வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
(அதிகாரம்:தெரிந்து வினையாடல்
குறள் எண்:518)
பொழிப்பு: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.
|
மணக்குடவர் உரை:
இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக.
இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.
பரிமேலழகர் உரை:
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க.
(உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)
வ சுப மாணிக்கம் உரை:
வினைக்குத் தக்கவன் என்று தெளிந்தபின்பு அவனை முழுப்பொறுப்பு உடையவன் ஆக்குக.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குரியனாகச் செயல்.
|
வினைக்குஉரிமை நாடிய பின்றை:
பதவுரை: வினைக்கு-செயலுக்கு; உரிமை-உரியனாந்தன்மை; நாடிய-ஆராய்ந்த; பின்றை-பின்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு;
பரிப்பெருமாள்: இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்;
பரிதி: ஒருவன் ஒரு காரியத்துக்கு வல்லவனாகில்;
காலிங்கர்: வேந்தன் ஒருவனைத் தனது கருமத்திற்கு 'இனி இவனும் உரியன்' என்பதோர் உரிமை ஆராய்ந்து அமைந்த பின்பு யாது செய்யத் தகுவது எனின்;
பரிமேலழகர்: ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்;
'வினை செய்தற்கு உரியவனென்று ஆராய்ந்த பின்பு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தொழில் செய்வதற்குரியவனை ஆராய்ந்து தெளிந்த பின்', 'காரியத்தைச் செய்யத் தகுதி உள்ளவன் என்று அறிந்த பின்', 'ஒருவனை ஒருவேலைக்குத் தகுதியுடையன் என்று துணிந்தபின்', 'வினை செய்தற்குரியவனைத் தேடி அடைந்த பிறகு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செயல் முடித்தற்கு உரியவனைத் தேடி அடைந்த பிறகு என்பது இப்பகுதியின் பொருள்.
அவனை அதற்குரிய னாகச் செயல்:
பதவுரை: அவனை-அவனை; அதற்கு-அதனுக்கு; உரியனாக-உடைமையாளனாக; செயல்-செய்க.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.
பரிப்பெருமாள்: அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒழிந்த காரியங்களில் வினை செய்வாரை ஆக்குமாறு.
பரிதி: அந்தக் காரியத்துக்கு அவனையே நாட்டுக என்றவாறு.
காலிங்கர்: மற்று அவனை எவ்வாறு பேணி ஆக்கினால் உரிமையாம். மற்று அவ்வாறு அனைத்தும் ஆக்கிய பின்பு மற்று அதற்கு உரியனாகச் செய்க என்றவாறு.
பரிமேலழகர்: பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: உயரச்செய்தலாவது: அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.
'அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஐயுறாது அவனை அத்தொழில் செய்வதற்கு உரியவனாக்குக', 'அந்தக் காரியத்துக்கு அவனையே பொறுப்பாளியாக்கிவிட வேண்டும்', 'அவ்வேலைக்குப் பொருத்தமானபடி அவனை உயர்த்துக', 'அவனை அவ்வினைக்குரிய முழுப்பொறுப்பாளியாக்கி விடல் வேண்டும். (அரசர் அல்லது தலைவர் தலையீடு கூடாது)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அவனை அச்செயலுக்கு உடைமையாளனாகச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செயல் நிறைவேற்றுதற்கு உரியவனைத் தேடிக்கண்ட பிறகு, அவனிடம் செயலின் முழு ஆளுமைப் பொறுப்பையும் ஒப்படைத்து விடுக.
செயல் முடித்தற்கு உரியவனைத் தேடி அடைந்த பிறகு, அவனை அதற்குரியனாகச் செயல் என்பது பாடலின் பொருள்.
'அதற்குரியனாகச் செயல்' என்ற தொடரின் பொருள் என்ன?
|
வினைக்கு என்ற சொல்லுக்குச் செயலுக்கு என்பது பொருள்.
உரிமை என்ற சொல் இங்கு உரியனாக உள்ளமை என்று பொருள்.
நாடிய என்ற சொல்லுக்குத் தேடிய என்று பொருள்.
பின்றை என்ற சொல் பின்பு குறித்தது.
|
ஒருவனை ஒரு செயல் ஆற்றுவதற்கு ஏற்றவனாக தேர்ந்தெடுத்த பிறகு. அவனை அச்செயலுக்கு உரிமையுடையவனாகச் செய்ய வேண்டும்.
இக்குறள் ஒருவரிடம் வினைப் பொறுப்பை ஒப்படைப்பது பற்றியது.
ஒருசெயலை முடித்தற்கு இவரே உரியர் என்று ஆராய்ந்து தேர்வு செய்துவிட்டு, அவரிடம் முழுப்பொறுப்புகளையும் விட்டுவிடவேண்டும் என்கிறது பாடல்.
'வினைக்கு உரிமை நாடுதல்' என்றதற்கு செயலை ஏற்றுக்கொள்ளுவதற்குரியவனைத் தேடுதல் எனப் பொருள் கொள்ளலாம். உரிமை நாடிய பின், தலைவன் வினைக்கு உரியரிடம் செயலை-அதிகாரத்தை ஒப்படைக்கிறார் (Delelegation). அங்ஙனம் ஒப்படைத்த பிறகு, 'அதற்குரியனாகச் செயல்' அதாவது செயலுக்கு உடைமையாளனாக ஆக்குவது நிகழ்கிறது. செயலுக்கு உரியவன் செயலுக்கு உரிமையாளன் ஆகிறான். இவ்வாறாக, பொறுப்பேற்றவன் செயலுக்கு உரியனாகச் செய்யப்படுகிறான்.
|
'அதற்குரியனாகச் செயல்' என்ற தொடரின் பொருள் என்ன?
செயல் செய்யத் தக்கவன் என்று தெளிந்தபின் அவன் செயலாளன் ஆகிறான்.
வினை முற்றும் நிறைவேற அவன் வினைக்கு உரியனாகச் செய்யப்படவேண்டும். இதை 'அதற்குரியனாகச் செயல்' என்கிறார் வள்ளுவர். இத்தொடர் அந்தச் செயலை முடிக்க வேண்டிய எல்லாப் பொறுப்புகளையும் அவற்றிற்கான அதிகாரத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிடுவதைக் குறிப்பது.
முழுப்பொறுப்புகளையும் ஒப்படைப்பது என்பது வினை செய்தற்கு உரியவனென்று உறுதியான பிறகு அவனுக்கு முழு அதிகாரம் கொடுத்து விடுவதைக் குறிப்பது. ஒருவருக்குப் பொறுப்பை அளித்த பின்னர் அவருக்கு அந்த பதவிக்கு தகுந்த அதிகாரம் மற்றும் அந்தப் பணிகளை முடிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். செயல் தொடர்பான முடிவு எடுக்கும் உரிமைகள் முழுவதுமாக வழங்கப்படவேண்டும். அதன்பின் வினைசெய்வான் அந்தச் செயலைத் முடிக்கப் பெருவிருப்பம் கொண்டு செயலாற்றுவான்.
செயல் முடியும் வரை தலைவன் பொறுப்பு ஏற்றுக்கொண்டவரைப் பொதுவாக கண்காணிப்பு மேற்பார்வை செய்யலாமே தவிர ஒவ்வொரு கட்டத்திலும் பணிக்கு இடையூறு விளைக்கும் வகையில் அவர் பணியில் தலைவனது அல்லது பிறரது தலையீடு இருக்கக்கூடாது. பொறுப்புகள் வழங்கப்பட்டபின், ஊடே ஊடே தலையிட்டும், இடையிட்டும், முட்டுக்கட்டையிடுவதும், முரண்படுவதும், இருபாலும் கேடாகித் தீமைக்கும் செயல்படாமைக்கும் இடமாக்கிவிடும். தடையேற்படும்போது தானாகவே முடிவு எடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் எடுத்த செயலை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். வள்ளுவர் இக்கருத்தை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் 'அதற்குரியனாகச் செயல்' என்ற தொடர் மூலம் தெரிவிக்கிறார்.
ஒருபுறம் செயலுக்கான முழு அதிகாரங்கள் பெற்றதால், மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு செயலை நிறைவேற்ற ஊக்கம்பெறுவான். மறுபக்கம், இன்றைய மேலாண்மை இயலார் கூறும் பணி உடைமை உணர்வு (owning the job) என்பதற்கு ஏற்ப, செயலை தன் உடைமையாக எண்ணி, செயலில் அவனுக்கு அன்பு அல்லது காதல் ஏற்பட்டு, அச்செயலில் முழுப்பொறுப்புணர்ச்சியுடன் தன் திறமை முழுவதையும் காட்டுவான். இவ்விதமாக அப்பணியில் அவனது ஆற்றல் கூடும். செயல் உடைமை பெற்றவன் பணிவரையறையும் தாண்டி உழைத்து ஒவ்வொரு செயலிலும் அவனது கைவண்னம் வெளிப்படுமாறு செயல்படுவான்.
'அதற்குரியனாகச் செயல்' என்பது செயலுக்கு முழுஉரிமை அளிப்பதைக் குறிக்கும்.
|
செயல் முடித்தற்கு உரியவனைத் தேடி அடைந்த பிறகு, அவனை அச்செயலுக்கு உடைமையாளனாகச் செய்க என்பது இக்குறட்கருத்து.
முழு உரிமை வழங்கி செயல் ஆளப்படவேண்டும் என்னும் தெரிந்து வினையாடல் பாடல்.
செயலுக்கு உரியவன் என்று கண்டறிந்த பின்பு செயலை அவனுக்கு உடைமை ஆக்குக.
|