இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0475



பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:475)

பொழிப்பு: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

மணக்குடவர் உரை: பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின்.
இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.
(உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மயிலிறகையும் அளவுக்கு மிகுதி ஏற்றினால் பாரவண்டியும் அச்சு முறிந்து விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம். சால மிகுத்துப் பெயின்.

பதவுரை:
பீலி-மயிலின் தோகை; பெய்-ஏற்றிய (இடு, சொரி, பரப்பு); சாகாடும்-(சகடமும்) வண்டியும்; அச்சு-வண்டியின் சக்கரம் கோக்கப்படும் மரம்; இறும்-முறியும்; அப்பண்டம்-அந்தப் பொருள்; சால-பெருமளவு; மிகுத்துப்-பெருக்கிப்; பெயின்-இட்டால்.


பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்;
பரிப்பெருமாள்: பீலியை அடைந்த சகடமும் அச்சு முறியும்;
பரிதி: நொய்ய பீலியாகிலும் வண்டி அச்சு முறியும். [நொய்ய-மெல்லிய]
காலிங்கர்: உலகத்தின் நொய்யவாக நிகழ்கின்ற பொருள்களின் ஒன்றாய பீலியைப் பண்டமாக உள்ளுச் செரிந்து வைத்த சகடமும் அதுகொண்டு நடக்குமிடத்துத் தனக்கு அச்சு முறிந்து கெடும். [உள்ளூச்சொரிந்து- உள்ளேயிட்டு]
பரிமேலழகர்: பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும்,
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது.

'பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நொய்தான மயில் இறகினை ஏற்றிய வண்டியின் உறுதியான அச்சுமுறிந்து போகும்', 'மிகவும் இலேசான மயில் தோகையைப் பாரம் ஏற்றிய வண்டியானாலும் அதன் அச்சு முறிந்துவிடும்', 'மெல்லிய மயிற்பீலி ஏற்றிய வண்டியும்', 'மென்மையாகவுள்ள மயிலிறகினையும் அச்சு முறியும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மயிலிறகு ஏற்றிய வண்டியானாலும் அதன் அச்சு முறிந்துபோகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: அப்பீலியை மிகவும் நெருங்க இடின் என்றவாறு.
பரிப்பெருமாள் கருத்துரை: அரண் வலிது என்றார்க்குப் பகைமிகின் அரண் நில்லாது என்றற்குக் கூறிற்று. எனவே பகைவர் மேலே நெருங்கிச் செல்லினும் அளவறியாது செல்லின் கெடுமிடனும் உண்டாம் என்றது.
பரிதி: கனமாக ஏற்றினால்
பரிதி கருத்துரை: அதுபோலப் பெலமில்லாதார் பலம் கூடினாலும் சத்துவமாம். ஆகையால் அரசன் வீரராகாத பேரையும் களம் பெறக் கூட்டிக் கொள்வான் என்றவாறு.
காலிங்கர்: எப்பொழுது எனின், அப்பண்டம் கொண்டுஓர் ஒழிவின்றி நடக்கும் உரத்து அள்வ5றியாது மற்று அதனைச் சால மிகுத்து உள்ளூறச் சொரிந்து செலுத்தின் என்றவாறு. [உரத்த அளவு - வலிமையினுடையயாகிய அளவு.]
பரிமேலழகர்: அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.
பரிமேலழகர் கருத்துரை: 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும், என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

'அப்பீலியை அளவின்றி மிகுத்து ஏற்றின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். தொல்லாசியர் ஒவ்வொருவரும் இக்குறளைப் பிறிது மொழிதல் அணியாகக் கொண்டு பொருள் நிலையில் வேறுபடும் வகையில் விளக்கம் தந்துள்ளனர். மணக்குடவர் 'அரண்வலி மிகுதியும் உடையேம் என்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் அழியும்' என்றார். பரிப்பெருமாள் 'பகைவர் மேற்படையெடுத்துச் செல்லினும் அவர்வலியறிந்து அளவோடு செல்லவேண்டும். அளவிற்கு மிகுதியான படையைத் திரட்டிச் சென்றாலும் கேடுண்டாம்' என்பார். பரிதி. 'பலம் இல்லார் பலர் கூடினாலும் பலமாம்; ஆதலால் வீரராகாத பேரையும் சேர்த்துக்கொண்டு போர்க்களம் சென்று வெல்வான்' எனப் பொருந்தா உரை (பின் பகுதி) ஒன்று தருகிறார். காலிங்கர் 'இடைவிடாது ஏற்றுதலும் அடிக்கடி போதலும் கூடாது; என்ற பொருள்படும்படி மொழிந்தார். பரிமேலழகர் ''எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும்' என மொழிந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனை அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால்', 'அந்த மயில் தோகையையும் அளவுக்கு மீறி அந்த வண்டியில் ஏற்றினால் ', 'அச்சரக்கினை மிகவும் மிகுதியாக ஏற்றிய இடத்து', 'வண்டி தாங்கும் அளவுக்கு மேல் ஏற்றினால் (தன் வலிமைக்கு மேற்பட்ட செயலைச் செய்யத் தொடங்குவதனால் அழிவேற்படும். எவ்வளவு வலிமையுடையவராயினும் மெலியார் பலரானால் வெல்ல முடியாது.' என்றபடி பொருள் உரைத்தனர்.

அப்பொருளை அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியானாலும் அதன் அச்சு முறிந்துபோகும், அப்பொருளை அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பகைவர் வலியைத் தனித்தனியே அறியாது தொகுத்தறிதல் வேண்டும்.

மிக மெல்லிய மயிலிறகாக இருந்தாலும்கூட அதன் கட்டுக்களை அளவுக்குமேல் பாரவண்டியில் அடைத்தால் அச்சுமையைத் தாங்க முடியாமல் வண்டியின் வலிய அச்சு முறிந்துவிடும். பளுவை எப்படி வண்டியில் பரப்பி வைத்தாலும் வண்டியின் தாங்கு சக்தி என்று ஒன்று இருக்கிறது. அந்த அளவை மீறிப் பொருளைப் பெய்தால் வண்டியின் ஆதாரமான அச்சு இறும். நொய்மையான மயில்தோகையை ஆனாலும், அதையும் அளவு மீறி மிகுதியாக இட்டால், ஏற்றப்பட்ட வண்டியின் அச்சும் முறியும்.
பகைவர் பலராகிவிட்டால் படையெடுத்துச் செல்லலாகாது என்றும், அளவுக்கு மிகுதியாகப் படைதிரட்டிச் செல்லக் கூடாது என்றும், பகைவரை ஒன்று சேரவிடல் ஆகாது என்றும். தம் அரண் வலிகண்டு ஏமாறலாகாது என்றும், ஆள்பலம் தேவையானது என்றும் இக்குறளுக்கு உவமேயப் பொருள் கூறினர். காலிங்கர் 'மிகவும் மெலிதான மயிலிறகை வண்டியில் சிறுதும் இடமில்லாமல் அடர்த்தி ஏற்றி அதனை ஓய்வு ஒழிவின்றி ஓட்டிச் செல்லும் போது அச்சு முறியும்' என்று உரை வரைந்தார். 'படைகளை அளவுக்கு மிச்சமாகத் திரட்டிச் செல்லுதல் கூடாது; அடிக்கடி இடைவிடாமல் போருக்குப் போதல் கூடாது' என்கிறார் இவர்.
ஓர் அரசு அதன் பகைநாடுகள் தன்னைக் காட்டிலும் வலிமையில் குறைந்தவை என்று கருதி, அவர்கள் மீது ஆராயாமல் போர் தொடுத்தால் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடி அதை எதிர்த்துப் போரிட்டால் அந்த அரசு தன் வலிமை கெட்டு அழிந்து போகும். பகைவர் தனித்தனியே மிகச் சிறியாராயினும் அவரனைவரும் ஒன்று கூடின், தனிப்பட்ட பகைவன் எவ்வளவு வலியவனாயினும் அவனை வென்று விடுவர் என்பது கருத்து.

இக்குறளின் 'சாகாடும் அச்சிறும்' என்பதிலுள்ள உம்மை வண்டியின் உறுதியை நினைக்கும்போது உயர்வு சிறப்பாயும், அச்சிறுதலாகியு பயனிலிருந்து ஏற்றப்பட்ட பீலியின் நொய்ம்மையை நினைக்கும்போது இழிவு சிறப்பாயும் கருதப்படுதலைப் பரிமேலழகர் விளக்கியுள்ளார். ஆயின் 'கண்ணிரண்டு ஒருகாலத்து ஒன்றையே நோக்குதல்போல உம்மையும் இரண்டையும் ஒருசேர உணர்த்தாது, ஒன்றொன்றாகவே உணர்த்தும் என்ற குறிப்பும் தோன்ற உரைத்ததாம்' (தண்டபாணி தேசிகர்).

இக்குறள் கூறும் செய்தி என்ன?

தாம் கருதுகின்ற பொருளை மறைத்து, அதை வேறொரு முறையில் வெளிப்படுத்தினால், அதைப் பிறுதுமொழிதல் அணி' என்பர். இவ்வணியில், சொல்லவரும் கருத்து குறிப்பாகக் கூறப்படுவதால், அது படிப்பவரைச் சிந்தித்து உணர்ந்து கொள்ளச் செய்து கவிதைச் சுவையை மிகுதியாக்கும். மென்மையான மயிற்பீலியைக் கூட அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டி அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளுக்கான நேரடிப் பொருள். இதில் உவமானம் மட்டும் இடம் பெற்றிருக்கிறது. உவமேயம் குறிப்பிடப்படவில்லை. எனவே பிறிதுமொழிதல் அணியாகும். 'வலியறிதல்' என்ற அதிகாரத் தலைப்பு நோக்கி, ஒருவன் தன்னுடைய ஆற்றலை நன்கு அறிவதோடு பிறருடைய ஆற்றலையும் நன்குணர்ந்து விழிப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளவேண்டும் என்பது பெறப்படுகிறது.

மயில்தோகை என்ற மெல்லிய பொருள் மிகையாகப் பெய்தால் வண்டியின் அச்சு முறியும் என்பதை மட்டும் குறட்பா கூறுகிறது. பகையை ஒன்று சேரவிடல் ஆகாது, பகைவர் பலராயின் படையெடுத்துப் போகக் கூடாது, அளவுக்கு மிகுதியாகப் படைதிரட்டிச் செல்லக் கூடாது, அடிக்கடி இடைவிடாமல் போர் மேற்கொள்ளுதல் ஆகாது போன்று போர்ச் சூழலில் தன்வலி, பகைவர்வலி அறிதல் என்ற வகையிலேயே பெரும்பாலோர் இதற்குப் பொருள் கூறினர். இந்த உவமையை மாந்தர் வாழ்க்கையின் மற்ற சூழ்நிலைகளுக்கும் பொருந்துமாறு பயன்படுத்த முடியும். எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்ற கருத்தைக் கொண்டு மற்ற துறைகளுக்குச் சொல்லப்பட்டவற்றில் சில இவை:

  • சிறு கொடையாயினும் தம் செல்வநிலை கடந்து மிகப்பல செய்வானாயின், அவன் அழிவெய்துவான்.
  • அரசு வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மிகைவரி அரசுக்கே கேடாக முடியும்.
  • வரவுக்கு மேல் செலவு கூடிக்கொண்டே போனால் அரசானாலும் குடும்பம் ஆனாலும் அச்சிறுந்து போகும்.
  • கொஞ்சம் தானே, கொஞ்சம் தானே என்று கடன் வாங்கி அது பெருகி ஒருவன் கடனில் மூழ்கிப் போகும் நிலைக்குச் செல்வான்.
  • உணவைக் கட்டுப்பாடின்றி அருந்தினால் உடல் நலம் கெடும்..
  • தொழிலாளி-முதலாளி உறவில் அதிகாரம் எல்லை மீறினால் ஆக்கம் கெடும்.
  • குடும்பத்திலுள்ளோரை அளவுக்கு மீறிக் கட்டுப்படுத்தினால் எதிர்விளைவுகளே உண்டாகும்.

எளியர் என்று பலரோடு பகை கொள்வான் தான் வலிமை பெற்றவனே ஆயினும், அவர் தொக்க வழி, வலி அழியும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

மயிலிறகு ஏற்றிய வண்டியானாலும் அதன் அச்சு முறிந்துபோகும், அப்பொருளை அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒன்றிணையும் எதிராளிகளால் தன் வலி குறையும் என்பதைச் சொல்லும் வலி அறிதல் பாடல்.

பொழிப்பு

மயிலிறகையும் அளவுக்கு மிகுதி ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.