இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:479)

பொழிப்பு (மு வரதராசன்): பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.

மணக்குடவர் உரை: தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும்.
பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது

பரிமேலழகர் உரை: அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
(அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: (தன்னுடைய செல்வநிலையின்) அளவை அறிந்து வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்யாமல் அளவுக்கு மீறிய வாழ்க்கை நடத்துகிறவனுடைய (ஆடம்பர) வாழ்வு (செல்வங்கள்) உள்ளது போலத் (தோற்றமளித்து) திடீரென்று (செல்வம்) இல்லாதாகி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி கெட்டுப் போகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.

பதவுரை: அளவு-எல்லை; அறிந்து-தெரிந்து; வாழாதான்-வாழமாட்டாதவன்; வாழ்க்கை-வாழ்வு; உள--இருக்கின்றவை; போல-போன்று; இல்லாகி-இல்லையாய்; தோன்றா-தோன்றி, காட்சியளித்து; கெடும்-அழியும்,கேடுறும்.


அளவறிந்து வாழாதான் வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை;
பரிப்பெருமாள்: தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை;
பரிதி: தன் செல்வம் அறிந்து மேல் வருகிற உதவி அறிந்து செலவழியாதான் செல்வம்;
காலிங்கர்: தமது பொருள் முதலியவற்றின் எல்லையையும் குறிக்கொண்டு எய்தற்குத் தக்காங்கு செய்யாதான் ஒழுக்கமானது;
பரிமேலழகர்: தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள்;
பரிமேலழகர் கருத்துரை அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.

'வருவாய் அளவறிந்து வாழாதன் வாழ்க்கை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'செல்வம், உதவி அறிந்து செலவழியாதான் செல்வம்' என்று பரிதி கூறினார். காலிங்கர் 'பொருள் எல்லைகுறித்து அதை அடைவதற்கு தக்கன செய்யாதவன் ஒழுக்கம்' என்று உரைத்தார். பரிமேலழகர் 'தனது பொருளின் எல்லை அறிந்து வாழாமாட்டாதவன் வாழ்க்கை' என உரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள்நிலை அறிந்து வாழாதவன் வாழ்க்கை' 'பொருளின் அளவு தெரிந்து குடும்பம் நடத்த முடியாதவன் வாழ்க்கை', 'தனது பொருளின் அளவினை அறிந்து அதற்கேற்ப வாழமாட்டாதவனுடைய வாழ்க்கை', 'வருவாயின் எல்லையைத் தெரிந்து வாழாதவனுடைய வாழ்க்கை', என்ற பொருளில் உரை தந்தனர்.

தமது பொருள்நிலை அறிந்து வாழாதவர் வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும்.
மணக்குடவர் கருத்துரை: பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது
பரிப்பெருமாள்: உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும்.
பரிப்பெருமாள் கருத்துரை: தோன்றாக் கெடும் என்பது பின்பும் ஆக்கமின்றிப் போகும் என்றது. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவர் என்றது
பரிதி: சடுதியிலே கெட்டுவிடும்.
காலிங்கர்: முன்னம் சில உளபோலக் காட்டி இல்லையாய் விடும்; மற்று அங்ஙனம் கெடுமிடத்தும் தோற்றம் இல்லவாய்க் கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
பரிமேலழகர் கருத்துரை: .தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.

'உளபோலக் காட்டி இல்லையாய் தோற்றம் இன்றிக் கெட்டுவிடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருப்பதுபோல ஒன்றும் இராது', 'நிலைகள் உள்ளன போலத் தோன்றி இல்லையாய்ப் பின் அத்தோற்றமும் இன்றி மறைந்து கெட்டுவிடும்', 'உள்ளது போலத் தோன்றி இல்லையாய்ப் பின் அத்தோற்றமும் இல்லாமற் கெட்டுப்போம்', 'நிலைத்திருப்பது போலத் தோன்றி மறைந்து விடும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

உள போலத் தோன்றி இல்லையாய்ப் பின் அத்தோற்றமும் இன்றி கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமது பொருள்நிலை அறிந்து வாழாதவர் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றி பின் அத்தோற்றமும் இன்றி கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
'உளபோல இல்லாகி' என்றால் என்ன?

தனது பொருள்நிலை தெரிந்து அளவுபடுத்திக் கொள்ளாதவன் வாழ்க்கையைத் தொலைத்து நிற்பான்.

தன்னிடமுள்ள பொருளின் அளவினை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை முதலில் வளம் பலவும் அமைந்துள்ளன போலத் தோன்றிப் பின்னர் ஒரு காலத்தேயும் தோன்றுதற்கு இல்லாதபடி அடியோடு கெட்டொழியும்.
பொருளின் எல்லை தெரியாமல் வாழ்பவனது வாழ்க்கை வளமாகவும் பெருமை உடையது போலவும் வெளிக்குத் தெரிந்து ஒன்றுமில்லாமல் அழிந்து போகும். இக்குறளுக்குக் காலிங்கர் உரை 'தமது பொருள் முதலியவற்றின் எல்லையையும் குறிக்கொண்டு எய்தற்குத் தக்காங்கு செய்யாதான் ஒழுக்கமானது முன்னம் சில உளபோலக் காட்டி இல்லையாய் விடும்; மற்று அங்ஙனம் கெடுமிடத்தும் தோற்றம் இல்லவாய்க் கெட்டுவிடும்' என்கிறது. இவ்வுரை 'பொருட்செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குச் சேமிப்புச் சிந்தனையும், எய்தற்குரிய குறிக்கோளும் தேவை' என்பதைச் சொல்வதாகிறது. இக்குறட்கருத்து வருமுன் காவாதான் வாழ்க்கை...... (குறள் 435) என்னும் பாடலையும் நினைவூட்டுகிறது. ஆற்றின் அளவறிந் தீக .........என்ற பாடல் (குறள் 477) முதல்பொருள் காக்கப்படவேண்டும் என்றது; ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை...... என்னும் பாடல் (குறள் 478) ஊதியத்திற்கு மேல் செலவில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எனச் சொன்னது; இப்பாடல் சேமிப்பு, பொருள்நிலை மேலாண்மை இவற்றின் தேவையை வலியுறுத்துகிறது.

தனக்குள்ள வருவாய் என்ன செலவுநிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாதவனை அளவறிந்து வாழாதான் எனக் குறிப்பிடுகிறது இப்பாடல். தனது வருவாயை இழக்க நேரிடும்போதோ அல்லது அது குறையும்போதோ அதைக் கண்டறிய மாட்டாதவனும் அளவறியாதவன்தான்.
மாந்தரது பொருளாதார நிலை மாறும் தன்மை கொண்டது ஆதலால், ஒருவகை பொருள்நிலையில் வாழ்பவர்களுக்கு அதேநிலை தொடரும் என்று சொல்லமுடியாது. இடர் நேரும் வேளைக்குக் காப்பு ஏற்பாடு செய்யாதவராய் இருந்து, குறைந்து வரும் தன் நிதிநிலையையும் பொருட்படுத்தாமல் வழக்கமான ஆடம்பர வாழ்க்கை நடத்துபவரது-அதாவது வரவுக்கு மீறி செலவழிப்பவரது - வாழ்வு அழிவது உறுதி. இக்கருத்து தனிமனித வாழ்க்கை, வணிக நிறுவனம், அரசு போன்ற பொருள்நிலை சார்ந்த அனைத்திற்கும் பொருந்தும்.
செலவினங்களில் ஒரு அளவுகோல் அல்லது வரையறைகள் - செலுத்தவேண்டிய மாதக் கடன் தவணை வருவாயில் 50% மேல் இல்லை என்பது போன்றவற்றை - வைத்துக்கொண்டு கட்டுப்படுத்தாவிட்டால் வாழ்க்கை உறுதியாகக் கேடுறும். தமது பொருள்நிலையை ஒருவன் தொடர்ந்து கண்காணித்துகொண்டு, திட்டமிட்டு- வரவுக்குள் செலவு செய்து வாழவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. சேர்த்த செல்வத்தை பயன்கொள்ளும் அறிவில்லையானால் பொருட்கேடு மட்டுமல்லாமல், அவனது வாழ்க்கையே கெடும் எனச் சொல்லப்பட்டது.

'உளபோல இல்லாகி' என்றால் என்ன?

'உளபோல இல்லாகி' என்றதற்கு உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகி, சடுதியிலே, முன்னம் சில உளபோலக் காட்டி இல்லையாய், உள்ளன போலத் தோன்றி மெய்ம்மையின் இல்லையாய், (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல், முதலில் மிகச் சிறப்பாக உள்ளனபோல ஆடம்பரமாய் வெளியே தோன்றி பிறகு உண்மையில் அங்ஙனம் எவையும் இல்லை என அறியப்பட்டு, பல்வகைப் பொருள்களும் உடையன போலத் தோன்றிப் பின் இல்லாமல் போகும், இருப்பதுபோல ஒன்றும் இராது, உள்ளன போலத் தோன்றி இல்லையாய், (ஆடம்பர) வாழ்வு (செல்வங்கள்) உள்ளது போலத் (தோற்றமளித்து) திடீரென்று (செல்வம்) இல்லாதாகி, உள்ளது போலப் பளிச்சிட்டுக் காட்டி இல்லாததாய், உள்ளது போலத் தோன்றி இல்லையாய், நிலைத்திருப்பது போலத் தோன்றி மறைந்து விடும், வளம் பலவும் அமைந்துள்ளன போலத் தோன்றிப் பின்னர் இல்லாதனவாய், இருப்பது போல் தோன்றும் ஆனால் அதில் ஒன்றும் இராது, உள்ளது போலத் தோன்றி உண்மையாக இல்லையாய், பல்வகைப் பட்ட பொருள்களும் உள்ளனபோலத்தோன்றி உண்மையில் இல்லாதனவாய், பிறர் முன் விளக்கமாகக் காணப்படினும் குறைந்து குறைந்து முடிவில் இல்லையாகிவிடும் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

உளபோல இல்லாகி என்றது நிறைந்துள்ளன போலத் தோன்றிய பலவகைச் செல்வங்களும் கால ஓட்டத்தில் இல்லாதனவாகி என்ற பொருள் தருவது. தொடக்கத்தில் கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல' அதாவது 'இருப்பது போன்று காட்சி தந்து' எனப்பட்டது. உளபோல இல்லாகி என்பதற்கு 'செல்வம் உள்ளது போல இருந்து சடுதியில் இல்லாதாகி' எனப் பொருள்மீது வைத்துக் கூறப்பட்டது.

செல்வங்கள் நிறைந்தவர் என்று ஆடம்பரமாய்த் தோன்றி, பிறகு உண்மையில் அங்ஙனம் வளமானவர் அல்ல என்பது உலகத்தாரால் அறியப்படும் என்பதைச் சொல்லவருகிறது இப்பாடல். மாளிகை போன்ற வீட்டில் வாழ்ந்துகொண்டு, உயர்வகைக் காரில் பயணம் செய்வோர், வெளிக்கு வெளிச்சமாகவே தோன்றுவர். ஆனால் சொல்லப்பட்ட உடைமைகள் எல்லாம் அவர் வாங்கிய கடனுக்கான அடமானமாக வங்கிகளிலோ பிறரிடமோ வைக்கப்பட்டிருக்கலாம். நிதி மேலாண்மை முறையாகச் செய்யாவிட்டால் அவர் கடனை மீட்கமுடியாமல் உடைமைகள் அனைத்தையும் இழந்து கெட்டு நிற்பர். கடன் வாங்காமலிருந்தாலும்கூட மற்றப்படி அளவுக்கு மீறிய வாழ்க்கை நடத்துகிறவனுடைய) செல்வங்கள் விரைவில் இல்லாதாகி விடும். பொய்ம்மை மானம் கருதி அவர் வாழும் வாழ்க்கை வெளிப்பார்வைக்கு மிடுக்காகத் தோன்றலாம். தனது பொருள் நிலையின் அளவு அறியாமல் வாழ்க்கை நடத்தினால், மலை போன்று சாய்க்கமுடியாத தோற்றம் தந்த வாழ்வுநிலையும் குறுகிய காலத்திலேயெ மடுவாகி, பின் ஒன்றுமில்லாமல் மறைந்தும் போகும். ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்காகத் தன் சமஸ்தானத்தையே கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தது வரலாறு.
அளவறிந்து கட்டுப்பாட்டுடன் வாழ்பவனால் மாற்றங்கள் புலப்படத் தொடங்கும்போதே, தகுந்த முன்னேற்பாடுகள் செய்து கொள்ள இயலும். அளக்காமல் நுகரப்படும் எதுவும் இருப்பதுபோல் தோன்றும். திடீரென இல்லாமற்போய்விடும்.

தமது பொருள்நிலை அறிந்து வாழாதவர் வாழ்க்கை வளம் எல்லாம் உள்ளன போலத் தோன்றி இல்லையாய்ப் பின் அத்தோற்றமும் இன்றி கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருள் வலி அறிதல் ஒருவர் வாழ்வை நிலைநிறுத்திக் காக்கும்.

பொழிப்பு

தமது பொருள்நிலை அறிந்து வாழாதவர் வாழ்க்கை வளங்கள் உள்ளன போலத் தோன்றி இல்லையாய்ப் பின் அத்தோற்றமும் இன்றி கெட்டுவிடும்