இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:517)

பொழிப்பு (மு வரதராசன்): இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.மணக்குடவர் உரை: இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக.
இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.
(கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு உரியனாக்குதல்.)

வ சுப மாணிக்கம்: உரை: இச்செயலை இம்முறையான் இவன் முடிப்பான் என்று தெளிந்து வினையை ஒப்படைக்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்.

பதவுரை:
இதனை-இச்செயலை; இதனால்-இம்முறையால்; இவன்-இவன்; முடிக்கும்-நிறைவேற்றும்; என்று-என்பதாக; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; அதனை-அதை; அவன்கண்-அவனிடத்தில்; விடல்-விடுக.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு;
பரிப்பெருமாள்: இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லனென்று ஆராய்ந்த பின்;
பரிதி: இந்தக் காரியத்தை இன்ன காரியத்தினானே இவன் முடிக்கும் என்று அறிந்து;
காலிங்கர்: இக்கருமத்தை இதனால் இவன் பற்றி முடிக்க வல்லான் என்று ஆராய்ந்து தெளிந்தபின்;
பரிமேலழகர்: இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து;

'இவ்வினையை இக்கருவியாலே/காரியத்தினானே/இதனான் முடிக்க வல்லான்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இச்செயலை இம்முறையான் இவன் முடிப்பான் என்று தெளிந்து', 'இச்செயலை இக்கருவியால் இவன் செய்து முடிக்க வல்லவன் என்று ஆராய்ந்து பின்', 'இச்செயலை இன்ன வழியில் இவன் முடிப்பான் என்று ஆராய்ந்து', 'இச் செயலை இவ்வழியால் இவன் முடிக்க வல்லவன் என்று நன்கு ஆராய்ந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இச்செயலை இவன் இம்முறையால் முடிக்கத் திறன் உடையவன் என்று ஆராய்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

அதனை அவன்கண் விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக.
மணக்குடவர் குறிப்புரை: இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.
பரிப்பெருமாள்: அக்கருமத்தினை அவன்கண் விடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறப்பட்டது.
பரிதி: அந்தக் காரியத்து அவனையே நாட்டுக என்றவாறு.
காலிங்கர்: மற்று அக்கருமத்தை அவனிடத்து விடுக; எனவே, இனிச் சிறுதும் அல்லவாம் என்று கருதாது ஆங்கு அமைந்து ஒழுக என்றவாறு.
பரிமேலழகர்: மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.

'அவ்வினையை அவன்கண்ணே விடுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வினையை ஒப்படைக்க', 'அச்செயலை அவனிடத்து விடுக', 'அவனிடம் அவ் வேலையை ஏற்பித்தல் வேண்டும்', 'மூன்றும் பொருந்திய விடத்து அவ்வினையை அவனிடம் விடுக' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அச்செயலை அவனிடத்தில் ஒப்படைத்து விடுக என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
இச்செயலை இதனால் முடிக்கத் திறன் உடையவன் என்று ஆராய்ந்து அதை அவனிடத்தில் ஒப்படைத்து விடுக என்பது பாடலின் பொருள்.
'இதனால்' என்ற சொல் எது குறித்தது?

ஒரு செயலை இவ்வவ் வழிமுறைகளால் இவன் கையாண்டு முடித்தல் கூடும் என்பதைக் கண்டறிந்து அதை அவனிடம் ஒப்படைக்கவேண்டும்.

என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்று ஆராய்ந்தபின், ஒரு பணியினைத் தொடங்கும் முன்னர், யார் அதைச் செம்மையாகச் செய்து முடிக்க வல்லவர் என்பது தீர்மானிக்கப்படவேண்டும். இந்தச் செயலை இந்தக் கருவிகளால் இவன் செய்வான் என்பதைத் தேர்ந்து தெளிந்து அவனை அந்தப் பணிக்கு உரியவனாக்கி அதற்கு பொறுப்பாளனாக்க வேண்டும். செயல், செய்முறைகள், செயலை முடிக்கக்கூடியவன் இம்மூன்றும் பொருந்திய விடத்து அச்செயலை அவனிடம் விடுக என்கிறது பாடல்.
சில குறிப்பிட்ட பணிகளைக் குறிப்பிட்ட சில பேரால்தாம் திறம்படச் செய்ய முடியும். அப்படி எந்த முறைகளால் ஒருவன் செயலைச் செய்து முடிக்கத்தக்கவன், அவன் அம்முறைகளில் பயிற்சி உடையவனா என்று தீர ஆராய்ந்து அதன்பின் அந்தச் செயலை அவனிடத்தில் ஒப்படைக்க வேண்டும். 'விடல்' என்றதற்குச் செயலை அவனிடம் ஒப்படைத்து விட்டுவிடவேண்டும் அதாவது அச்செயலை அவனுக்கு உரியதாக்கி அதன்பின் செயல் முடியும்வரை அவன் பொறுப்பிலேயே முழுவதுமாக விட்டுவிடவேண்டும் என்பது பொருள்.
பணியாளரைத் தேர்ந்தெடுத்தல் போலவே பொறுப்பை வரையறுத்து, செயலை ஒப்படைத்தலும் முக்கியமானதாகும் என்ற கருத்து சொல்லப்பட்டது.

ஒரு கருத்தைப் பொதுமைப் படுத்துவதற்கு இக்குறள் சிறந்த சான்றாகக் காட்டப்படுகிறது. இப்பாடலின் கருத்தை எந்தவொரு பணிமேலாண்மை சூழலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 'இதனை' என்ற இடத்தில் எந்தப் பணியை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இதனால் என்ற இடத்தில் எந்த ஓர் உத்தியையோ, கருவியையோ சாதனத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம். 'இவன்' என்ற இடத்தில் எந்த ஒரு பணியாளரையோ, அலுவலரையோ வல்லுநரையோ போட்டு நிரப்பிக் கொள்ளலாம். 'இதனை' என்பது இன்றிலிருந்து பல நூற்றாண்டுகட்குப் பின்னர் எழக்கூடிய பிரச்சினைக்கும் 'இதனால்' என்பது இன்று நாம் அறிந்திராத, இன்று நாம் எண்ணியும் பார்க்காத, எதிர்காலத்தில் உருவாகக் கூடிய ஓர் உத்திக்கும், சாதனத்திற்கும், கருவிக்கும் 'இவன்' என்பது எவ்வகைப்பட்ட வினைஞருக்கும் பொருந்தும் (வா செ குழந்தைசாமி).
இக்குறள் அரசியலாரைத் தேர்ந்தெடுக்கப்படும் முறைக்கும் பொருந்தக்கூடியது. மக்களாட்சியில் பங்குபெறும் மாந்தர் தங்களுக்கான தலைவரை (ஊராட்சி, நகராட்சி, சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை) தேர்ந்தெடுக்கும்போதும், அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த நாட்டை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும்போதும் இக்குறளைக் கற்றுத் தெளிதல் நல்லது.

'இதனால்' என்ற சொல் எது குறித்தது?

இதனால் என்பது பொதுச்சொல். எதை வேண்டுமானாலும் குறிக்கலாம். இப்பாடலில் என்ன பொருளில் வந்துள்ளது?
'இதனால்' என்பதற்கு இன்ன கருவியால், துணைவரும் பொருளால், இன்ன காரியத்தினாலே, இன்ன வகையால், இன்ன காரணத்தால், இம்முறையான், காரணத்தால்-இடத்தால், பிற சாதனங்களால், இவ்வழியால், இன்ன ஆள் பலத்தாலும் பொருள் பலத்தாலும் எனப்பலவாறு பொருள் கூறினர்.
'இதனால்' என்ற சொல்லுக்கு மணக்குடவர் உரையைப் பின்பற்றி பரிமேலழகரும் 'இக்கருவியால்' என்று பொருள் கூறினார். பரிமேலழகர் கருவி என்பதற்குத் 'துணைவரும் பொருளும் முதலாயின' என்று விரிவுரையில் கூறினார்; முதலாயின என்றது காலம், இடம், படை முதலியவற்றைக் குறிக்கும் என்றனர். மேலும் பரிமேலழகர் வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல்' எனவும் சிறப்புரையில் கூறினார். இதற்கு விளக்கமாக தொழிலோடு கருவிக்கும் செய்பவனுக்கும் கருவியோடு தொழிலுக்கும் செய்பவனுக்கும் செய்பவனோடு தொழிலுக்கும் செய்பவனுக்கும் செய்பவனோடு தொழிலுக்கும் கருவிக்கும் பொருத்தம் உண்டாதல் என விளக்கினர். 'இதனால்' என்பதற்கு 'இந்தக் காரணத்தால்' என்பதுதான் பொருள் என்பார் நாமக்கல் இராமலிங்கம். இதுவும் பொருத்தமானதே. அவ்வாறு கொள்ளும்போது இக்குறளுக்கு 'இவ்வினையை இன்ன காரணங்களால் இவன் செய்து முடிப்பான் என ஆய்ந்து' என உரை கிடைக்கும்.

'இதனால்' என்பதற்கு இன்ன செய்முறையால் என்பது பொருத்தம்.

இச்செயலை இவன் இம்முறையால் முடிக்கத் திறன் உடையவன் என்று ஆராய்ந்து அச்செயலை அவனிடத்தில் ஒப்படைத்து விடவேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினை முடித்தற்கான செய்முறை அறிந்தவனைத் தெரிந்து வினையாடல் செய்யவேண்டும்.

பொழிப்பு

இச்செயலை இம்முறையான் இவன் முடிப்பான் என்று தெளிந்து அச்செயலை அவனிடத்து ஒப்படைக்க.