இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0497



அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:497)

பொழிப்பு (மு வரதராசன்): (செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை

மணக்குடவர் உரை: தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை.
இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.

பரிமேலழகர் உரை: எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.
('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பகைவரிடத்துச் செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் ஒன்றும் விட்டுவிடாது ஆராய்ந்து ஏற்ற இடத்தில் செய்தால் அஞ்சாமை (பயப்படாமை)யைத் தவிர்த்து வேறு துணை வேண்டுவதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின், அஞ்சாமை அல்லால் துணைவேண்டா.

பதவுரை: அஞ்சாமை-அச்சமில்லாமை, உள்ளத் திண்மை; அல்லால்-அன்றி; துணை-உதவி; வேண்டா-வேண்டுவதில்லை; எஞ்சாமை-ஒழியாமல்; எண்ணி-நாடி; இடத்தால்-(தக்க) இடத்தில், இடத்தொடு பொருந்த; செயின்-செய்தால்.


அஞ்சாமை அல்லால் துணைவேண்டா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை;
பரிப்பெருமாள்: அஞ்சாமையே வேண்டுவ வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை;
பரிதி: அவனுக்குத் துணை வேண்டா. திடபுத்தியே அமையும் என்றவாறு;
காலிங்கர்: தம் வீரப்பாடல்லது வேறு படைத்துணை இவர்க்கு வேண்டா எனவே தமது இடமும் தறுகண்மையும் எண்ணமுமே சாலும் எதிர்த்தோரை வெல்லுதற்கு;
பரிமேலழகர்: அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை;
பரிமேலழகர் குறிப்புரை: 'திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார்,

'அஞ்சாமையே அல்லாமல் வேறு துணையைத் தேட வேண்டுவதில்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். அஞ்சாமை என்றதற்கு பரிதி திடபுத்தி என்றும், காலிங்கர் வீரப்பாடு என்றும், பரிமேலழகர் திண்மை என்றும் பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணிச்சல் தவிரப் பிறதுணை வேண்டாம்', '(அச்சமற்ற வீரனுக்கும் தக்க இடம் வேண்டும்.) அஞ்சாமை இருந்தால் போதும். வேறு துணை வேண்டியதில்லை என்பவர்களுக்கும்', 'அம்முயற்சி கைகூடுதற்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை', 'அவ்வினைக்கு அஞ்சாமையல்லாது வேறு துணை வேண்டா', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அஞ்சாமை தவிர வேறு துணை வேண்டியதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.
பரிப்பெருமாள்: தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவனாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.
பரிதி: இடமறிந்து காரியங்கொள்ள வல்லவனாகில்.
காலிங்கர்: இவ்வாறு எண்ண வேண்டும் காரியம் அனைத்தும் ஒன்று ஒழியாமல் எண்ணிக்கொண்டு, பின் தனது இடத்துட்படுத்தி வினை செய்யின்.
காலிங்கர் குறிப்புரை: எஞ்சாமை என்றது ஒழியாமை என்றது.
பரிமேலழகர்: பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின்,
பரிமேலழகர் குறிப்புரை: அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.

'தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முழுதும் எண்ணி இடமறிந்து செய்யின்', 'சரியான பாதுகாப்புள்ள இடம் அமைந்தால் அந்த அஞ்சாமை குறையாமல் இருக்கும்', 'தொழில் செய்யும் வகைகளெல்லாம் ஒன்றையுந் தவறவிடாது எண்ணித் தக்க இடத்தில் அவற்றைச் செய்வாராயின்', 'வினை செய்தற்கேற்ற திறங்களை விடாமல் எண்ணி, இடத்தோடு பொருந்த ஒருவன் வினை செய்வானாயின்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செய்யும் திறங்கள் அனைத்தும் ஒன்றுகூட தவறவிடாமல் ஆராய்ந்து தக்க இடத்தில் செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்யும் திறங்கள் அனைத்தும் எஞ்சாமை எண்ணி, தக்க இடத்தில் செய்தால், அஞ்சாமை தவிர வேறு துணை வேண்டியதில்லை என்பது பாடலின் பொருள்.
'எஞ்சாமை எண்ணி' என்பதன் பொருள் என்ன?

பொருந்திய இடம் வாய்த்துவிட்டால் வெற்றிபெற அது ஒரு பெருந்துணையாம்.

செயல் திறங்களை எல்லாம் ஒன்றுகூட விட்டுவிடாமல் ஆராய்ந்து, தக்க இடத்தில் செய்தால், செயல் நிறைவேற உள்ளத் திண்மை தவிர்த்து வேறு துணை வேண்டுவதில்லை.
எந்த ஒரு செயல் ஆற்றும்போதும் அதற்கு ஒரு துணை கிடைத்தால் அது கூடுதல் வலிமை தருவதுதான். ஆனால் ஒருவன் தான் மேற்கொண்ட செயலில் வெற்றிபெறவேண்டும் என்ற உள்ளஉறுதி கொண்டு, செயல் முடித்தற்கான வழிகளைக் குறைவறச் சிந்தித்து வைத்து, அது செய்வதற்கேற்ற இடமும் அவனுக்குக் கிடைத்தாகிவிட்டால், அவன் வேறு துணை நாடவேண்டியதில்லை என்கிறார் வள்ளுவர்.
இடமறிந்து செயல் புரியும்பொழுது வேறு துணை வேண்டாம். விளவுகள், எதிர்விளைவுக,ள் ஆகியனவற்றை நன்கு எண்ணி, செய்யும் வழிமுறைகளை பல்வேறு கோணங்களில் முழுதாக ஆராய்ந்து, தக்க இடம் அறிந்து, உள்ளத் துணிவுடன் செயலில் இறங்கினால் வேறு துணையின்றி, தன்வலியொன்றினாலே, அதில் வெற்றி காணலாம்.

'எஞ்சாமை எண்ணி' என்பதன் பொருள் என்ன?

'எஞ்சாமை எண்ணி' என்றதற்குத் தப்பாமலெண்ணி, எண்ண வேண்டும் காரியம் அனைத்தும் ஒன்று ஒழியாமல் எண்ணிக்கொண்டு, பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி, பகைவரிடத்து யுத்தம் செய்ய வேண்டினவர் அதற்கு வேண்டின கருவிகாரியங்களையெல்லாம் குறைவுபடாமல் எண்ணி, பகையிடத்து வினைசெய்யும் வகை எல்லாங் குறையாமல் எண்ணி, (செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணி, பகைவரை வெல்லுதற்காம் வழிகளைக் குறைவறச் சிந்தித்து, முழுதும் எண்ணி, வினை துணை வேண்டுவதில்லை. செய்தற்கேற்ற திறங்களை விடாமல் எண்ணி, தொழில் செய்யும் வகைகளெல்லாம் ஒன்றையுந் தவறவிடாது எண்ணி, பகைவரிடத்துச் செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் ஒன்றும் விட்டுவிடாது ஆராய்ந்து, செய்யவேண்டிய செயல் வகைகளையெல்லாம் சிறிதும் குறையில்லாமல் சிந்தித்து, நிறைவாக எண்ணி, தன்னிடத்தேயுள்ள குறைகளைப் போக்கி, எல்லாவற்றையும் எண்ணி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எஞ்சாமை எண்ணி என்ற தொடர்க்கு எதையும் விட்டு வைக்காமல் சிந்தித்து அல்லது முழுவதுமாக ஆய்ந்து என்பது நேர் பொருள்.
இத்தொடரிலுள்ள எஞ்சாமை என்ற சொல்லுக்கு நாமக்கல் இராமலிங்கம் எஞ்சுதல் - குறைதல் எனப் பொருள் கொண்டு, எண்ணி இடத்தாற் செயின் எஞ்சாமை ’(ஆகும்)' என்று கொண்டு கூட்டி, 'தகுந்த இடத்தைச் சேர்ந்து காரியத்தைச் செய்தால்) அது அஞ்சாமை குறையாதிருப்பதாகும்' எனச் சொல்கிறார். இவ்வுரை இயல்பாகப்படவில்லை.
வினைசெய்திறங்களில் ஒருசிறிதை எண்ணாதொழியினும் செயல் கெடும் என்பதால் 'எஞ்சாமை எண்ணி' எனச்சொல்லப்பட்டது. செயல் நிறைவேறுவதற்கான அனைத்து வழிகளையும் குறைவறச் சிந்திக்க வேண்டும் என்பதைச் சொல்வது 'எஞ்சாமை எண்ணி' என்ற தொடர்,

'எஞ்சாமை எண்ணி' என்பது ''(செயல் ஆற்றும் வகைகளெல்லாம்) ஒன்றையுந் ஒழியவிடாது கருதி' என்ற பொருள் தரும்.

செய்யும் திறங்கள் அனைத்தும் ஒன்றுகூடத் தவறவிடாமல் ஆராய்ந்து, தக்க இடத்தில் செய்தால், அஞ்சாமை தவிர வேறு துணை வேண்டியதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயல் நிறைவேற்றுவதற்குத் துணிவு திறன் இடனறிதல் ஆகியன போதும்.

பொழிப்பு

செயல் ஆற்றுதலுக்கேற்ற திறங்களை ஒன்று விடாமல் எண்ணி, இடமறிந்து செய்தால் அச்செயலுக்கு அஞ்சாமை தவிர பிறதுணை வேண்டாம்.