இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:511)

பொழிப்பு (மு வரதராசன்): நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

மணக்குடவர் உரை: நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.

பரிமேலழகர் உரை: நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
(தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)

வ சுப மாணிக்கம் உரை: ஒரு செயலின் நன்மையும் தீமையும் பார்த்து நலஞ்செய்வானை வேலைக்குக் கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப்படும்.

பதவுரை: நன்மையும்-நல்லனவும்; தீமையும்-தீயனவும்; நாடி-ஆராய்ந்து; நலம்-நன்மை; புரிந்த-தரும்; தன்மையான்-இயல்பால்; ஆளப்படும்-ஆளப்படுவான், ஆளப்படுதல் வேண்டும்.


நன்மையும் தீமையும் நாடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து;
பரிதி: ஒருவன் நற்குணத்தையும் தீயகுணத்தையும் விசாரித்து;
காலிங்கர்: இவ்வுலகத்து வேந்தர் ஒருவனைக் கொண்டு ஒருவனை ஆட்சி செய்யுமிடத்துக் கீழ்ச்சொல்லிப் போந்த முறைமையானே அவரது நன்மைக் கூறும் தீமைக் கூறும் தெரிந்து;
பரிமேலழகர்: அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து; [ஆவனவும் - முடிவு பெறுவனவும், நன்மை பயப்பனவும் ஆகிய செயல்கள்; ஆகாதன - கடை போகச் செய்ய இயலாதனவும் தீமை பயப்பனவும்]

'நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் உரை '...ஒருவனைக் கொண்டு ஒருவினையை ஆட்சி செய்யுமிடத்து.....' என்றிருக்கவேண்டும் என்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு செயலின் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து', 'காரியத்தின் நன்மை தீமைகளை அறிந்தவனாக', 'ஒரு முயற்சியின் நன்மையையுந் தீமையையும் ஆராய்ந்து', 'ஒருவன் செய்துள்ள செயல்களால் உண்டான நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும். [பொருந்தாது- மேற்கொள்ளாது]
பரிப்பெருமாள்: தீமையை ஒருவி நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவனைச் செய்வானாகப் படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பெரும்பான்மையும் அற ஆராய்ச்சிக்குக் கடவாரை நோக்கிற்று.
பரிதி: இரண்டிலும் பெரிய குணத்தை உளம் கொள்வான் என்றவாறு.
காலிங்கர் 'நயம் புரிந்த' பாடம்: மற்று அவற்றுள் நல்லொழுக்கம் மிக்குவரும் தன்மைக்கண்ணே வினை ஆட்சிசெய்ய அடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான் பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம். [அகம் புறங்கட்கு நடுவாய செயல்-அகப்பரிவாரங்கள் செய்யத்தகும் மறைவான செயல்களுக்கும் புறப்பரிவாரங்கள் செய்யத்தக்க போர் முதலிய புறச் செயல்களுக்கும் பொதுவாய் செயல்கள்; உரிமையறிதல்-எவ்வினையை இவர்க்கு உரிமையாக்கலாம் என்றறிதல்]

'நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவற்றுள் நன்மைதரும் செயலை விரும்பிச் செய்பவனை ஆட்சிக்குரியவனாக்குக', 'ஏற்கனவே அப்படிப்பட்ட காரியங்களைச் செய்திருக்கிற பழக்கமுள்ளவனைக் கொண்டு காரியத்தைச் செய்விக்க வேண்டும்', 'நல்லதையே செய்ய விரும்பும் இயல்புடையான், முயற்சிகளிலே பயன்படுதற்குரியன்', 'நன்மையை விரும்பிச் செய்த தன்மையால் அரசியல் வினைகளில் ஈடுபடுத்துதல் வேண்டும். நன்மை செய்துள்ளாரையே அரசியல் வினைகட்குரியர் ஆக்குதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நன்மையைப் பொருந்திய இயல்புடையவன் ஆளப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்மையையுந் தீமையையும் ஆராய்ந்து நலம்புரிந்த தன்மையான் ஆளப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'நலம்புரிந்த தன்மையான்' குறிப்பது என்ன?

நல்லதை நாடுவான்கண் செயலை ஒப்படைக்க வேண்டும்.

ஒருசெயலால் இன்னஇன்ன நன்மைகளும் இன்ன தீமைகளும் உண்டாமென ஆராய்ந்து, நன்மையுண்டாகும் வினையில் நாட்டம் கொள்பவன் செயலுக்குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான்.
முந்தைய அதிகாரமான தெரிந்துதெளிதலில் உள்ள குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (504) என்ற பாடல் ஒருவனின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து அவைகளுள் மிகுதியாய் இருப்பனவற்றைத் தேடி அம்மிகுதிகளைக் கொண்டே வினைசெய்வானைத் தெளிய வேண்டும் எனச் சொல்லியது. அவ்விதம் தெளியப்பட்டவன் வினையில் ஆளப்படுவதற்கு முன்னர் செயலின் தன்மையை ஆராய்வது பற்றி இங்கு கூறப்படுகிறது. செயலின் தன்மையை ஆராய்வது என்பது ஒரு செயலில் நன்மைதரும் கூறுகள் எவை ஆகாத கூறுகள் எவை என்பனவற்றை ஆராய்ந்து அறிந்து கூறுவதைச் சொல்வது. அப்படி ஆய்ந்தவனிடம் அச்செயலை ஒப்படைக்க வேண்டும். எனவே இங்கு சொல்லப்படும் 'நன்மையுந் தீமையும் நாடி' என்றது செயல் ஆற்றப்போகிறவன் மேற்கொள்ள வேண்டிய ஆய்வாகும்.

'அற ஆராய்ச்சிக்குக் கடவாரை நோக்கிற்று' என்கிறது பரிப்பெருமாள் உரை. நீதிமன்றம், அறங்களின் கண்காணிப்பு இவற்றில் தொடர்புடையோரை ஆளப்படுதலை மனதில் கொண்டு இப்பாடல் இயற்றப்பட்டிருக்கிறது என்பது இவர் கருத்து. ஆனால் தெரிந்து வினையாடல் அதிகாரப் பாடல்கள் அனைத்துச் செயல்களுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளன. அவ்வாறே பொருள் கொள்ளுதல் நன்று.

'நலம்புரிந்த தன்மையான்' குறிப்பது என்ன?

நலம் என்ற சொல் நன்மை எனவும் புரிந்த என்ற சொல் பயந்த அல்லது தந்த எனவும் தன்மையான் என்ற சொல் இயல்புடையான் எனவும் பொருள்படும். 'நலம்புரிந்த தன்மையான் என்றதற்கு 'நன்மையே செய்த தன்மையான்' அல்லது 'நல்லதையே செய்ய விரும்பும் இயல்புடையான்' என உரையாசிரியர்கள் விளக்கினர். காலிங்கர் ஒருவரே ‘தன்மையான்’ என்பதற்குத் தன்மைக் கண்ணே என உரை செய்தார். மற்றவர்கள் வினைசெய்வான் பண்பு என்று சொல்ல இவர் செயலின் தன்மை என்றபொருளில் உரை கண்டிருப்பாரோ எனத் தோன்றுகிறது.
பரிமேல்: 'நன்மையும் தீமையும் நாடி-அரசன் முதலில் ஒரு வினையைத் தன்கண்வைத்தால் அதன்கண் ஆவன -ஆகாதன செயல்களை ஆய்ந்து ஆவனவே செய்வான் ஆளப்படும்' என்கிறார். தேவநேயர் 'முதற்கண் தனக்கிட்ட பணியிலே அரசனுக்கு நன்மை தருவனவும் தீமை தருவனவும் ஆய்ந்து அவற்றுள் நல்லனவற்றையே விரும்பிய இயல்பையுடையான்' என்பர். சி இலக்குவனார் 'ஒருவன் செய்துள்ள செயல்களால் உண்டான நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நன்மையை விரும்பிச் செய்த தன்மையால் அரசியல் வினைகளில் ஈடுபடுத்துதல் வேண்டும். நன்மை செய்துள்ளாரையே அரசியல் வினைகட்குரியர் ஆக்குதல் வேண்டும்'. தமிழண்ணல் 'ஒருவனிடம் முதலில் ஒரு பணியை ஒப்படைத்துச் சோதிக்க வேண்டும். அதில் அவன் நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் நல்லனவற்றையே அரசனுக்குகந்தன என எண்ணி விரும்பிச் செய்கிறானா என்பதைக் கண்டுகொண்டு பின்பு சிறந்த பணிகளிலே வைத்து ஆளப்படுவான். வெள்ளோட்டம் பார்ப்பது போன்றது இது. ஒரு பணியை ஒப்படைத்து அதன்வழி அவன் நல்லவனாக உண்மையிலேயே நடந்துகொள்கிறானா என்று பார்த்து பிறகு மிகுந்த நம்பிக்கைக்குரிய பணிகளில் அமர்த்தவேண்டும்' என இக்குறளுக்கு உரை வரைந்தார்.
'நலம் புரிந்த தன்மை' என்பது முன் நன்றாகச் செய்து முடித்திருக்கிற 'அனுபவம்' என்று வேறுபாடாகப் பொருள் கூறுவார் நாமக்கல் இராமலிங்கம்.
ஒருவர் செய்த பணி நலத்தின் அடிப்படையிலேயே புதிய பொறுப்புகளில் அமர்த்தப்பெறுவர்; அவர் தானாகவே நன்மை தீமைகளை ஆராய்ந்து நன்மையை விரும்பிச் செய்யும் தன்மை உடையவராக இருக்க வேண்டும்; ஏவுவோரின் ஆணைப்படியே எல்லாவற்றையும் செய்யாமல் அதாவது சொல்லப்பட்டதை அப்படியே ஏற்றுச்செய்யாமல் ஒப்பித்த செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லன புரிந்ததன்மையாளனிடம் செயலை ஒப்படைக்க என உரையாசிரியர்கள் கருத்துரைத்தனர்.
அமைச்சர் முதலியோரை நியமிப்பதற்குமுன் அவரது மனஇயல்பை -அவர் நாட்டுநலனில் உண்மையான அக்கறை கொண்டவரா அல்லரா என்பதை -அரசன் சோதனக்குட்படுத்தி ஆராய்ந்து தெளிவான் என்னும் முறைமை முன்பு நடைமுறையில் இருந்தது என உரைகள் சொல்கின்றன.

ஒரு பெரும்செயல் தொடங்கப்படுமுன் ஓர் தெளிவு வேண்டும். இல்லாவிட்டால் ஆகாத செயல்களில் முற்பட்டுப் பொழுதையும் முயற்சியையும் வீணாக்க வேண்டிவரும். ஆகக்கூடிய செயலானாலும் அதன் பயனாக ஏற்படும் முடிவு நன்மை தருமா எனவும் செயலைச் செய்தால் தீமைவருமா அல்லது அச்செயலைச் செய்யாவிட்டாலும் தீது நேருமா என்பனவற்றையெல்லாம் தெளிந்து செயல் தொடங்க வேண்டும்.
இந்நாட்களில் ஒரு தொழில் தொடங்குமுன் திட்ட ஆய்வறிக்கை கேட்டுப்பெறுகின்றனர். அதில் செலவு-நன்மை பகுப்பாய்வு (Cost-Benefit Analysis) செய்யப்பட்டு அது மேற்கொள்ளத்தகுந்ததா அல்லவா (feasibility study) என்ற இயன்மை ஆய்வறிக்கை மூலம் அறியப்படும். அந்த ஆய்வறிக்கைவழி அதை இயற்றியவர் நிறுவன நலன் கருதியவரா என்பதையும் அறிந்து அவரிடம் தொழில்திட்டத்தை நிறைவேற்றும் பணியை ஒப்படைப்பர்.
இதைத்தான் இக்குறள் வேறு வகையில் 'உரிமையறிந்து ஆள்வதற்காக முன்னர் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயல்' என்ற பொருளில் 'புரிந்த தன்மையான்' என்கிறது.

நன்மையையுந் தீமையையும் ஆராய்ந்து நன்மையைப் பொருந்திய இயல்புடையவன் ஆளப்படுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நன்மைபுரியத்தக்கவனைத் தெரிந்து வினையாட(ல்) வேண்டும்.

பொழிப்பு

ஒரு செயலின் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து அவற்றுள் நன்மைதரும் தன்மைகொண்டவனால் செயல் ஆளப்படும்.