ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
(அதிகாரம்:இடனறிதல்
குறள் எண்:493)
பொழிப்பு: தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்
|
மணக்குடவர் உரை:
வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.
பரிமேலழகர் உரை:
ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.
('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.)
இரா சாரங்கபாணி: உரை:
ஏற்ற இடமறிந்து பகைவரால் நலிவு வராமல் காத்துக் கொண்டு போர் செய்வாராயின் வலிமையற்றவரும் வலிமையுடையவராய்ப் பொருது வெல்வர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின், ஆற்றாரும் ஆற்றி அடுப .
|
ஆற்றாரும் ஆற்றி அடுப:
பதவுரை: ஆற்றாரும்-மாட்டாதவரும்; ஆற்றி-வலியராய்; அடுப-வெல்வர்; .
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்:
பரிப்பெருமாள்: வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்;
பரிதி: சேவகமில்லாதாரும் சேவகராவர்; ,[சேவகம்-வீரம்]
காலிங்கர்: பெரும்படை வேந்தரோடு போர் ஆற்றாத சிறு படையாளரும் அவரோடு போர் ஆற்றிப் பொருகளத்து அடுவர்; அதுவும் எங்ஙனம் எனின்,
காலிங்கர் குறிப்புரை: ஆற்றலாரும் என்பது வருபகை வேந்தனோடு போர் ஆற்றாதவரும் என்றது.
பரிமேலழகர்: வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்,
'வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வலியிலாரும் வலிபெற்றுப் போரிடுவர்', '(திறமையில்லாதவர்களும் திறமையுடன் வெற்றியடைவார்கள்', 'வலியோடு வெல்லுதல் கூடும்', 'வலியில்லாதாரும் வலியராய் வெல்வர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஆற்றல் இல்லாதவரும் ஆற்றல் பெற்று வெற்றி கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்:
பதவுரை: இடனறிந்து-இடம் தெரிந்து; போற்றார்கண்-பகைவர்மாட்டு; போற்றி-காத்து; செயின்-செய்தால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.
பரிப்பெருமாள்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வலியிலாதாரும் வெல்வர் என்றது.
பரிதி: இடமறிந்து சத்துருக்கள் எண்ணமறிந்து செய்யவல்லவராயின்.என்றவாறு
காலிங்கர்: தமக்குச் சென்று நிலையுள்ள இடத்தை அறிந்து மற்று அப்பகைவரிடத்து உற்றாலும் பெரிதும் குறிக்கொண்டு வினை செய்ய வல்லாராயின் என்றவாறு.
பரிமேலழகர்: அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.
'ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இடம் பார்த்து விழிப்போடு பகைவரிடம் நடப்பின்', 'பாதுகாப்புள்ள இடத்தின் சிறப்பால் ஆற்றலும் அதிகப்படும்) காரியத்தைக் கெடுத்துவிடக்கூடிய பகைவர்கள் வரமுடியாத பாதுகாப்பான இடத்தைத் தெரிந்து அதிலிருந்து கொண்டு காரியத்தைச் செய்தால்', 'வலிமை இல்லாதவர்களும் பகைவரை வெல்லத் தக்க இடம் அறிந்து அவ் இடத்தில் தம்மைக் காத்துக் கொண்டு அவருக்கு எதிரிடையாக முயற்சி செய்வாராயின்', 'ஏற்ற இடத்தினை அறிந்து பகைவரிடத்துத் தம்மைக் காத்து வினையைச் செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
இடமறிந்து எதிராளியிடம் விழிப்புடன் செயல்பட்டால் ஆற்றல் இல்லாதவரும் ஆற்றல் பெற்று வெற்றி கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இடம் தெரிந்து மாற்றர்கண் விழிப்புடன் செயல்பட்டால் அதுவே ஆற்றலற்றவர்களுக்கும் வலிமை கொடுக்கும் என்னும் பாடல்.
இடமறிந்து விழிப்புடன் எதிராளிமாட்டு செயல்பட்டால் ஆற்றாரும் ஆற்றல் பெற்று வெற்றி கொள்வர் என்பது பாடலின் பொருள்.
'ஆற்றார்' யார்?
|
ஆற்றி என்ற சொல்லுக்கு வலிமை பெற்று என்பது பொருள்.
அடுப என்ற சொல் வெல்வர் என்ற பொருள் தரும்.
இடனறிந்து என்ற சொல் இடம் அறிந்து என்ற பொருளது.
போற்றார்கண் என்ற சொல்லுக்குப் பகைவர்மாட்டு என்று பொருள்.
போற்றி என்ற சொல் 'விழிப்புடன்' குறித்தது.
செயின் என்ற சொல் செய்தால் என்ற பொருள்படும்.
|
எதிரணியிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளுமறு ஏற்ற இடத்தினை அறிந்து விழிப்புடன் செயல்பட்டால் வலிமை குறைந்தவரும் வலிபெற்று வெல்வர்.
எதிராளியை வெல்வதற்கு இடவன்மை ஒரு முக்கியமான காரணம் ஆகும். இடனறிந்து செயல் ஆற்றினால் மெலியார்க்கும் அது வலி சேர்க்கும்.
இடன் அறிந்து செயல்பட்டால் வலிமை கூடியதாக வலியற்றவரும் உணர்வர். செயலிம் வெற்றுபெறுதலும் எளிதாகிவிடும்.
எந்த இடத்தில் இருந்து முயன்றால் வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது? போற்றிச் செயின் என்ற தொடர்க்கு விழிப்போடு நடப்பின், எச்சரிக்கையோடு நடந்து கொண்டால், துன்பம் வராமல் காத்துக் கொண்டு என உரை கூறுவர். காலிங்கர் போற்றிச் செயின் என்பதற்குக் 'குறிக்கொண்டு வினை செய்ய வல்லாராயின்' என்று பொருள் கூறினார். பரிமேலழகர் 'பகைவரான் நலிவு வாராமல் அரணானும் படையானும்) காத்தல்' எனப் பொருள் கூறுவார். இவற்றுள் விழிப்போடு என்பது பொருத்தம். விழிப்புடன் என்று சொல்லப்பட்டதால் அரண் என்பதைவிட செயற்களம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது எனக் கொள்வதே சிறப்பு.
|
'ஆற்றார்' யார்?
ஆற்றார் என்றதற்குப் பரிதி வீரமில்லாதவர் எனப் பொருள் கூறினார். காலிங்கர்: பெரும்படை வேந்தரோடு பொருதற்குத் தகுதியில்லாத சிறு படையாளர் என விளக்கம் கூறினார்.
ஆற்றார் என்பதற்கு பெரும்பான்மை உரையாளர்கள் வலிமை அற்றவர் என்றே பொருள் கண்டனர். இன்னும் சிலர் ஆற்றல் இல்லாதவர் என்றும் திறமை இல்லாதவர் என்றும் உரைத்தனர். இவையனைத்தும் ஒரு பொருள் தருவனவே.
ஆற்றார் என சொல்லுக்கு முடியாதார் என்பது நேர் பொருள். இச்சொல்லுக்கு ஆற்றல் இல்லாதவர் என்பது பொருத்தம்.
|
இடமறிந்து விழிப்புடன் எதிராளிமாட்டு செயல்பட்டால் ஆற்றல் இல்லாதவரும் ஆற்றல் பெற்று வெற்றி கொள்வர் என்பது இக்குறட்கருத்து.
இடனறிதல் வலியற்றவர்க்கும் வலிமை சேர்க்கும்.
இடம் பார்த்து விழிப்போடு செயல்பட்டால் வலிமை குறைந்தவரும் வலிபெற்று மாற்றாரை எதிர்கொள்வ்ர்.
|