இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0516



செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:516)

பொழிப்பு: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.

பரிமேலழகர் உரை: செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
(செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)

இரா இளங்குமரனார் உரை: செயலைச் செய்ய வல்லவனை ஆராய்ந்து செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யும் காலத்தொடும் பொருந்துமாறு ஆராய்ந்து செய்தல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.


செய்வானை நாடி வினைநாடிக்:
பதவுரை: செய்வானை-செய்பவனை; நாடி-ஆராய்ந்து; வினை-செயல்; நாடி-ஆராய்ந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து;
பரிதி: ஒரு காரியம் செய்யவல்லவனுமாய் அவன் குணத்தையும் அவன் நடக்கிற நீதியையும்; .
காலிங்கர்: கீழ்ச்சொன்ன வகையானே வினை செய்யத் தகுந்த (வினையும் ஆராய்ந்)து, வென்றதனையும் ஆராய்ந்து;
பரிமேலழகர்: முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து;
பரிமேலழகர் குறிப்புரை: செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன.

'வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்பவன் தன்மையையும் செய்யும் செயலையும்', 'தொழில் செய்பவனது இயல்பினை ஆராய்ந்து அவன் செய்யும் தொழிலின் இயல்பையும் ஆராய்ந்து', 'வேலை செய்பவனுடைய திறத்தை ஆராய்ந்து, செய்யப்படும் வேலையையும் ஆராய்ந்து', 'வினை செய்ய வருவானை நன்கு ஆராய்ந்து அவன் செய்யவிருக்கும் வினையையும் நன்கு ஆராய்ந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

திறமாகச் செய்பவனைத் தேடிக்கண்டு, செயல் நோக்கம் குறிக்கொண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

காலத்தோடு எய்த உணர்ந்து செயல்:
பதவுரை: காலத்தோடு-குறித்த காலத்தில்; எய்த-அடைய; உணர்ந்து-தெரிந்து; செயல்-செய்விக்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்
பரிப்பெருமாள்: அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்தபின் அவ்வினையை அவன் செய்வானாகப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வினையினது இயல்பு கூறினார். இது செய்விக்குமாறு பொதுவாகக் கூறிற்று.
பரிதி: காலா காலங்களையும் இந்த மூன்று காரியத்தையும் விசாரித்துச் செய்வன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனை அதற்கு ஏற்ற காலத்துடன் அடுக்குமாறு குறிக்கொண்டு செய்க அரசர் என்றவாறு.
பரிமேலழகர்: பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'வினை முடியுங்காலத்தோடு பொருந்த வினை செய்வானாக அமைக்க' என்று இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'வினைக்கு ஏற்ற காலத்துடன் அடுக்குமாறு குறிக்கொண்டு செய்க' என்றுரைத்தார். பரிமேலழகர் 'செய்வானையும் வினையையும் காலத்தோடு பொருந்த வினை ஆள்தலைச் செய்க' என்று பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏற்ற காலத்தையும் உணர்ந்து செய்க', 'ஏற்ற காலத்தோடு பொருந்த உணர்ந்து ஒருவனைத் தொழில்புரியச் செய்க', 'காலத்தின் இயல்பையும் அவற்றோடு ஆராய்ந்து வேலை ஏவுதல் வேண்டும்', 'பின் அவனையும் அவ் வினையையும் காலத்தோடு பொருத்தி ஆராய்ந்து அறிந்து (இக்காலத்தில் இவ்வினையை இவனே செய்தற்குரியவன்' என்று கண்டால்) வினை செய்யவிடுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இன்ன காலத்தில் முடிப்பது என்ற அறிதலோடு செய்விக்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
திறமாகச் செய்பவனைத் தெரிந்து, செயல் நோக்கம் குறிக்கொண்டு, இன்ன காலத்தில் முடிப்பது என்ற அறிதலோடு செய்விக்கப்பட வேண்டும்.

திறமாகச் செய்பவனைத் தேடிக்கண்டு, செயல் நோக்கம் குறிக்கொண்டு, காலத்தோடு எய்த அறிந்து செய்க என்பது பாடலின் பொருள்.
'காலத்தோடு எய்த' என்பதன் பொருள் என்ன?

செய்வானை நாடி என்ற தொடர்க்கு செயல் செய்பவனை தேடிக் கண்டு என்பது பொருள்.
வினைநாடி என்பது செயல் நோக்கம் குறிக்கொண்டு என்ற பொருள் தரும்.
உணர்ந்து என்ற சொல்லுக்கு அறிந்து என்று பொருள்.
செயல் சென்ற சொல்லுக்கு இங்கு செய்விக்க வேண்டும் என்று பொருள் கொள்வர்.

செயலை ஆற்றவல்லவனைத் தேடிக் கண்டு. செய்யவிருக்கும் வினையின் நோக்கத்துடன், இன்ன காலத்தில் அதை முடிக்க உணர்த்தி வினையை ஆள்தல் வேண்டும்.

என்ன செய்யவேண்டும், அதை யார் செய்ய வேண்டும் எக்காலத்தில் செய்யவேண்டும் என்பதை இயைத்துச் செய்க என்று கூறுகிறது இப்பாடல். ஒரு செயலைப் பிறரிடம் ஒப்படைக்கும் முன்பு செய்யப்போகிறவன், அவனை ஏவும் வேலையின் குறிக்கோள், தொடங்கி முடிக்கும் காலம் இவற்றை நோக்க வேண்டும். வினைசெய்வோரை வினையில் ஆட்படுத்து முன்னர், செயலைச் செய்தற்குரிய தகுதியுடையவனும் வினையின் நோக்கமும் அச்செயல் நிறைவேறுதற்குரிய காலநேரமும் ஒத்திசையுந்து அமைந்துள்ளதா என்று அறியவேண்டும். இவனால் இவ்வினை செய்து முடிக்கப்படும் என்று தெளிந்து, செய்யும் வினையின் குறிக்கோளைத் தெளிந்து, அதை செய்யத்தக்க காலத்தையும் கருதி, குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கலாம் என்பதை உறுதி செய்த பின்னர் வினையாடல் செய்யவேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதில் செய்வோர் திறன், செயலின் நோக்கம், செயற்பாடுறும் காலம் ஆகிய மூன்றும் ஒத்திசைந்தாலே செயல் வெற்றியாகும் என்பது கருத்து.
இக்குறளில் செய்வானை நாடி, அதன் பின்னர் வினை நாடி' என வருவதால் செய்வான் தேர்ந்தெடுக்கப்பட்டபின் செய்யப்போகிற வினை தேடவேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது. செயலே முதலில் முடிவாவது. அதன் பின்னரே செய்வான் வருவான், அதற்கு அடுத்து செய்யப்படும் காலம் தீர்மானிக்கப்படும். செயலின் நோக்கம் காலத்தில் நிறைவேற உரியவனை நாடவேண்டும் என்பதுதான் கருத்து.
காலத்தொடு எய்த உணர்தலை வலியுறுத்துவதே இக்குறளின் நோக்கம் என்பதை எளிதில் அறியலாம்.

'காலத்தோடு எய்த' என்பதன் பொருள் என்ன?

'காலத்தோடு எய்த உணர்ந்து' என்ற பகுதிக்கு
முடியுங்காலத்தொடு பொருந்த அறிந்து என்றும்
கால அகாலாங்கள் [செய்யத்தக்க காலம் - செய்ய்த தகாத காலம்] அறிந்து என்றும்
ஏற்ற காலத்துடன் அடுக்குமாறு குறிக்கொண்டு என்றும்
காலத்தொடு படுத்துப் பொருந்த அறிந்து (அதாவது இக்காலத்து இவ்விலக்கணம் உடையான் செய்யின் இத்தகைய வினைமுடியும் என்றுணர்தல்) என்றும்
எந்தெந்த காலத்தில் எதை எதைச் செய்யவேண்டும் என்று அறிந்து செய்தல் என்றும்
தொடங்குங்காலம், செய்யுங்காலம் முடிக்குங்காலம் உணர்தல் என்றும்
உரைகாரகள் பொருள் கூறினர்.
குறித்த காலத்தில் வினை செய்து முடிக்கப்பட வேண்டும் என்பது பொருத்தமான விளக்கமாகும்.

'காலத்தோடு எய்த' என்பதற்கு காலத்தில் முடிக்க என்பது பொருள்

திறமாகச் செய்பவனைத் தேடிக்கண்டு, செயல் நோக்கம் குறிக்கொண்டு, இன்ன காலத்தில் முடிப்பது என்ற அறிதலோடு செய்விக்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கால எல்லைக்குள் செயலை முடிக்க தெரிந்து வினையாடல் செய்யவேண்டும்.

பொழிப்பு

செய்பவன் தன்மையை தெரிந்து, செயலின் நோக்கம் குறிக்கொண்டு, உரிய காலத்தையும் உணர்ந்து செய்க.