இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0563வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:563)

பொழிப்பு (மு வரதராசன்): குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

மணக்குடவர் உரை: அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.

பரிமேலழகர் உரை: வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
(வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)

இரா சாரங்கபாணி உரை: குடிமக்கள் அஞ்சும் செயல்களைப் புரியும் கொடுங்கோல் மன்னவனாயின், அவன் உறுதியாக விரைவில் கெடுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

பதவுரை: வெருவந்த-அச்சம் வருவன, அஞ்சத் தக்கன; செய்து-செய்து; ஒழுகும்-எப்பொழுதும் நடந்து கொள்ளும்; வெங்கோலன்-வெம்மையான அரசு நடத்துபவனாய்; ஆயின்-ஆனால்; ஒருவந்தம்-உறுதியாக; ஒல்லை-விரைந்து; கெடும்-அழியும்.


வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின்;
பரிப்பெருமாள்: அரசன் அச்சம் வருவன செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின்;
பரிதி: யாரும் வெருவ நடத்துங் கொடுங்கோல் மன்னன்;
காலிங்கர்: அரசன் செங்கோல் நீதி செலுத்துமிடத்து உயிர்கள் பெரிதும் அஞ்சத் தக்கனவற்றைச் செய்து ஒழுகுமது கொடுங்கோல்போலும் தன்மையது உடைத்து;
பரிமேலழகர்: குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது.

'அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிகளை மிரட்டும் கொடிய வேந்தன்', 'குடிகள் நடுங்கும்படியாக ஆட்சிபுரியும் கொடுங்கோல் நடத்துகிற மன்னன்', 'அரசன் குடிகள் அஞ்சுஞ் செயல்களைச் செய்து அரசு செலுத்துங் கொடுங்கோலனாய் இருப்பின்', 'மக்கள் அஞ்சும் செயல்களைச் செய்து நடக்கும் கொடிய அரசனாக இருப்பின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சியாளன் குடிகள் நடுங்கும்படியாக ஆட்சிபுரியும் வெங்கோலனாய் ஆகிவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
பரிப்பெருமாள்: அவன் ஒருதலையாக விரைந்து கெடுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாடும் நகரமும் பொறுப்பினும் தெய்வத்தினால் கெடுவன் என்றது.
பரிதி: ஒருக்காலே கிளையுடனே கெடும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனால் அவனது பெருஞ்செல்வம் கடிதில் தலை அழியும்;
காலிங்கர் குறிப்புரை: எனவே ஒருவரைத் தண்டிக்கும் காலத்தும் இதற்குத் தகுதி என்று முன்னோர் சொன்ன முறைநூல் வழியால், மற்றவன் மனம் பொருந்தக் காட்டிய வழக்குடையானாதலே மன்னர்க்கு இயல்பு என்றவாறு.
ஒருவந்தம் என்பது பெருஞ்செலவம் என்றது.
பரிமேலழகர்: அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.

மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் பரிமேலழகரும் 'ஒருதலையாகக் கடிதிற் கெடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர். இவர்கள் ஒருவந்தம் என்பதற்கு ஒருதலையாக எனப் பொருள் கொண்டனர். பரிதி ஒருவந்தம் என்றதற்கு ஒருக்காலே என்று பொருள் கொண்டு ஒருக்காலே கிளையுடனே கெடும் என உரை பகன்றார். காலிங்கர் ஒருவந்தம் என்ற சொல்லுக்குப் பெருஞ்செல்வம் எனப் பொருள் கொண்டு உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கட்டாயம் விரைந்து அழிவான்', 'நிச்சயமாக வெகு சீக்கிரம் கெட்டுப் போவான்', 'அவன் திண்ணமாக விரைவில் அழிவான்', 'நிச்சயமாக விரைவில் அழிவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

திண்ணமாக விரைந்து அழிவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சியாளன் குடிகள் நடுங்கும்படியாக ஆட்சிபுரியும் வெங்கோலனாய் ஆகிவிட்டால், ஒருவந்தம் விரைந்து அழிவான் என்பது பாடலின் பொருள்.
'ஒருவந்தம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

குடிகள் அஞ்சத்தக்க கொடிய செயல்களைச் செய்து ஆட்சிபுரியும் வெங்கோலன் ஆட்சி தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. அது விரைந்து உறுதியாக அழியும்.
ஒரு நாட்டுத் தலைவன், அவனது குடிகள் அஞ்சத்தக்க செயல்களை வழக்கமாகச் செய்து நடந்துகொள்பவனாக ஆகிவிட்டால் அவன் வெங்கோலனாக- கொடுங்கோலனாக இகழப்படுவான். இயல்பாக, அவனது அழிவு உறுதியாக நிகழும். 'மக்கள் அவன் உடன் இருக்கமாட்டர்கள் ஆதலால் படைவலிமை இருந்தும் முழு ஆதரவு இல்லாத குழப்பநிலையில் உள்நாட்டுக் கலகத்திலோ அல்லது பகைவர் படையெடுத்து வரும்போதோ தோற்றுப்போய் அழிவான்' என உரைகாரர்கள் அவன் எப்படி அழிவான் என்பதை விளக்குவர்.

முறைசெய்து ஆள்பவனைச் செங்கோலன் என்றும் முறையற்ற ஆட்சிபுரிபவனைக் கொடுங்கோலன் என்றும் அழைப்பர். குடிகளை மிரட்டி ஆட்சி செலுத்துபவனை வெங்கோலன் என வள்ளுவர் இங்கு குறிப்பிடுகிறார். 'அடுத்து என்ன வரிபோடுவானோ, எந்தவிதமாக உடைமைகளைப் பறிப்பானோ, எப்படிப்பட்ட கேடு விளைவிப்பானோ' என்று மக்கள் ஓயாது வெருவும்படி செய்பவன் இவன். வெருவந்த செய்தொழுகும் என்னும் அடை உள்ளதால் வெருவந்த செய்து எப்போதும் நடந்துகொள்ளும் ஆட்சித்தலைவன் என்றாகிறான். இதனாலேயே உறுதியாகக் கெடுவான் என்று குறள் கூறுகிறது. தனது நடுக்கம் உண்டாக்கும் செயல்களினால் நாட்டு மக்களிடம் ஒருவித பய உணர்வை நிலைக்கச் செய்து வெம்மையான சூழலில் அவர்களை நாளும் இருத்தி ஆட்சி நடத்துவதால் அவன் வெங்கோலன் எனப்பட்டான்.

நன்னன் என்னும் கொங்குநாட்டை ஆண்ட மன்னனை வெஞ்செயல் புரிந்த அரசனாக பழம் இலக்கியம் காட்டுகிறது. இவனது ஆட்சியின்போது பெண் ஒருத்தி அரசனது தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் காய் ஒன்று அவ்வாற்றிலே வீழ்ந்து மிதந்து வந்தபோது எடுத்துத் தின்று விட்டாள் என்பதற்காக அவளுக்குக் கொலைத்தண்டனை விதித்தான். அவள் தந்தை அவளது நிறைக்கேற்ற பொன்னாற் செய்த பாவையையும் எண்பத்தொரு யானைகளையும் அவளது செயலுக்குத் தண்டமாகக் கொடுப்பதாக வேண்டிக் கூறியும், கொடுங்கோலனாக விளங்கிய நன்னன் அதற்கு உடன்படாமல் அப்பெண்ணைக் கொலைபுரிவித்து அழியாப் பழியை யடைந்தான். இக்கொடிய வரலாற்றுச் செய்தியை விளக்கும் சங்கச் செய்யுள்:
மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ வன்னை
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே.
(குறுந்தொகை குறிஞ்சி 292 பொருள்: ஒரு நாளில், நகுதலை உடையமுகத்தைக் கொண்ட விருந்தினனாகித் தலைவன் வந்தானாக, பகைவர் மாறுபடும் போர்க் களத்தின்கண் உள்ள ஊரினரைப்போல, பலநாளும்துயில் செய்தல் இலள்; நீராடும் பொருட்டுச் சென்ற ஒள்ளிய நெற்றியை உடையபெண், அந்நீர்கொணர்ந்த பசுங்காயைத் தின்றதாகிய குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண்யானைகளோடு, அவளது நிறையை உடைய பொன்னால்செய்த பாவையைக் கொடுப்பவும் கொள்ளானாகி, அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போல, நீக்குதல் இல்லாத நரகத்தின்கண் சென்று துன்புறுவாளாக.)

'ஒருவந்தம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஒருவந்தம்' என்ற சொல்லுக்கு ஒருதலையாக, தெய்வத்தினால், ஒருக்காலே கிளையுடனே, பெருஞ்செல்வம், உறுதியாக, கட்டாயம், நிச்சயமாக, முழுமையாக, திண்ணமாக, ஒரு சேர என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஒருவந்தம் என்ற சொல் வள்ளுவரால் படைக்கப்பட்ட புதிய வடிவம் பெற்ற ஒரு சொல் என்று ஆய்வாளர்கள் கருதுவர். குறள் 593-லும் இச்சொல் ஆளப்பட்டது.
'ஒருவந்தம்' என்ற சொல் பற்றி இரா சாரங்கபாணி ‘ஒருவந்தம்’ என்னும் சொல் திருக்குறளுக்கு முந்திய நூல்களில் ஆட்சியில்லை. அதற்குக் காணப்படும் பொருள்களுள் உறுதி என்னும் பொருள்பட உரைப்பது தகும்' எனக் குறித்துள்ளார்.
தண்டபாணி தேசிகர் 'ஒருவந்தம்' பற்றிக் கூறுவதாவது: 'இச்சொல் திணைமாலை நூற்றைம்பதும் திருக்குறளுமாகிய கீழ்க்கணக்கு நூல்களிலே மட்டும் மூன்றிடங்களில் ஆட்சி பெற்றது. ஏனைய சங்க நூல்களிலே இல்லை. திணை-150 ல் ஒருவந்தம் அன்றால்-(கார்ப்பருவம் என்பது) உறுதியன்று' எனவும் திருக்குறளில் அதே பொருளிலும் வந்துள்ளன. ஆதலால் இச்சொற்படைப்புக்கும் ஆட்சிக்கும் கூட வள்ளுவரே தந்தையாகிறார் பழைய ஆட்சி அறியப்படுகிற வரையில். பரிமேலழகர் 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம் என்பன ஒரு பொருட்கிளவி' என்பர். ஏகாந்தம் இச்சொல்லின் வடமொழிவடிவம் போலக் காணப்படினும், வேறு, தனித்திருத்தல் முதலான வேறு பொருளதாகவே வடமொழியில் காணப்படுகிறது. பிற்காலத்துத் தமிழ்ச்சொல் அகரமுதலிகள் திருக்குறள் பரிமேலழகருரையைக் கண்டு ஏகாந்தம்-நிச்சயம் என்று பொருள் தருகின்றன. இப்பொருள் தமிழுக்குப் பழமையானதுமன்று; வேறு ஆட்சியும் இல்லை. இம்மொழிப் பொருட் காரணங்காட்ட முற்பட்டார் ஒரு+ஆந்தம் எனப் பிரித்து 'ஒன்றாகிய முடிவு அதாவது உறுதி' என்றனர். சிலர் ஒருவு+அந்தம் எனப் பிரித்து இப்பொருளே காட்டுவர். ஒருவு-ஒரு என்ற பொருளைத் தராது. ஒருவு-வினையடி 'நீங்கு' என்றும் பொருளது. ஆதலால் ஒருவிய-நீங்கிய முடிவினையுடையது. இதுவே முடிவானது; உறுதியானது என்ற பொருளையுங் காணலாம். ஆயினும் அந்தம் வடசொல்லேயாகிறது; விகாரப்பட்ட எண்ணுப் பெயராகிய ஒரு என்னும் தமிழ்ச்சொல்லும் 'அந்தம்' என்ற வடசொல்லும் கலந்து இங்ஙனம் ஆயிற்று எனல் பொருத்தமாகத் தோன்றவில்லை. இதனைக் கலவைச் சொல்லெனக் கொண்டு வள்ளுவர் காலத்தைக் காட்டுங் கருவியாகக் கொள்வர் சிலர். அதற்கு வன்மையான மறுப்பும் வழங்குவர் தெ பொ பழனியப்பப்பிள்ளை. எரிவந்தம்-எரிச்சல் என்பது போல ஒருவந்தம்-ஒன்றானது; துணிவு என்ற பொருளதாய் வந்தம் என்ற பண்பு விகுதி பெற்று வந்தது எனலாம்'.
ஒருவந்தம் என்ற சொற்கு காலிங்கர் கண்ட பெருஞ்செல்வம் என்ற பொருளும் சிறந்து நிற்கிறது.

'ஒருவந்தம்' என்ற சொல்லுக்கு உறுதியாக என்பது பொருள்.

ஆட்சியாளன் குடிகள் நடுங்கும்படியாக ஆட்சிபுரியும் கொடுங்கோலனாய் ஆகிவிட்டால், திண்ணமாக விரைந்து அழிவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வெருவந்த செய்யாமை ஆட்சி நீண்டநாள் நிலைக்கும்.

பொழிப்பு

ஆட்சித்தலைவன் குடிகள் அஞ்சும் செயல்களை எப்பொழுதும் செய்து நடந்துகொள்ளும் வெங்கோலன் ஆகிவிட்டால், அவன் உறுதியாக விரைந்து அழிவான்.