இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:564)

பொழிப்பு: 'நம் அரசன் கடுமையானவன்' என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

மணக்குடவர் உரை: தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன் தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்.
இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.

பரிமேலழகர் உரை: இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் - குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன், உறை கடுகி ஒல்லைக்கெடும் - ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)

இரா சாரங்கபாணி உரை: குடிமக்களால் 'நம் அரசன் கடுமையானவன்' என்று கூறப்படும் வசைச் சொல்லையுடைய மன்னவன் வாழும் நாடு மிக விரைவில் கெட்டழியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.


இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்:
பதவுரை: இறை-வேந்தன்; கடியன்-கொடுமையுடையவன்; என்று-என்பதாக; உரைக்கும்-சொல்லும்; இன்னாச்சொல்-தீய சொல்; வேந்தன்-மன்னவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன்;
பரிப்பெருமாள்: தன்கீழ் வாழ்வார் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தன் அவன்;
பரிதி: குடிக்கடமையை வாங்குதற்கு வலியன் குடியைக் காக்க எளியனென்னும் அரசன்;
காலிங்கர்: மற்று இம்மன்னவன் சாலக் கடியன் என்று மக்கள் யாவரும் சொல்லுகின்ற இன்னாத சொல்லினையுடைய வேந்தனது;
பரிமேலழகர்: குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்;
பரிமேலழகர் குறிப்புரை: நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார்.

'தன்கீழ் வாழ்வார் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள்அனைவரும் இறை என்ற சொல்லுக்கு வேந்தன் என்று பொருள் கொள்ள பரிதி 'வரி' என உரை கண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் கடுமையன் என்று குடிகள் கூறின்', ''அரசன் கொடியவன்' என்று (குடிகள் நொந்து கொள்ளும்) கெட்ட பெயரை அடையும் மன்னனுடைய', 'குடிகள் தம் மன்னனைக் கொடியவன் என்று கூறும் பழிச்சொற்குக் காரணமான அரசன்', ''அரசன் கொடியவன்' என்று குடிகளால் சொல்லப்படும் இனிமை தராத சொல்லுக்குரிய அரசன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'ஆட்சித் தலைவன் கொடியவன்' என்று குடிகள் வசைபாடத் தொடங்கினால் என்பது இப்பகுதியின் பொருள்.

உறைகடுகி ஒல்லைக் கெடும்:
பதவுரை: உறைவிடம்; கடுகி-குறைந்து; ஒல்லை-கடிதின்; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.
பரிப்பெருமாள்: அவன் தான் உறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவனை நாடும் நகரமும் பொறாது என்றது.
பரிதி: சடுதியிலே நகர் இழப்பான் என்றவாறு. [சடுதியிலே - விரைவில்]
காலிங்கர்: நாடும் ஊரும் விரையக் கெட்டுவிடும். முன் சொல்லியவையும் அன்றியும் என்றவாறு.
காலிங்கர் பதவுரை: உறை என்பது உறைவிடம்.
பரிமேலழகர்: ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.

'உறையும் இடம்/நகர்/நாடும் ஊரும்/ஆயுள் குறைந்து விரைவில் கெட்டுப்போவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இடஞ்சுருங்கி விரைந்து அழிவான்', 'அரசாட்சிக் காலம் குறைந்து விரைவில் கெட்டுப் போவான்', 'ஆயுளுங் குறைந்து (செல்வமும்) விரைவில் அழிந்து கெடுவான்', 'ஆட்சி நீங்கி விரைவில் அழிவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உறையும் இடம் இழந்து விரைந்து அழிவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'ஆட்சித் தலைவன் கொடியவன்' என்று குடிகள் வசைகூறத் தொடங்கினால் அவன் உறைகடுகி விரைந்து அழிவான் என்பது பாடலின் பொருள்.
'உறைகடுகி' என்ற தொடர் குறிப்பது என்ன?

இறைகடியன் என்ற தொடர்க்கு ஆட்சித் தலைவன் கடூரமானவன் என்பது பொருள்.
என்றுரைக்கும் என்றது என்று சொல்லும் எனப் பொருள் தரும்.
இன்னாச்சொல் என்ற தொடர்க்கு இனிமையற்ற பேச்சு (வசைச் சொல்) என்று பொருள்.
வேந்தன் என்ற சொல் அரசன் எனப்பொருள்படும். ஆட்சித்தலைவன் என்று கொள்ளலாம்.
ஒல்லைக் கெடும் என்ற தொடர் விரைந்து அழியும் என்ற பொருள் தருவது.

ஆள்பவன் கடூரமானவன் என்று குடிகள் வசை பாடினால் அவன் நாடிழந்து விரைவில் கெட்டு அழிவான்.
ஒரு நாட்டுத்தலைவன் குடிகள் அஞ்சும்படியான கொடிய செயல்களைத் தொடர்ந்து செய்துவந்தால் நெஞ்சம் பொறுக்கமாட்டாமல் 'இவன் கொடியன்' என்று அவனைக் குடிமக்கள் தூற்றுவர்; அத்தகையவன் நாடிழந்து விரைந்து கெடுவான் என்கிறது பாடல்.
இறை என்றது நாட்டுத்தலைவனைக் குறிக்கும் சொல். ஆனால் வேந்தன் என்று அதே பொருளையுடைய மற்றொரு சொல்லும் வந்துள்ளமையால் இப்பாடலை விளக்கும் முகத்தான் உரைகள் வேறுபட்டன. இறை என்பதற்கு வரி என்ற பொருளும் உண்டு. இறை-வரி எனக் கொண்டு ’இறைகடியன்’ என்பதற்குக் குடிக்கடமை(வரி)யை வாங்குதற்கு வலியன் அதாவது குடிமக்களிடம் 'வரிவாங்குவதில் கடியன்' என்று குடிகள் உரைக்கும் கொடுஞ்சொல்லையுடைய வேந்தன் எனக் கூறினார் பரிதி. ஆனால் இவர் உரை வரிமிகுதி கொள்ளும் கொடுமை ஒன்றை மட்டுமே காட்டுகிறது; பொதுவாகக் ‘கடியன்’ எனக்கொள்வது அனைத்துக் கொடுமையையும் அடக்கும். எனவே இறை என்பதற்கு இறைவன் எனப் பொருள் கொள்வதே சிறக்கும். இறை-வேந்தன் என்று மீண்டும் வருவதால் 'இன்னாச் சொல்லையுடைய வேந்தன்' என வேந்தனுக்கு அடையாக்கிக் 'கெடும்' என்பதனோடு முடிப்பர் சிலர். இறைகடியன் என்பது மக்கள் கூற்று ஆதலால் இருமுறை ஒரு பொருளில் வந்ததாகாது என்னும்படியும் உரை செய்வர்.
இப்பாடலில் சொல்லப்பட்ட இன்னாச்சொல் என்றதற்கு உளம் நொந்து உரைக்கும் வன்சொல் என விளக்கம் தருவர்.
'வேந்தன் ஒல்லைக் கெடும்' என்பதற்கு 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற நம்பிக்கையை உணர்த்தும் வண்ணம் கடியனாக உள்ள கொடுங்கோலன் தெய்வத்தால் அழிவான் எனவும் குடிமக்கள் எல்லாம் ஒருவாய்ப்பட்டு நெஞ்சு நொந்து கூறும் வன்சொற்களே வேந்தனை அழிக்கும் எனவும் உரைத்தனர் பழம் ஆசிரியர்கள்.
'கடுகி ஒல்லைக் கெடும்' என்பதில் உள்ள கடுகி என்ற சொல்லும் ஒல்லை என்ற சொல்லும் விரைந்து என்ற பொருள் தருவது. இதைக் .....காத்தோம்பல் சொல்லின் கட் சோர்வு (சொல்வன்மை 642) என்பது போல (காத்து, ஓம்பி), ஒரு பொருட் பன்மொழியாகக் கொண்டால் குறள் நடைக்கு ஆற்றல் தரும் ( இரா சாரங்கபாணி). கெடுதலின் விரைவு சொல்லப்பட்டது.

ஆட்சித் தலைவன் 'குடிதழீஇக் கோலோச்சுபவனா'க இருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.

'உறைகடுகி' என்ற தொடர் குறிப்பது என்ன?

'உறைகடுகி' என்ற தொடர்க்கு தானுறையும் இடம் வெகுளப்பட்டு, நகர் இழந்து, உறைவிடம் (நாடும் ஊரும்) இழந்து, ஆயுள் குறைந்து, உறையும் நாட்டையும் இழந்து, வாழ்நாளையும் செல்வத்தையும் இழந்து, இடஞ்சுருங்கி, நாடு கெட்டு, அரசாட்சிக் காலம் குறைந்து, ஆளுங்காலம் குறைந்து, ஆயுளுங் குறைந்து (செல்வமும்)அழிந்து, ஆட்சி நீங்கி, வாழ்நாளும் உறைவிடமும் சுருங்கி, வாழ்நாள் குறைந்து, ஆயுளைக் குறைக்கும், ஆயுளிலக்கங் குறையும், உறைபவர் (குடிமக்கள்) வெம்மையுற்று என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் உறையும் இடம் என்ற பொருள் பொருத்தம்.
‘கடுகி’ என்பதற்குக் சிறுத்து/குறுகி என்றும் விரைந்து என்றும் பொருள் கூறுவர். இச்சொல்லுக்கு வெம்மையுற்று எனப் பொருள் கொண்டு குடிமக்கள் சினந்தெழ வேந்தன் அழிவான் என்றுரைத்தார் கு ச ஆனந்தன்.
'உறைகடுகி' என்றதற்கு 'உறையும் நிலத்தை இழந்து', 'ஆட்சி அழிவு', 'புகழ் அழிவு', 'வாழ்நாள் குறைவு' என்ற விளக்கங்கள் கிடைக்கின்றன. வாழ்நாள் குறைதலாவது கடியன் என்று குடிமக்களால் கூறப்படுவான் தெய்வத்தினால் விரைவிற் கெடுவான் என்பதாம்.
காலங்குறுகி அழிவன் என்பதைக் காட்டிலும் நாடு-நகரம் இழந்து, உறையும் அரண்மனையையும் இழப்பான்; நாட்டை விட்டே ஓடவும் நேருமாம் என்பது சிறந்த கருத்தாகிறது. ...... உறைநிலத்தோடு ஒட்டல் அரிது (இடன் அறிதல் 499) என்பதில் உறைகின்ற நிலம் என வந்தது.

'உறைகடுகி' என்பது உறையும் நிலத்தை இழந்து என்பது பொருள்.

'ஆட்சித் தலைவன் கொடியவன்' என்று குடிகள் வசைபாடத் தொடங்கினால் அவன் உறையும் இடம் இழந்து விரைந்து அழிவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கொடுமையானவன் எனக் குடிகள் உணர்ந்தால் அவ்வாட்சித் தலைவன் விரைவில் நாடிழப்பான் என்னும் வெருவந்த செய்யாமை பாடல்.

பொழிப்பு

ஆட்சித் தலைவன் கொடியவன் எனக் குடிகள் கூறத் தொடங்கினால் அவன் நாடு இழந்து விரைவில் அழிவான்.