நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்
(அதிகாரம்:வலியறிதல்
குறள் எண்:476)
பொழிப்பு: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்
|
மணக்குடவர் உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும்.
இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.
பரிமேலழகர் உரை:
கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை¢ கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
ஒரு மரக் கிளையின் நுனிக்கு ஏறிச் சென்றவர் அதனையும் கடந்து மேற்செல்ல முயன்றால் அவர் உயிர்க்கு முடிவாகிவிடும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்.உயிர்க்குஇறுதி யாகி விடும்
|
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்:
பதவுரை: நுனி-முனை; கொம்பர்-சிறுகிளை; ஏறினார்-ஏறினவர்;; அஃது-அது; இறந்து-கடந்து; ஊக்கின்-முயன்றால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின்;
பரிப்பெருமாள்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவன் தன் அளவறிந்து வைத்துப் பின்னும் மேலே செல்வானாயின்;
பரிதி: அடிப்பனையில் நின்று மரத்தில் பழம் பறியாமல் நுனிக்கொம்பிலே ஏறினாற்போல, கெட்ட புத்தியை எண்ணாமல் உறுதியான காரியத்தை விசாரிக்கில்;
காலிங்கர்: நின்றதோர் பசுமரத்தின் இளந்தலைக் கொம்பின் மேலே போய் ஏறினார் மற்று அதனை அறிந்து பின்னும் உரம் செய்வாராயின்; ஊக்கின் என்பது உரம்செய் என்றது.
பரிமேலழகர்: ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். '
'ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கடந்து என்ற பொருளில் 'இறந்து' என்று பரிமேலழகர் கொள்ள மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் அறிந்து எனப் பாடம் கொள்கின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நுனிக்கொம்பில் ஏறியவர் மேலும் ஏறின்', 'ஒரு மரத்தின் நுனிக்கொம்பின் உச்சிக்குப் போய்விட்டவன் அதர்கு மேலும் ஏற முயன்றால்', ' ஒரு மரக்கொம்பின் நுனியிலே ஏறி நின்றவர்கள் தமது ஊக்கத்தால் அதனைக் கடந்து அப்பாலும் ஏற முயல்வார்களென்றால்,.', 'மரக்கொம்பின் நுனியின்கண் ஏறினார் தம் ஊக்க மிகுதியால் மேலும் அதனைக் கடந்து ஏற முயன்றால்', என்ற பொருளில் உரை தந்தனர்.
ஒரு மரக்கொம்பின் நுனியிலே ஏறினார் ஊக்க மிகுதியால் கடந்து மேலும் ஏற முயன்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
உயிர்க்குஇறுதி யாகி விடும்:
பதவுரை: உயிர்க்கு--உயிருக்கு; இறுதி-முடிவு; ஆகிவிடும்-ஆய்விடும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.
பரிப்பெருமாள்: அஃது அதுதன் உயிர்க்கு இறுதியாகிவிடும்.
பரிப்பெருமாள் கருத்துரை: இஃது அரசன் தன்னாற் செல்லலாமளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.
பரிதி: அக்காரியம் பலிக்கும் என்றவாறு.
காலிங்கர்: தமது உயிர்க்கு இறுதியாகி விடும் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
பரிமேலழகர் கருத்துரை: 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.
'அவர்தம் உயிர்க்கு இறுதியாகிவிடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் ' உயிர்க்கு முடிவுகாலம் வந்துவிடும்', 'உயிருக்கே முடிவு வந்துவிடும்.', 'அவ்ஊக்கம் அவர்களுடைய உயிர்க்கு முடிவை உண்டாக்கும்', 'உயிர்க்கு முடிவினை தரும். (இறந்து விடுவர்) (தம் வலிமைக்கு மேற்பட்ட செயலில் ஈடுபடுவார் அழிவார்.)' என்றபடி பொருள் உரைத்தனர்.
'அவர்தம் உயிருக்கு முடிவை உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தன் வலியின் எல்லை மீறி முயல வேண்டாம் என்னும் குறட்பா.
ஒரு மரக்கொம்பின் நுனியிலே ஏறினார் ஊக்க மிகுதியால் கடந்து மேலும் ஏற முயன்றால் அவர்தம் உயிருக்கு முடிவை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
இப்பாடலின் உவமை சொல்லும் செய்தி என்ன?
|
நுனிக்கொம்பர்- என்றது கொம்பின் நுனி என்ற பொருள் தரும்.
ஏறினார் என்ற சொல்லுக்கு ஏறி நின்றவர் என்று பொருள்.
அஃதிறந்து என்ற தொடர் அதைக் கடந்து என்ற பொருளது.
ஊக்கின் என்ற் சொல் தூண்டப்பட்டு எனப் பொருள்படும்.
உயிர்க்குஇறுதி என்ற தொடர் உயிர்க்கு முடிவு எனப் பொருள் தரும்.
ஆகிவிடும்- என்றத் ஆய்விடும் குறித்தது.
|
மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் ஊக்கத்தினால் அதையும் கடந்து மேலும் ஏறுவாரானால், அவர் உயிரையே இழப்பவர் ஆகிவிடுவர்
பழம் பறிப்பதற்கோ, இலைகள் கொய்வதற்கோ அல்லது கொப்பு ஒடிப்பதற்கோ மரத்தில் ஏறுவர். இங்கு ஒரு கிளையின் நுனிவரை சென்று அதன் மேல் கிளைகளிலுல்ள பழத்தைப் பறிக்க ஒருவர் முயல்கிறார். கனி எட்டவில்லை. அக்கிளையிலேயே இன்னும் கொஞ்சம் நடந்து சென்று முயன்றால் எட்டும் என நினைக்கிறார். ஏற்கனவே நுனிவரை சென்றுவிட்டார். இன்னும் மேலே சென்றால் அவர் எடையைத் தாங்காது கிளை முறிந்து கிளையோடு சேர்ந்து ஏறியவரும் கீழே விழுவார். கொம்பின் நுனி முயற்சியின் எல்லையைக் காட்டுகிறது. அதனையுங் கடந்து செல்ல முயலல் குறித்த எல்லையை மீறுவதால் உண்டாகப்போகும் பேரழிவினை உணர்த்தும்.
அதுபோல், ஒருவர் தனது ஆற்றலின் எல்லையை அறிந்து செயல்படவேண்டும். தன் வலிக்கு மீறி செயலாற்றினால் தம்மையே இழக்க நேரிடும்..
நுனிக்கொம்பை 'இளந்தழைக் கொம்பு என்று காளிங்கர் குறிப்பது நயமாக உள்ளது.. இப்பாடலில் சொல்லப்பட்டது கிளையின் நுனியன்று மரத்தின் நுனி அதாவது உச்சாணிக் கொம்பு என்பார். தேவநேயப் பாவாணர்:
மேலாண்மைக் கோட்பாட்டில் 'வெளியேறும் உத்தி' (.exit strategy) : என ஒன்று உள்ளது. போர்க்கலையில் பின்வாங்குவது சிறந்ததோர் உத்தி. அதுதான் இக்குறளில் சொல்லப்படுகிறது. தன் ஆற்றலின் எல்லை நெருங்கிவிட்டால் முயற்சியினின்றும் வெளியேறுவது பயனளிக்கும். எப்படி நுனிக் கொம்பில் ஏறியவர் மேலே செல்லாமல் திரும்பிவிடுவாரோ அதுபோல் சூழலைப் பொறுத்துப் பின்வாங்குவது நல்லது.
நெப்போலியன் பல நாடுகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் மேலும் ஊக்கம் பெற்று ரஷ்யாவில் நுழைந்தான். அப்பொழுது அவனது படை அந்நாட்டின் குளிர் தாங்க முடியாமல் தோல்வியைத் தழுவியது வெற்றிக் கனி எட்டாமல் போய் அவன் சிறைசெல்லும் நிலை ஏற்பட்டது.. இது இப்பாடலுக்கு சிறந்த காட்டாக அமைகிறது.
|
இப்பாடலின் உவமை சொல்லும் செய்தி என்ன?
பிறிதுமொழிதல் அணியில் அமைந்த பாடல் இது. உவமானம் சொல்லப்பட்டு உவமேயம் குறிப்பிடப்படாமல் இருந்தால் பிறிதுமொழி அணி எனப்படும்..
மரத்தின் கிளையின் நுனியில் ஏறியவர் அதனையும் தாண்டி மேலே போக எண்ணினால் அது அவரது உயிர்க்கு இறுதியாகிவிடும் என்பது உவமானம். ஆனால் உவமேயம் சொல்லப்படவில்லை. 'தன் வலிமையின் எல்லை கடந்து' என்ற உவமேயப் பொருளுடன் கூடிய உரைகள் சில:
பகை மேற்சென்று முற்றுகையிட்டவன் பல அரண்களைக் கடந்துதான் செல்லுமளவும் சென்றதோடு அமையாது மேலும் அரிய உள்ளரணைக் கைப்பற்ற எண்ணி முயலுவானாயின் அது அழிவுக்கு ஏதுவாம்
போரில் முன்னேறிப் போகிறவர் தன்வழியளவுக்குப் போகலாமே தவிர ஊக்கத்தால் மேலும் செல்லலாகாது
பகைமேல் செல்லுங்கால் பகைவனை வெற்றி கொண்ட அளவோடு அமையாது பகைப்புல நாட்டை அழிக்க நினைத்து மேலும் தீமைகள் செய்யின் பகைவனும் அவனைச் சார்ந்தவர்களும் வெகுண்டு எழுந்து அழிப்பர்
எல்லைகடந்து ஒருவன் நடந்துகொண்டு அழியலாகாது
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர் முதலீட்டை மீட்கும் பொருட்டு தனது சக்திக்கு மீறி மேலும் மேலும் கடன் வாங்கி முதலீட்டையும் இழந்து கடன் சுமையால் அழுந்துவர்.
செயலாற்றலுக்கு எல்லைகள் உண்டு என்பது செய்தி.
|
ஒரு மரக்கொம்பின் நுனியிலே ஏறினார் ஊக்க மிகுதியால் கடந்து மேலும் ஏற முயன்றால், அவர்தம் உயிருக்கு முடிவை உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.
அகலக்கால் வைக்க வேண்டாம்; ஊக்கம் இருந்தாலும் வலி அறிதல் வேண்டும் என்னும் பாடல்.
மரக் கிளையின் நுனிக்கு ஏறியவர் கடந்து மேலும் ஏறினால் அவர் உயிர்க்கு முடிவாகிவிடும்.
|