருஞ்செல்வம் பேய் காத்த செல்வன் போன்றது.
இவை இக்குறள் கூறும் செய்திகள்.

எளிதில் காண முடியாதவனாகவும் காணும் போது கடுமைகாட்டும் முகத்தினையும் உடையவனின் பெருஞ் செல்வம் பேய் காத்தது போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன்னைக் குடிமக்கள் யாரும் எப்பொழுதும் அணுகமுடியாதவாறு நடந்துகொள்ளும் ஆட்சித்தலைவன் கொடியவனாவான் எனச் சொல்லும் வெருவந்த செய்யாமை பாடல்.

பொழிப்பு

பார்ப்பதற்கு அரியவனாகவும் கடுமையான முகம் கொண்டவனாகவும் உள்ளவனது பெரிய செல்வம் பேய் காத்தது போன்றது.