இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0513



அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:513)

பொழிப்பு (மு வரதராசன்: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

மணக்குடவர் உரை: அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.

பரிமேலழகர் உரை: அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
(இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தலைவனிடம் அன்பு, செயலறிவு, தெளிவுபெறும் திறன், ஆசையின்மை என்னும் நான்கு குணங்களையும் நன்கு உடையவனிடத்தே நம்பிக்கை வைக்க வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.

பதவுரை: அன்பு- தொடர்புடைய மாட்டு உளதாகும் உள்ள நெகிழ்ச்சி, இங்கு செயலின் மீது அன்பு; அறிவு- அறிவு, இங்கு தொழிலறிவு; தேற்றம்-தெளிந்த சிந்தனையுடைமை, கலங்காமை; அவா-விருப்ப நினைவு; இன்மை-இல்லாதிருத்தல்; இந்நான்கும்-இந்த நான்கும்; நன்கு-நன்றாக, நிலைபெற; உடையான்-உடையவன்; கட்டே-இடத்ததே; தெளிவு-தேர்வு (செய்யலாம்), ஆராய்ந்து துணிதல்.


அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும்;
பரிப்பெருமாள்: அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும்;
பரிதி: அன்புடைமை அறிவுடைமை அவாவின்மை தெளிவுடைமை;
காலிங்கர்: நட்டார் சுற்றத்தார் ஆயினும் ஆக; அன்றிப் பிறரே ஆயினும் ஆக; யாவன் ஒருவன் தன்மாட்டு அன்பும், காரியா காரியங்கள் தேறித் தெளியவல்ல அறிவும், தமது உயிரும் பொருளும் அவனுழைப் பெரிதும் தேறலாவதோர் தேற்றமும், மற்றும் நெறியல்லனவற்றின் கண்ணே அவாவின்மையும்;
பரிமேலழகர்: அரசன் மாட்டு அன்பும், அவனுக்கு ஆவன அறியும் அறிவும், அவை செய்தற்கண் கலங்காமையும், அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய; [ஆவன - அனுகூலமானவற்றை]

'அன்புடைமை அறிவுடைமை தெளிவுடைமை அவாவின்மை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை', 'நம்மிடத்தில் அன்பு, குறிப்பிட்ட காரியத்துக்கு வேண்டிய அறிவு, அதைச் செய்து முடிக்கும் திறமை, நமக்காக அவனிடத்தில் வருகிற பணத்தின்மேல் ஆசை கொள்ளாத குணம்', 'அன்பும் ஆகவேண்டியதை அறியும் அறிவும் கலங்காமையும், கையுறை முதலியவற்றை விரும்பாமையும்', 'அன்பும் அறிவும் தெளிவும், பொருளைத் தனக்கென விரும்பும் தன்மை இன்மையும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை என்பது இப்பகுதியின் பொருள்.

இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
பரிப்பெருமாள்: முழுதே உடையவன் கண்ணதே எல்லாப் பொருளின் கண்ணும் தெளிதல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, பெரும்பான்மையும் காரிய ஆராய்ச்சிக்கு அதிபதியை நோக்கிற்று. [அதிபதி - உரிய தலைவன்]
பரிதி: இந்த நாலு குணமுடையவனிடத்திலே உறவு பண்ணுவான் என்றவாறு.
காலிங்கர்: என்று இங்ஙனம் சொல்லப்பட்ட நான்கும் குறைவின்றிப் பெரிதும் உடையான் (யாவன்) மற்று அவன் கண்ணதேயாக, தெளிந்து வினை செய்யும் திறம் என்றவாறு.
பரிமேலழகர்: இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
பரிமேலழகர் குறிப்புரை: இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.

'இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நான்கும் உடையவனே நம்பத் தக்கவன்', 'ஆகிய நான்கும் நன்றாகப் பொருந்தினவனைக் கொண்டே காரியத்தைச் செய்விக்க வேண்டும்', 'ஆகிய நான்கு நலங்களையும் செம்மையாக உடையவனிடத்தே நம்பிக்கை நிலைபெறுதற்குரித்து', 'ஆகிய இந்நான்கும் நன்றாக உடையானையே தெளிதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இந்நான்கும் செம்மையாக உடையானைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு அறிவு தெளிவு அவாவின்மை இந்நான்கும் செம்மையாக உடையானைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'அவாவின்மை' குறிப்பது என்ன?

நம்புதற்குரிய செயலாள்பவனுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்.

செயலின்மீது அன்பு, வினைக்குரிய அறிவு, சிந்தனைத் தெளிவு, பொருளாசை இன்மை ஆகிய இந்நான்கும் நன்றாக உடையானைச் செயலுக்கு உரியவனாகத் தேர்வு செய்யலாம்.
அன்பு: செயல் ஆளப்போகிறவனுக்கு வேண்டிய குணங்களுள் அன்பு என்பது முதலில் சொல்லப்பட்டுள்ளது. அன்பு என்ற சொல் குறளில் தொடர்புடையார் (உறவினர், நண்பர்) மாட்டு உளதாகிய நெகிழ்ச்சியைக் குறிப்பதாகும். இப்பாடல் தலைவனுக்காக உயர்ந்த பொறுப்பு ஒன்றை மேற்கொள்ளப் போகும் ஒருவரது குணநலன்களைச் சொல்வது. தலைவனுக்கும் அவனது பணியாளனுக்கும் இடையே அன்பு எங்கே வந்தது? இப்பொழுதுதான் அவன் தேர்ந்தெடுக்கப்படப் போகிறான்; அதற்குள் அவனது அன்பை எப்படிக் கணிப்பது? தலைவன் பேரில் அன்பு காட்டுவது என்பது அவனிடம் உள்ள அச்சத்தாலும், பணியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற பற்றாலும் பொருளாசையாலும் கூட நிகழக்கூடுவது. எனவே இங்கே அன்பு என்பது தலைவனுக்கு உண்மையாக இருப்பது என்ற பொருளில் வந்ததாகலாம். அதைவிட அவனுக்குத் தொழில்மீதுள்ள காதல் எனக் கொள்வது பொருத்தமாகும். அதாவது வினை மாட்டு உளதாகிய நெகிழ்ச்சியை அல்லது செயல் மீது உள்ளார்ந்த ஈடுபாடு (Passion) கொள்வதைக் குறிப்பது எனலாம். தெளியப்படுபவனுக்குச் செயல்மீதான அன்பை அவனுடனான நேர்காணலின்போது அளக்கமுடியும்.
அறிவு: அறிவு என்பது செயலறிவு அல்லது தொழிலறிவைக் குறிப்பது. செயல் வெற்றி பெற அது பற்றிய அறிவு அதாவது வினை நுணுக்கங்கள் மிக அறிந்திருக்க வேண்டும். இதை அவனது கல்வி, பட்டறிவு மூலம் அறியக்கூடும்.
தேற்றம்: தேற்றம் என்பது தெளிவு என்ற பொருள் தருவது. தெளிந்த சிந்தனையைச் சொல்வது. தனக்குக் கொடுக்கப்பட்ட பணியின் நோக்கம் என்ன, பணி நிறைவுக்கான கால அளவு என்ன, தலைவன் தன்னிடம் எதை எதிர்நோக்குகிறான் ஆகிய இவை பற்றிய தெளிவு இருக்க வேண்டும். செயல் தொடங்கியபின் இடர் நேரும்பொழுது காணவேண்டிய தீர்வுக்கானவற்றிலும் தெளிவு வேண்டும். இத்திறங்களையே தேற்றம் குறிக்கிறது. தோன்றக்கூடிய எதிர்ப்புகளை எச்சூழலிலும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவராயும் இருத்தல் வேண்டும். இவற்றையும் நேர்காணல் உரையாடல்கள் வழி தெரிந்துகொள்ள முடியும்.

இக்குணங்களுடன் அவாவின்மை உடையவனையும் செயல் மேற்கொள்ளத் தேர்வு செய்யலாம் என்கிறது இக்குறள். இக்குணங்கள் உடையவன் நம்பிக்கைக்குரியவனாக, தலைவனுக்கும் அவனது பொருளுக்கும் செயலுக்கும் தீங்கு வராவண்ணம் செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவான்.

'அவாவின்மை' குறிப்பது என்ன?

அவாவின்மை: 'அவாவின்மை' என்பதற்கு சுயநல நாட்டம் இல்லாமை, ஆசை இன்மை, ஆசைகொள்ளாதிருத்தல், சுயவிருப்பமின்மை, பேராசை இல்லாமை, பொருள்களில் பற்றும் விழைவும் இன்மை, பொருள் கைசேர்ந்தவழியும் தீயவழியாற் பொருள் வருமிடத்தும் அதன்மேல் ஆசையின்மை, பொருளைத் தனக்கென விரும்பும் தன்மை இன்மை, கையுறை முதலியவற்றை விரும்பாமையும் (லஞ்ச ஆசை இன்மை), செயல் விளைவாக அவனிடத்தில் வருகிற பணத்தின்மேல் ஆசை கொள்ளாத குணம், பொருள் சேர்ந்துழி அதில் தானும் அடைய வேண்டும் என்ற அவாவின்மையும் என்று பொருள் கூறினர்.
அவாவின்மை என்பது இங்கு தனக்கு உரியதல்லாத பொருளின் மேல் ஆசை கொள்ளக்கூடாது என்ற பொருள் தருவது. உயர்ந்த பொறுப்பில் உள்ளோரில் சிலர் தமது உழைப்பால்தானே தலைவனுக்குப் பொருள் சேர்ந்தது என்ற நினைப்பில் அதில் ஒரு பங்கை தாமாகவே எடுத்துக் கொண்டால் அதில் என்ன தவறு என்று தனக்குத்தானே அமைதி கூறிக்கொண்டு அதைக் கவர நினைப்பார்கள். மற்றும் சிலர் கையூட்டுப் பெற விழைவார்கள். இந்தவகையான அவா இருப்பவர் நன்மை செய்ய மாட்டார். அவரைத் தெரியக்கூடாது. கையுறை, கையாடல் இவை தலைவனுக்கும் செயலுக்கும் பெருந்தீங்கு இழைப்பவை.
தன்னை நம்பிப் பொறுப்புக்களைத் தந்த தலைவனுக்குரிய பொருள்களை கவர்ந்து கொள்ள நினையாமையை அவாவின்மை என்ற சொல் சுட்டும், கையூட்டுப் பெறாமல் வினை ஆற்றுவதையும் அவாவின்மை குறிக்கும். கையூட்டுப் பெற்ற வரலாறு இருக்கிறதா என்பதையும் இதில் அவனது செயற்பாடுகளையும் உளவுமூலம் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும்.

'அவாவின்மை' என்ற சொல்லுக்கு இங்கு 'தனக்கு உரிமையில்லாத பொருளைத் தனக்கென விரும்பும் தன்மை இன்மை' என்பது பொருள்.

அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை இந்நான்கும் செம்மையாக உடையானைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை நான்கும் உடையானைத் தெரிந்து வினையாடல் செய்யலாம்.

பொழிப்பு

அன்பு, செயலறிவு, தெளிவான சிந்தனை, உரிமையற்ற பொருள்மேல் ஆசையின்மை என்னும் நான்கு குணங்களையும் நன்கு உடையவனிடத்து நம்பிக்கை கொள்ளலாம்.