எனைவகையான் தேறியக் கண்ணும்:
பதவுரை: எனை-எல்லா; வகையான்-திறத்தால்; தேறியக்கண்ணும்-தெளிந்தபோதும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும்;
பரிதி: நானாவகையினாலும் ஒருவனை விசாரித்து;
காலிங்கர்: உலகத்து அரசர் ஒருவரை எனைத்து வகையானும் தெளிந்த இடத்தும்;
பரிமேலழகர்: எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்;
'எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வாறு தெளிந்தாலும்', 'எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து வேலையில் வைத்தாலும்', 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலும்', 'எப்படிப்பட்ட வகையிலும் ஆராய்ந்து தெளிந்தபின்னும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும் என்பது இப்பகுதியின் பொருள்.
வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்:
பதவுரை: வினை-செயல்; வகையான்-இயல்பினால்; வேறு-மாறுபாடு; ஆகும் மாந்தர்-மக்கள்; பலர்-பலர்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.
பரிதி: நம்பினான் அவனிடம் உறவின் முறையில்லாதவன் வேறுபடும் என்றவறு.
காலிங்கர்: பின்னும் கரும வகையினால் வேறுபட்டு நிற்கும் மாந்தர் உலகத்துப் பலர் உளர் ஆகலின், அதனால் தாம் பிறர்க்குச் செய்யும் கருமத்தின்கண் வரும் பொருள் முதலாகிய பேறுகண்ட இடத்துத் தமது நெறியினைத் தேராது புரியநிற்கும் புல்லிமையுடையோரும் உளர்; ஆகலாற் பெரிதும் தெரிந்து வினை அடைக்கவேண்டும் என்றவாறு.
[புல்லிமையுடையோரும் - இழிதகையுடையோரும்; அடைக்கவேண்டும் - ஒப்படைக்க வேண்டும்].
பரிமேலழகர்: அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.
செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உறவின் முறையில்லாதவன் வேறுபடும் என்றுரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'காரியத்தின் போது வேறாக நடப்பவரே மிகப் பலர்', 'செய்கின்ற தொழில் வகையாலே மனம் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலராவர்', 'குறிப்பிட்ட காரியத்தின் விவரமறிந்து செய்யத் தெரியாதவர்களே அதிகமாக உள்ளவர்கள்', 'வேலையில் அமர்ந்தபின் அதன் முறையினாலே தமது நல்ல தன்மையின் மாறுபடும் மக்கள் உலகத்திலே பலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
செயலின் இயல்பால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.
|