இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:495)

பொழிப்பு (மு வரதராசன்): ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்

மணக்குடவர் உரை: நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.

பரிமேலழகர் உரை: முதலை நெடும்புனலுள்(பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும், புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
(எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஆழமான நீர்நிலையில் பிற உயிரினங்களை முதலை வெல்லும். அந்நீர்நிலையினின்றும் நீங்குமாயின் அம்முதலையைப் பிற உயிரினங்கள் வெல்லும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முதலை நெடும்புனலுள் வெல்லும்; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.

பதவுரை: நெடும்-ஆழமுடைய; புனலுள்-நீருள்; வெல்லும்-வென்றுவிடும்; முதலை-முதலை; அடும் புனலின்-கொல்லத்தக்க நீர்நிலையினின்று; நீங்கின்; அகன்றால்; அதனை-அதை; பிற-மற்றவை.


நெடும்புனலுள் வெல்லும் முதலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்;
பரிப்பெருமாள்: நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்;
பரிதி: தனக்குப் பலமான நீரிலே முதலை வெல்லும்;
காலிங்கர்: நெடிய ஆழமுடைய புனல் தனக்குச் சென்ற நிலம் ஆதலின், மற்று அவ்விடத்து யானை, புலி மனிதர் மற்றும் அனைத்துப் பகையும் வெல்லும் முதலையானது;
பரிமேலழகர்: முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும்;

'நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தண்ணீரில் முதலை எதனையும் வெல்லும்', '(தனக்குப் பலமான இடத்தை விட்டு விலகாமலிருந்தால் தோல்வி வராது என்பது எதைப்போல என்றால்) ஆழமான தண்ணீரில் இருக்கிற வரையிலும் முதலையானது மற்ற எந்தப் பிராணியையும் வென்றுவிடும்', 'முதலை ஆழமுடைய நீரில் பிற உயிர்களைக் கொன்று வெல்லும்', 'முதலை ஆழமுடைய நீரின்கண் பிறவற்றை எல்லாம் வெல்லும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெடியஆழமுடைய நீரின்கண் முதலை எதனையும் வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.
பரிப்பெருமாள்: அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.
பரிதி: அல்லாத நிலத்திலே முதலை தோற்பதுபோலத் தனக்கு வெற்றியான இடம் அறிந்துகொள்க என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுதான் பயின்ற நிலம் அல்லாத கரைமீது படின், எறும்பும் அதனை அடும். ஆகலான், அரசர் முதலான அனைவர்க்கும் இடம் அறிதல் பெரிதுமன் என்றவாறு.
பரிமேலழகர்: அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்..

'அந் நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தரையில் முதலையை எதுவும் வெல்லும்', 'ஆனால் தண்ணீரை விட்டு வெளியே வந்து விட்டால் அந்த முதலையை மற்ற எந்தப் பிராணியும் வென்றுவிடும்', 'அந்த நீரைவிட்டு அது வெளிவருமாயின் அதனை மற்ற உயிர்கள் கொல்லும் வலிமையுடையன', 'அந்நீரிலிருந்து அது நீங்கி வெளிவருமாயின் அதனைப் பிற எல்லாம் வெல்லும். (தமக்குரிய இடத்திலிருந்து நீங்குதல் வெற்றியைத் தராது.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கொல்லத்தக்க நீர்நிலையினின்று நீங்கினால் அதனை மற்றவை வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெடியஆழமுடைய நீரின்கண் முதலை எதனையும் வெல்லும்; கொல்லத்தக்க நீர்நிலையினின்று நீங்கினால் அதனை மற்றவை வெல்லும் என்பது பாடலின் பொருள்.
இப்பாடல் தரும் செய்தி என்ன?

நீருக்குள் உள்ளவரைதான் முதலைக்கு வலிமை உண்டு; அது நீர்நிலையை விட்டுப் பெயர்ந்தால் சிறு விலங்கிடம்கூடத் தோல்வியடையும்.

ஆழமான நீருள் இருந்தால் முதலை அதனினும் வலிய உயிர்களையும் வெல்லும். ஆனால் அந்நீர்நிலையினின்று அகன்றால் அதனினும் எளிய உயிர்களும் அதனை வென்றுவிடும்.
'நெடிய ஆழமுடைய புனல் தனக்குச் சென்ற நிலம் ஆதலின், மற்று அவ்விடத்து யானை, புலி மனிதர் மற்றும் அனைத்துப் பகையும் வெல்லும் முதலையானது. மற்று அதுதான் பயின்ற நிலம் அல்லாத கரைமீது படின், எறும்பும் அதனை அடும். ஆகலான், அரசர் முதலான அனைவர்க்கும் இடம் அறிதல் பெரிதுமன்' என்ற காலிங்கர் உரை இக்குறட்கருத்தை நன்கு விளக்கும்.
அவரவர் இடத்தில் அவரவர்க்கு வலியுண்டு. முதலை நிலத்திற் செல்வதற்கான காலையும் நீரில் நீந்திச் செல்வதற்கான துடுப்புப் போன்ற வாலும் உடையது. முதலைக்குரிய வாழிடம் ஆழநீர்தான். நீருள் இருந்தால் அதற்கு வலிய விலங்குகளையும் தன்பால் இழுத்துக்கொண்டு போகும் ஆற்றல் உண்டு. அதே முதலை நீர்நிலையைவிட்டுப் பெயரின் அதனை எளிய விலங்குகளும் துன்புறுத்தும். நிலத்திலும் நடக்கக்கூடியதாகையால் நீர் நிலைக்கு வெளியிலும் முதலைக்கு ஓரளவு வலிமை உண்டு என்றாலும் அதனுடைய பகைகளுக்குத் தப்பித்துகொள்ளும் வாய்ப்புகளும், வழிகளும் பலவுண்டு. முதலைக்குத் தன் இடத்தில் இருக்கும்போது பெரும் வலிமையும் வேறிடத்திற்குச் சென்றால் அது இல்லாமையும் காணப்படுகின்றன. நீரில் சிங்கம் போன்றவை அவ்வளவு எளிதாக இயங்க முடியாதாதலால் அது முதலைக்குப் பலனளிக்கக் கூடியதாகி விடுகிறது. மாறாக நிலத்தில் முதலை அவ்வளவு எளிதாக இயங்க முடியாதாதலால் அதனை இழிந்த விலங்குகளும் வெல்லக்கூடும்.

நெடும்புனல் என்ற தொடர் வள்ளுவர் புதிதாகப் படைத்தது என்பார் செ வை சண்முகம். நெடும்புனல் என்பதற்கு ஆழமான நீர் என்று அனைவரும் பொருள் கூற காலிங்கர் நெடிய ஆழமுடைய புனல் என்று அகலத்தையும் சேர்த்துப் பொருள் கூறுகிறார். ஆழத்துடன் அகலமும் இருந்தால் முதலைக்கு வெல்லுதல் இன்னும் எளிதாகிறது. மு கோவிந்தசாமி 'முதலை நெடும்புனலுள் வெல்லும்; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற வெல்லும்' எனக் கூட்டி உரைப்பார். பிற உயிர்களைக் கொல்லத் தக்கதாக அகன்றதும் ஆழமானதுமான நீர் நிலை என்ற பொருள் தரும் 'அடும்புனல்' என்பது பொருத்தமாக உள்ளது.

இப்பாடல் தரும் செய்தி என்ன?

முதலை நீரில் வலியுள்ளது. அதனை நீங்கின் பிற அதனை வெல்லும் என்கிறது பாடல். இதில் உவமை சொல்லப்பட்டு உவமப் பொருள் கூறப்படவில்லையாதலால் இக்குறள் பிறிது மொழிதல் அணியில் அமைந்துள்ளது என்பர். இப்பாடலின் உவமப் பொருள் என்ன?
'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றது என்பது பரிமேலழகரின் விளக்கம். ' 'தன்னூர்க்கு யானை, அயலூர்க்குப் பூனை' என்பது போல பகைவர்க்கு ஊற்றமில்லாத இடஞ்சென்று பொருக' என்பது தேவநேயப்பாவாணர் தரும் கருத்துரை. அவரவர்கள் உரிய இடத்தில் வலிமை உடையவர்கள் என்ற கருத்து உருவகமாகக் கூறப்பட்டுள்ளது.
இக்குறட்பாவுக்கு சி இலக்குவனார்: 'தமக்குரிய இடத்திலிருந்து நீங்குதல் வெற்றியைத் தராது' எனப் பொருள் தந்தார். இக்கருத்தை மறுத்துத் தண்டபாணி தேசிகர் 'இக்கருத்து படையெடுத்துப் போதல் கூடாது; எடுத்து வந்தவரை வெல்லலாம் என்ற நோக்குடையதாதலின் முற்றும் பொருந்துவதாக இல்லை. தமக்குத் தகுந்த அல்லது ஏற்ற என்றிருக்குமாயின் அரணுள் இருப்பார்க்கும், வருவார்க்கும் இயைபுடையதாம். 'வருவாரும்; நெடும்புனலையே நாடிவரும் முதலையைப் போலத் தமக்கு வெற்றி தரும் இடனையே தேர்ந்து நேர்வராயின்' வெற்றி கிட்டும் எனின் மிக ஏற்புடையதாகும்' என்றார்.
அவரவர் இடத்தில் இருக்கும்போது வலிமை சிறிதும் இல்லாதவரும் வெற்றி பெறுவர்; தம் இடத்தை விட்டு நீங்கினால் மிக்க வலிமை பெற்றவரும் தோல்வியுறுவர்.
பாதுகாப்பையும் பழகிய நிலத்தையும் நோக்கி வெற்றியிருப்பதால் இடனறிதல் இன்றியமையாதது என்பது இக்குறள் கூறும் செய்தியாகும்-

நெடியஆழமுடைய நீரின்கண் முதலை எதனையும் வெல்லும்; கொல்லத்தக்க நீர்நிலையினின்று நீங்கினால் அதனை மற்றவை வெல்லும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இருக்கும் இடமிருந்தால் எல்லாம் நலமே என்னும் இடனறிதல் பாடல்.

பொழிப்பு

ஆழமான நீரில் முதலை எதனையும் வெல்லும்; கொல்லத்தக்க நீர்நிலையினின்றும் நீங்குமாயின் அம்முதலையை மற்றவை வெல்லும்