நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை
குறள் எண்:469)
பொழிப்பு (மு வரதராசன்): அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
|
மணக்குடவர் உரை:
நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.
இதுவுமோரெண்ணம்.
பரிமேலழகர் உரை:
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம்,
அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
(நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.)
வ சுப மாணிக்கம் உரை:
அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் நன்மை செய்வதும் தவறாகி விடும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை.
பதவுரை: நன்று-நல்லன, நன்மை; ஆற்றல்உள்ளும்-செய்தற்கண்ணும், செய்தலில்கூட; தவறு-தவறு, குற்றம்; உண்டு-உண்டாம்; அவர்அவர்-(தனித்தனியாக)அவர்களின்; பண்பு-குணம், செயற்பாடு; அறிந்து-தெரிந்து; ஆற்றாக்கடை-செய்யாவிடின்.
|
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்;
பரிப்பெருமாள்: நன்மை செய்யுமிடத்தினும் குற்றம் வரும்;
பரிதி: ஒருவற்குத் தான் நல்ல காரியம் செய்தாலும் குற்றம் உண்டு;
காலிங்கர்: அந்தணர் முதலிய குடிப்பிறந்தோர்க்கும் பிறர்க்கும் அரசரானவர் தாம் பல நன்மைகளைச் செய்யுமிடத்துக் குற்றம் உண்டாம்;
பரிமேலழகர்: வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம்;
பரிமேலழகர் குறிப்புரை: நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை.
'நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் பரிதியும் பொதுவகையிற் பொருள் கூறினர். காலிங்கர் அந்தணர் முதலிய குடிப்பிறந்தோர்க்குச் செய்யும் நன்மை பற்றிப் பேசுகிறார். பரிமேலழகர் வேந்தர் செயலைக் குறிப்பிடுகிறார்.
இன்றைய ஆசிரியர்கள 'நன்மை செய்வதும் தவறாகி விடும்', 'நன்மை செய்யுமிடத்தும் தவறுண்டு', 'நன்மையைச் செய்யுமிடத்தும் குற்றம் உண்டாதல் கூடும்', 'நல்ல நெறி முறைகளைக் கடைப்பிடித்துச் செய்தற்கண்ணும் தவறு உண்டாகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
நன்மை செய்வதிலும் தவறு உண்டாகிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இதுவுமோரெண்ணம்
பரிப்பெருமாள்: அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுவும் ஓர் எண்ணம் கூறிற்று.
பரிதி: அவரவர் இயற்கை அறிந்து காரியம் செய்யானாகில் என்றவாறு.
காலிங்கர்: மற்று எப்பொழுது எனின், அவை செய்கின்ற இடத்து மற்று அவரவர் மரபறிந்து தக்காங்குக் குறிக்கொண்டு நீதியைச் செய்யா இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
பரிமேலழகர் விரிவுரை: அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.
'அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை செய்வர். பரிதி 'இயற்கை அறிந்து செய்யானாகில்' என்பார். காலிங்கர் 'அவரவர் மரபறிந்து செய்யா இடத்து' என்கிறார். பரிமேலழகர் 'அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து செய்யாவிடின்' எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள 'அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின்', 'அவரவர் குணநலன்களை அறிந்து அவற்றிற்கேற்பச் செயல் புரியாவிட்டால்', 'அவரவருடைய குணங்களை அறிந்து அவரவர்க்குத் தக்கபடி நலஞ் செய்யாவிடில்', 'அவரவர் குணங்களை ஆராய்ந்து அவற்றிற்குப் பொருந்தச் செய்யாவிட்டால்', என்ற பொருளில் உரை தந்தனர்.
அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நன்மை செய்வதிலும் தவறு உண்டாகிவிடும் அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் என்பது பாடலின் பொருள்.
நல்லது செய்தால் எப்படித் தவறு உண்டாகும்?
|
ஏற்போரின் செயற்பாடு அறியாமல் செய்த நன்மையும் தவறாகப் போய்விடும்.
அவரவரது குணநலன்களைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாதபோது, நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.
இக்குறளுக்கு எளிதில் புரிந்துகொள்ளும்படியான எடுத்துக்காட்டாகக் கூறப்படுவன, பாம்புக்கு பால் வார்த்தல் - பாலுணவு தந்தவனையே அது தீண்டும்;
பசியோடு பாழுங்கிணற்றில் கிடந்த சிங்கத்தை வெளியே கொணர உதவுவது - உதவியவன் உயிரை இழப்பான்.
நன்மை பெறுவோர் யார் என்று ஆராயாமல், தன் கடமையைச் செய்யவேண்டும் என்பதற்காக, நல்லது செய்துவிட்டேன் என்று செய்வது தீமையில் முடியலாம்; இவ்வாறு நன்மை செய்பவர் துன்பத்திற்கும் பழிக்கும் ஆளாகலாம். இதைத் தவறுண்டாம் எனக் குறிக்கின்றார் வள்ளுவர்.
இக்குறள் மிகப் பொதுவான நிலையில், நல்லசெயல்கள் அனைத்துக்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. ஆனால், குறளுக்கு அதிகார இயைபு நோக்கிப் பொருள் காண்பதுவே முறையாகும். இப்பாடல் செயல்களை ஆராய்ந்து செய்யும் வகை பற்றிக் கூறும் 'தெரிந்து செயல்வகை' அதிகாரத்தில் வருகிறது.
ஆதலால் இக்குறள் ஒரு முயற்சியில் தொடர்புடையார்க்கு வழங்கப்படும் நன்மைகள் பற்றிக் கூறுவதாகக் கொள்ளவேண்டும். அந்த நன்மைகள் எவை?
இங்கு நன்றுஆற்றல் என்ற தொடர் செயலின் உரிமையாளர், ஒரு செயலின் நோக்கம் நிறைவேற உழைத்தவர்களுக்கு, அளிக்கும் நன்மைகள் என்பதைக் குறிக்கும். அதாவது அவ்வினையில் பங்கேற்றவர்களுக்கு ஊதியமாகத் தரப்படும் பொருளே இக்குறளில் சொல்லப்பட்ட நன்று என்பதாகும்.
'அவரவர் பண்பு' என்றமையால் ஒவ்வொருவருக்கும் பண்பு வேறுபடும் என்பது தெளிவு.
பண்பறிந்தாற்றுதல் என்பது நன்மைபெறுவார் குணந்தெரிந்து கொடுத்தும், அடுத்தும், தடுத்தும் பாராட்டுதலைக் குறிக்கும்.
பண்பு என்ற சொல்லுக்குச் செயற்பாடு என்றும் பொருள் உண்டு. இங்கு அவரவர் பண்பு என்றதை ஓவ்வொருவரது பங்களிப்பு எனக்கொண்டு, அதைத் தனித்தனியே நடுநிலையோடு கணித்து அதற்குத்தக நன்மை செய்யவேண்டும்; ஒருவர்க்குச் செய்யும் நன்மையை அவரது உண்மையான பங்களிப்பின் அளவு அறிந்து செய்யவேண்டும் என்பது பொருள்.
பெரிய நிறுவனங்களில் ஊதிய மேலாண்மை(Reward management) நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஒரு செயலில் ஒருவருடைய மதிப்பை அதாவது பங்களிப்பைக் காய்தல் உவத்தல் இன்றி, நேர்மையான, நடுநிலையுடன் கணக்கிட்டு உரியதை வழங்குவதற்காக உண்டான முறைமை இது. இதைச் சரியானபடி செயல்படுத்தாவிடின் தவறு உண்டாகிவிடும்.
செயலில் பங்கேற்கும் அனைவரது ஈடுபாடே செயலை நன்றாக முடிக்க வழிவகுக்கும். ஆகையால் அவரவது செயற்பாட்டிற்கேற்ப நன்மை செய்ய வேண்டும்.
வெற்றிக்குத் துணை நின்றவர்களை வாயால் பாராட்டுதல் கூட நன்மைதான். ஆனால் பாராட்டுக்குரியவரை விட்டுவிட்டு வேறொருவரைப் பாராட்டினால் அது பணியிடத்தில் உள்ள இணக்கமான சூழ்நிலைக்குக் கேடு உண்டாக்கும்; நன்மைக்குப் பதிலாகத் தீமையை தந்துவிடும். இத்தகையவான நன்மைகள் பயனளிக்கா எனச் சொல்லப்படுகிறது.
முயற்சியில் பங்களிப்போர் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதும் குறிப்பு.
|
நல்லது செய்தால் எப்படித் தவறு உண்டாகும்?
நன்மை செய்வதிலும் தவறு நேரும் வாய்ப்புண்டு என்கிறது பாடல்.
கேடானது செய்யப்பட்டால்தானே தவறு நடக்கின்றது என்போம். அதெப்படி நல்லது செய்வது தவறாக முடியும் ?
முன் பகுதியில் விளக்கப்பட்டதுபோல, இக்குறள் முயற்சியில் தொடர்புடையோர் பெறும் நன்மை பற்றிய பாடல் இது. எனவே அதில் எப்படித் தவறு உண்டாகும் என்றே நோக்கவேண்டும்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் (தெரிந்து வினையாடல் 514 பொருள்: எல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், செயலின் இயல்பால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர்) என்று பிறிதோரிடத்தில் குறள் சொல்லும். இப்பாடலின் கருத்தையும் மனத்தில் கொண்டு நன்மை செய்யப்படவேண்டும்.
ஒரு தன்னலக்காரனுக்கு அவனது தகுதிக்கு மீறிப் பதவி உயர்வு கொடுத்தாலோ அல்லது பாராட்டினாலோ அவன் நன்மை பெற்றபின்னர் தன் குணத்தில் முற்றிலும் நேர்மாறாக மாறி நிறுவனத்துக்கு ஊறு விளைக்குமாறு நடந்துகொள்வான்.
பழைய உரை ஒன்று 'நன்மை செய்யுமிடத்தும் தவறுண்டு; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து. தண்டம் செய்வார்க்கு நன்மை செய்யிற் பயந்து செய்தானென்று தவறு செய்வான் ஆதலால், அவரவர் குணமறிந்து செய்க என்றது' இது தண்டிக்கப்பட வேண்டிய ஒருவனுக்கு நன்மை செய்தால் தனக்குப் பயந்துகொண்டு நல்லது செய்கிறார்கள் என்ற எண்ணம் கொண்டு மேலும் கேடு விளைவிப்பான் எனச் சொல்வது.
சில சூழ்நிலைகளில், திறமையற்ற ஒருவரைப் பலரறியப் பாராட்டி நன்மை செய்வது மற்றவர்களிடம் பொறாமையையும் எரிச்சலையும் ஏற்படுத்தி அதனால் அவர்கள் ஒத்துழையாது போகக்கூடும்.
நன்மை ஏற்பார் ஐயம் கொண்டால் அவர்களுடைய நம்பிக்கையை இழந்து முயற்சி வீணாகப் போகலாம்.
மிகையான நன்மை ஆற்றினால் தன்னம்பிக்கையும் திறமையும் வளர்க்கப்படாமல் எதிர்விளைவுகள் ஏற்படலாம்.
வேண்டியவன் வேண்டாதவன் என்ற பார்வை உடைய அமைப்பில், ஊதியக் கட்டமைப்பு செயல்பாட்டில் இருந்தாலும், நன்மை செய்தல் பயன்தராது.
தவறு உண்டாகும்போது ஆக்கம் சிதைந்து செயல் முடியாமல் போகும்; அல்லது முயற்சி முடிந்தும் பயனில்லாமல் போகும்.
நன்மை செய்தும்போது தவறு உண்டாவதை விளக்கும் மற்ற உரைகளிலிருந்து சில:
- ஏற்போர் மரபறிந்து செய்யா இடத்து குற்றமுண்டாம்.
- நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய வேளைகளில் கண்டிக்காதும் தண்டிக்காதும் விடப்பட்ட பணியாளர் நிறுவனத்திற்கு சுமையாக மாறிவிடுவர்.
- செய்யப்படும் உதவிகளும் செயலளவில் பயன் தராமல் குற்றம் உண்டாகலாம். பசிக்கும் நோயாளிக்குப் பலாப்பழம் தரலாமா?
- பாம்புக்கும் வேம்புக்கும் பால் வார்த்தாலும் அவை குணத்தில் மாறா.
- நீரிழிவு நோய் உள்ளவருக்கு இனிப்பு வழங்குதல் நோயை மிகுவிக்கும்.
- யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என வரம் கேட்ட பஸ்மாசுரன், அந்த வரத்தை தந்த சிவன் தலையிலேயே கையை வைக்க போனானாம்.
- பிள்ளைகள் கேட்டதெல்லாம் பெற்றோர் வாங்கி கொடுத்தால் அவர்கள் கெட வழிவகுக்கும். மேலும் அவர்கள் துன்பப் படக்கூடாது என்று அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தால் பின்பு தேவையான நேரத்தில் அவர்கள் தானாக ஏதும் செய்ய முடியாது திணறுவர்.
|
நன்மை செய்வதிலும் தவறு உண்டாகிவிடும் அவரவர் இயல்பு அறிந்து ஆற்றாவிடின் என்பது இக்குறட்கருத்து.
தவறானவர்களுக்கு நன்மை செய்யாதிருப்பதும் தெரிந்து செயல்வகையில் அடங்கும்.
அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் நன்மை ஆற்றுவதிலும் தவறு உண்டாகும்.
|