இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0492முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:492)

பொழிப்பு: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்

மணக்குடவர் உரை: பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும்.
இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
(மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)

வ சுப மாணிக்கம் உரை: வேறுபட்ட ஆற்றல் உடைய அரசர்க்கும் அரண்துணை பல நன்மை அளிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்.ஆக்கம் பலவும் தரும்


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்:
பதவுரை: முரண்-மாறுபாடு; சேர்ந்த-மிகுதியாகக்கூடிய; மொய்ம்பினவர்க்கும்-வலியுடையவர்க்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகை கொள்ளும் வலியுடையவர்க்கும்;
பரிப்பெருமாள்: பகை கொள்ளும் வலியுடையவர்க்கும்;
பரிதி: சதுரங்க பலமான1 தன் படையும் உதவிப் படைக் குறைச்சலும் உண்டாகிலும்;
காலிங்கர்: மாறுபாட்டோடும் பயின்ற வலியினையுடைய மன்னவராயினும்; .
காலிங்கர் பதவுரை: முரண் என்பது மாறுபாடு; மொய்ம்பு என்பது வலி.
பரிமேலழகர்: மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்,
பரிமேலழகர் குறிப்புரை: மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை.

'பகை கொள்ளும வலியுடையவர்க்கும்' என்றும் 'மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகை கொள்ளும் வலிமையுடையார்க்கும்', 'பலவிதமான திறமைகள் உள்ளவர்களுக்கும்', 'ஏனைய அரசரோடு மாறுகொள்ளவல்ல திறமை உடையவர்களுக்கும்', 'மாறுபாட்டோடு கூடிய வலிமையினை உடையவர்க்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வேறுபட்ட திறன் உடையவர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்:
பதவுரை: அரண்-கோட்டை, பாதுகாப்பு; சேர்ந்து-கூடிய; ஆம்-ஆகும்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; பலவும்-நிறையவும் தரும்-கொடுக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அறிந்த இடமும் அறிய வேண்டுமென்றது.
பரிதி: இடம் நல்லதாகின் தனக்குக் கை சென்ற2 இடமானால் ஆக்கமுண்டாகும் என்றவாறு [.கை சென்ற - பழகிய]..
காலிங்கர்: மற்று அவர்க்குத் தாம் பயின்ற நிலமாகிய அரணினையுடைய நிலத்தைப் பொருந்தியதனால் உளதாம் ஆக்கமானது வென்றி முதலிய நன்மைகளையும் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.

'அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்', 'பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்திருப்பதால் கிடைக்கக்கூடிய வல்லமை பல நன்மைகளைத் தரும்', 'கோட்டையில்லாதிருப்பதைப் பார்க்கிலும் கோட்டை இருப்பதால் உளதாகிய சிறந்த வசதி பல நன்மைகளையும் கொடுக்கும்', 'அரணைச் சேர்ந்து உண்டாகும் ஆக்கங்கள் பல பயன்களையும் கொடுக்கும் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாமிருக்குமிடத்தினது பாதுகாப்பு நன்மை பல அளிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பல திறம்பட்ட வலிமை பெற்றிருந்தாலும் தமக்கு அமைந்த இடமும் அதன் பாதுகாப்புத் திறனும் அறியவேண்டும் எனச் சொல்லும் பாடம்.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் தாமிருக்குமிடத்தினது பாதுகாப்பு நன்மை பல அளிக்கும் என்பது பாடலின் பொருள்.
முரண்சேர்ந்த மொய்ம்பினவர் யார்?

அரண் என்ற சொல்லுக்குக் கோட்டை, பாதுகாப்பு என்பது பொருள்.
சேர்ந்தாம் என்ற சொல் கூடியதனால ஆகும் என்ற பொருள் தரும்.
ஆக்கம் என்ற சொல் மேன்மேல் உயர்தல் என்ற பொருளது. இங்கு நன்மை குறித்தது.
பலவும் தரும் என்ற தொடர்க்கு நிறையக் கொடுக்கும் என்று பொருள்.

வேறுபட்ட ஆற்றல் உடையவர்க்கும் தாம் அமைந்த இடத்தைப் பாதுகாப்பாக ஆக்கிக் கொண்டால் பல நன்மைகள் உண்டு.

முந்தைய குறளில் தமக்குப் பொருந்திய இடம் தேர்வாகும் வரையும் எந்தச் செயலையும் தொடங்கலாகாது எனச் சொல்லப்பட்டது. இங்கு தாமிருக்கும் இடத்தையும் பாதுகாப்பாக்கிக் கொள்வது மிகுந்த நன்மைகள் தரும் எனக் கூறப்படுகிறது.
ஒருவர் மாறுபட்ட திறன்கள் பல கொண்டிருக்கலாம். அது நல்ல வலியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் தாம் இருக்கும் இடத்தைக் காத்துக் கொள்ள வேண்டியது மிகத்தேவை. அதனால் பல நன்மைகள் உண்டு, தாம் பழகுகின்ற நிலத்தில் பாதுகாவலும் பொருந்தி இருக்கும்பொழுது. தன் வலிமை குறையாது. மாற்றாரும் தம் இடம் வந்து தாக்கத் தயங்குவர்; அப்படியே வந்தாலும் தாம் தம் இடததில் நிலையூன்றி அவரைத்தாக்கி வெல்லுதல் எளிதாகும். இதுவே அரண் சேர்ந்து ஆக ஆக்கம் எனப்பட்டது' இத்தகைய வலி மேம்பாடுகளே நன்மைகள் எனக் குறிக்கப் பெற்றது..

அரண் என்ற சொல்லுக்குப் பாதுகாபபு, கோட்டை என்ற பொருள்கள் உண்டு. அதிகாரம் இடனறிதலாதலால் அரண் என்பதற்குப் பாதுகாப்புத் தரும் இடம் எனக் கொள்ளவேண்டும். தமக்குள்ள பல்வேறு ஆற்றல்களுடன், தம்இடத்தையும் காத்துக் கொண்டால், பெரும் பயன் கிடைக்கும். என்கிறது பாடல்.
இக்குறள் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது என்று கூறவந்ததாகையால் வருவாரை எதிரூன்றுவார்க்குக் கூறியதாகும் எனக் கொள்வது பொருந்தும்.
மொய்ம்பினவர்க்கும் என்ற (உயர்வு சிறப்பு உம்மையால் மொய்ம்பில்லாதவர்க்கும் இவ் அரண் சேர்ந்து ஆக ஆக்கம் இன்றியமையாதது என்பதும் பெறப்படும்.

முரண்சேர்ந்த மொய்ம்பினவர் யார்?

முரண் என்பதற்கு மாறுபாடு என்பது பொருள். எனவே 'முரண்சேர்ந்த மொய்ம்பினவர்' என்றதற்கு மாறுபாடு கொண்ட பகைவரிடத்து எந்த நிலையிலும் போர் செய்ய வலிமையுடையவர் என்றும் மாறுபட்ட பலவகைத் திறம் கொண்டவர் என்றும் இருதிறமாகப் பொருள் கொண்டனர். இவற்றுள் வேறுபட்ட ஆற்றல் உடையவர் என்ற பொருள் சிறந்து தோன்றுகிறது.
முரண்சேர்ந்த மொய்ம்பினவர் என்பது மாறுபட்ட பலவகைத் திறம் கொண்டவர் அல்லது வேறுபட்ட ஆற்றல் உடையவர் என்பது பொருள்/

வேறுபட்ட திறன் உடையவர்க்கும் தாமிருக்குமிடத்தினது பாதுகாப்பு நன்மை பல அளிக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தாமிருக்கும் இடனறிதலும் இன்றியமையாதது. என்பதைச் சொல்லும் பாடல்.

பொழிப்பு

வேறுபட்ட திறன் உடையவர்க்கும் தாம் இருக்குமிடத்தது பாதுகாப்பு கூடி இருந்தால் அது பல நன்மைகள் தரும்