இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0562



கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:562)

பொழிப்பு: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் தண்டிக்கத் தொடங்கும்போது, அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.



மணக்குடவர் உரை: கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார்.
இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: கடிது ஒச்சி - அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி, மெல்ல எறிக - செய்யுங்கால் அளவிறவாமல் செய்க, ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன.
இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஆட்சிச் செல்வம் நெடிய காலம் நிற்றலை விரும்பும் அரசர், குற்றவாளியைத் தண்டிக்கும்பொழுது தண்டனையைக் கடுமையாகக் காட்டி, மென்மையாகச் செய்க. கடிதோச்சுதல், குற்றம் செய்வோர், குற்றம் செய்ய அஞ்சுதலுக்கும், மெல்ல எறிதல் குற்றம் செய்வோர் அழிவினைத் தரும் என்று அஞ்சுதலுக்கு ஆளாவதைத் தவிர்க்கவும் என்பதறிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர், கடிதோச்சி மெல்ல எறிக.


கடிதோச்சி மெல்ல எறிக :
பதவுரை: கடிது- கடினமாக; ஓச்சி-உயர்த்தி; மெல்ல-மெதுவாக, அளவிறவாமல்; எறிக -தண்டிக்க,ஒறுக்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க;
பரிப்பெருமாள்: கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க;
பரிதியார்: குடியானவர்களை மிகுபயங்காட்டி உடனே நல்லது சொல்லுக;
காலிங்கர்: இவ்வாறு ஆகலான் ஒருவரைத் தண்டம் செய்யும் இடத்து முன்னம் அஞ்சுமாறு கடிது செய்வார்போல் காட்டிப் பின் மெல்லெனச் செறுத்து விடுக; [செறுத்து-தண்டித்து]
பரிமேலழகர்: அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி செய்யுங்கால் அளவிறவாமல் செய்க;
பரிமேலழகர் குறிப்புரை: கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. [ஓச்சுதல்-ஓங்குதல். எறிதல்-அடித்தல்]

'கடிதாகச் செய்வாரைப் "போன்று" மெல்லிதாகச் செய்க' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'மிகுபயங்காட்டி உடனே நல்லது "சொல்லுக"' என்பது பரிதியின் உரை. 'முன்னம் அஞ்சுமாறு கடிது செய்வார்போல் காட்டிப் பின் மெல்லெனச் செறுக்க' என்றார் காலிங்கர். பரிமேலழகர் 'அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி செய்யுங்கால் அளவிறவாமல் செய்க' என்பது பரிமேலழகர் வழங்கும் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'வன்மையாக ஓங்கி மெல்ல அடிப்பாராக', 'தண்டனை வழங்கும்போது மிகுதியாகத் தண்டிப்பது போலக் காட்டிக் குறைவாகத் தண்டிக்க வேண்டும்', '(தாம் தண்டிக்க வேண்டியவர்களை) பலமாகக் கண்டித்தாலும் இலேசாக தண்டிக்க வேண்டும்', '(குற்றம் செய்த மக்களைத் தண்டிக்கும்போது) மிகுதியாகச் செய்பவன் போல் தொடங்கி, அளவு மீறாமல் செய்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கடிது செய்வார்போல் காட்டிப் பின் மெல்லெனச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர் :
பதவுரை: நெடிது-நெடு நாளாக; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; நீங்காமை-விலகாமை; வேண்டுபவர்-விரும்புபவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார்.
மணக்குடவர் குறிப்புரை: இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: நெடிதாகி வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுபவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தினுங் குறையச் செய்யவேண்டு மென்றது.
இனி வெருவந்த செய்ததனால் உளதாகும் குற்றம் கூறுகின்றார்.
பரிதியார்: அரசர்க்கு ஆக்கம் மென்மேல் வர்த்திக்க வேண்டுமாகில் என்றவாறு.[வர்த்திக்க-நிலைபெற]
காலிங்கர்: மற்று யார் எனின், தமது நெடிய செல்வம் இடையறாது வேண்டும் அரசர் என்றவாறு. பரிமேலழகர்: ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.

'ஆக்கம் நிலைபெற வேண்டுபவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெடுநாள் ஆக்கம் நிலைக்க விரும்புபவர்', 'தம்மிடம் உள்ள செல்வம் நெடுங்காலம் நீங்காதிருக்க விரும்புபவர்', 'தம்முடைய செல்வமும் சிறப்பும் நெடுநாளைக்குத் (தம்மை விட்டு) நீங்கிவிடாமல் இருக்க விரும்பினால்', 'அரச ஆக்கம் (செல்வம்) நெடுங்காலம் தம்மிடம் இருக்க வேண்டுமென்று விரும்புபவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெடுங்கால மேம்பாடு நீங்காமல் இருக்க விரும்புபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெடுங்கால மேம்பாடு நீங்காமல் இருக்க விரும்புபவர், கடிது செய்வார்போல் காட்டிப் பின் மெல்லெனச் செய்க என்பது பாடலின் பொருள்.
எதற்காக இந்தப் பொய்ம்மை?

கடிதோச்சி என்ற தொடர்க்கு வன்மையாக ஓங்கி என்பது பொருள்.
மெல்ல எறிக என்ற தொடர் மெதுவாக அடிக்க என்ற பொருள் தரும்.
நெடிது ஆக்கம் என்ற தொடர்க்கு நீண்டகால மேம்பாடு என்று பொருள்.
நீங்காமை என்ற சொல் நீங்காமலிருக்க அதாவது நிலைபெற்றிருக்க எனப்பொருள்படும்.
வேண்டுபவர் என்ற சொல் விரும்புபவர் குறித்தது.

நெடுங்கால ஆக்கம் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பும் ஆட்சியாளர் தண்டனை வழங்கும்போது கடுமையாகத் தொடங்கி அளவுடன் செய்ய வேண்டும்.
ஒறுத்தல் வழங்கும்போது, கோலைக் கடுமையாக ஓச்சுவதுபோலக் காட்டி, பின் கடுமையைக் குறைத்துத் தண்டிக்க வேண்டும் என்று பாடல் கூறுகிறது. குற்றத்தை ஆய்வு செய்யும்பொழுது, குற்றம் செய்தவர் மீண்டும் குற்றத்தைத் தொடராமல் இருககும் நோக்கில் அவரை வன்மையாகக் கண்டிக்கவேண்டும். ஆனால் தண்டனையை வழங்கும்போது அதில் மென்மை தோன்ற, அளவுக்கு மிகாதவாறும் இருக்கவேண்டும். ஏனெனில் தண்டனை வழங்கப்பட்டவருக்கு குற்றத்திற்கேற்றாற் போலல்லாமல் மிகையாகத் தண்டனை வழங்கப்பட்டால் வெறுப்புறுவர். நாட்டிலிலுள்ளோரும் ஆள்வோர்மீதான நம்பகத்தன்மையை இழப்பர். மேற்சொன்னவாறு தண்டனை முற்றுவிக்கப்பட்டால் ஆட்சியின் நீட்சி நிலைபெறும்.

ஆய்வு செய்து குற்றவாளியெனத் துணியப்பட்டவனுக்குத் தண்டம் கொடுக்கும்போது வன்மையாக ஓங்கி மெல்ல அடிப்பாராக என்று தண்டனை நடைமுறைப்படுத்தப்படவேண்டிய முறை பற்றிப் பேசுகிறது இக்குறள்.
'கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க', 'தக்க தண்டம் விதித்துப் பயங்காட்டிப் பின்னர் அவன் திருந்த நல்லது சொல்க', 'அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி அளவிறவாமற் செய்க' என்றபடி இக்குறளுக்கு தொல்லாசிரியர்கள் விளக்கம் செய்தனர்.
குற்றஞ் செய்வார் அஞ்சும் பொருட்டு, கல்லெடுத்து ஓங்கி எறிவார் போல் காட்டி எறியுமிடத்து மெல்லென எறிதல் போலச் செய்க என்று இக்குறட்பொருளை நயமாக விளக்குகிறது ஓர் பழைய உரை. அது போலவே ஆசிரியர் மாணாக்கனுக்குத் தண்டனை தரும்பொழுதும் பெற்றோர் தம் மக்களைக் கண்டிக்கும்பொழுதும் கோலை உயர்த்திக் காட்டி அடிக்காமல் விட்டுவிடுவர் அல்லது மெல்ல அடிப்பர் என்ற பொருளில் பின்வந்தவர்கள் உரை செய்தனர்.

'கடிதோச்சி' என மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர ஆகியோர் பாடம் கொள்ளக் 'கடிதோக்கி' எனக் காலிங்கர் கொள்வர். 'எறிதல், வீசுதல் என்னும் பொருளில் அமைந்த கடிதோச்சி என்பதைவிட உயர்த்தல், ஓங்குவித்தல் என்ற பொருள்அமைந்த கடிதோக்கி என்பது பொருட்சிறப்புடையது; மேலும் அடுத்துவரும் நெடிதாக்கம் என்பதனோடு எதுகைச் சிறப்புடையதாகி ஓசை நயமும் ஊட்டும்'(இரா சாரங்கபாணி).

எதற்காக இந்தப் பொய்ம்மை?

குற்றம் செய்தவனை அவன் அஞ்சும் அளவு வேகமாக ஓங்கி அடிப்பது போல் பாவனை செய்து, உண்மையில் தண்டிப்பது என்று வரும் போது அளவு மீறாது மெல்ல அடிக்க வேண்டும் என்கிறது பாடல். தண்டிக்கும் போது கடுமைக் காட்டிக் குறைவாகத் தண்டிக்க வேண்டும் என்பது கருத்து.
எதற்காக இப்படி சிறு நடிப்பை அரங்கேற்றலாம் என்கிறது குறள்? இது ஒரு பொதுநலம் கருதிய பொய்ம்மை. ஓங்கிய அளவில் அடிக்காமல் ஒரு கை குறைந்து அடிப்பது என்பது, அச்சமும் தரவேண்டும் ஆறுதலும் தரவேண்டும் என்பதைக் குறிக்கிறது. தண்டனையில் கடுமையும் அதை நிறைவேற்றுவதில் கண்ணோட்டமும் காட்டவேண்டும். தண்டிப்பதில் கடுமை காட்டுவதுபோல் காட்டிக் குற்றம் புரிந்தவன் நாண் கொள்ளும்படி மென்மையான ஒறுத்தல் செய்யச் சொல்கிறார். தண்டனை குற்றவாளியை அழிப்பதற்கல்ல; அவனைத் திருத்த வேண்டியதே நோக்கமாகக் கொண்டதாகும். எனவே அரசு வழஙுகும் தண்டனை அச்சத்தைத் தோற்றுவிக்க வேண்டும்; ஆனால் அழித்துவிடக்கூடாது.
ஒருவன் தொடர்ந்து குற்றங்கள் செய்யாதிருக்கவும், ஏனைய மக்கள் அம்மாதிரிக் குற்றம் செய்யாமலிருக்கும் பொருட்டு அச்சமூட்டவும் தான் தண்டனைமுறை உள்ளது. கடுமையான விசாரணைகூட ஒருவன் செய்த குற்றத்தின் வீச்சை உணர்ந்து கொள்ள வழிசெய்யும். பின்னர் குறைவான தண்டனை அளிப்பதன் மூலம் குற்றம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்தத் தண்டனையே அச்சம் தருவதற்குப் போதுமானதாகும் என்ற அளவில் கடுமையாகத் தண்டிப்பது போல பயங்காட்டி மென்மையானதாக தண்டனை அமைதல் வேண்டும் என்பது செய்தி.

'கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாரும் அஞ்சுவதலான செயல்களைச் செய்யாமைப் பொருட்டுமாம்' என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்.

ஒறுத்தலிலும் குடிமக்கள் மிரள்வது போன்ற சூழலை ஆள்வோர் உருவாக்கக் கூடாது என்பது கருத்து.

நெடுங்கால ஆக்கம் நீங்காமல் இருக்க விரும்புபவர், கடிது செய்வார்போல் காட்டிப் பின் மெல்லெனச் செய்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தண்டனை என்ற பெயரில் குடிமக்கள் வெருவந்த செய்யாமையை அறிவுறுத்த அமைந்த பாடல்.

பொழிப்பு

நெடுங்கால மேம்பாடு நீங்காமல் இருக்க விரும்புவர், மிகையாகக் கடிவது போலக் காட்டி, அளவுடன் தண்டிக்க வேண்டும்.